Published:Updated:

ஆதிகுருவின் அருள்பெறுவோம்! குருப்பெயர்ச்சி திருத்தலங்கள்!

ஶ்ரீதட்சிணாமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீதட்சிணாமூர்த்தி

எஸ்.புவனா கண்ணன்

ஆதிகுருவின் அருள்பெறுவோம்! குருப்பெயர்ச்சி திருத்தலங்கள்!

எஸ்.புவனா கண்ணன்

Published:Updated:
ஶ்ரீதட்சிணாமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீதட்சிணாமூர்த்தி

`குரு பார்க்கக் கோடி நன்மை’ என்கின்றன ஞானநுல்கள். நவ கிரகங்களில் தேவ குருவானவர் பிரகஸ்பதி. இவர் ஆங்கீரஸரின் மைந்தன். ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில் ஸப்த ரிஷிகளில் முக்கியமானவர் என புராணங்கள் பிரகஸ்பதியைப் பற்றி விவரிக்கின்றன. இவரின் அருள் ஒருவருக்குச் சகல சம்பத்துகளையும் பெற்றுத் தரும்.

வரும் பங்குனி-30 (13.4.2022) புதன்கிழமை அன்று நள்ளிரவுக்குப் பிறகு (விடிந்தால் வியாழன்) 4:09 மணிக்கு பூரட்டாதி 4-ம் பாதம் மீன ராசிக்குப் பெயர்கிறார்குருபகவான். கோசாரப்படி இந்தப் பெயர்ச்சியையொட்டி மீனம், தனுசு, மிதுனம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்கள் குருவை வழிபட்டு அருள்பெற வேண்டும். அத்துடன் உலகுக்கே ஆதிகுருவாகத் திகழும் தென்முக தெய்வமாம் ஶ்ரீதட்சிணாமூர்த்தி விசேஷமாய் அருள்பாலிக்கும் தலங்களையும் தரிசித்து வரம்பெற்று வரலாம். அவ்வகையில், குருவருள் சிறக்கும் புண்ணிய திருத்தலங்களும் சிறப்புத் தகவல்களும் உங்களுக்காக!

ஆதிகுருவின் அருள்பெறுவோம்! குருப்பெயர்ச்சி திருத்தலங்கள்!

அமிர்தத்தால் அபிஷேகித்த கருடன்!

ன்னை விநதையை அடிமைத்தளையில் இருந்து மீட்க, அமிர்தக் கலசத்தைக் கொண்டு வரப் புறப்பட்டார் கருடன். தேவ லோகத்தில் இருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டு வருவது என்றால் சும்மாவா?

கருடனின் எண்ணத்தை அறிந்த இந்திரன், வஜ்ராயுதத்தை கருடன் மீது ஏவினான்; பெருமை மிக்க ஆயுதத்துக்கு தன்னால் களங்கம் ஏதும் வந்து விடக்கூடாது என பதறிய கருடன், தன் இறக்கையிலிருந்து சில சிறகுகளை வஜ்ராயுதத்துக்குப் பலி கொடுத்தார். இதில் மகிழ்ந்த இந்திரன், கருடனுக்கு நெருங்கிய தோழனானான்.

பின்னர் இந்திரனின் உதவியுடன் அமிர்தக் கலசத்தை எடுத்துக் கொண்டு திரும்பினார். வழியில் ஓரிடத்தில் தரையிறங்கி குருவுக்கும் குருவான ஶ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசித்து, அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டார். இங்ஙனம் கருடன் தென்முக தெய்வத்தை வழிபட்ட தலம்தான் ஆலங்குடி. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவு. அற்புதமான குருபரிகாரத் திருத்தலம் இது.

ஆதிகுருவின் அருள்பெறுவோம்! குருப்பெயர்ச்சி திருத்தலங்கள்!


ஆலகால விஷத்தை அருந்தி ஆபத்திலிருந்து உலகைக் காத்ததால் ஆபத்சகாயேஸ்வரர் எனும் பெயரில் சிவனாரும், அம்பாள் ஏலவார் குழலியும், பிரசித்திபெற்ற கலங்காமல் காத்த விநாயகரும் அருளும் இங்குள்ள கோயிலில் தட்சிணாமூர்த்தி பகவான் தரிசனம் மிகவும் விசேஷமானது. இங்கு வந்து விநாயகரையும் அம்மை-அப்பனையும் கூடவே தட்சிணாமூர்த்தி பகவானையும் மனமுருகி வழிபட்டால் அமிர்தமயமான வாழ்வு ஸித்திக்கும்; குரு தோஷங்கள் விலகும்.

குரு மைந்தனின் சாபம் தீர்த்த தலம்!

பெண் சாபம் பொல்லாதது என்பார்கள். விதிவசத்தால், தேவகுரு பிரகஸ்பதியின் மகனான கச்சனுக்கும் அப்படியொரு பெண்ணின் சாபம் வந்து சேர்ந்தது. தேவலோகத்துக்குச் செல்ல முடியாமல் தவித்தான் அவன். தந்தை, கலங்கினார்; மகனை மீட்க அவருக்கு வழிதெரியவில்லை.

