Published:Updated:

மாங்கல்ய வரம் தரும் திருமஞ்சன தரிசனம்!

மாணிக்க வாசகர்
பிரீமியம் ஸ்டோரி
மாணிக்க வாசகர் ( ஓவியர் ம.செ. )

ஆனி உத்திர மகிமைகள் ஓவியம்: ம.செ.

மாங்கல்ய வரம் தரும் திருமஞ்சன தரிசனம்!

ஆனி உத்திர மகிமைகள் ஓவியம்: ம.செ.

Published:Updated:
மாணிக்க வாசகர்
பிரீமியம் ஸ்டோரி
மாணிக்க வாசகர் ( ஓவியர் ம.செ. )

அல்லல்களை எல்லாம் போக்கும் திருநாள்களில் ஒன்று ஆனித் திருமஞ்சனத் திருநாள். அன்று பஞ்ச சபைத் தலங்களில் ஆனித் திரு மஞ்சன தரிசனம் காண்பது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் நடைபெறும் நடராஜர் திருமஞ்சனக் காட்சியை தரிசித்து புண்ணியம் பெறலாம்.

மாங்கல்ய வரம் தரும் 
திருமஞ்சன தரிசனம்!

திருமஞ்சனம் என்பதற்கு மகா அபிஷேகம் என்பது பொருள். நம்முடைய ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். அவ்வகையில் தேவர்களுக்கு மார்கழி வைகறையாகவும், மாசி-காலைப் பொழுதாகவும், சித்திரை-உச்சிக்காலமாகவும், ஆனி-மாலைப் பொழுதாகவும், ஆவணி - இரவாகவும், புரட்டாசி - அர்த்தசாமமாகவும் திகழ்கின்றன.

தேவர்கள் சிவபெருமானை இந்த ஆறுவேளையும் பூஜித்து மகிழ்வ துடன், பூவுலகில் நடக்கும் நடராஜ அபிஷேகங்களையும் கண்டு மகிழ்வார்கள் என்பது ஐதீகம். இதன் அடிப்படையில், சிவாலயங்களில் இந்த ஆறு மாதங்களிலும் ஆடல்வல்லானுக்கு அபிஷேக ஆராத னைகள் நடைபெறுவது மரபு. இதில் கலந்துகொண்டு வழிபடுவதால், இந்தப் பிறவியில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

சித்திரையில் ஓண முதல் சீர் ஆனி உத்தரமாம்
சத்த தனு ஆதிரையும் சார்வாகும் - பத்தி
மாசி அரி கன்னி மருவு
சதுர்த்தசி மன்னு ஈசர் அபிஷேக தினமாம்

- என்கிறது ஒரு பாடல்.

சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம்; ஆனி- உத்திரம்; மார்கழி- திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்கள், மாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தசி திதி நாட்கள்... என்று வருடத்துக்கு 6 சிறப்பு அபிஷேகங்கள் நடராஜருக்கு நடைபெறுவதாக விவரிக் கிறது இந்த பாடல்.

பொதுவாகவே, சந்தியா காலங்களில் செய்யப்பெறும் வழிபாடு களுக்குச் சிறப்பான பலன்கள் உண்டு. அவ்வகையில், தேவர்களின் மாலைச் சந்தியா காலமாகிய ஆனி மாதத்தில் நிகழும் ஆனித் திரு மஞ்சனம் சிறப்புக்குரியதாக பெரியோர்களால் போற்றப்படுகிறது.

கடுமையான கோடை காலம் முடிந்து இளவேனிற் காலம் தொடங்கும் இந்த ஆனி உத்திர நாளில் அபிஷேகங்கள் செய்வது இறைவனைக் குளிர்விக்க மட்டுமில்லாமல், இந்த மண்ணையும் குளிர்விக்கவே என்கின்றன ஆன்மிக நூல்கள்.

தில்லையில் திருமஞ்சனத் திருவிழா...

கோயில் என்றாலே சிதம்பரம். ராஜா என்றாலே நடராஜர் என்பது ஆன்றோர் வாக்கு. வருடத்தின் ஆறு அபிஷேகங்களில், மார்கழித் திருவாதிரையும் ஆனி உத்திரமும் சிதம்பரம் ஆடல் வல்லானுக்குப் பிரம்மோற்சவமாகவே கொண்டாடப் படுகின்றன. ஆனித் திருமஞ்சன விழாவைச் சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி என்பார்கள்.

மற்ற நாள்களில் இங்கு, நடராஜர் சந்நிதியில் உள்ள ஸ்படிக லிங்கத்துக்கே ஆறு கால அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்துக்கு பத்து நாட்கள் முன்னரே சிதம்பரம் கோயில் களைகட்டி விடுகிறது. கொடியேற்றத்துடன் துவங்கும் ஆனிப் பெருவிழாவில், ஒவ்வொரு நாளும் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதி உலா வருவர்.

ஒன்பதாம் நாளன்று தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு தேரிலிருந்து இறங்கும் ஆனந்தக் கூத்தர், அசைந்து அசைந்து ஒய்யாரமாக ஆயிரங்கால் மண்டபத்துக்குச் செல்வார். பிறகு, அவருக்கு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும்.

மறு நாள்-பகல் வேளையில், நடராஜ மூர்த்தியும் சிவகாமி அம்மையும் ஆனந்த நடனம் ஆடியபடி வந்து, சிற்சபையில் எழுந்தருள்வர். பின்னர், தீபாராதனை நடைபெறும். அன்றிரவு கடாபிஷேகம் செய்யப்படும். இரண்டு தங்கக் குடங்களில் உள்ள தீர்த்தத்தை ஸ்வாமிக்கும் அன்னைக்கும் அபிஷேகம் செய்வார்கள். பிறகு கொடி இறக்கப்பட்டு, ‘ஆனிப் பெருவிழா’ நிறைவுபெறும்.

ஆனித் திருமஞ்சனத் திருநாளில், மூலமூர்த்தியான நடராஜரே உற்சவராக வீதியுலா வருவது, சிதம்பரம் தலத்தின் தனிச் சிறப்பு.

மாங்கல்ய வரம் தரும் 
திருமஞ்சன தரிசனம்!

திருப்பெருந்துறையில்...

ஆனி திருமஞ்சன நாளில் மற்றோர் அற்புதமும் நடைபெற்றது. ஆம், இந்த நாளில்தான் திருப்பெருந்துறை ஈசன், மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் குருவாக அமர்ந்து உபதேசம் செய்தாராம். ஆனித் திருமஞ்சன நாளிலும் மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேசிக்கும் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

திருப்பெருந்துறை கோயிலில், ஆனித் திருமஞ்சன நாளின் அதிகாலையில் உபதேசக் காட்சி விழா நடத்தப்படுகிறது.. பிறகு வெள்ளித் தேரில் மாட வீதியுலா காண்கிறார் மாணிக்கவாசகர். இந்த ஆண்டு 5.7.22 செவ்வாய்க் கிழமை அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் மிதுன லக்னத்தில், திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமி, தென்னவன் பிரம்மராயன் எனும் மாணிக்க வாசகப் பெருமானுக்கு உபதேசம் அருள்கிறார்.

இந்த வைபவத்தின்போது, இங்கு பூஜை செய்யும் சிவநம்பியார் சிவ வேடமணிந்து, அவர் அருகே மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து உபதேச ஐதிக விழாவை நடத்துவர். இங்குள்ள திருவாசகக் கோயிலில் திருவாசக ஓலைச்சுவடி வணங்கப்படுவது விஷேசம்.

இதே மாதத்தில்தான் மக நட்சத்திரத்தில் (3.7.22) மாணிக்கவாசகப் பெருமான் குரு பூஜையும் கொண்டாடப்படுகிறது. ஈசனே, தான் தனித்திருக்கும் ஊழிக் காலத்தில் விரும்பிப் படிக்க, திருவாசகத்தை தன் கையால் எழுதி கைச்சாத்து இட்டு அருளினார். இது நிகழ்ந்தது ஆனி ஆயில்ய நட்சத்திர நாளில். அடுத்த நாள் தில்லை அம்பலத்தில் மாணிக்க வாசகரைத் தன்னோடு இணைத்துக் கொண்டார்.

மங்கல வரம் தரும் வழிபாடு...

அல்லல்களை எல்லாம் போக்கும் திருநாள்களில் ஒன்று ஆனித் திருமஞ்சனத் திருநாள். அன்று பஞ்ச சபைத் தலங்களில் ஆனித் திரு மஞ்சன தரிசனம் காண்பது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் நடைபெறும் நடராஜர் திருமஞ்சனக் காட்சியை தரிசித்து புண்ணியம் பெறலாம்.

