Published:Updated:

பதவி யோகம் தரும் அரச இலை அர்ச்சனை!

அரசலீஸ்வரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
அரசலீஸ்வரர் ஆலயம்

ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் தரிசனம்

பதவி யோகம் தரும் அரச இலை அர்ச்சனை!

ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் தரிசனம்

Published:Updated:
அரசலீஸ்வரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
அரசலீஸ்வரர் ஆலயம்

வண்ண மால்வரை தன்னை மறித்திடல் உற்ற வல்லரக்கன்
கண்ணும் தோளும் நல்வாயும் நெரிதரக் கால்விரலூன்றிப்
பண்ணின பாடல்வகை நரம்பால் பாடிய பாடலைக் கேட்டு
அண்ணலாய் அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே!

- திருஞானசம்பந்தர்

அரசலீஸ்வரர் ஆலயம்
அரசலீஸ்வரர் ஆலயம்

திருஞானசம்பந்தர் பாடிப்பரவிய திருத்தலம். வாமதேவர் எனும் முனிவர் பிரதோஷ காலத்தில் ஈசனை தரிசித்து அருள்பெற்றதால், பிரதோஷ வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் பெற்ற க்ஷேத்திரம். வந்து வழிபடுவோருக்கு அவர்கள் இழந்த பதவி மீண்டும் கிடைக்க அருளும் தலம், ஏழை அன்பர்களுக்கு அரசபோக வாழ்வை வரமாக அருளும் ஈசன் குடிகொண்டிருக்கும் பதி - திருஅரசிலி. வழக்கத்தில் இருக்கும் பெயர் ஒழிந்தியாப்பட்டு! திண்டிவனம்-புதுச்சேரி பாதையில் இருக்கிறது. இங்குதான் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த ஆலயத்தில் பெரிய நாயகி அம்மையுடன் அருள்பாலிக்கிறார் அரசலீஸ்வரர்.

ஶ்ரீஅரசலீஸ்வரர்
ஶ்ரீஅரசலீஸ்வரர்

ஒளிந்து அகப்பட்ட ஈசன்!

முற்காலத்தில் வாமதேவர் எனும் முனிவர், தான் பெற்ற சாபத்துக்கு விமோசனம் தேடி பல தலங்களுக்குச் சென்று சிவவழிபாடு செய்து வந்தார். யாத்திரையின் வழியில் இந்தப்பகுதியை அடைந்தார். யாத்திரையால் உண்டான களைப்பு தீர, அங்கிருந்த ஓர் அரசமரத்தடியில் களைப்பாற அமர்ந்தார் வாமதேவர்.

அரசமரத்தின் குளிர்ச்சியும் எழிலார்ந்த சுற்றுப்புறமும் வாமதேவரை மகிழ்வித்தன. இந்த இடத்தில் சிவபெருமானுக்கு ஓர் ஆலயம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினார். அவரது விருப்பத்தைப் பூர்த்திசெய்வது போன்று அரசமரத்தடியில் சுயம்புலிங்கமாகக் காட்சி தந்தாராம் சிவப்பரம்பொருள். பேரானந்தம் அடைந்த வாமதேவர், அருகிலுள்ள தடாகத்தில் நீராடி, மலர்களைக் கொய்து வந்து இறைவனை அர்ச்சித்துப் பூசை செய்து வழிபட்டார். அவருக்குச் சிவனாரின் தரிசனமும் சாப விமோசனமும் கிடைத்தன. இவ்வாறு அரசமரத்தடியில் இறைவன் தோன்றியதால், இந்தத் தலத்துக்கு அரசலி என்றும் ஈசனுக்கு அரசலீஸ்வரர் என்றும் திருப்பெயர்கள் வாய்த்தன.

காலச் சுழற்சியில் சுயம்புலிங்கம் மண்ணுக்குள் மறைந்துபோனது. பிற்காலத்தில் சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் இந்தப் பகுதியை ஆட்சிசெய்தான். தீவிர சிவ பக்தனான அந்த மன்னனுக்குப் பிள்ளைகள் இல்லை. ஆகவே, பிள்ளை வரம் வேண்டி அனுதினமும் சிவபூஜை செய்துவந்தான். சிவ வழிபாட்டுக்கான மலர்கள் தேவைக்காக நந்தவனம் ஒன்றை அமைத்துப் பராமரித்து வந்தான்.

