Published:Updated:

`சேற்றிலும் சந்தனம் மணக்கும்!'

ஶ்ரீ குரு சுப்பையா சுவாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீ குரு சுப்பையா சுவாமிகள்

அற்புதங்கள் நிகழ்த்தும் குரு சுப்பையா சுவாமிகள்!

திண்டுக்கல் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் மட்டுமல்ல, ஆன்மிகத்துக்கும் பெயர் பெற்ற புண்ணிய பூமி. சித்தர்கள் அதிகம் வாழ்ந்த - வாழ்ந்து வரும் ஊர். போகர் பெருமான் ஜீவசமாதி அடைந்த பழநி முதலாக... கசவனம்பட்டி, மானூர், தவசிமடை, கணக்கன்பட்டி, கன்னிவாடி, சித்தர்கள் நத்தம் என சித்தர் பூமி என்றே சொல்லும் அளவுக்குச் சித்த புருஷர்களால் சிறப்புப் பெற்ற பகுதி!

`சேற்றிலும் சந்தனம் மணக்கும்!'

சித்தத்தில் சிவனை வைத்து, ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவும் பல அற்புதங்களை நிகழ்த்தும் மகா ஆத்மாக்கள் சித்த புருஷர்கள். அவ்வகையில் கடந்த நூற்றாண்டில் திண்டுக்கல்லில் வாழ்ந்து, மலைக் கோட்டையின் மேற்குப் பகுதியில் ஜீவசமாதியான சித்தபுருஷர், ஶ்ரீமத் ஓத சுவாமிகள் என்றழைக்கப்படும் ஶ்ரீபிர்ம ஸ்வரூப சுப்பையா சுவாமிகள்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார் சுப்பையா சுவாமிகள்.இவர், திருவண்ணாமலை ரமண மகரிஷிக்கே குருவாக இருந்தவர் என்கிறார்கள் பக்தர்கள்.

பிறக்கும்போதே பல அற்புதங்களால் தன்னை உணர்த்தியவர் ஶ்ரீசுப்பையா சுவாமிகள்.

`சேற்றிலும் சந்தனம் மணக்கும்!'

பிறப்பிலேயே நிகழ்ந்த அற்புதம்!

இவரின் தந்தையான பரமேஸ்வர ஐயர் ஒருமுறை பாத யாத்திரையாகக் காசிக்குச் சென்றார். காசியில் காசிவிஸ்வநாதர் சந்நிதியில் அவர் முனமுருகி நின்றிருந்தபோது ஓர் அசரீரி ஒலித்தது. ‘உமக்கு விஸ்வ நாதரே மகனாகப் பிறக்கப் போகிறார்’ என்றதாம் அந்த அசரீரி.

அந்த வாக்கு விரைவில் பலித்தது. 1850-ம் வருடம் புரட்டாசி மாதம் சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரத்தில், சுவாமிகளின் அவதாரம் நிகழ்ந்தது. அப்போது பிரசவ அறையில் வேத மந்திரம் ஒலித்ததாம். வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள், வியப்புடன் உள்ளே நுழைந்தபோது, அறைமுழுவதும் ரோஜா மலரின் நறுமணம் கமழ்ந்தது. மட்டுமன்றி, குழந்தையின் முகம் தவிர உடலின் மற்ற பாகங்களை மூடும்படி ரோஜா இதழ்கள் குவிந்திருருந்தன!

பிரசவம் பார்த்த பெண்ணும் அவரின் உதவியாள ரும் பூமாரி பொழிந்ததை நேரில் கண்டு சிலிர்த்துப் போனார்களாம். அவர்களிடம் கேட்டபோது, ``பிள்ளையின் ஜனன வேளையில் மூன்று மகா புருஷர்கள் தோன்றினார்கள். ஒருவர் நெற்றியில் நாமமும், ஒருவர் நெற்றியில் திருநீறும், மற்றவர் நெற்றியில் சந்தனமும் இருந்தன. மூவரும் வேத மந்திரத்தைச் சொல்லி, குழந்தையின் மீது ரோஜா இதழ்களைத் தூவி ஆசீர்வதித்து மறைந்துவிட்டனர்’’ என்றார்கள்.

அனைவரும் இந்த அதிசயத்தால் மலைத்து நின்றிருந்த அதேநேரம், பழநி மலைக்கோயிலின் மணி ஓங்கி ஒலித்தது. `ஓம்... ஓம்...’ எனும்படியாக முழங்கிய அந்த மணியோசை, நடந்தவை யாவும் அற்புதமே என்று உறுதி செய்தது. பக்தி பரவசத்தில் திளைத்த பரமேஸ்வர ஐயர், கோயில் மணியோசையை நல்ல சகுனமாகக் கருதி, குழந்தைக்குச் சுப்ரமணியன் என்று பெயரிட்டார்.

