Published:Updated:

ஆண்டாள் அற்புதங்கள்! - ஆடிப்பூர தரிசனம்

ஶ்ரீஆண்டாள்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீஆண்டாள்

பி.சந்திரமெளலி, ஓவியம்: ராஜா

ஆண்டாள் அற்புதங்கள்! - ஆடிப்பூர தரிசனம்

பி.சந்திரமெளலி, ஓவியம்: ராஜா

Published:Updated:
ஶ்ரீஆண்டாள்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீஆண்டாள்

ஶ்ரீவில்லிப்புத்தூரின் பெருமைகள் வராக புராணம்- ரகஸ்ய காண்டத்தில் ஒன்பது அத்தியாயங்களில் விவரிக்கப் பட்டுள்ளது. வராக அவதாரம் நிகழ்ந்த தலமாக ஶ்ரீவில்லிப்புத்தூர் கருதப்படு வதால், இதை ‘வராக க்ஷேத்திரம்’ என்பர்.வைணவ திவ்ய தேசங்கள் நூற்றி யெட்டில் முதலாவது ஶ்ரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடு. கடைசித் தலம் ஶ்ரீவில்லிப்புத்தூர். இது அவளது தாய் வீடு. எனவே, ‘108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவள்’ என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.

ஆண்டாள் அற்புதங்கள்! - ஆடிப்பூர தரிசனம்

சூடிக் கொடுத்தாள்!

பெருமாள் வழிபாட்டுக்காக தினமும் பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மலர் மாலையை முதலில் கோதை சூடி மகிழ்வது வழக்கம். ஒரு முறை அதைக் கண்டு கோபம் கொண்ட ஆழ்வார் மகளைக் கடிந்து கொண்டார். அன்று இரவில் அவர் கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகந்தது!’ என்றருளினார். அது முதல் கோதைக்கு, ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!’ என்று பெயர் உண்டாயிற்று.

திருமண வயதடைந்த ஆண்டாள், ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப் பிறவி. அவளை ஶ்ரீரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று அருளி மறைந்தார். அதன்படி ஶ்ரீரங்கம் வந்த கோதை, காவிரிக் கரையை அடைந்ததும் காணாமல் போனாள். பெரியாழ் வார் கலங்கினார். கோதை தனக்குத் திருவடிச் சேவை செய்வதைப் பெரியாழ்வாருக்குக் காட்டினார் பெருமாள்.

ஆனால், ஶ்ரீவில்லிப்புத்தூர் வந்துதான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார் வேண்டி னார். அதன்படி ஶ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி, ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையைத் திருமணம் செய்துகொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்டாள் அற்புதங்கள்! - ஆடிப்பூர தரிசனம்

அபூர்வ வானியல் நிகழ்வு

ஆண்டாளது காலத்தைக் கணிக்க உதவும் அபூர்வமான வானியல் நிகழ்ச்சிகளை மு.ராகவையங்கார், சுட்டிக் காட்டியுள்ளார். வெள்ளி எழுதலும், அதேநேரம் வியாழன் உறங்குதலும் அபூர்வ நிகழ்ச்சி. 8-ஆம் நூற்றாண்டில் இம்மாதிரி நிகழ்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

731-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி அதிகாலை 3.50 மணிமுதல் 4.00 மணிக்குள் வந்த மார்கழி பௌர்ணமியிலேயே திருப்பாவை தோன்றியதாக கூறப் படுகிறது. கி.பி.716-ம் ஆண்டு திரு ஆடிப்பூரத்தில் ஆண்டாள் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. தன் பதினைந்தாம் வயதில் (கி.பி.731) ஆண்டாள் திருப்பாவை இயற்றினாள் என்பர்.

தட்டொளி!

ஆண்டாள் கோயில் உட் பிராகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது மாதவிப் பந்தல். அடுத்து மணிமண்டபம். இங்கு கம்பம் ஒன்றில், ஆண்டாள் முகம் பார்த்த வெண்கலத் தட்டு (கண்ணாடி) காணப்படுகிறது. இதைத் தட்டொளி என்பர்.

அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக் கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்க மன்னார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கருவறையில் ஆண்டாள்- ரங்க மன்னார், கருடாழ்வார் (பெரிய திருவடி) ஆகியோர் சேவை சாதிக்கிறார்கள். திருவரங்கன், திருமணக் கோலத்தில் ராஜ கோபாலனாக செங்கோல் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

மண்ணே மருந்தாகும்!

ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம் இரட்டைக் கோயிலாக அமைந்துள்ளது. வடகிழக்கில் வடபத்ரசாயி கோயில். மேற்கில் ஆண்டாள் கோயில். இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம். இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும் அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ, சிறிதளவு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப்படுத்தினாலோ திருமணத் தடை நீங்கி செல்வம் சேரும் என்பது நம்பிக்கை!

மன்னாருக்குத் தொடை அழகு!

ஶ்ரீவில்லிப்புத்தூரில் உற்சவர்- ரங்கமன்னார், ராஜ மன்னார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் அருள்வார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாள். ‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை- மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்.

ஆலிலையில் பள்ளிகொண்ட பரமன்!