ஒருநாள், அதிகாலை நேரத்தில் பூக்களைக் கொய்து வர பணியாள் ஒருவன் நந்தவனத்துக்குச் சென்றான். அங்கே, செடிகளில் ஒரு பூ கூட இல்லை. வேறு எவரோ பறித்துச் சென்றிருக் கலாம் என்று கருதியவன், விஷயத்தை மன்னனிடம் தெரிவித்தான். அன்று மட்டும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் பூக்கள் காணாமல் போனதற்கான காரணத்தை அறிய, மறுநாள் காவலாளிகளுடன் நந்தவனத்துக்குச் சென்றான் மன்னன்.

அப்போது மான் ஒன்று நந்தவனத்துக்குள் நுழைந்து பூக்களை உண்ண ஆரம்பித்தது. கோபம் கொண்ட மன்னன் அம்பு தொடுத் தான். நாண் ஏற்றும் சத்தத்திலேயே விழிப்படைந்த மான் ஓடிச் சென்று அருகிலிருந்த அரசமரத்தின் பொந்துக்குள் மறைந்து கொண்டது. மன்னன் விடவில்லை. மீண்டும் அம்பு செலுத்தினான். அம்பு தைத்த இடத்திலிருந்து குருதி வழிந்தோடியது.

மான் இறந்துவிட்டது என்று நினைத்து அருகில் சென்று பார்த்தான் சத்தியவிரதன், அங்கே மான் இல்லை; சிவலிங்கம் ஒன்றின் மீது அம்பு தைத்திருந்தது. அந்த லிங்கத்தின் பாணப் பகுதியில் இருந்துதான் குருதி பெருகியது. வாமதேவர் வழிபட்ட சிவலிங்கமே அங்கு மீண்டும் காட்சி கொடுத்தது.

`சிவலிங்கத்தின் மீதா அம்பு தொடுத்தோம்’ என்று பதறிய மன்னன், சிவனாரிடம் மன்னிப்பு வேண்டி மனமுருகப் பிரார்த்தித்தான். அப்போது சிவபிரான் காட்சி அளித்து, ``மானாக வந்து திருவிளையாடல் புரிந்தது நானே” என்று அருளியதோடு, மன்னனுக்கு பிள்ளை வரம் அளித்து மறைந்தார். சிவனருளால் சிலிர்த்த மன்னன் சத்தியவிரதன், அங்கே சிவாலயம் நிர்மாணித்தான் என்கிறது தலபுராணம்.

அரசலீஸ்வரர் ஆலயம் ஶ்ரீபெரியநாயகி
அம்பாள்
அரசலீஸ்வரர் ஆலயம் ஶ்ரீபெரியநாயகி அம்பாள்

ஊரும் பெயரும்!

`மான் உருவில் மரத்தின் பொந்தில் ஒளிந்து, சிவலிங்கமாக அகப்பட்டதால் ஒளிந்தகப்பட்டு என்று இவ்வூருக்குப் பெயர் வந்திருக்கலாம். அதுவே தற்போது, ஒழிந்தப்பட்டு மருவியிருக்கலாம்’ என்கிறார்கள் பக்தர்கள். `சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப் படை என்பதன் தலைவன் நல்லியக்கோடன் என்னும் அரசன். மிகப் பெரிய கொடை வள்ளலான இவன், ஓய்மானாட்டினன் என்றழைக்கப்பட்டான். ஓய்மானாடு என்பது இப்போதைய திண்டிவனம், தென்னாற்காடு பகுதிகளாகும். வாழ வேண்டிய முறைப்படி மக்கள் வாழ்கின்றனர் என்பதைச் சிறப்பித்துச் சொல்லும் விதம் சில காலத்துக்கு `ஒழுகறை’ என்ற பெயரும் இந்த ஊருக்கு இருந்திருக்கிறது. ஒழுகறைப்பட்டு என்பதே ஒழிந்தியாப்பட்டு என்றாகி இருக்க வேண்டும்’ என்றும் ஒரு தகவல் சொல்கிறார்கள்.