வீட்டில் அன்றைய தினம் சிவபெருமானை, ஆடல் வல்லானை தியானித்தும், ஸ்வாமிக்கு வில்வம் சமர்ப்பித்து, சிவ புராணம், தில்லைத் திருத் தாண்டகம் முதலான துதிப்பாடல்களைப் பாடியும் வழிபடுவது மிகவும் விசேஷம்.

இதனால் இல்லத்தில் எப்போதும் மங்கலம் நிலைத்திருக்கும். கன்னியர்க்குக் கல்யாணம் விரைவில் கைகூடும்; சுமங்கலிகளுக்கு மகேசனின் திருவருளால் மாங்கல்யபலம் கூடும். பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கும்!

மாங்கல்ய வரம் தரும் 
திருமஞ்சன தரிசனம்!

சிந்தை மகிழும் தரிசனம்!

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில், தூத்துக்குடியில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ளது ஆத்தூர். இங்கே ஶ்ரீசோமசுந்தரி சமேத ஶ்ரீசோமநாத ஸ்வாமி கோயிலில் ஆனித்திருமஞ்சனம் விசேஷம். ஆனி உத்திர நாளில் ஶ்ரீநடராஜருக்கு 21 வகை அபிஷேகங்கள் நடைபெறும். அன்று அவருக்கு வெள்ளை வஸ்திரமும் வில்வ மாலையும் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து வழிபட்டால், தொழில் சிறக்கும்; உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிவபெருமான் வைரவ மூர்த்தியாகச் சிறப்புடன் எழுந்த ருளியிருக்கும் திருப்பத்தூரில் உள்ள சபையை சப்த தாண்டவ சபைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். திருப்பத்தூர் புராணம் இந்தச் சபையை கௌரி தாண்டவ சபை எனச் சிறப்பிக்கிறது.

திருப்பூர் மாவட்டம் கொழுமத்தில் ஶ்ரீதாண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. திருப்பூரிலிருந்து உடுமலைப் பேட்டை வழியாக இவ்வூக்குச் செல்லலாம். மூலவர் - ஶ்ரீசோழீஸ்வரர். அம்பாள்- ஶ்ரீபிரஹன்நாயகி. இங்கே, தாண்டவக் கோலத்தில் சிவனார் காட்சி தருவதால், அவருக்கு ஶ்ரீதாண்டேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. தொடர்ந்து 15 திங்கள்கிழமைகளில் வில்வ மாலை சார்த்தி ஸ்வாமியை வழிபட்டால், தொழில் வளம் பெருகும், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். ஆனித் திருமஞ்சன நாளில் இங்கு சென்று வழிபட, சகல ஐஸ்வர்யங்களும் பொங்கிப் பெருகும்!

ரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது காங்கேயம் பாளையம். இங்கே, காவிரியாற்றின் நடுவே கோயில் கொண்டிருக்கிறார் ஶ்ரீநட்டாற்றீஸ்வரர். இவரின் ஆலயத்தில், ஆனித் திருமஞ்சன விழாவின் போது, சுமங்கலிகள் கலந்துகொண்டு தரிசனம் செய்தால், மாங்கல்யம் பலம் பெறும்; திருமணத் தடை உள்ள பெண்களுக்கு விரைவில் கல்யாண வரம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை!

நாகப்பட்டினம் திருவாரூர் வழியில் உள்ள கீழ்வேளூர் பாடல்பெற்ற பதியாகும். இங்கு பெருமான் பத்து கரங்களுடன் அட்சய தாண்டவத்தை ஆடுகிறார். இது பெருமான் ஆடும் காப்புத் தாண்டவமாகும். வலதுகாலின் குதிகாலை மட்டும் சற்று உயர்த்தி ஸ்வஸ்திக நிலையில் வைத்துள்ளார். பிரம்மனும் லட்சுமியும் கர தாளமிட, நந்தி மத்தளம் முழக்க, இந்திரன் வேணுகான இசை முழக்க, திருமால் மிருதங்கம் வாசிக்க, பெருமான் ஆடும் கூத்தை அகத்தியரும் லோபாமுத்திரையும் கண்டு களிக்கின்றனர். இதனையும் சந்தியா தாண்டவம் என அழைக்கின்றனர்.