
மகேந்திரவாடி உமாசங்கரன்
இன்ப துன்பங்களுக்கு வினைகள் அல்லவா காரணம். கொடும் வினை அறுத்து, நம் வாழ்வை வரமாக்கும் வல்லமை அந்தப் பரமனுக்கே உண்டு. அந்தப் பரமன் முக்காலத்தையும் காக்கும் இறைவனாக திரிகாலேஸ்வரனாக குடியிருக்கிறார் ஒரு கோயிலில். சுமார் 2000 ஆண்டுகள் பழைமையானது அந்த ஆலயம்!

சுந்தரச் சோழனின் தளபதி செய்த திருப்பணி
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் ஒழுகூர். இங்குதான் முக்காலத்துக்கும் அதிபதியாக திரிகாலேஸ்வரனாக கோயில்கொண்டிருக்கிறார் பரமன்.
இவரின் ஆலயம், பிற்கால பல்லவர்களால் கற்றளியாக, கஜப் பிருஷ்ட விமானம் (தூங்காணை மாடம்) துலங்க அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. 7-ம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட அமைப்புள்ளதாகத் தெரிகிறது. 10-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட விஜய மஹாராஜன் என்னும் பெயர் கொண்ட பார்த்திபேந்திர வர்மனின் ஆட்சிக் காலத்திலும், 12- நூற்றாண்டில் உத்தமத் தொண்டைமான் காலத்திலும், 1804-ல் ஆற்காட்டைச் சேர்ந்த திரு பச்சையப்ப செட்டியார் என்பவராலும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நிகழ்ந்துள்ளது.
பார்த்திபேந்திர வர்மன் ஒரு சிற்றரசன். ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தரச் சோழன் காலத்தில் அவரிடம் படைத்தளபதியாக இருந்தவன். பின்னர் சோழ மன்னனால், தொண்டை நாட்டை ஆண்டு கொள்ள சிற்றரசனாக முடி சூட்டப்பட்டான். அவ்வகையில் பார்த்திபேந்திர வர்மன் 13 ஆண்டுகள் தொண்டை நாட்டை ஆண்டான் என்று வரலாற்றுத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது. `ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து படுவூர் கோட்டத்து ஒழுகூர் நாட்டைச் சேர்ந்த ஒழுகூர்’ என்று வரலாறு இந்த ஊரைக் குறிக்கும்
218 ஆண்டுகளாக திருப்பணிகள் நடக்கவில்லை
அற்புதமான இந்த ஆலயத்துக்கு 218 ஆண்டுகளாக திருப்பணியே நடக்கவில்லை. 1804-ல் பச்சையப்ப செட்டியார் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்பட்டது என்று பார்த்தோம் அல்லவா? அதன் பிறகு இங்கே எவ்வித திருப்பணியும் நடைபெறவில்லை. அதேபோல் சுமார் 70 ஆண்டுகளாக தினப்படி பூஜையும் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கோயிலின் ராஜகோபுரம் வடக்கு நோக்கி, இரண்டு நிலைகளுடனும் மூன்று சுதைக் கலசங்களோடும் அழகாகக் காட்சியளிக்கிறது. பறந்து விரிந்த ஒற்றைப் பிரகாரத்தோடு உட்கோயில் காட்சியளிக்கிறது.
இந்த ஆலயத்தில் கோஷ்ட மூர்த்திகள், பிராகாரத்தில் உள்ள விநாயகர், முருகர், சண்டிகேசர் போன்ற தெய்வங்களின் சிலைகள் புதியதாக செய்து வைக்கப்பட்டிருக்கின்றன. பழைய சிலைகளில் நந்தியைத் தவிர மற்றவை களவாடப்பட்டுவிட்டனவாம். நல்ல மிடுக்கோடு, கழுத்தில் ஆபரணங்கள் துலங்க நந்தி பகவான் காட்சி தருகிறார்.


கருணை நாயகி திரிபுரசுந்தரி
கோயிலுக்குள் நுழைந்ததும் அம்பிகை திரிபுர சுந்தரியின் சந்நதியை தரிசிக்கலாம். நான்கு திருக்கரங்களுடன் - மேற்கரங்களில் அங்குசம் பாசம் ஏந்தியும்; கீழ்க் கரங்களை அபய,வரதமாக வைத்துக் கொண்டும் கருணை பொங்கும் தாயன்புடன் காட்சி தருகிறாள் இந்த அம்பிகை. மிகப் பழைமையான ஆலயங்களில் அம்பிகைக்கு திரிபுரசுந்தரி எனும் பெயர் இருப்பதைக் காணலாம். ஆலயத்தின் வடமேற்குப் பிராகாரத்தில் தனி அம்பிகை ஒரு சந்நிதியில் காட்சி தருகிறாள். அந்த அம்பிகையின் விவரம் தெரியவில்லை.
அகத்தியர் வழிபட்ட ஈசன்
அம்பாளை வழிபட்டுவிட்டு அப்பனை தரிசிக்க மேற்குப் புறம் திரும்பினால், கிழக்கு நோக்கிய நிலையில் சதுர பீட ஆவுடையாருடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் அருள்மிகு திரிகாலேஸ்வரர். சுயம்பு லிங்கம்; அகத்தியரால் வழிபடப்பட்டது.
ஒழுகூருக்கு அருகிலுள்ள ஊர்கள் பெருங்காஞ்சி மற்றும் வாங்கூர். பெருங்காஞ்சியில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் அருள்கிறார்; வாங்கூரில் பொன் அகத்தீஸ்வரரை தரிசிக்கலாம். இவர்கள் இருவரும் மேற்கிலும் கிழக்கிலும் காட்சியளிக்க, முக்காலத்தையும் ஆளும் அருள்மிகு திரிகாலேஸ்வரர் ஒழுகூரில் கோயில் கொண்டிருக்கிறார். விக்னேஸ்வரி என்ற பெயரில் ஒரு தனி சந்நிதியும் உள்ளது. ஆனால் இந்தச் சந்நிதியில் அருளும் விநாயகர் திருவுருவில் பெண் அம்சம் ஏதும் இல்லை. ஆகவே இவர் விகனேஸ்வரர்தான். பல்லவர் காலத்து விநாயகர். இரண்டு கரங்களோடு பிள்ளையார் பட்டி விநாயகர் போல் காட்சியளிக்கும் இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உட்கோயிலின் வாயிலில் இருந்தாராம்.
பல்லவர்கள் ஆதியில் இந்த கோயிலைக் கட்டியதால், சப்த மாதாக்களும் இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சில சிலைகள் களவாடப்பட்டு விட்டதால், ஏழு சிலைகள் இல்லை. தற்போது உள்ள சிலைகளுடன் ஐயனாரும் இருக்கிறார்.

சங்க காலத்துச் சான்றுகள்
இந்த ஊரில் சங்க காலத்தைச் சார்ந்த பல சான்றுகள் அவ்வப்போது கிடைக்கின்றன. பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, பானை ஓடுகள் போன்றவையும், நடு கற்களும் இந்த ஊரில் இருந்தவர்களின் அறிவுத்திறனை பறைசாற்றுகின்றன. இங்ஙனம் இந்த ஊரில் கிடைத்த சில தடயங்கள் ஆற்காடு அருங்காட்சியகத்தில் உள்ளன.
இந்த ஊரின் ஏரிக்கரையில் `மதுரை கொண்ட கோப்பரகேசரி’ என அழைக்கப்படும் முதல் பராந்தக சோழன் (கி.பி 907 முதல் 953 வரை சோழப் பேரரசை ஆட்சி செய்தார்) காலத்துக் கல்வெட்டு உள்ளது. இந்த ஏரிக்கு தூம்பு ஒன்றினை அமைத்து, அதனைப் பராமரிக்க நிலதானம் அளித்ததை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.
அற்புதமான இந்த ஊருக்கு நீங்களும் ஒருமுறை வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு குடும்பத்துடன் சென்று வாருங்கள். மிகப் பழைமையான ஆலயத்தை தரிசித்து, திரிகாலேஸ்வரரின் திருவருளைப் பெற்று வாருங்கள். நம் தொன்மையின் பெருமைக்குச் சான்றாகத் திகழும் இதுபோன்ற ஆலயங்களைப் புதுப்பிப்பதும் பராமரிப்பதும் நமது தலையாய கடமை. ஆகவே, ஆலய திருப்பணிக்கும் இயன்ற பங்களிப்பை வழங்குவோம். அந்தப் பரமனின் பெருங்கருணையை வரமாகப் பெறுவோம்.

விடியல் எப்போது?
சீடர்கள் நால்வருடன் யாத்திரை மேற்கொண்டிருந்தார் முனிவர் ஒருவர். அவர்கள், ஒரு நதியைக் கடந்து வனத்துக்குள் புகுந்தனர். அங்கே வசதியான ஓரிடத்தில் சற்றுக் களைப்பாறினார்கள்.
முனிவர் சீடர்களிடம் கேட்டார்: ``செல்வங்களே! விடியலின் தொடக்கம் எப்போது தெரியுமா?’’
சீடர்கள் பதில் சொல்ல முற்பட்டனர். ``தூரத்தில் வருவது ஆடா அல்லது மாடா என்று அடையாளம் காண முடிகிறது எனில், அப்போது விடியல் தொடங்கிவிட்டது எனலாம்’’ என்றான் ஒருவன்.
``தூரத்தில் தெரிவது அத்தி மரமா அல்லது வேறு மரமா என்று நம்மால் கண்டுகொள்ள முடிகிறது எனில், அப்போது விடியல் தொடங்கிவிட்டது!’’`
இப்படியே ஒவ்வொரு சீடனும் ஒவ்வொரு பதிலைச் சொல்ல, அனைத்தையும் புன்னகையோடு கேட்டுக்கொண்டிருந்த முனிவர் நிறைவாகச் சொன்னார்.
`` எப்போது எதிரில் இருப்பவரின் முகத்தில் உங்கள் சகோதரனைக் காண்கிறீர்களோ, அப்போதுதான் உங்களைப் பொறுத்தவரையிலும் விடியல் ஆரம்பமாகும்!’’ என்றார்!
- சி.பாண்டியன், மதுரை
எண்ணியதை நிறைவேற்றும் எண்கண் முருகன்
திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள தலம் எண்கண். ராஜராஜசோழன் முதலான எண்ணற்ற மன்னர்கள் திருப்பணி செய்த ஒப்பற்ற ஆலயம் இது.
சிற்பி ஒருவர், கண்ணை இழந்த நிலையிலும் முருகனருளால் சிற்பம் வடித்த அற்புதத் தலம் இது. இங்கே ஞானகுருவாக தென்திசை நோக்கி அருளுகிறார் முருகப்பெருமான். அவரின் கருவறையை ஞானசபை என்பர். பிரம்மன் இங்கே வந்து சிவனாரையும் முருகப் பெருமானையும் வழிபட்டுப் படைப்புத் தொழிலைத் திரும்பப் பெற்றார் என்கின்றன புராணங்கள். ஆகவே, இங்கேயுள்ள சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம்; அம்பாளின் திருநாமம்-பிரஹன்நாயகி. இந்தக் கோயிலுக்குச் சென்று சுப்ரமணியரையும், பிரஹன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டால், கண் குறைபாடுகள் நீங்கும்; செவ்வாய் தோஷ பாதிப்புகள் விலகும். சிற்பிக்கு அருளிய தலம் ஆதலால், கலைகளில் சிறக்கவும் வரம் கிடைக்கும் என்கிறார்கள். மட்டுமன்றி புத்திரப் பாக்கியம், திருமண வரம் முதலான சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித் தரும் தெய்வமாய்த் திகழ்கிறார் எண்கண் முருகன்.
- கே.அழகு, சென்னை-44