பின்னர் நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்து வேகவதி நதிக்கரையில், தனக்கெனப் படித்துறை அமைத்து, அந்த நதியில் நீராடி, ஆற்றங்கரையில் கடும் தவம் மேற்கொண்டார். சித்திரை மாதம் திருவருள் கைகூடியது. ஆயிரம் சித்திரங்கள் கொண்ட ரதத்தில் வந்து திருக்காட்சி தந்தார் பெருமாள். தேவகுருவின் வேண்டுதலை ஏற்று அவரின் மகன் கச்சனை மீட்டுத் தந்தார்.

இந்தத் தலத்தின் பெயர் குருவித்துறை. மதுரை மாவட்டம் சோழ வந்தானுக்கு அருகில் உள்ளது. குரு வீற்றிருந்த துறை ஆதலால், குருவித்துறை என்ற பெயர் வந்ததாம். இங்கே கோயில் கொண்டிருக்கும் திருமாலுக்கு சித்திர ரத வல்லப பெருமாள் என்று திருநாமம். தேவ குருவுக்கும் இந்தக் கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது.

இங்கு வந்து பெருமாளையும் குருபகவானை யும் தரிசித்து வழி பட்டால், ஜாதகத்தில் குருவின் பலமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். தொழில் சிறக்கும்; கல்வி-கேள்வியில் சிறக்கலாம்; திருமண தோஷங்கள் நீங்கப் பெற்று, விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

வேங்கை வடிவில் வந்த ஈசன்!

காமதேனு தன்னுடைய செவியில் கங்கை தீர்த்தத்தைச் சேகரித்து வந்து சிவனாருக்கு அபிசேகம் செய்து வழிபட்ட தலம் திருக் கோகர்ணம். ஈசன் புலியின் வடிவில் வந்து காமதேனுவின் பக்தியைச் சோதித்த தலம் இது என்பர். ஆகவே, இந்தத் தலம் திருவேங்கைவாசல் என்றும் வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டையில் இருந்து சுமார்4 கி.மீ. தொலை வில் அமைந் துள்ளது இந்தத் திருத்தலம். இறைவன் ஶ்ரீவியாக்ரபுரீஸ்வரர். அம்பாள் ஶ்ரீபிரகதாம்பாள். சகல சாபங்களையும் போக்கும் தலம் இது என்கின்றன புராணங்கள். இந்த ஆலயத்தில், விசேஷ நாயகனாகத் திகழ்பவர் ஶ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. ஆம், இங்குள்ள தென்முகக் கடவுள் அபய-ஹஸ்தம் தாங்கி, ஒரு கையில் ருத்திராட்சமும் இன்னொரு கையில் சர்ப்பமும் கொண்டு காட்சி தருகிறார்.

யோக நிலையிலிருந்து கண்விழித்து, பக்தர்களுக்கு அருள் புரிய எழுந்து வருவது போன்று அருளும் இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் வேறெங்கும் காண்பதற்கரியது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். வியாழக்கிழமைகளில், இவரைத் தரிசித்து, மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை, சுண்டல் சமர்ப்பித்து வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடுமாம்!

ஶ்ரீசிவயோக ஹரி குரு தட்சிணாமூர்த்தி

பிரசித்திபெற்ற சிவத்தலம் திருவையாறு. இங்கு அருளும் ஐயாறப்பரை மனதார தியானித்து, அவருடைய திருநாமத்தை பக்தியுடன் உச்சரித்தாலே போதும், நம் பாவங்கள் சகலமும் பொசுங்கிப் போகும்; புண்ணியங்கள் பெருகும் என்பது பெரியோர் வாக்கு. இங்கு அருளும் அம்பிகையின் திருப்பெயர் அறம்வளர்த்த நாயகி.

திருவீழிமிழலையில் கண்மலரிட்டு அர்ச்சனை செய்து சக்ராயுதம் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஶ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றாராம்! எனவே இங்கு அருளும் தட்சிணாமூர்த்தி பகவானுக்கு ஶ்ரீசிவயோக ஹரி குரு தட்சிணாமூர்த்தி என்று திருநாமம். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரை; இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கி, அற்புதமாகக் காட்சி தருகிறார் இவர்.இங்கேயுள்ள தியான மண்டபத்தில், வடக்கு நோக்கி அருளும் ஆதிவிநாயகரை தரிசித்து விட்டுத்தான், தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும் என்பது இந்தத் தலத்தின் ஐதீகம்!

ஒரே தலத்தில் ஏழு குருபகவான்கள்!

திருச்சி - சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில் உள்ளது பிச்சாண்டார் கோவில். அரி, அயன், அரன் மூவரும் ஒருங்கே அருள் வழங்கும் உத்தமர் கோயில் இங்குதான் உள்ளது. இந்தக் கோயிலில் தனிச்சந்நிதியில் பிரம்மன் அருள, கலைமகள் ஞான சரஸ்வதியாய் கொலுவிருக்கிறாள். ஈசன் பிச்சாண்டாராகப் போற்றப்படும் தலம் இது. அம்பாளின் திருப்பெயர் வடிவுடை நாயகி.

