பிரீமியம் ஸ்டோரி

அன்றலர்ந்த பாரிஜாத மலர் போல அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் மாலாமணியன். அவருடைய புன்னகையும் இனிய குரலும்கூட அப்படித்தான். எப்போதும் ஃப்ரெஷ்! அவருடன் சில நிமிடங்கள் பேசினால் போதும்; பேச்சில் பொங்கித் ததும்பும் அவரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

35 ஆண்டுகளாக ஊடகத் துறையின் அனைத்துப் பரிமாணங் களையும் பார்த்தவர் மாலா மணியன். சிறு வயதிலிருந்தே ஆன்மிகத் திலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர், தன்னுடைய ஆன்மிக அனுபவங்கள் குறித்துப் பேசுகிறார்.

`ஜெய ஹனுமான் 
துணை வருவான்!'

``வீட்டில் பாட்டி, அம்மா, அப்பான்னு எல்லோருமே ரொம்ப கடவுள் பக்தி உள்ளவங்க. சின்ன வயசிலிருந்தே அவங்க சாமி கும்பிடுவதைப் பார்த்துப் பார்த்து நானும் பின்பற்ற ஆரம்பிச்சிட் டேன்னு சொல்லலாம். என் பள்ளி நாட்களில் நாங்க எக்மோரில் இருந்தோம். அங்கே தாசப்ரகாஷ் ஹோட்டலுக்குப் பின்பக்கம் ஒரு அர்த்தநாரீஸ்வரர் கோயில் இருக்கும்.

அந்த வழியில்தான் ஸ்கூலுக்குப் போகணும். அதனால தினமும் ஸ்கூலுக்குப் போறப்ப... சாமியை ஒரு சுத்து சுத்தாம ஸ்கூலுக்குப் போறதில்லை. பரீட்சைன்னா எக்ஸ்ட்ராவாக ரெண்டு சுத்து சுத்துவோம்.

அப்பவெல்லாம் வீட்டில் விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் சாமிக்கு பூ போட்டு, ஊதுவத்தி ஏத்துறதைத் தவிர பெரிசா பூஜை எல்லாம் பண்றது இல்லை. ஆனால் அம்மா வரலட்சுமி நோன்பு, காரடையான் நோன்பு எல்லாம் நல்லா கும்பிடுவாங்க. விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி மாதிரி விசேஷ நாட்களில் பட்சணங்கள் எல்லாம் செய்து, சிறப்பா பூஜை பண்ணுவாங்க. அதில் என்னுடைய பங்கும் நிச்சயம் இருக்கும். அம்மா இறந்த பிறகும், அப்பா பூஜை செய்வாங்க; நானும் கூட இருந்து உதவிகள் செய்வேன்.இப்போ தினமும் ரெண்டு வேளை விளக்கேத்தி சாமி கும்பிடுறேன்.

பண்டிகைகளில் மனசுக்கு நெருக்கமான பண்டிகை நவராத்திரிதான். அதிலும் தினமும் பட்டுப் பாவாடை போடலாம்கிற விஷயம்தான் ஹைலைட். தினமும் ஸ்வீட், சுண்டல் எல்லாம் கிடைக்கும்கிறது வேற விஷயம். எங்க காலனியில் 30 வீடுகள். அம்மா தட்டில் ஸ்வீட், சுண்டல் எல்லாம் எடுத்து வெச்சு, ‘இது எதிர்த்த வீட்டுக்கு, இது அடுத்த வீட்டுக்கு’ன்னு சொல்லி கொடுத்து அனுப்புவாங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் ஓடிப் போய் கொடுத்துட்டு வர்றது ரொம்ப சந்தோஷமா இருக்கும். இப்போதும் சிம்பிளா இயன்றளவு கொலு வைக்கிறேன்.’'

உங்களுடைய இஷ்ட தெய்வம்..?

