Published:Updated:

நினைத்ததை நடத்திவைப்பார் ஶ்ரீநிவாஸ பெருமாள்!

நரிமணம் ஶ்ரீநிவாஸ பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
நரிமணம் ஶ்ரீநிவாஸ பெருமாள்

நரிமணம் ஶ்ரீநிவாஸ பெருமாள் கோயில் மஹா சம்ப்ரோக்ஷணம் - 6.7.22

நினைத்ததை நடத்திவைப்பார் ஶ்ரீநிவாஸ பெருமாள்!

நரிமணம் ஶ்ரீநிவாஸ பெருமாள் கோயில் மஹா சம்ப்ரோக்ஷணம் - 6.7.22

Published:Updated:
நரிமணம் ஶ்ரீநிவாஸ பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
நரிமணம் ஶ்ரீநிவாஸ பெருமாள்

பெருமாள், தன் திவ்யமங்கல விக்ரகம் இந்த தேசமெங்கெங்கும் எழுந்தருளியிருக்கும் பொருட்டு, தன் அவதாரத்தின்போது பல தலங்களில் பல அருளாடல்களை, அற்புதங்களை நிகழ்த்தினார். அவையெல்லாம் இந்தக் கலி யுகத்தில் பெரும் புண்ணிய க்ஷேத்திரங்களாகத் திகழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நரிமணம் எனும் திருத்தலம்.

நினைத்ததை நடத்திவைப்பார் ஶ்ரீநிவாஸ பெருமாள்!

எம்பெருமான் இந்த தேசம் முழுமையும் நடந்தும், இருந்தும் அருளிய அவதாரம் என்றால் அது ஶ்ரீராம அவதாரம்தான். ஶ்ரீராமர் தமது வனவாசத்தின்போதும் சீதையைத் தேடி இலங்கைக்குப் பயணப்பட்ட போதும் வழியில் பல திருத்தலங்களுக்கு எழுந்தருளினார். அவற்றில் ஒரு தலம்தான் நரிமணம்.
நரிமணம் காவிரி டெல்டா பகுதியில் இருக்கும் கிராமம். சிறிய ஊர் என்றாலும் மிகவும் புராதனமானது.

இங்குள்ள இரண்டு ஆலயங்கள் இவ்வூரின் பழைமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. ஒன்று ஶ்ரீஅகஸ்தீஸ்வரர் கோயில். மற்றொன்று ஶ்ரீநிவாஸ பெருமாள் கோயில். இவ்வூரின் புராதனப் பெயர் ‘ஹரிவனம்’ என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

ஶ்ரீராமர் தன் வனவாசக் காலத்தில் யாத்திரை மேற்கொண்டிருந்த போது, இந்தத் தலத்துக்கு வந்து தங்கினார். அப்போது இந்தத் தலம் வனமாயிருந்தது. ஶ்ரீஹரியாகிய ராமச் சந்திரர் வந்து தங்கிய காரணத்தால் அந்த வனமும் இடமும் ஹரிவனம் என்றாயின. அதன்பின் ரிஷிகளும் முனிகளும் அங்கே பெருமாளுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட வேண்டும் என்று விரும்பி அவ்வண்ணமே செய்தனர் என்கிறது இந்த ஊரின் தலபுராணம். இந்த ஊர் குறித்த பல்வேறு செய்திகள் அகஸ்தீஸ்வரர் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்கிறார்கள்.

நினைத்ததை நடத்திவைப்பார் ஶ்ரீநிவாஸ பெருமாள்!

ஊரின் நடுவே அமைந்திருக்கிறது ஶ்ரீதேவி-பூதேவி சமேத ஶ்ரீநிவாசப் பெருமாள் திருக் கோயில். இந்தக் கோயிலின் தற்போதைய கட்டுமானம் 300 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். எளிமையான இந்த ஆலயத்தின் வாசலிலேயே அமைந்திருக்கும் கதவுக்கு மேல் இது ஹரிவனமே என்பதை நினைவூட்டும் விதமாக ஶ்ரீராமச்சந்திரமூர்த்தி திருக்காட்சி அருள்கிறார்.

அவரை வணங்கி உள்ளே நுழைந்தால் பலி பீடம். அதற்குப் பின்புறம் கருடாழ்வார் பெருமாளை தரிசித்தநிலையில் எழுந்தருளி யிருக்கிறார். மண்டபம் போன்ற அந்தச் சிறிய பகுதியை அடைந்தாலே ஶ்ரீநிவாஸ பெருமாளை தரிசனம் செய்ய முடியும்.

கருவறையில் பெருமாள் சங்கு சக்ர கதா தாரியாக, அபய ஹஸ்தத்தோடும், திருப்பதி பெருமாள் போல ஒரு கையை இடையில் வைத்துக் கொண்டும், ஶ்ரீதேவி-பூதேவி தாயாரோடு எழுந்தருளியிருக்கிறார். இந்தப் பெருமாளின் அழகிய திருமுகம் காண்போர் மனதைக் கொள்ளைகொள்கிறது.

ஒருகாலத்தில் இந்த ஊரில் கோயிலை ஒட்டியே நான்கு வேதங்களும் ஓதும் பண்டிதர்கள் வாழ்ந்தனர். அவர்கள் தினமும் சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்களில் முறையாக வேத பாராயணங்கள் செய்துவந்தனர் என்றும், அக்காலத்தில் அந்தப் பகுதியே செழித்து விளங்கியது என்றும் சொல்கிறார்கள்.

``காலப்போக்கில். ஊரில் பல குடும்பங்கள் வேலை, தொழில் நிமித்தம் வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தனர். பராமரிப்பவர்கள் இன்றிக் கோயில்களும் ஊரும் நலிவுற்றன. பிறகு, அமரர் எஸ்.எஸ்.வாசன் காலத்தில் இந்தக்கோயில் சீர்செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஊர் மக்கள் அவருக்கு அற்புதமான வரவேற்பு அளித்தார்கள். வரவேற்புப் பத்திரமும் அளிக்கப்பட்டது. இவ்வூர் அவர்கள் குடும்பத்தின் பூர்வீகக் கிராமம். அன்று முதல் இன்று வரையிலும் அவரின் குடும்பத்தாரே இந்தத் திருப்பணியைச் செய்து வருகிறார்கள்'’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள் சிலர்.

2006-ம் ஆண்டும் இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு இப்போது மீண்டும் கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை நிறைவுற்று ஜூலை 6-ம் தேதி கும்பாபிஷேகம் - மகா சம்ப்ரோக்ஷணம் நடை பெறவுள்ளது. இதற்கான பூர்வாங்க யாகசாலை பூஜை கள் 4.7.22 அன்று தொடங்கப்பட இருக்கின்றன.

அந்த நாளில் சுவாமிக்குத் திருமஞ்சனம் ஆராதனம் ஆகியன செய்வித்து, மகாசங்கல்பத்தோடு யாகசாலை பூஜைகள் தொடங்கும். இதைத் தொடர்ந்து 5.7.22 அன்றும் பல்வேறு ஹோமங்கள் வழிபாட்டு வைபவங்கள் நடைபெறவுள்ளன. 6.7.22 உத்திர நட்சத்திர நன்னாளில், கடக லக்னத்தில், காலை 6:30 முதல் 7:30 மணிக்குள் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.

நினைத்ததை நடத்திவைப்பார் ஶ்ரீநிவாஸ பெருமாள்!

இதுகுறித்துக் கோயில் அர்ச்சகர் கணேச குருக்களிடம் கேட்டோம்.

“இது என் தந்தையார் ராமன் குருக்கள் பூஜை செய்த கோயில். அவருக்குப் பின் நான் இந்தத் தொண்டைச் செய்துவருகிறேன். இந்தப் பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரிடம் வேண்டிக் கொண்டால் கேட்டது உடனே கிடைக்கும். நினைத்ததை நினைத்த படி நடத்திவைப்பார்.

ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளை விசேஷமாகக் கொண்டாடுவார்கள். சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவார்கள். அதேபோன்று மார்கழி முப்பதுநாளும் அதிகாலை திருப்பள்ளியெழுச்சியோடு ஆராதனங்கள் நடைபெறும். இப்போது வைகுண்ட ஏகாதசியும் கோலாகலமாக நடை பெறுகிறது.

ஊர் மக்களின் உணர்வோடு இணைந்தது இந்தக் கோயில். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போனது. தற்போது மீண்டும் திட்டமிடப்பட்டுத் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அமரர் எஸ்.எஸ்.வாசன் குடும்பத்தார் சார்பாக இந்த ஆலயத்தைப் பராமரித்து வருவதுடன், தற்போது இந்தத் திருப் பணிகளையும் மிக உற்சாகத்தோடு செய்து வருகிறார்கள். வரும் 6.7.22 அன்று பாஞ்சராத்ர ஆகம முறைப்படி மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறவுள்ளது. வாய்ப்பிருக்கும் ஆஸ்திக அன்பர்கள் அனை வரும் கலந்துகொண்டு ஶ்ரீநிவாஸ பெருமாளின் அனுக்கிரகத்தைப் பரிபூரணமாகப் பெற்றுச் செல்லலாம்” என்றார்.

நாமும் நரிமணம் ஶ்ரீநிவாஸ பெருமாளை வணங்கி நல்வாழ்வை வரமாகப் பெற்று மகிழ்வோம்!