Published:Updated:

மங்கலம் பெருகும் பங்குனி தரிசனம்!

பழநி முருகன்
பிரீமியம் ஸ்டோரி
பழநி முருகன்

விழாக்கள்... விரதங்கள்!

மங்கலம் பெருகும் பங்குனி தரிசனம்!

விழாக்கள்... விரதங்கள்!

Published:Updated:
பழநி முருகன்
பிரீமியம் ஸ்டோரி
பழநி முருகன்

மங்கலங்கள் நிறைந்த மாதம் பங்குனி. பரமேஸ்வரர் மலைமகளை மணம் புரிந்த மாதம் இது. தடைகளை நீக்கி வெற்றி அருளும் மாதம் என்றும் ஆயிரம் பசு மாடுகளை தானம் செய்த புண்ணியம் தரும் மாதம் என்றும் போற்றுகின்றன ஞானநூல்கள். இதற்குக் காரணம் பங்குனியில் வரும் விழாக்களும் விரத வழிபாடு களும்தான்! அவற்றின் சிறப்பு களை நாம் அறிவது அவசியம்!

மங்கலம் பெருகும் 
பங்குனி தரிசனம்!

பழநிக்கு வந்த முதல் காவடி!

ங்குனி உத்திரம் - பங்குனித் தேரோட்டம் என்றதுமே பார் புகழும் பழநியும் பக்தர்களின் காவடிப் பிரார்த்தனையும் நம் நினைவுக்கு வரும். பழநிக்குக் காவடி சுமந்து வரும் பக்தர்கள் அறியவேண்டிய ஒரு பாடல் உண்டு. பழநி தலபுராணத்தில் உள்ள அந்தப் பாடல்:

... எழுந்த கிரி இரண்டும்

அன்ன துணைமால்வரைகள் அன்பினனிகாவின்

மன்னிடும் இடும்பன் மணி நீலமொரு தட்டும்

தன்னிகரின் மாமணியர் தட்டினு நிறைத்து

நன்னரினிறுக்கு மொரு நாயகனை நிகர்த்தான்

அகத்தியரின் ஆணைப்படி சிவகிரி - சக்தி கிரி எனும் கயிலையின் சிகரங்களையே காவடியாகச் சுமந்து வந்தவன் இடும்பன். இவன் பூர்ச்சவனம் எனும் இடத்தில் ஒரு வருட காலம் ஒப்பற்ற தவம் செய்து, அகத்தியரின் ஆசியோடு இரண்டு மலைகளையும் காவடியாக்கினான்.

எப்படி தெரியுமா?

தோளில் வைத்துத் தூக்கும் தண்டுத் தடியாக, `க்ஷீபன்’ என்னும் பிரம்மதண்டம் குருவருளால் தோன்றியதாம். தொடர்ந்து வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகா பதுமன், கார்க்கோடகன் ஆகிய சர்ப்பங்களையே கயிறுகளாக்கி உறிபோலச் செய்து சக்திகிரி- சிவகிரி மலைகளைப் பிணைத்தான் இடும்பன். பின்னர் பூமியில் முழங்காலை ஊன்றி, அகத்திய முனிவர் உபதேசித்த மந்திரத்தையும் திரு வடிவையும் மனதில் பதித்து, மலைகளைத் தூக்கினான் இடும்பன். அப்போது `வைர வியாபாரி ஒருவர், இந்திர நீல ரத்தினத்தை ஒரு தட்டிலும், மாணிக்க ரத்தினத்தை ஒரு தட்டிலுமாக வைத்து நிறுப்பதைப் போல் இருந்தது இடும்பனின் தோற்றம்’ என்கிறது மேற்காணும் பாடல்!

இடும்பன் ஆவினன்குடிக்கு வந்துசேர்ந்த போது கந்தனால் ஆட் கொள்ளப்பட்டான். அத்துடன், ‘‘இடும்பா! இன்று முதல் நீ இங்கே என் காவல் தெய்வமாக விளங்குவாய். உன்னைப் போலவே காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு நான் சகல வரங்களும் தருவேன்’’ என்று அவனுக்கும் அவன் மூலம் நமக்கும் கந்தனின் வரம் கிடைத்தது.

இடும்பன் தூக்கி வந்ததில் பழநி மலையே சிவகிரி இதற்குச் சற்றுத் தூரத்தில் நம்மால் இடும்பன் மலை என்று அழைக்கப்படுவது சக்திகிரி. பக்தர்கள், முதலில், மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள இடும்பன் சந்நிதியில் வணங்கி அதன் பிறகே பழநி மலை பரமனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

மங்கலம் பெருகும் 
பங்குனி தரிசனம்!

காஞ்சி காமாட்சி நோன்பு!

மா
சி மாதமும் பங்குனி மாதமும் கூடும் வேளையில் கடைப்பிடிக்க வேண்டிய நோன்பு காரடையான் நோன்பு. சாவித்ரி தனது திருமாங்கல்யத்தைக் காப்பாற்றிக்கொள்ள உறுதுணையாக இருந்த விரதம் இது.

காஞ்சி காமாட்சி, ஒரு முறை நதிக்கரை ஓரத்தில் ஆற்று மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து பூஜித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கில் மணல் லிங்கம் கரைந்து போய்விடுமே என்று கலங்கிய அம்பிகை, காரடையான் நோன்பு இருந்தாள். அம்பாளின் விரத பலனால் ஆற்று நீர் அடங்கி, விலகிச் சென்றது. ஈசன் காட்சி கொடுத்து காஞ்சி காமாட்சியின் கரம் பற்றினார். எனவே, சகல சௌபாக்கியங்களையும் தரும் இந்த விரதத்தை ‘காஞ்சி காமாட்சி காரடையான் நோன்பு’ என்றும் அழைப்பர்.

மங்கலம் பெருகும் 
பங்குனி தரிசனம்!

பங்குனி உத்திரத்தில் தானங்கள் எதற்காக?

‘ப
லி விழா பாடல் செய் பங்குனி உத்திர நாள்’ என்று பங்குனி உத்திரத்தைப் போற்றுகிறார் திருஞான சம்பந்தர். ‘பலி’ என்றால் செழித்தல், கொடுத்தல், விசாரித்தல் என்றும் பொருள் உண்டு.ஆக, பெற்ற பயனை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழும் பலி விழாவாகவும் திகழ்ந்துள்ளது பங்குனி உத்திரம். எனவே, இந்த நாளில் எல்லோருக்கும் அன்னமிட்டு பசிப்பிணியைப் போக்குவார்களாம் பக்தர்கள்.

மட்டுமன்றி, பங்குனி உத்திரம் அன்று திருவிளக்கு தீபத்தில், சிவ பெருமானும் பார்வதிதேவியும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருள் வதாக ஐதீகம். அன்று விளக்கேற்றி வழிபடுவதுடன் வயதான ஏழைத் தம்பதிக்கு உணவிட்டு உபசரித்தால் புண்ணியம் சேரும்.

மேலும், முறைப்படி பங்குனி உத்திர விரதம் இருப்பதுடன், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, ஆலயங்களுக்கு வரும் அடியவர்களுக்கு நீர்மோர் அளிப்பதால் பாவங்களும் தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.

மங்கலம் பெருகும் 
பங்குனி தரிசனம்!

அரங்கனும் பங்குனியும்!

வை
ணவ ராஜதானியான திருவரங்கமும் பங்குனியில் விழாச் சிறப்புப் பெறுகிறது. பன்னிரண்டு மாதங்களும் விழாக்கோலம் பூணும் திருஅரங்கநாதரை விபீஷணர் கொண்டு வந்தார் என்பது நமக்குத் தெரியும். இட்சுவாகு வம்சத்தவர்களின் குலதனமான திருவரங்கரை, இட்சுவாகு குலத் திலகமான ராமர், விபீஷணருக்குக் கொடுத்தார்.

அதாவது பங்குனி மாதம், வசந்த காலம், ரோகிணி நட்சத்திரமும் பஞ்சமி திதியும் கூடிய சனிக்கிழமை அதிகாலை சுப முகூர்த்தத்தில் திருவரங்கரை விபீஷணருக்கு ராமர் கொடுத்தார்.

இவ்வாறு, தான் பெற்ற திருஅரங்கரையும் அவரைத் தன்னுள் கொண்ட திருஅரங்க விமானத்தையும் விபீஷணன் (இப்போது நாம் தரிசிக்கும் இடத்தில்) வைத்ததும் பங்குனி மாத சனிக்கிழமை அன்றுதான். ‘பங்குனி மாதம், வளர்பிறை சப்தமி திதி, சனிக்கிழமை, சந்திரன் ரோகிணியிலும் குரு ரேவதியிலும் இருக்கும் மத்தியான நேரத்தில் திருஅரங்க விமானம் காவிரி தீரத்தில் விபீஷணரால் பிரதிஷ்டிக்கப்பட்டது’ என 1935-ஆம் ஆண்டு வெளியான ஶ்ரீரங்க மஹாத்மியம் எனும் நூல் கூறுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மங்கலம் பெருகும் 
பங்குனி தரிசனம்!

காரிய வெற்றி தரும் ஏகாதசி!

ந்த விதத் தடங்கல் இருந்தாலும் அதை நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி.

பங்குனி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி எனப் போற்றுவர். எடுத்த காரியங்களில் தடைகளை எல்லாம் நீக்கி வெற்றியை அருளும் விரத வழிபாடு இது.

இந்த தினத்தில்-ஒரு வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்காமல் என்றும் சொல்வது உண்டு), ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் நாராயணரின் திருவடிவை வரைந்து முறைப்படி வழிபட வேண்டும்.

மறு நாள் துவாதசி அன்று, ஒரு சாது அல்லது ஏழைக்கு உணவு அளித்து, பூஜை செய்த கலசத்தையும் தானியங்களையும் அவருக்குத் தர வேண்டும். அதன் பிறகே நாம் உணவு உண்ண வேண்டும். இந்த விரதத்தைக் கடைப்பிடித்த ராமன், சீதாதேவியை மீட்டு வந்தார் என்கிறது ஏகாதசி விரத மகாத்மியம்.

அதேபோல் பங்குனி வளர்பிறையில் வருவது, ஆமலகீ ஏகாதசி.இந்த நாளில் உபவாசம் இருந்து நெல்லி மரத்தின் அடியில் தூய்மை செய்து, அங்கு பரசுராமனின் திருவடிவம் வரையப்பட்ட கலசத்தைப் பிரதிஷ்டை செய்து, முறைப்படி வழிபட வேண்டும். அதன் பிறகு நெல்லி மரத்தை வலம் வந்து வணங்க வேண்டும். இவ்வாறு வழிபட்டவர்களுக்கு, ஆயிரம் பசுமாடுகளை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.