பெருமாள் புருஷோத்தம பெருமாளாக பூரணவல்லித் தாயாருடன் அருள்பாலிக்கிறார். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம்; 108 திருப்பதிகளில் ஶ்ரீரங்கத்துக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படும் திருக்கோயில்; 63 சிவ மூர்த்தங்களில் ஒன்றான பிச்சாடனர் திருக்கோலத்தில் சிவனார் காட்சி தரும் தலம்; விமானத்துடன் கூடிய தனிச் சந்நிதியில் குருபகவான் ஸ்தானத்தில் பிரம்மா அருளும் அற்புதம்... இப்படி இந்த ஆலயத்தின் பெருமைகளை பட்டியலிடலாம்!எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஒரே தலத்தில் 7 குருபகவான்களை தரிசிக்கும் பெரும்பேறு நமக்குக் கிடைக்கிறது. ஆம்! இங்கே பிரம்ம குரு, விஷ்ணு குரு, சிவ குரு, சக்தி குரு, சுப்ரமண்ய குரு ஆகியோருடன் தேவகுருவாகிய பிரகஸ்பதி, அசுர குருவான சுக்கிராசார்யர் என்று ஸப்த குருக்களும் ஒருசேர தரிசனம் தருகிறார்கள்.

சரணடைந்து வணங்கி வழிபடும் பக்தர்களுக்குப் புத்திர பாக்கியம், கல்வியில் மேன்மை, நோய் நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வு ஆகிய வரங்களை வாரி வாரி வழங்குகின்றனர் இந்த ஸப்த குருக்கள். இவர்களை ஒருசேர தரிசித்து, அர்ச்சித்து வழிபட்டால், தோஷங்களால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்; உத்தியோகம், வியாபார விருத்தியுடன் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

கிழக்கு நோக்கி அருளும் ஶ்ரீகுரு தட்சிணாமூர்த்தி!


திருக்கயிலாயத்தில் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் குரு தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து அஷ்டமா ஸித்திகளை உபதேசித்தார் சிவபெருமான். பெண்கள் ஆறுபேர் இதைக் கண்டனர். தாங்களும் இறைவனிடம் அஷ்டமா ஸித்திகள் குறித்து உபதேசம் பெற விரும்பினர்.

அவர்கள் வேறு யாருமில்லை... சரவணப் பொய்கையில் முருகப் பெருமானைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த கார்த்திகைப் பெண்கள்தான். அம்பா, துலா, நிதர்த்தளி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்த்யேந்தி என்பது அவர்களின் பெயர்கள்.

ஆதிகுருவின் அருள்பெறுவோம்! குருப்பெயர்ச்சி திருத்தலங்கள்!

இந்த ஆறுபேரும் பணிவுடன் சிவனாரை வணங்கி, தங்களின் வேண்டுதலை முன்வைத்தனர். பரமனோ ‘‘உமாதேவியிடம் பிரார்த் தியுங்கள்; அருள் புரிவாள்’’ என்றார். ஆனால் அந்தப் பெண்களோ ஈசனே உபதேசிக்கவேண்டும் என்று கருதினர். ஆகவே அம்பாளைத் தவிர்த்தனர்; சாபத்துக்கு ஆளாயினர். அதன் காரணமாக பூலோகத்தில் கதம்பவனம் ஒன்றில் ஆல மரத்தடியில் கல்லாகிக் கிடந்தனர். அதேநேரம், தவறுணர்ந்து பிராயச்சித்தமாக சிவச்சிந்தையுடன் தவத்தில் ஆழ்ந்தனர்.

ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. பரமன் குரு வடிவாக அந்த மரத் தடிக்கு வந்தார். ஆலம் பழங்களால் மூடப்பட்டுக் கிடந்த கற்களின் அருகில் அமர்ந்தார். கற்கள் உயிர் பெற்றன. சுய உரு பெற்ற கார்த்திகைப் பெண்களுக்கு இறைவனின் உபதேசமும் கிடைத்தது. அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அங்கேயே குடிகொண்டு உலக மக்களுக்கும் அருள்வாரி வழங்கி வருகிறார் ஸ்வாமி.

இந்த அருள்சம்பவம் நிகழ்ந்த தலம் பட்டமங்கலம். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. எம்பெருமான் ஶ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரராக கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில், ஶ்ரீகுரு தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி அருள்கிறார். கிழக்கு என்றாலே விடியல் அல்லவா. பட்டமங்கலம் வந்து வணங்கும் பக்தர்களது வாழ்விலும் வெளிச்சமும் முன்னேற்றமும் நிச்சயம்!

இந்தத் தலங்களைப் போன்று திருவலிதாயமும் குருவருள் தரும் தலமாகும். இந்தத் தலங்களுக்குச் சென்று சகல வரங்களையும் பெற்று மகிழலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism