Published:Updated:

கல்யாண வரம் தரும் மகாலட்சுமி!

ஶ்ரீமகாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமகாலட்சுமி

கேரள தரிசனம் - கடவில் ஶ்ரீமகாலட்சுமி திருக்கோயில் - பனையபுரம் அதியமான்

கல்யாண வரம் தரும் மகாலட்சுமி!

கேரள தரிசனம் - கடவில் ஶ்ரீமகாலட்சுமி திருக்கோயில் - பனையபுரம் அதியமான்

Published:Updated:
ஶ்ரீமகாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமகாலட்சுமி

எண்ணம், சொல், செயல் அனைத்தும் நல்லனவாய் அமையும் மனித மனங்கள் மங்கலகரமாய்த் திகழும் அங்கே மகாலட்சுமி விருப்பத்துடன் குடியேறுவாள் என்கின்றன ஞானநூல்கள். அங்ஙனம் நம் எண்ணங்கள் ஏற்றம் பெறவும், சொல்லும் செயலும் சிறக்கவும் அந்த அலைமகள்தான் அருள்புரியவேண்டும். அதற்கு நாளும் அவளைப் போற்றித் துதிக்கவேண்டும். எப்போதும் அன்னை நம்முள் இருக்க அவளை வேண்டி வழிபடவேண்டும்.

கல்யாண வரம் தரும் மகாலட்சுமி!

தேவிபாகவதம் `ஸர்வ ஸம்பத் ப்ரதாத்ரீம் மஹாலக்ஷ்மீம் பஜே ஸுபாம்’ எனப் போற்றுகிறது (9-வது ஸ்கந்தம்; 42-வது அத்தியாயம்). மேலும் `ஆயிரம் தளத்துடன் கூடிய தாமரையில் வீற்றிருப்பவளும் கோடி சந்திரனுக்கு ஒப்பான ஒளியை உடையவளும் ஆனந்தமாய் காட்சியளிப்பவளும் பக்தர்களின் மனதைக் கவர்பவளும், மங்கலத்தை அருள்பவளுமான மகாலட்சுமியை பூஜிப்பதால், அந்த அன்னை சர்வ சம்பத்துகளையும் வாரி வழங்குவாள் என்றும் வழிகாட்டுகிறது.

அனுதினமும் அன்னையை இப்படிப் போற்றி வழிபடுவதுடன் அவள் அருள்பாலிக்கும் ஆலயங்களைத் தேடிச் சென்று தரிசிக்கவும் வேண்டும். அன்னை மகாலட்சுமிக்கான தனிஆலயங்கள் அபூர்வம். சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி ஆலயம், கோலாப்பூர் மகாலட்சுமி ஆலயம், மும்பை மகாலட்சுமி ஆலயம், மத்தியபிரதேசம் ரத்னபுரி மகாலட்சுமி ஆலயம் ஆகியவை பிரசித்திபெற்றவை.

இந்த வரிசையில் கேரளத்திலும் அன்னை மகாலட்சுமிக்கு ஓர் ஆலயம் உண்டு. காஞ்சியில் அருளும் அலைமகள் தானே விரும்பி தேடிச் சென்று கோயில்கொண்ட - கேரளத்தின் அந்தத் தலத்தின் பெயர் கடவில்.

முன்னொரு காலத்தில் காஞ்சியைச் சேர்ந்த செங்குந்தர் சமுதாய மக்கள் பொருள் சேர்க்கும் விருப்புடனும் வணிகத்தின் பொருட்டும் மலைநாடான கேரளத்தின் சேர்த்தலா பகுதியில் குடியேறினர். காஞ்சியின் அருகேயுள்ள ஐயங்கார்குளம் ஏரிக்கரையில் அருள்பாலித்த மகாலட்சுமிதேவியே அவர்களின் குலதெய்வம்.

வந்துசேந்த புதிய இடத்திலும் தங்களின் குலதெய்வத்துக்குக் கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர்; அவர்களின் வாழ்வு செழித்தது. பலநூறு ஆண்டுகள் கழிந்தன. அந்த மக்கள் தங்கள் பூர்வீகத்தை மறந்தனர். ஆனாலும் அவர்களின் குலதெய்வ வழிபாடு செவ்வனே தொடர்ந்தது. தன் மீது அந்த மக்கள் கொண்டிருக்கும் அதீத பக்தியால் மகிழ்ந்தாள் மகாலட்சுமி. ஆகவே, ஐயங்கார்குளம் ஊரின் ஏரிக்கரையிலிருந்து முதலை மீதமர்ந்து கேரளத்தின் சேர்த்தலா பகுதிக்கு வந்து சேர்ந்தாள் என்கிறது தலபுராணம்.

கல்யாண வரம் தரும் மகாலட்சுமி!

பல தலைமுறைகளுக்குப் பிறகே, தங்களின் பூர்வீகம் காஞ்சி; தங்கள் குலதெய்வத்தின் ஆதிகோயில் இருப்பதும் அங்குதான் என்பதை ப்ரச்னம் மூலம் அந்த மக்கள் அறிந்துகொண்டனராம். இன்றைக்கும் காஞ்சி ஐயங்கார்குளம் ஏரியின் வடகரை மகாலட்சுமி கோயிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். குலதெய்வத்துக்காக அந்த மக்கள் அமைத்த ஆலயம், கேரள மாநிலத்தில், மகாலட்சுமி தேவிக்குத் தனித்துவமாக அமைந்த ஒரே தலமாகத் திகழ்கிறது. கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் பள்ளிப்புரம். இவ்வூரில் வேம்பநாட்டு ஏரியின் மேற்குக் கரையில்தான் காஞ்சி மக்கள் போற்றி வழிபட்ட `கடவில் மகாலட்சுமி’ ஆலயம் அமைந்துள்ளது.

எழிலுற அமைந்திருக்கும் ஆலயத்தின் மையப்பகுதியில் மகாலட்சுமி தேவி அருள்பாலிக்கிறாள். மேலும் வடக்குப்புறத்தில் மகாதேவர், தெற்கில் தர்மசாஸ்தா, முகமண்டபத் தூணில் ஒரு கணபதி, கன்னிமூலையில் மகாகணபதி, யக்க்ஷியம்மா, கொடுங்காளி, நாக தெய்வங்கள், பிரம்ம ராட்சசு, க்ஷேத்திரபாலர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். கோயிலின் வெளிப்புறம் எழிலான மண்டபம் அமைந்துள்ளது.

கல்யாண வரம் தரும் மகாலட்சுமி!

வேம்பநாட்டு ஏரிக்கும் ஆலயத்துக்கும் நடுவில் திருக்குளம் ஒன்று உள்ளது. தலபுராணக் கதைப்படி அன்னையைச் சுமந்து வந்த முதலை வாழ்ந்த குளம் இதுதான் என்கிறார்கள். அந்த முதலை தற்போது இல்லை என்றாலும், அதன் நினைவாக கோயிலின் கருவறையில் அந்த முதலைக்குச் சிலா வடிவம் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.

அருகிலுள்ள வேம்பநாட்டு ஏரியின் உப்புத்தன்மையுடன் திகழ்ந் தாலும் குளத்தின் நீர் தித்திப்புடன் நன்னீராகத் திகழ்வது அன்னையின் கருணை என்றே கூறவேண்டும்.

இந்தத் தலத்தில் அன்னை மகாலட்சுமி கிழக்குமுகமாக சூரிய நாராயணரை தரிசிக்கும் விதமாகவும், எதிர் திசையில் உள்ள புகழ்பெற்ற வைக்கம் மகாதேவர் ஆலயத்தை நோக்கியபடியும் அருள் பாலிக்கிறாள். மேலிரு கரங்களில் சங்கு - சக்கரமும் கீழிரு திருக்கரங்களில் நெற்கதிர் மற்றும் கிளியைத் தாங்கியபடியும் எழில் கோலம் காட்டுகிறாள்.

கல்யாணத் தடைகள் நீக்கி மணமாலை தோள்சேர அருளும் அன்னையாகவும் குழந்தை வரம் அருளும் தெய்வமாகவும் திகழ்கிறாள் கடவில் மகாலட்சுமி. கோயிலுக்கு வந்து வேண்டுதலை முன்வைத்து, மகாலட்சுமியை மனமுருகி பிரார்த்தித்துச் செல்கிறார்கள் அன்பர்கள். வெகுவிரைவில் அவர்களின் வேண்டுதல் பலித்துவிடுகிறதாம். அங்ஙனம் வேண்டுதல் பலித்தவர்கள் மீண்டும் ஆலயத்துக்கு வந்து தங்களால் இயன்ற காணிக்கையைச் செலுத்திச் செல்கிறார்கள்.

கல்யாண வரம் தரும் மகாலட்சுமி!

இவ்வாறு தினம்தினம் இக்கோயிலில் கூடும் பக்தர்களின் கூட்டமே அன்னை மகாலட்சுமியின் அருள்சாந்நித்தியத்துக்குச் சான்று என்று சிலிர்ப்புடன் பகிர்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

அன்னையின் கோயிலில் எல்லா மாதங்களிலும் மக நட்சத்திரத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் மார்கழி மாதம் கள பூஜை, தை - மகர சங்கராந்தி, புரட்டாசி - நவராத்திரி ஆகிய வைபவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

கேரள மாநிலத்துக்கு ஆன்மிகத் தலங்களை தரிசிக்கச் செல்வோரும் - வைக்கம் மகாதேவர் ஆலயத்தை தரிசிக்கச் செல்லும் அன்பர்களும் அவசியம் இந்த மகாலட்சுமிதேவி ஆலயத்தையும் தரிசித்து வாருங்கள். உங்கள் உள்ளத்தில் நல்லன நிறையவும் இல்லத்தில் சுபிட்சங்கள் பெருகவும் அருள்பாலிப்பாள் கடவில் மகாலட்சுமிதேவி!

அமைவிடம்: கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில், சேர்த்தலா வட்டத்தில், பள்ளிப்புரம் கிராமத்தில் ஏரிக்கரையில் அமைந்திருக்கிறது கடவில் மகாலட்சுமி ஆலயம். ஆலப்புழாவிலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவிலும், கொச்சின் நகரிலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவிலும் இந்தத் தலம் அமைந்துள்ளது.

சேர்த்தலா ரயில்நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரம் பயணித்தால் அன்னையின் ஆலயத்தை அடையலாம். வேம்பநாட்டு ஏரியில் மேற்குக் கரையில் மகாலட்சுமி கோயிலும் கிழக்குக் கரையில் வைக்கம் மகாதேவர் ஆலயமும் அமைந்துள்ளன. ஆகவே, ஒரே நேரத்தில் இரண்டு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு நமக்கு!

கல்யாண வரம் தரும் மகாலட்சுமி!

அர்த்தநாரி கோலத்தில் மாலும் மகாலட்சுமியும் அருளும் அபூர்வ திருவிழா!

ந்தத் தலத்தில் ஆண்டுதோறும் மகர மாதமாகிய தை மாதத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இந்தவிழாவைக் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கும்ப மாதமாகிய மாசியில் - மகம் நட்சத்திர திருநாளில் `மகம் தொழல்’ எனும் சிறப்பு வைபவம் நடைபெறும்.

மாசிமகம் தினத்தில் நடைபெறும் இந்த விழா நாளில் நண்பகலில், பக்தர்களுக்கு அற்புத தரிசனம் கிடைக்கும். ஆம்! சிவனாரும் உமையாளும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சிதருவது போன்று இந்தத் தலத்தில் மகம்தொழல் அன்று நண்பகலில் மந் நாராயணனும் மகாலட்சுமியும் சரிபாதியாய் இணைந்து காட்சியளிப்பார்களாம்.

இந்த அற்புதக் கோலத்தை அன்று இரவு வரையிலும் பக்தர்கள் தரிசித்துப் புண்ணியம் பெறலாம். இந்தத் தினத்தில் இந்த அற்புதக் கோலத்தை தரிசிப்பதால், நீண்டநாள் தடைப்பட்டிருக்கும் திருமணம், விரைவில் கூடிவரும்; மாங்கல்ய பலம் பெருகும்; பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும்; தீராத பிணிகளும் தீர இறையருள் கைகூடும்; சகல காரிய ஸித்திகளும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

`மகம் தொழல்’ அன்று ஆலயத்தில் சிறு கட்டணம் செலுத்தி மகா லட்சுமி பூஜையில் பங்கேற்பதும் பூஜையின் நிறைவில் தரப்படும் பிரசாதத்தைப் பெற்று உண்பதும் விசேஷம் என்கிறார்கள் பக்தர்கள். இந்த வருடம் `மகம் தொழல் திருவிழா' வரும் 17.2.2022 வியாழனன்று நடைபெறுகிறது.