மன்னார்கோயில் கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் அரவணைப் பள்ளியில் ஶ்ரீதேவி- பூதேவி சமேதராக உள்ள வடபத்ர சாயியை மூன்று வாசல்களின் வழியாக தரிசிக்கலாம். தலைமாட்டில் பிருகு முனிவரும், கால்மாட்டில் மார்க்கண்டேயரும் வணங்கி நிற்கின்றனர். மேலும் பஞ்ச மூர்த்திகள், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சூரியன், சந்திரன், மது- கைடபர் ஆகியோரும் காணப்படுகின்றனர். சம்ஸ்கிருதத்தில் வடபத்ரம் எனப்படும் ஆலிலையில் பள்ளி கொண்ட பரமன் ஆதலால், இவர் ‘வடபத்ர சயனர்’ எனப்படுகிறார்.

ஆண்டாள் அற்புதங்கள்! - ஆடிப்பூர தரிசனம்

ஆண்டாள் மாலையும் திருவேங்கடவனும்

வேங்கடேசன் மீது அளவற்ற பக்தி கொண்ட ஆண்டாள், அவரைத் துதித்து நாச்சியார் திருமொழியில் பாடினாள். இதனால் மகிழ்ந்த வேங்கடேசன், ஆண்டாள் அணிந்த மாலையை அன்புடன் ஏற்கிறார் என்கிறது புராணம்.

திருப்பாவையில் முதல் பத்தில் ‘அவன் திருநாமத்தைச் சொல்லு’ என்றும், இரண்டாவது பத்தில், ‘உயரியதான அவன் திருவடியை அர்ச்சனை செய்’ என்றும், கடைசி பத்து பாட்டுக்களில் ‘அவன் திருவடியில் உன்னை அர்ப்பணி’ என்றும் வலியுறுத்துகிறாள் ஆண்டாள். ஶ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்குச் சாத்தப்படுகிறது.

ஆண்டாள் அற்புதங்கள்! - ஆடிப்பூர தரிசனம்

ஆண்டாள் கிளியும் சுகபிரம்மரும்!

செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஶ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஶ்ரீஆண்டாளுக்கு- இடத் தோளில் கிளி. இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள். இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு- மாதுளம் பூ; மரவல்லி இலை- கிளியின் உடல்; இறக்கைகள்- நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்; கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; கட்டுவதற்கு வாழை நார்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன். இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.

ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப் படும் கதை: ஶ்ரீஆண்டாள் சுகப் பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள்புரிய வேண்டும்!’ என்று வேண் டினார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணக் கதை ஒன்று கூறுகிறது.

ஆண்டாள் தைலம்!

திருவிழாவின்போது ஆண்டாள் தைலம் தயாரிக்கப்பட்டு ஆண்டாளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது. நல்லெண் ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகை

களை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன. இதன் கொள்ள ளவு சுமார் 7 படி. இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.

பெரிய தேர் - சப்பரத் தேர் - கோ ரதம்

ஶ்ரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப் பூரம் அன்று தேர்த் திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகக் கருதப்படும் இதில், சுமார் 1000 தேவ-தேவியர், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரது உருவங்களுடன் மகாபாரதம், ராமாயணக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தேரை வடம் பிடித்து இழுக்க மூவாயிரத்துக்கு மேற்பட்ட ஆட்களாவது வேண்டுமாம்!

இந்தத் தேரைத் தவிர மேலும் இரண்டு தேர்கள் இங்கு உள்ளன. ஆடிப்பூர உற்சவத்தின் முதல் நாள்- பதினாறு கால்கள் கொண்ட சப்பரத் தேர் வீதி உலா வரும். தஞ்சையிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பனையோலை குருத்துக்களால் வடிவமைக்கப்படும் இந்த தேர், பக்தர்களுக்கு பதினாறு வகையானசெல்வங் களையும் வழங்கக் கூடியது என்பது ஐதீகம்.

அடுத்தது- செப்புத்தேர். இதை ‘கோ ரதம்’ என்றும் அழைப்பர். பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணம், ஆனி மாதம் பெரியாழ்வார் உற்சவம், புரட்டாசி மாதம் பெரிய பெருமாள் உற்சவம் ஆகிய நாட்களில் இந்தக் கோரதம் பவனி வருகிறது.

ஆண்டாள் அற்புதங்கள்! - ஆடிப்பூர தரிசனம்

அழகர் கோயில் பட்டு... திருப்பதிப் பரிவட்டம்!

பங்குனி திருக்கல்யாணத்தின்போது, திருப்பதி வேங்கடாசலபதி கோயிலிலிருந்து பரிவட்டமும் (பட்டு), ஆடிப்பூரத் தேரோட் டத்துக்கு, மதுரை அழகர் கோயில் கள்ளழகர் கோயிலிருந்து பட்டுப்புடவையும் அனுப்பி வைக்கப்பட்டு ஆண்டாளுக்கு சாத்துப்படி செய்வது வழக்கம்.

நெல் அளக்கும் வைபவம்!

பெரியாழ்வார் இந்த ஆலயத்தின் முதல் தர்ம கர்த்தாவாகப் போற்றப்படுகிறார். அவர் தர்மகர்த்தாவாக இருந்த போது, ஶ்ரீஆண்டாளிடம் வரவு- செலவை ஒப்புவிப்பாராம். இந்த நிகழ்ச்சி, வருடம்தோறும் ஆடி மாதம் 7-வது நாளில் ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் ‘நெல் அளக்கும்’ வைபவமாக நடைபெறுகிறது.

கம்பரும் ஆண்டாள் மூக்குத்தியும்!

கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஆண்டாளைத் தரிசிக்கச் சென்றதாக ஒரு தகவல் சொல்லப்படுவதுண்டு.

கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஶ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை.

காரணம் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்றனர் விழாக் குழுவினர்.

உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஶ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஶ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.