மூன்று நிலை கிழக்கு ராஜ கோபுரமே கோயிலின் பிரதான வாயில். கோபுரத்தை அடுத்து, மதிலின் உட்புறத்தில், தெற்குப் பக்கத்தில் சூரியனும், வடக்குப் பக்கத்தில் பைரவரும் மூலவர் சந்நிதியைப் பார்த்தபடி உள்ளார்கள்.

உள்ளே நுழைந்தவுடன், கோபுரத்துக்கு எதிரில், ஒரு மண்டபம். பலிபீடமும், கொடிமரமும், நந்தியும் உள்ளன. நந்திக்கு முன்பாகச் சுவரில் ஒரு சாளரம். சாளரம் வழியாக உள்ளே எழுந்தருளியிருக்கும் மூலவரை தரிசிக்கலாம்.

பிராகார வலத்தைத் தொடங்குகிறோம். தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதி. வடமேற்குப் பகுதியில் வள்ளி - தெய்வானை சமேத ஆறுமுகர், தனிச் சந்நிதியில் வேலும் கொடியும் ஏந்திக் காட்சி தருகிறார். பிராகாரத்தின் வடக்குச் சுற்றில், சண்டிகேஸ்வரரின் சந்நிதியைத் தாண்டி வந்தால், ஒரு கிணறு. அதையும் தாண்டி, நவகிரகங்கள். நவக்கிரகங்களை வணங்கிவிட்டு, அம்பாள் சந்நிதி பின்புறமாக வந்தால், மதிலை ஒட்டினாற்போல, வடகிழக்கு மூலையில் வாகன மண்டபம்.

அரச இலையால் அர்ச்சனை...

நந்தி மண்டபத்தின் தெற்குப் பகுதிக்கு நகர்ந்தால்,சைவ நால்வர் பெருமக்களை தரிசிக்கலாம். அவர்களை வணங்கி, அவர்களுக்கு எதிரில் உள்ள வாயில் வழியே நுழைந்தால் மூலவர் கருவறை முன்மண்டபம். நாம் நுழையும் வாயிலுக்கே எதிரில் நடராஜர் தரிசனம். அவரை வழிபட்டுவிட்டு இடதுபுறம் நோக்கினால் அருள்மிகு அரசிலிநாதர் தரிசனம்!

இந்த சுவாமிக்கு அரசிலீஸ்வரர், அச்வதேஸ்வரர் (அச்வதா மரம் - அரச மரம்) என்றும் திருநாமங்கள் உண்டு. கல்வெட்டுகளில் `அரசிலி ஆளுடையார்’ என்றும் `அரசிலி ஆலாலசுந்தரர்’ என்றும் இந்த சுவாமியின் பெயர் காணப்படுகிறது. குட்டையான ஆவுடையாரின் மீது குட்டையான பாணம். 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த பந்தலின் கீழ், சிறிய சுயம்புலிங்க மூர்த்தியாக அருளும் ஈசனை தரிசிக்கும் கணத்தில், நம் மனம் லேசாகிவிடுகிறது!

மன்னன் சத்தியவிரதனின் அம்பு உண்டாக்கிய வடு, இன்றளவும் லிங்கத் திருமேனியில் காணப்படுகிறதாம். அதை மறைக்கும்விதம் தலைப்பாகை அலங்காரத்துடன் திகழ்கிறார் அரசிலிநாதர். சத்திய விரதனைத் தொடர்ந்து அவன் மகன் இந்திரசேனனும், இந்த மன்னனின் மகளும் அரசலீஸ்வரரை வழிபட்டுப் பேறுபெற்றனராம். தொழிலில் தடைகள், பிரச்னைகள், நஷ்டம் ஆகிய பிரச்னை களால் தவிக்கும் அன்பர்களும் பதவி இழந்தோரும் இந்தக் கோயிலுக்குச் சென்று அரசமர இலைகளால் மூலவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் பலன் கிடைக்கும்.

பங்குனியில் சூரிய பூஜை

வருடம்தோறும் பங்குனி கடைசி வாரத்தில் காலை 6 மணியளவில், சுமார் 2 நிமிடங்கள் வரையிலும் சூரியன் தன் கிரணங்களால் இந்த இறைவனை வழிபடும் காட்சி அற்புதமானது என்கிறார்கள் பக்தர்கள். கருவறைக் கோஷ்டத்தில் தெற்குமுகம் நோக்கி அருள்கிறார் தட்சிணாமூர்த்தி. அவருக்கும் சற்று மேலே ஆனந்த தாண்டவர். மிகவும் அபூர்வ தரிசனம் இது. கோஷ்ட சுவர்களில் பற்பலக் கல்வெட்டுகள். இந்த ஊரைப் பற்றிய கல்வெட்டுச் செய்திகளில், 'ஜயம்கொண்ட சோழமண்டலத்து ஓய்மானாட்டு அரசிலி' என்றும் 'ஜயம்கொண்ட சோழமண்டலத்து ஒழுகறை' என்றும் பெயர்க் குறிப்புகள் உள்ளன.

ஆலயத்தில் நந்தி மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் தரிசனம் தரும் அம்மனுக்குப் பெரியநாயகி என்றும் அழகியநாயகி என்றும் திருநாமங்கள். பெயருக்கேற்ப பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதில் பெரியவள் இவள் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள். நீங்களும் ஒருமுறை குடும்பத்துடன் திருஅரசிலி எனப்படும் ஒழிந்தியாப்பட்டு தலத்துக்குச் சென்று அவ்வூர் இறைவனையும் அம்பாளையும் வழிபட்டு, அரசபோக வாழ்வை வரமாகப் பெற்று வாருங்கள்!

எப்படிச் செல்வது?: திண்டிவனம்- புதுச்சேரி பாதையில் இருக்கிறது. திண்டிவனத் திலிருந்து பயணித்தால், கிளியனூரும் தைலாபுரமும் தாண்டிய பின்னர், ஒழிந்தியாப்பட்டு எனும் கைகாட்டியைப் பார்க்கலாம். அங்குள்ள கிளைப் பாதையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் ஊர் உள்ளது. இந்த ஆலயம், காலை 7 முதல் 12 மணி வரையிலும்; மாலையில் 5 முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும் (தொடர்புக்கு: ஹரிபிரசாத் சிவாசார்யர் 98439 44334).

பிரதோஷ வழிபாடு இங்கே விசேஷம்!

வாமதேவ முனிவரும், சத்தியவிரதனும் இந்த இறைவனை வழிபட்டு அருள்பெற்றது பிரதோஷ தினத்தில்தானாம். ஆகவே, இந்தத் தலம் பிரதோஷ வழிபாட்டுக்குச் சிறப்புப் பெற்றதாகத் திகழ்கிறது. பிரதோஷக் காலத்தில் இந்த ஆலயத்துக்கு வந்து அபிஷேக ஆராதனைகளை தரிசித்து வழிபட்டுச் சென்றால், அரச போக வாழ்வை அருள்வாராம் அரசலீஸ்வரர்!

மட்டுமன்றி, `பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் இது. ஜாத கத்தில் ராகு-கேது தோஷம் உள்ளோர், இங்கு வந்து இறைவனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.

அரசலீஸ்வரர் இங்கு அரச கிரக அம்சத்துடன் திகழ்வதால், அரசாங்க உத்தியோகத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து வேண்டிச் செல்வோருக்கு, விரைவில் பிரச்னைகள் நீங்கும்; பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்’ என்கிறார்கள் பக்தர்கள்.

மன்னன் சத்தியவிரதனுக்குப் பிள்ளை வரம் தந்தவர் அல்லவா இந்த ஈசன். ஆகவே, அருள்மிகு அரசலீஸ்வரரை மனமுருகி வழிபட்டுச் சென்றால், விரைவில் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கு மாம். இங்ஙனம் பிள்ளை வரம் குறித்த பிரார்த்தனை நிறைவேறப் பெற்றவர்கள், அம்பாளுக்கும் சுவாமிக்கும் வஸ்திரம் சாத்தி, அங்கப்பிரதட்சணம் வந்து வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாம்.வருடம்தோறும் பங்குனி கடைசி வாரத்தில் காலை 6 மணியள வில், சுமார் 2 நிமிடங்கள் வரையிலும் சூரியன் தன் கிரணங்களால் இந்த இறைவனை வழிபடும் காட்சி அற்புதமானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism