ஜோதிடம்
Published:Updated:

அன்னப் படையலில் காலடிச் சுவடு!

அகத்தியர் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
அகத்தியர் கோயில்

அகத்தியர் திருக்கோயில் அற்புதங்கள் படங்கள்: பா.மகேஷ்

அம்பாசமுத்திரம் அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் லோபமுத்திரையுடன் அருள்கிறார் அகத்தியர். இங்கே பங்குனி 29-ம் நாள், பக்தர்கள் அகத்தியருக்குப் படையலிடுகின்றனர். ``அந்த அன்னப் படையலில், அகத்தியரின்‌ வாக்குப்படி பிரம்படி தடமும் காலடிச் சுவடும் பதிந்திருப்பதைக் காணலாம்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்!

அன்னப் படையலில் காலடிச் சுவடு!

சிவ-பார்வதி திருக்கல்யாணத்தைக் காண அகில உலகமும் கயிலாயத்தில் குவிந்தது. உலகைச் சமன்படுத்த, எம்பெருமான் அகத்தியரை தென்புலத்துக்கு அனுப்பினார். அதன்படி, தென் பொதிகை நோக்கிப் பயணித்த அகத்தியர், பொருநை நதியாம் தாமிரபரணி தீரத்தில் பாபநாசம் தலத்தில் திருமூலநாதரை வழிபட்டார். அங்கே அவருக்கு சுவாமியின் திருக்கல்யாண தரிசனம் கிடைத்தது.

பிறகு, அம்பாசமுத்திரம் எனும் தலத்தை அடைந்த குறுமுனிவர், அங்கே ஒரு புளிய மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது சிவ பக்தர்கள் பலரும் அகத்தியரை தரிசிக்க வந்தனர். தியானம் கலைந்த அகத்தியர், அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

மேலும் பக்தர்களில் ஒருவரிடம் ``எமக்குப் பசி எடுக்கிறது. அமுது அளித்து பசி தணிப்பீரா?'' எனக் கேட்டார். அகத்திய முனிவருக்கு அன்னமிடுவது பெரும் பாக்கியம் எனக் கருதிய அந்த அன்பரும், தம் இருப்பிடத்துக்குச் சென்று அன்னம் தயார் செய்து எடுத்து வந்தார். ஆனால் அவர் வருவதற்குச் சற்று காலதாமதம் ஆகிவிட்டது. அகத்தியர் அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டார். அன்பர் மிகவும் மனம் கலங்கினார். அகத்தியரை மனதார துதித்து வழிபட்டார்.

அப்போது அவர் முன் தோன்றிய அகத்தியர், ``வருந்தாதே! தற்போது நேரமாகிவிட்டதால் நான் இங்கிருந்து புறப்பட வேண்டும். பங்குனி மாதம் 29-ம் நாள் வேடர் வடிவில் வருவேன்; நீ இடும் அன்னத்தைப் புசிப்பேன். அதற்கு அடையாளமாகப் படைக்கப் படும் அன்னத்தின்மீது காலடிச் சுவடும் பிரம்படிச் சுவடும் தெரியும்!'' எனக் கூறி மறைந்தார்.

அகத்தியர் அருளியபடியே, அங்குள்ள பக்தர்கள் பங்குனி 29-ம் நாளன்று, அம்பையில் உள்ள தீப தீர்த்தத்திலிருந்து 21 குடம் தீர்த்தம் எடுத்து வந்து திரு மஞ்சனம் செய்து அகத்தியருக்கு அமுது படைத்து வழிபட்டனர். அகத்தியரும் தாம் வாக்களித்தபடி, பக்தர்கள் படைத்த அன்னத்தில் திருநடமிட்டுப் பிரம்படிச் சுவடும் கால்சுவடும் காட்டி அருளினார்.

அன்னப் படையலில் காலடிச் சுவடு!

இவ்வாறு அவர் அருள்புரிந்த இடத் தில், அகத்தியருக்கு அழகிய ஆலயம் அமைத்தனர் பக்தர்கள். தமிழகத்தில் அகத்தியருக்காக அமைந்த கோயில்களில் தனிச் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது இந்த ஆலயம்.

கோயிலில் கிழக்கு நோக்கிய கருவறை யில் அகஸ்தீஸ்வரரும் தெற்கு நோக்கிய கருவறையில் அகத்தியரின் மனைவி லோப முத்தரை அம்பாளும் அருள்கின்றனர். மூன்றடி உயர திருமேனியராய் நின்ற கோலத்தில் அருள்கிறார் அகஸ்தீஸ்வரர். வலக் கரம் சின்முத்திரை காட்ட, இடது கரத்தில் சுவடியை ஏந்தியிருக்கிறார். ஜடாமகுடதாரியாய், மார்பில் லிங்க மாலை திகழ, முப்புரிநூல் அலங்கரிக்க, சிவசொரூபமாகக் காட்சி தருகிறார் அகஸ்தீஸ்வரர். அவரின் எதிரில் நந்தி அருள்கிறார்.

லோப முத்தரை அம்பாள் தனது கையில் மலர் ஏந்தி அருள்பாலிக்கிறாள். திருக்கோயிலின் பிராகாரத்தில் அகத்தீஸ்வரரின் ஓவியமும்‌ சுதைச் சிற்பமும் அழகுற அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், சிவகாமி அம்மை உடனுறை நடராஜப் பெருமான் ஆகியோரும் உற்சவ மூர்த்திகளான சோமா ஸ்கந்தர், கோமதி அம்மை, வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேசுவரர், பிட்சாட னர் ஆகியோரும் அருள்கிறார்கள். உற்சவர் அகஸ்தியர், தம் வலக்கரத்தின் நடு விரல்களை மடக்கியபடி அருள்வது, பக்தர்களைத் தன்னை நோக்கி `வா' என்று அழைப்பது போல் உள்ளது!

அன்னப் படையலில் காலடிச் சுவடு!

பிரதோஷம்‌, பௌர்ணமி வழிபாடுகள், சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் என வழிபாடுகள் சிறப்புற நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக அன்னமிடுதல் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. பங்குனி 29-ம் நாள், பக்தர்கள் அகத்தியருக்குப் படையலிடுகின்றனர். ``அந்த அன்னப் படையலில், அகத்தியரின்‌ வாக்குப்படி பிரம்படி தடமும் காலடிச் சுவடும் பதிந்திருப்பதைக் காணலாம்'' என்று சிலிர்ப்புடன் சொல்லும் பக்தர்கள், அந்தப் படையல் உணவைப் பிரசாதமாக ஏற்று மகிழ்கிறார்கள்.

இந்தத் தலத்துக்கு வந்து புராணங்களும் ஞானநூல்களும் பலவாறு போற்றும் அகத்தியரைத் தியானித்து, `ஓம் அகஸ்தீஸாய நம!' என்ற மந்திரத்தை உச்சரித்து, நாம் உண்ண வேண்டிய மருந்தை உட்கொண்டால் நோய் விரை வில் குணமாகும் என்கின்ற னர் பக்தர்கள்.

தோல் நோய், சுவாசக் கோளாறு, நரம்புப் பிரச்னைகள், மனநோய் பாதிப்பு ஆகிய பிரச்னைகளால் அவதிப்பட்ட அன்பர்கள் பலரும் இங்கு வந்து அகத்தி யரை வழிபட்டு நலம்பெற்று உள்ளார்கள் எனப் பரவசத்துடன் சொல்கிறார்கள் ஊர் மக்கள். நீங்களும் அடுத்தமுறை நெல்லைச் சீமைக்குச் செல்லும்போது அவசியம் இந்தத் தலத்துக்குச் சென்று அகத்தியரின் அருள்பெற்று வாருங்கள்!

எப்படிச் செல்வது?: திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கி. மீ தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்தில் இந்தக் கோயில் அமையப்பெற்றுள்ளது. திருநெல்வேலி யிலிருந்து அம்பாசமுத்திரம், கடையம், ஆழ்வார்க்குறிச்சி செல்லும் பேருந்துகளில் ஏறிப் பயணித்து, இத்தலத்தை அடையலாம்.