
- வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் -
ஆறுமுகப் பரமனைப் போற்றும் திருநாள்களில் ஒன்று திருக் கார்த் திகை. இந்நாளில் கந்தனைச் சிந்தித்து மகிழும் விதம், அற்புதமான முருகன் தலம் ஒன்றின் மகிமையை அறிவோம். ஆறுபடை வீடுகள் என்று போற்றப்படும் தலங்களில் நான்காவது திருவேரகம் - சுவாமிமலை ஆகும். இத்தலத்திற்கு அருகில் ஏரகரம் (ஏராகரம்) என்ற ஒரு சிற்றூர் உள்ளது. அங்குள்ள கந்தநாதசுவாமி கோயில் மிகப் பழைமையானது.

இத்தலம் கும்பகோணம்-சுவாமிமலை சாலையில், மூப்பக் கோயிலி லிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - நீலத்தநல்லூர் சாலையில் உள்ள அசூரில் இருந்தும் இவ்வூருக்குச் செல்லலாம். சுற்றிலும் பச்சைப் பசேல் என்று வயல்களும், தோப்புகளும் நிறைந்து இயற்கை எழிலுடன் விளங்கும் மிக அழகிய கிராமம் ஏரகரம்.
சமயாசார்யர்கள் நால்வராலும் பாடப்பெற்ற திருப்புறம்பியம் என்ற தலத்திற்கு தென்கிழக்கிலும், சம்மந்தர், அப்பர் இருவரும் போற்றிய இன்னம்பர் எனும் தலத்திற்கு வடகிழக்கிலும் இத்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் விக்ரமச்சோழன் (1120 - 1136) காலத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. `இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்முடி சோழ மங்கலம்’ என்று அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
`இன்னம்பர் நாடு’ என்பது பண்டைக் காலத்தில் சோழமண்டலத் தில் காவிரிக்கு வடகரையில் இருந்த பற்பல நாடுகளில் ஒன்றாகும். தற்போதைய கும்பகோணம் வட்டத்தில் உள்ள கொட்டையூர், மேலக்காவேரி, கருப்பூர், அசுகூர் (அசூர்), ஏரகரம் முதலான ஊர்களையும், பாபநாசம் வட்டத்தில் உள்ள ஆதனூர் மருத்துவக்குடி முதலாக ஊர்களையும் தன்னகத்தில் கொண்டு விளங்கியது இன்னம்பர் நாடு என்று அறிய முடிகிறது.
இந்த இன்னம்பர் நாட்டைப் பற்றிய மற்றொரு கல்வெட்டு ஒன்று தஞ்சை ராஜராஜேச்சரத்தில் காணப்படுகிறது. `இராஜேந்திர சிங்க வளநாட்டு இன்னம்பர் நாட்டு பழைய வானவன் மகாதேவிச் சதுர் வேதி மங்களத்துச் சபையார் இக்கடவ திருமெய்க் காப்பு ஒன்றும், இந்நாட்டு அசுகூர் சபையார் கடவர் திருமெய்க்காப்பு ஒன்றும், இந்நாட்டு ஏராகிய மும்முடி சோழ மங்கலத்தார் ஒன்றும்’ என்று அதில் உள்ளது. ஆக `ஏர்’ என்ற ஊர் இன்னம்பர் நாட்டில் அமைந்தது என்பதைக் கல்வெட்டால் அறிய முடிகிறது.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசு சுவாமிகள் தமது (திருப்புகலூர்) க்ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் `இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர்... கயிலாயநாதனையே காணலாமே' என்று பாடியுள்ளார்.
மேலும் திருவீழிமிழலைத் திருத்தாண்டகப் பதிகத்தில் `பெரும்புலியூர் விரும்பினார் பெரும் பாழியார் பெரும் பற்றப்புலியூர் மூலட்டானத்தார் இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம் பரார் ஈங்கோய் மலையார்... வீழிமிழலையே மேவினாரே” என்று பரவுகிறார்.
மேற்கண்ட இரண்டு பாடல்களிலும் குறிக்கப்படும் ‘ஏர்’ என்ற ஊர், இன்னம்பரோடு சேர்த்துப் பாடப் பெற்றிருக்கிறது. இவற்றின் மூலம் இத்தலத்தின் தொன்மையை மட்டுமன்றி, இது தேவார வைப்புத் தலமாக உள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டிலுள்ள திருமுருகாற்றுப் படையில் `திருவேரகம் என்னும் தலத்தை 13 வரிகளில் நக்கீரர் போற்றுகிறார். இதில் நக்கீரர் ஏரகத்தை விரிவான வகையில் வர்ணிக்கவில்லை. அங்கே முருகனை வழிபடும் அந்தணர்களின் இயல்பை மட்டும் கூறுகிறார். `அவர்கள் ஆறு தொழில்களையும் வழுவாமல் செய்பவர்கள். இருபது ஆண்டுகள் (ஆறு+நான்கு = 10 இரட்டி 10x2) இளமைப் பருவத்திற்குரிய நல்ல ஆண்டுகளை, நிற்க வேண்டிய நல்ல நெறியிலே (பிரம்மசரிய விரதம்) காத்து, பிறகு இல்வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆறு எழுத்துக்களைத் தன்பாற் கொண்ட அரிய உபதேச மந்திரத்தைப் பலமுறை கூறி மிக்க நறு மலர்களை ஏந்தி வழிபடுகிறார்கள்' என்று நக்கீரர் பாடுகிறார்.
திருமுருகாற்றுப்படைக்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர் (14-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்) திருவேரகம் என்பது மலை நாட கத்தில் ஒரு திருப்பதி என்கிறார். ஆனால் அது எங்கு உள்ளது என்பதைக் குறிப்பிடவில்லை. தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவேரகம் ஒரு கட்டு மலை. எனவே இதைப் பற்றிய சில வேறுபாடான கருத்துகள் நிலவி வருகின்றன.
ஆனால் 14-ம் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழில் `ஏரக வெற்பெனும் அற்புத மிக்க சுவாமிமலைப் பதி’ என்றும் `காவிரி வரகரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத்து அந்தணர் அடியினை போற்ற ஏரகத்து இறைவன் என இருந்தனையே’ என்றும் பாடுகிறார். ஆக, காவிரிக் கரையில் சோழ நாட்டில் இன்று `சுவாமி மலை’ என்று வழங்கப் பெறும் திருத்தலமே திருவேரகம் என்பதைத் திருப்புகழ் பாடல்கள் நன்கு தெளிவுபடுத்துகின்றன.

`ஆறெழுத்து அடக்கிய அறுமறைக் கேள்வி... ஏரகத்து உறைதலும் உரியன்’ எனும் திருமுருகாற்றுப் படை வரிகளை அருணகிரியாரின் திருப்புகழ் வரிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இதை உணர முடியும். இனி, ஏரகம் எனும் இந்தத் தலத்துக்கு அந்தப் பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்பதை சற்றுச் சிந்திக்கலாம்.
தற்போதைய சுவாமி மலைக்கு ஈசான்ய திசையில் ஏரகம் என்ற தலம் இருப்பதால், அதற்கும் `ஏரகம்’ என்று பெயர் வைத்திருக்க லாம் அல்லது அக்காலத்தில் அந்தணர்கள் வாழ்ந்த அகரம் மிகப்பெரியதாக இருந்து, அதன் இடையே முருகன் கோயில் இருந்திருக்கலாம். ஏரைச் சார்த்த அகரமாதலின் ஏரகரம் என்று வழங்கி, பிறகு அதுவே ஏரகமாக மாறியிருக்கலாம். எனினும் தற்போதைய சுவாமிமலை கோயிலைவிட ஏரகம் கோயில் தேவாரத்திலும் கல்வெட்டிலும் குறிப்பிடப் பெறுவதால், அது காலத்தினால் முற்பட்டது என்பதை உணரலாம்.
கந்தப் பெருமான் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றமையால் ஏரகத்திலுள்ள இறைவன் பெயர் ஸ்கந்த நாதர் என வழங்கலாயிற்று. இவருக்கு சங்கரநாதர் என்றும் பெயர் உண்டு. மேலும் குமரன் அமர்ந்த இடமாதலால் இத்தலத்தைக் குமாரபுரம் எனவும் அழைப்பர்.
இந்தத் தலத்தில் அம்பிகைக்கு `சங்கரநாயகி’ என்று பெயர். கோயிலுக்கு அருகிலுள்ள சரவணப் பொய்கை கந்தப் பெருமானால் உண்டாக்கப்பெற்றது. இங்கே முருகன் சிவபெருமானைப் பூசித்து சூர சம்ஹாரத்திற்குப் பல அஸ்திரங்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அக்காலத்தில் அசூர் வாய்க்காலுக்கு மேற்புறம் காவிரிக் கரையில் சங்கரி அம்மன் படித்துறை என்று ஒன்று இருந்தது. அதன் அருகில் இருந்த சங்கரி அம்மன் படுகையில்தான் ஸ்கந்த நாதர் தீர்த்தம் கொடுக்கும் வைபவம் நடந்து வந்ததாகத் தெரிகிறது.
அங்குள்ள மண்டபங்களையும், பண்டைய இடிப்பாடுகளையும் காணும்போது ஒரு காலத்தில் மிகவும் பெருமையும் சிறப்பும் பெற்ற ஒரு தலமாக ஏரகரம் திகழ்ந்தது என்பதை உணர முடியும். அக்காலத்தில் இத்திருக்கோயில் நான்கு பிராகாரங்களுடன், நெல்லி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டும் அமைந்திருக்கிறது.

