Published:Updated:

ஈசன் சந்நிதியில் பூஜித்துத் தரப்படும் செங்கல்!

ஶ்ரீபூமிநாதர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீபூமிநாதர்

சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் செவலூர் பூமிநாதர் - மு.ஆதவன் -

ஈசன் சந்நிதியில் பூஜித்துத் தரப்படும் செங்கல்!

சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் செவலூர் பூமிநாதர் - மு.ஆதவன் -

Published:Updated:
ஶ்ரீபூமிநாதர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீபூமிநாதர்

சொந்த வீடு என்பது யாவருக்குமான கனவு. ஆனால், பொருளாதாரச் சூழல் பலருக் கும் சொந்தவீடு அமைய தடையாகி விடுகிறது. ஏழைகள், நடுத்தர வர்க்கத்தின் நிலை இப்படி என்றால், பொருளாதாரத்தில் வசதி வாய்ப்பு உள்ள அன்பர்களில் பலரும்கூட சொந்த வீட்டில் வாழும் யோகம் இல்லாமல் தவிக்கும் நிலை உண்டு. இப்படியான நிலையை மாற்றி, சொந்த வீட்டில் வாழும் பாக்கியத்தை அருளும் தெய்வமாகத் திகழ்கிறார் அருள்மிகு பூமிநாத சுவாமி.

ஈசன் சந்நிதியில் பூஜித்துத் தரப்படும் செங்கல்!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கிராமம் செவலூர். இங்கே அருள்மிகு ஆரணவல்லி சமேதராக கோயில் கொண்டிருக்கிறார் பூமிநாதர்.

புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ள இந்தக் கோயில், பாது காக்கப்பட்ட தொல்லியல் சின்னமாகவும் திகழ்கிறது. மகாவிஷ்ணு மற்றும் பூமாதேவியால் பூஜிக்கப்பட்ட இந்தத் தலம் மிகவும் பழமையா னது. பூமியின் பாரத்தைத் தாங்கும் வலிமை யைப் பெறும் பொருட்டு பூமகள் வழிபட்ட சிவத்தலங்களில் இதுவும் ஒன்று என்கிறது தலபுராணம். 12-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர்.

ஈசன் சந்நிதியில் பூஜித்துத் தரப்படும் செங்கல்!

பூமிக்குள் இறங்கும் அபிஷேகத் தீர்த்தம்!

சுற்றிலும் வயல்வெளிகளும் தென்னந் தோப்புகளும் திகழ, இயற்கைச் சூழலில் அழகுற அமைந்திருக்கிறது பூமிநாதர் ஆலயம். கருவறையில் ருத்ராட்ச பந்தலின் கீழ், 16 பட்டைகளுடன் கூடிய ஷோடச லிங்கத் திருமேனியராக அருள்கிறார் பூமிநாதர்.

இவரின் லிங்க பாணத்தில் அபிஷேகிக்கப் படும் பால், பன்னீர் போன்ற திரவியங்கள் ஆவுடையாருக்கு நடுவே பூமிக்குள் செல்லும் படி இந்த லிங்கத் திருமேனி அமைந்துள்ளதாம். அதாவது, சிவனாரின் அபிஷேகத் தீர்த்தம் பூமாதேவிக்கும் செல்வதாக ஐதீகம்.

ஈசன் சந்நிதியில் பூஜித்துத் தரப்படும் செங்கல்!

‘லட்சுமி கடாட்ச’ அம்பிகை!

ஸ்வாமி சந்நிதிக்கு இடப்புறத்தில் அம்பாள் ஆரணவல்லி சந்நிதி கொண்டுள்ளாள். கைகளில் தாமரை ஏந்தியபடி அருள்கோலம் காட்டும் இந்த அன்னை, மகாலட்சுமியின் அமசத்துடன் திகழ்வதாகச் சொல்கிறார்கள்.

பூமிநாதரையும் ஆரணவல்லி அம்பாளை யும் வழிபட்டுச் சென்றால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும், நாம் தொட்டது துலங்கும் என்பது நம்பிக்கை.

ஸ்வாமி - அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் வள்ளி-தெய்வானை தேவியருடன் சுப்ரமணியர் சந்நிதி கொண்டிருக்கிறார். இது சோமாஸ்கந்த அமைப்பு என்கிறார்கள்! இங்கே பைரவருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இந்தப் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஈசன் சந்நிதியில் பூஜித்துத் தரப்படும் செங்கல்!

வாஸ்து நாளில் விசேஷ பூஜைகள்...

பூமகள் வழிபட்ட தலம் என்பதால், வாஸ்துவுக்குரிய கோயிலாகவும், பூமி தோஷங் களை நிவர்த்தி செய்யும் தலமாகவும் திகழ்கிறது இந்த ஆலயம். ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று பூமிநாதரை வழிபட்டால், விரைவில் சொந்த வீடு அமையும்; நிலபுலன்கள் வாங்கலாம் என்பது நம்பிக்கை.

அதேபோல் வீடு, மனை ஆகியவற்றில் சட்டச் சிக்கல்கள், வழக்குப் பிரச்னைகளால் தவிக்கும் அன்பர்கள் இங்கு வந்து பூமிநாதரை வழிபட, அந்தப் பிரச்னைகள் படிப்படியாக விலகும். ரியல் எஸ்டேட் மற்றும் நிலம் தொடர்பான தொழில் செய்பவர்கள், தங்களின் தொழில் சிறக்கவும் லாபம் பெருகவும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

ஒவ்வொரு வாஸ்து நாளன்றும் இந்தக் கோயிலில் விசேஷ ஹோமங்கள் நடத்தப் படுகின்றன. அன்றைய தினம் சுவாமிக்கு 11 விதமான அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெறும். வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் வாஸ்து குறைபாடுகள் உள்ளோர், இந்த வழிபாட்டு வைபவங்களில் கலந்துகொண்டு, அருள்மிகு பூமிநாதரை மனமுருகப் பிரார்த்தித்து வழிபட்டுச் சென்றால், தோஷம் - குறைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

`சொந்த வீடு’ கனவில் இருக்கும் அன்பர்கள், நிலம்-மனை சார்ந்த பிரச்னைகள் விலகவேண்டும் என்று விரும்பும் பக்தர்கள், ஒரு வாஸ்து நாளில் இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அந்த நாளில் செல்ல இயலவில்லை எனில், செவ்வாய்க்கிழமை அல்லது உங்களின் ஜன்ம நட்சத்திர நாளில் சென்று வழிபடலாம். பூமகள் வழிபட்ட பூமிநாதரின் திருவருளால் பிரச்னைகள் நீங்கும்; உங்களின் சொந்த வீடு கனவு நனவாகும்!

எப்படிச் செல்வது?: புதுக்கோட்டையிலிருந்து நமணசமுத்திரம் மார்க்கத்தில் பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 14 கி.மீ. தொலைவில் செவலூர் பிரிவு வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால் கோயிலை அடையலாம். செவலூர் பிரிவு பகுதியிலிருந்து ஆட்டோ வசதி உண்டு. தினமும் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும்; வாஸ்து தினங்களில் காலை 7 முதல் மாலை 6 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

ஈசன் சந்நிதியில் பூஜித்துத் தரப்படும் செங்கல்!

வாஸ்து நாளன்று இந்தக் கோயிலில் பூமிநாதரின் சந்நிதியில் வைத்துப் பூஜிக்கப்பட்ட செங்கற்களைப் பிரசாதமாகத் தருகின்றனர். இதற்கான காணிக்கைக் கட்டணம் ரூ.210. பூஜித்துத் தரப்படும் செங்கல்லை வீட்டில் பூஜையறையில் வைத்து, பூமிநாதரைத் தியானித்து வழிபட்டு வந்தால் விரைவில் சொந்த வீடு-மனை வாங்கும் யோகம் கைகூடுமாம். இப்படி வழிபட்டு, பிரார்த்தனைகள் பலித்தவர்கள் மீண்டும் வந்து ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி வழிபடுகிறார்கள்.

2022 - ல் இனி வரவுள்ள வாஸ்து நாள்கள்:

ஜூலை- 27 ஆகஸ்ட் - 22
அக்டோபர் - 28
நவம்பர் - 24.