குழந்தைப் பருவம் முதலே சுப்பையா, சதாசர்வ காலமும் சித்தத்தைச் சிவன்பால் வைத்து அமைதியாக பரவச நிலையிலேயே அமர்ந்திருப்பார். அவ்வப்போது `ஓம்’ என்றும் `ஆதிசங்கரா’ என்றும் ஒரு வார்த்தை மட்டுமே அவரின் திருவாயிலிருந்து வெளிவரும்; வேறு பேச்சு எதுவும் இருக்காது.

சுவாமிகளுக்கு ஏழு வயதிலேயே அஷ்டமா சித்துகள் வசமாயின. எட்டு வயதில் குடும்பப் பந்தத்தை விட்டு விலகி, தனிமையை நாடிச் செல்ல விரும்பினார். ``நீ எப்போது அழைக்கிறாயோ, அப்போது வருகிறேன்’’ என்று தாயாரிடம் சொல்லிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.

பல இடங்களில் சுற்றித் திரிந்தவர் திண்டுக்கல்லுக்கு வந்தார். அங்கு வத்தன் செட்டியார் என்பவரின் வீட்டை அடைந்தவர், பிறகு அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். இன்றைக்கும் அவர் தங்கிய வீடு இருந்த தெரு, `வத்தன்செட்டி தெரு’ என்றே வழங்கப்படுகிறது.

வாழ்நாள் முழுக்க கோவணத்தை மட்டுமே ஆடையாகத் தரித்தார். சுப்பிர மணியன் காலப்போக்கில் சுப்பையா என அழைக்கப்பட்டார். சிலநேரம் சுவாமிக்கு ஓதம் தோன்றுமாம். அதனால் ஓதச் சுவாமிகள் என்றும் பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

`சேற்றிலும் சந்தனம் மணக்கும்!'
`சேற்றிலும் சந்தனம் மணக்கும்!'

`வா நரசிம்மா... சௌக்கியமா?’

திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேற்குப் பகுதி, அந்தக் காலத்தில் காடாக இருந்தது. அங்கு சில குகைகள் உண்டு. தனிமையை விரும்பிய சுப்பையா சுவாமிகள் அங்கு ஒரு குகையில் தங்க ஆரம்பித்தார்.குகைக்கு வெளியே அருவிபோல எப்போதும் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கும். தற்போது, அந்தக் குகை இருந்த பகுதியில்தான் சுவாமிகளின் திருக்கோயில் அமைந்துள்ளது.

திண்டுக்கல் பகுதியில் இருந்தபோது சுவாமிகள் பல திருவிளையாடல்களை நடத்தியிருக்கிறார். நோயாளிகளைக் குணமாக் குவது, குழந்தை களுடன் விளையாடுவது எனச் சித்துகளைப் புரியும் ஓதச் சுவாமிகள், பல நேரங்களில் சாக்கடையில் நீராடுவார். அப்படி நீராடிவிட்டு அவர் நடந்து வரும்போது சந்தன வாசம் வீசுமாம்!

ஒருமுறை, சிருங்கேரி மடத்தின் 32-வது பீடாதிபதியான சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீஶ்ரீநரசிம்ம பாரதி ஆசார்ய சுவாமிகள் திண்டுக்கல் நகருக்கு விஜயம் செய்தார். மேள- தாளம் முழங்க பக்தர்கள் அவரை வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

அப்போது ஒரு சாக்கடையில் குளித்துக்கொண்டிருந்த ஓத சுவாமிகள், `பல்லக்கு, பட்டு, பீதாம்பரம்… ஊர்வலம்..’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாராம். இதை ஞானதிருஷ்டியில் தெரிந்துகொண்ட ஆசார்ய சுவாமிகள், பல்லக்கை விட்டு இறங்கி வேக வேகமாக நடந்து வந்து ஓதசுவாமிகள் இருந்த இடத்தை அடைந்தார்.

சுவாமிகளைக் கண்டதும் `அண்ணா’ என மடாதிபதி அழைக்க, சுவாமிகளோ ``வா நரசிம்மா... சௌக்கியமா?’’ எனக் கேட்டார். மடாதிபதியுடன் வந்தவர்கள் ``இவர் ஒரு பித்தன்’’ என்றார்களாம். ஆனால், ``இவர் நிலையை அடையவே நான் பாடுபடுகிறேன். சதாசிவ பிரம்மேந்திராளையே இங்கு பார்க் கிறேன்’’ என்ற ஆசார்யர், சுப்பையா சுவாமிகளைப் பயபக்தியுடன் வணங்கி, சகல மரியாதையுடன் அழைத்துச் சென்று, பலமணி நேரம் அவரிடம் பேசினாராம்.

`சேற்றிலும் சந்தனம் மணக்கும்!'
`சேற்றிலும் சந்தனம் மணக்கும்!'

ஶ்ரீரமணரும் சுவாமிகளும்!

கவான் ரமண மகரிஷியின் பால பருவத்தில், அவரின் தந்தைக்குப் பணிமாற்றம் கிடைத்த காரணத்தால் அவர்களின் குடும்பம் திண்டுக்கல் அபிராமி கோயில் அருகில் குடி வந்தது. ``ரமணர் திண்டுக்கல்லில் இருந்தபோது ஓதசுவாமிகளைச் சந்திப்பது உண்டு. அப்போ தெல்லாம் இருவரும் பலமணி நேரம் பேசிக் கொள்வார்களாம். ஒருமுறை பேச்சின் ஊடே ரமணருக்கு அருளாசி வழங்கிய ஓத சுவாமிகள், ‘நீ திருவண்ணாமலைக்குச் செல்... உனக்கான பணி அங்கே காத்திருக்கிறது’ என்று கூறினாராம். அதன்படியே ரமணர் திருவண்ணாமலை சென்றார்’’ என்கிறார்கள் சுப்பையா சுவாமிகளின் பக்தர்கள்.

தன்னை மனதில் நினைத்து வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து வந்த சுப்பையா சுவாமிகள், 1906-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி (புரட்டாசி-26), திருவாதிரை நட்சத்திரத்தன்று காலை 6 மணிக்கு நிஷ்டையில் அமர்ந்தபடியே சித்தி அடைந்தார். ஆம், சுவாமிகளின் ஜனனமும் சித்திபெற்ற நிகழ்வும் திருவாதிரையிலேயே அமைந்தது ஓர் அபூர்வமான ஒற்றுமை!

சுவாமிகள் அதிஷ்டானம் செய்யப்பட்ட இடத்தில், சிறியதொரு சுயம்பு லிங்கம் முளைத்தது. அங்கே கோயிலும் அமைக்கப்பட, தற்போது பக்தர்கள் வழிபடும் தலமாக இருக்கிறது. புரட்டாசி திருவாதிரையில் சுவாமிகளுக்குக் குருபூஜை நடைபெறுகிறது.

`சேற்றிலும் சந்தனம் மணக்கும்!'
`சேற்றிலும் சந்தனம் மணக்கும்!'

அற்புதக் கிணறு... குகை தரிசனம்!

லை அடிவாரத்தில் கோயில் அமைந் துள்ளது. ஸ்தல விருட்ம் வில்வம். உள்ளே நுழைந்ததும் அழகிய நந்தி. நேர் எதிரில் அதிஷ்டானக் கோயில். சுயம்பு லிங்கத்தின் பின்னால் சுவரில், ஶ்ரீசுப்பையா சுவாமிகள் திருவுருவப் படம். தெற்குப் பக்கத்தில் ஶ்ரீசாரங்க ரெங்கநாத சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. இவர், சிறு வயதிலேயே சுப்பையா சுவாமிகளை தரிசித்து, அவருக்குப் பணிவிடை செய்யும் தொண்டராக மாறினார்.

ஒரு கார்த்திகை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் இவர் இறைவனடி சேர்ந்தார். இவருக்கும் ஓத சுவாமிகள் அதிஷ்டானத்துக்கு அருகிலேயே சமாதி எழுப்பப்பட்டது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று இவருடைய குருபூஜை நடத்தப்படுகிறது.

இந்தச் சந்நிதியின் அருகிலேயே விநாயகர் கோயில் உள்ளது. அருகிலேயே குகை தரிசனம். உள்ளே, லிங்கோத்பவர் - அமிர்தாம்பாள், தண்டாயுதபாணி ஆகியோர் அருள்கிறார்கள். சுவாமிகளின் அதிஷ்டானக் கோயிலில் ராமலிங்க அடிகளார், அன்னலிங்கம், மதுரை வீரன், அன்ன கருடாழ்வார் சந்நிதிகளையும் இங்கே தரிசிக்கலாம். தீர்த்தக் கிணறு ஒன்றும் இங்கு உள்ளது எப்போதும் அதில் மலையிலிருந்து நீர் விழுந்துகொண்டே இருக்கிறது.

குருவருளை வேண்டும் அன்பர்கள் யாவரும் ஒருமுறை அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புதத் தலம் ஶ்ரீசுப்பையா சுவாமிகளின் இந்த அதிஷ்டானக் கோயில். தரிசிக்கும் அன்பர்கள் யாவருக்கும் குருவருளும் திருவருளும் ஒருசேர கிடைக்கும்!

தேவ ஜாலிஸ் தம்பதி
தேவ ஜாலிஸ் தம்பதி

`பிள்ளை வரம் கிடைத்தது!’

தபேதம் இல்லாமல் சுவாமிகளை வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். இதற்குச் சான்று அன்பர் தேவ ஜாலிஸ் தம்பதி.

``தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஆர்.ஜே. பணியில் இருக்கிறேன். நான் நடன ஆசிரியரும் கூட. எனக்குத் திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லை. நண்பர் ஒருவர் மூலம் ஓத சுவாமிகள் பற்றி அறிந்தேன். ஒருநாள் மனைவியும் நானும் நேரில் வந்து பிரார்த்தனை செய்தோம்.

முதல் முறை வந்தபோதே இங்குள்ள அமைதியையும் ஈர்ப்பையும் அனுபவித்து உணர்ந்தோம். சிவலிங்கத்தை முதல் முறையாக அப்போதுதான் பார்த்தோம். எங்களுக்குள் அப்படியொரு பரவசம்!

ஆத்மார்த்தம், சமர்ப்பணம் இருந்தால் போதும்... அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்று கோயிலில் சொன்னார்கள். அதன் பிறகு மீண்டும் மீண்டும் இங்கு வரத் தோன்றியது. அடிக்கடி சென்று குருவிடம் வேண்டிக்கொண்டோம். விரைவிலேயே எங்களுக்குப் பிள்ளை வரம் கிடைத்தது!’’ என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார் அன்பர் தேவஜாலிஸ்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

`கடவுளின் மடியில் தலை வைத்துப் படுத்த உணர்வு!’

ற்போது கோயிலில் பூஜைகளைச் செய்து வருபவர் ஜெயக்குமார். அவர் தன் வாழ்வில் நிகழ்ந்ததைப் பகிர்ந்துகொண்டார். ‘`நான் வாழ்க்கையில் நல்லபடியா வாழ்ந்தவன். ஆனால் ஒரு கட்டத்தில் பயங்கரமான கஷ்டம். தினமும் ஐயாகிட்ட வந்து புலம்புவேன். ஒருநாள் வாழ்வே வெறுத்துப்போய், தற்கொலை முடிவுக்கு வந்து விட்டேன்.

கடைசியாக ஒருமுறை ஐயாவை தரிசனம் செய்யலாம் என்று வந்தேன். அப்போது இங்கே பூஜை செய்துகொண்டிருந்த அண்ணா, என் முகவாட்டத்தைக் கவனித்தார் போலும்.

எனக்கு ஆறுதல் சொல்லி உணவு கொடுத்து, `இன்று இங்கேயே படுத்துக்கொள்’ என்று கூறிச் சென்றார். நான் கோயிலுக்குப் பின்னால இருக்கும் பாறையில் படுத்தேன். நல்ல நிம்மதியான உறக்கம். கடவுள் மடியில் தலைவைத்துப் படுத்தது போன்ற உணர்வு. அதன்பிறகு எனக்குள் ஓர் அமைதியும் நிதானமும் ஏற்பட்டன. அந்த அமையான மனோநிலையே இன்றும் என்னை வழிநடத்துகிறது. இங்கு வரும் பக்தர்களிடம் நான் சொல்வது ஒன்றுதான்...

ஆத்மார்த்தமா வேண்டிகிட்டு ஐயாகிட்ட சரணாகதி அடைந்தால் போதும்; பிரச்னையை அவர் பார்த்துக்கொள்வார். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்... மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையைக் குணமாக்க பெற்றவங்க ஐயாகிட்ட வந்தார்கள். தொடர்ந்து முறையிட்டு வணங்கினார்கள். இப்போது, அந்தக் குழந்தை மனநல மருத்துவராம். இதுதான் இங்கு நடக்கும் அற்புதம்!

டிரம்ஸ் சிவமணி ஐயாவோட தீவிர பக்தர். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த குரு பூஜைக்கு வந்து, விடியும்வரை இருந்தார். சரணா கதி மட்டுமே சகலத்திற்கும் சாத்தியம். அதை இங்கே கண்கூடாகக் காணலாம்’’ என்றார்.