இக்கோயில் முழுதும் இடிந்த நிலையில் 1973-ம் ஆண்டில் திருப் பணி குழுவினரால் முற்றிலும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் துவார விநாயகர், துவார சுப்ரமணியர் சந்நிதிகள் உள்ளன. கொடிமரம் இல்லை. அம்பிகை சங்கர நாயகி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். வெளிச்சுற்றில் விநாயகர், முருகன், நவகிரகங்கள் முதலான சந்நிதிகள் உள்ளன.
கந்தநாத சுவாமி, சிவலிங்க வடிவில் ஜெகஜோதியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவரது மூலஸ்தான கட்டட அமைப்பு அப்படியே உள்ளது. மேற்குப் பிராகாரத்தில் ஏரகத்தமர்ந்த எழில் முருகன், ஒரு முகம் நான்கு கரங்கள் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். பின் கரங்களில் வஜ்ர சக்தியும் திரிசூலமும் கொண்டுள்ளார். முன் வலக்கரத்தால் அபயம் காட்டியும் இடக் கரத்தை இடுப்பில் ஊன்றியபடியும் அருள்கிறார் முருகன்.
அற்புதமான இந்தக் கோலத்தை `ஆதிசுவாமிநாத சுவாமி’ என்று போற்றுகின்றனர். திருவடிகளில் தண்டையும், இடுப்பில் பட்டுத் துகிலும், படர்ந்த அட்டிகையும், வானவரால் பூச்சூடப் பெற்ற வைர முடியும் கொண்டு பெரிய திருமேனியாக அருள்பாலிக்கிறார்.
இந்தத் திருக்கோயிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் ஸ்கந்த சஷ்டி விழாவில் சங்கரியம்மையிடம் சக்திவேல் பெற்று சூரசம்ஹாரத்திற்கு செல்லும் வைபவம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப் பெருமானை சஷ்டி திருநாளில் விரதம் இருந்து வழிபடுவோர்க்கு உரிய காலத்தில் திருமணம் நடந்து, குழந்தைப்பேறும் பெற்று இன்புறுவர் என்பது பலரது அனுபவமாகும்.
ஏரகம் கந்தநாத பெருமானைக் குலதெய்வமாகக் கொண்ட குடும்பத்தினர் ஆண்டுதோறும் இங்கு வந்து சிறப்பாக வழிபாடு செய்து வருகிறார்கள். கும்பகோணத்திலுள்ள `சனாதன சேவா சங்கம்’ என்ற அமைப்பினர் மாதா மாதம் சஷ்டியன்று சத்ருசம்ஹார திரிசதி அர்ச்சனை, ஹோமம் முதலியன நிகழ்த்தி அன்னதானம் செய்து வருகிறார்கள்.
இங்குள்ள சரவணப் பொய்கைத் தீர்த்தக் குளம் படித்துறை கட்டி பாதுகாக்கப்பட வேண்டும். அடியார் பெருமக்கள் பெருமளவில் இவ்விறைவனை வழிபட்டு அருள்பெற்று மகிழலாம் (தொடர்புக்கு: கார்த்திக் சிவாசார்யர்-96290 89795).

பசுநெய் - தீபம் சிவசக்தி சொரூபம்
கார்த்திகை தினத்தில், தீபத்தை ஏற்றிவைத்து, ‘தீப சரஸ்வதி போற்றி, தீப லட்சுமி போற்றி, தீப துர்கா போற்றி என்று ஒவ்வொரு நாமத்தையும் மூன்று முறை சொல்லி வழிபடவேண்டும். அத்துடன், குலதெய்வத்தின் திருநாமத்தையும் மூன்று முறை சொல்லி, தீபத்தை பன்னிரண்டு முறை நமஸ்காரம் செய்து வணங்குவதால், வீட்டில் எல்லா சுபிட்சங்களும் நிறையும்.
இந்த நன்னாளில் மண்ணால் ஆன அகல் விளக்குகளில், பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுவது விசேஷம். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்துவிளக்கில் தீபம் ஏற்ற வேண்டும் என்பர்.
விளக்கேற்ற பசு நெய் பயன்படுத்துவதற்கு, ஒரு காரணம் உண்டு. தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. அதன் பாலில் இருந்து கிடைக்கும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதிகம். ஆகவே, பசுநெய் ஊற்றி ஏற்றப்படும் தீபம் - நெய்யாகிய தேவியின் அம்சம் சிவமாகிய ஜோதியுடன் சேர்த்து, ‘சிவசக்தி’ சொரூபமாகிறது.
-நெ.இராமன், சென்னை-74