``முருகன். என்னைப் பாடச் சொன்னாலே முதலில் முருகன் பாட்டுத்தான் வரும். நவராத்திரி நேரங்களிலும் கொலுவில் பாடச் சொன்னால்... ‘ஆஹா... நமக்கு முருகன் பாட்டுத்தானே தெரியும்’னு யோசிப்பேன். அவர்தான் என் ஆல்டைம் ஃபேவரைட்!’’

கோயில்களுக்கு அடிக்கடி போகும் பழக்கம் உண்டா?

``பள்ளி நாட்களிலிருந்தே இருக்குதுன்னு சொன்னேன் இல்லையா! அதுக்குப் பிறகு கல்லூரி நாட்களில் தினசரி போக முடியலன்னாலும் அடிக்கடி போவேன். ஷூட்டிங்குக்காக எந்த ஊருக்குப் போனாலும், அங்கே என்ன கோயில் இருக்கோ அதை விசாரிச்சுப் போயிட்டு வரும் பழக்கமுண்டு. போற கோயில் எல்லாமே மனசுக்குப் பிடிச்ச கோயில்னுதான் சொல்லணும். இப்போதும் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் பெல்ட்டில் இருக்கும் நிறைய கோயில்களைத் தேடித் தேடிப் போய் தரிசனம் செஞ்சுட்டு வர்றேன்.

எங்கள் குலதெய்வத் தலம் வைத்தீஸ்வரன்கோவில். 2008-ல் அப்பா இறந்ததுக்கு அப்புறமும் மூணு அண்ணாக்கள் குடும்பம், அக்கா குடும்பம், குழந்தைகளுடன் ரெகுலரா வைத்தீஸ்வரன் கோயில் போய்கிட்டிருக்கோம். அப்படிப் போகும்போது அந்த ஏரியாவில் பார்க்காத கோயில் எதுன்னு லிஸ்ட் போட்டு, அங்கேயும் போய்ட்டு வந்துடுவோம். அதேபோல் பொங்கலன்று வீட்ல பொங்கல் வெச்சு சாமி கும்பிட்டதும், எல்லோருமா சேர்ந்து ரெண்டு மூணு கார்களில் கிளம்பிடுவோம். குடும்பத்தோட செல்லும் அந்தப் பயணம் ரொம்ப ஜாலியா இருக்கும். வைத்தீஸ்வரன் நோய்களைத் தீர்ப்பவர் என்பதால் கோவிட் நேரத்தில் அவரைத்தான் நிறைய வேண்டிக்கிட்டோம். இந்த செப்டம்பர் 1-ம் தேதி கோயில் திறந்ததும் நான் முதலில் போனது வைத்தீஸ்வரன்கோயிலுக்குத்தான்..!’’

`ஜெய ஹனுமான் 
துணை வருவான்!'

உங்கள் வாழ்வில் இறை நிகழ்த்திய அற்புதங்கள்...?

``நிறைய உண்டு! உதாரணத்துக்கு ஒன்று சொல்றேன்... நண்பர் ஒருவர் என்னிடம், ‘தினமும் ஆதித்ய ஹ்ருதயம் படிங்க... ரொம்ப நல்லது’ன்னு சொன்னார். ரெண்டு வாரம்தான் படிச்சிருப்பேன்... இடையில் சூரியனார் கோயிலுக்கும் போய்ட்டு வந்தேன். திடீரென்று ஒருநாள் ஒரு சானலிலிருந்து என்னைக் கூப்பிட்டு, பிரபலங்களைப் பேட்டி எடுத்துத் தரச்சொன்னாங்க.

‘குடியரசு தின ஸ்பெஷல்’ன்னு ஒரு நாள் பேட்டிக்காகத்தான் கூப்பிட்டாங்க. அதுக்கப்புறம் அதை வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடரச் சொல்லிட்டாங்க. ஞாயிறுக்காக ஆதித்ய ஹ்ருதயம் படிச்சதுக்கு கை மேல பலன் கிடைச்சதாகவே ஃபீல் பண்றேன்.

?அடிக்கடி பாடும் தெய்வப் பாடல், ஸ்லோகம்..?

``அடிக்கடி நான் சொல்றது கந்தசஷ்டி கவசம்தான். செவ்வாய்க் கிழமைகளில் கண்டிப்பாகப் பாடுவேன். அதேபோல் நிறைய முருகன் பாடல்கள் படிப்பேன். 15, 20 வருஷங்களுக்கு முன்னாடி இசை அமைப்பாளார் ரமேஷ் விநாயகம் சார் இசையமைச்ச ‘ஶ்ரீராமதூதம்’ என்கிற ஆல்பத்தில் இருக்கும் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரெகுலரா நான் கேட்கும் சில பாடல்களில் அதுவும் ஒண்ணு. அதில் குறிப்பாக சில வரிகள் எனக்குள்ளே எப்போதும் ஒலிக்கும்.

இப்ப ஒரு படத்தை எடுத்து முடிச்சிருக்கேன். காசு இல்லாத போதும் எப்படியோ ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்க உதவியால், போட்ட ஷெட்யூல் கேன்சல் ஆகாம, நான் நினைச்சபடி எடுத்து முடிச்சிருக்கேன். ரிலீஸ் தேதி தள்ளிப் போனாலும், ‘நல்ல படம் ஒண்ணு பண்ணியிருக்கோம். ரிலீஸ் பண்ன நல்ல நேரம் வரும்’ என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கேன்.

இந்த மாதிரி நேரங்களில் எனக்கு நானே தைரியம் ஏற்படுத்திக்க அந்தப் பாட்டின் வரிகளை எனக்குள்ளே சொல்லிப்பேன். அப்படி நான் எனக்குள்ளே அடிக்கடி திருப்பித் திருப்பிச் சொல்லும் அந்த வரிகள்.. ‘ஜெய் ஹனுமான் துணை வருவான்... ஜெயமுண்டு பயம் இல்லை மனமே’. என் டீமுக்கே தெரியும் இந்தப் பாட்டு! “

`ஜெய ஹனுமான் 
துணை வருவான்!'

புண்ணிய யாத்திரைகள்... பாத யாத்திரை எல்லாம் சென்ற அனுபவம் உண்டா?’’

``சின்ன வயசிலிருந்தே பல தடவை திருப்பதிக்கு நடந்தே போய்ட்டு, நடந்தே வந்திருக்கோம். அதிகாலை நேரம் திருப்பதி ஆலயத்தை வலம் வர்றது ரொம்பப் பிடிக்கும். அருமையான சிலிர்ப்பான வைப்ரேஷனை அங்கே உணரலாம். அக்கா, அண்ணாவோட பசங்க, பேரப் பசங்க எல்லோருக்கும் மொட்டை போடறதுக்காக திருப்பதி போவோம்... இப்படி எல்லோரும் சேர்ந்து நடந்து போறது ரொம்ப சந்தோஷமா இருக்கும். அடிவாரத்திலிருந்து சிரமமே இல்லாமல் ஏறிப் போவோம்.

இதுல யார் முன்னால போறதுன்னு போட்டியும் இருக்கும். அசதியே தெரியாது. அதெல்லாம் ஒரு காலம். இப்ப நாம நினைச்சாலும் நடந்து போக முடியுமான்னு தெரியல. ஒரு தடவை நடந்து போறப்போ முட்டி வலி வந்து கஷ்டப்பட்டேன். அதனால இப்போ நடந்து போறதில்லை. ஆனாலும் காரில் போய் வந்துட்டுத்தான் இருக்கேன். அதேபோல் ஒருமுறையாவது திருவண்ணாமலை கிரிவலம் போகணும்னு ரொம்ப நாளாக ஆசை... இன்னும் போக முடியல!’’

விரைவில் உங்களை அழைப்பார் அண்ணாமலையார். இன்னொரு ஆன்மிக அனுபவத்துக்குத் தயாராக இருங்க மேடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு