திருத்தலங்கள்
Published:Updated:

சிவமகுடம்! - 82

சிவ மகுடம்
News
சிவ மகுடம்

மங்கையர்க்கரசியார் சரிதம் - ஞான விளக்கு

அதிகாலையிலேயே விழித்துக்கொண்டுவிட்டார் பாண்டிமா தேவியார். புனல் நீராடி, குழல் காய்ந்து பூச்சூடி, வழக்கம்போல் சந்தனத்தில் திருநீற்றைக் குழைத்து மேனிக்கு இட்டுக்கொண்டு, ஐந்தெழுத்தை ஓதியபடி அவர் பூசை மாடத்துக்குள் நுழையவும் மீனாள் ஆலயத்தின் மணி முழங்கவும் சரியாக இருந்தது.

சிவமகுடம்! - 82

ஞான விளக்கு!

ங்கே காலைப் பூசனையை ஏற்கத் தயாராகிறாள் உலகின் பேரரசி. அதே தருணத்தில் இங்கே அரண்மனையில், மாதரசி மங்கையர்க்கரசியாரும் சிவபூஜை செய்யத் தயாராகிவிட்டார். நந்த வனத்தில் கொய்த வில்வங்களும் நாகலிங்க பூக்களும் குடலைகளில் நிறைந்திருந்தன. மட்டுமன்றி, தும்பைப் பூக்களையும் கொய்து வந்திருந்தார் அரசியார். தோழிப் பெண்கள் அபிஷேகத்துக்கான அத்தனைப் பொருள்களையும் தயார் செய்துவைத்திருந்தார்கள்.

பெரும் திருப்தி அடைந்த தேவியார், மேலும் வேறு எதையோ தேடினார். அவர் தேடியவை உரிய இடத்தில் வரிசையில் இருந்தன. தாலம் இட்ட அரிசிச்சோறு, வட்டில்களில் இடப்பட்டிருந்த கும்மாயம், காய்கறி, பொறிக்கறி, தயிர், பழங்கள் ஆகியவைதான் அவை. தாலம் என்றால் அகன்ற தட்டு. வட்டில்கள் என்பன கிண்ணங்கள். பெரும்பாலும் இவை வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இங்கே இலைகளைத் தாலமாகவும் தொன்னைகளை வட்டில் களாகவும் செய்து வைத்திருந்தார்கள். அடியார்களின் விருப்பம் அது.

ஆம்! சமீப நாட்களாக மாமன்னரின் பெயரில் துறவிகளுக்கும் அடியார்களுக்கும் அன்னமிட்டுக் கொண்டிருந்தார் பேரரசியார். முன்னதாக அவை பூசை மாடத்தில் இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, சிவப் பிரசாதமாகவே அவர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் அவர்களுக் குப் பெரிதும் மகிழ்ச்சி. ஒவ்வொரு நாளும் அன்னக் கூடத் தில் அடியார் கூட்டம் பெருகியது. அவர்களின் வாழ்த்து, தேசத்தை யும் மன்னரையும் பெரிதும் வாழவைக்கும் என நம்பினார் தேவியார்.

அகல்களிலும் சரவிளக்குகளிலும் எண்ணெய் இட்டு தீபங்களை ஏற்றத் தொடங்கினார். சுடரொளிகள் சிவப்பிரகாசத்துடன் ஒளிரத் தொடங்கின. அவற்றைத் தரிசிக்கும்போது, வடமொழியிலும் தன்னிகரில்லா தமிழிலும் உள்ள ஞானநூல்களில் பெரியோர்கள் சொல்லிவைத்த தத்துவ விளக்கங்கள் தேவியாரின் நினைவுக்கு வந்தன.

சிவமகுடம்! - 82

`நம்பிக்கை என்ற பாத்திரத்தில் தர்மம் என்ற பாலைக் கறக்க வேண்டும். அந்தப் பாலை, ஆசையில்லாத மனநிலை எனும் நெருப்பின் உதவியுடன் காய்ச்ச வேண்டும். சூடாகிவிட்ட பாலை, நிறைவான மனம் மற்றும் பொறுமை எனும் காற்றின் துணைகொண்டு ஆறவைக்க வேண்டும். ஆறிய பாலின் மேல் மன அடக்கம், தைரியம் என்னும் ஆடை படரும். அதை எடுத்து மனத்தெளிவு என்கிற பானையில் போட வேண்டும்.

பின்னர் தத்துவ விசாரணை என்ற மத்தைப் போட்டு, புலனடக்கம் என்ற தூணில் இணைத்து கடைய வேண்டும். அதற்குக் கயிறு வேண்டுமே! உண்மையும் இனிமையும் நிறைந்த சொற்கள் எனும் கயிறு கொண்டு கடையவேண்டும். அப்போது குற்றமே இல்லாத நல்ல வைராக்கியம் எனும் வெண்ணெய் திரண்டு வரும்.

அதை யோகம் எனும் நெருப்பில் ஏற்றி காய்ச்சினால், அகங்காரம் என்னும் அழுக்கு திரண்டு மேலே மிதக்கும். அந்த அழுக்கை நீக்கினால், தத்துவ ஞானம் எனும் நெய் கிடைக்கும். அந்த நெய்யை மனம் எனும் அகலில் இட்டு இதய தீபமேற்றினால் உள்ளத்தில் இறை ஒளிரும்!’

அவ்வண்ணமே வாழ்ந்தும் வணங்கியும் வந்த தேவியாரின் உள்ளம் எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஒளியின் மையத்தில் தென்னாடுடை யானின் தாண்டவம் அனவரதமும் நடந்து கொண்டி ருந்தது. அவர் ஆட தேவியார் இயங்கினார்; பாண்டிய தேசம் செம்மையடையத் தொடங்கியது!

சிவபூசை இனிதே நிறைவுற்றது. மிகச் சரியாக அந்தத் தருணத்தில் தான் பூசைக்கான வரம் போன்று வந்து சேர்ந்தது, `திருக் கொடுங் குன்றத்திலிருந்தும் புறப்பட்டுவிட்டார் திருஞானசம்பந்தர். விரைவில் ஆலவாயை வந்தடைவார்’ எனும் தகவல்.

அந்தத் தகவல் மட்டுமா? அந்த நேரத்தில் தேவியாரே எதிர்பாராத பொக்கிஷங்களும் வந்து சேர்ந்தன அவரிடம். நாகக் கணையாழி, தாரு லிங்கங்கள், சிவமகுடம் மூன்றும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை அவரிடம் கொண்டு வந்து கொடுத்தவள் பொங்கிதேவி!

அவள் எங்ஙனம் இங்கு வந்து சேர்ந்தாள்? அதுபற்றி அறியுமுன் திருக்கொடுங்குன்றம் சென்று வந்து விடுவோம், வாருங்கள். அங்கிருந்து சீர்காழிப் பிள்ளை புறப்படுமுன், நாமும் அந்தத் தலத்தை - கொடுங் குன்ற நாதரைக் கண்ணார தரிசித்து வந்துவிடுவோம்!

சிவமகுடம்! - 82

சிவலிங்கத் திருவடிவான பிரான்மலை!

திருக்கொடுங்குன்றம் எனும் பிரான் மலையைக் குறித்து முன்னோட்ட தகவல்களை சென்ற அத்தியாயத்திலேயே படித்தோம். சிவமூர்த்தங்களில் பைரவ மூர்த்தத்தைச் சிறப்பிக்கும் தலம் இது.

எல்லா காலங்களிலும் நன்மைக்கு எதிராக தீமையும் ஏதோவொரு வடிவில் தோன்றுவது வழக்கம். அப்படித்தான் அந்தகன் எனும் வடிவில் அதர்மம் தலைவிரித்தாடிய காலம் அது. தேவர்களும் முனிகளும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

கருணைப் பார்வை பார்த்த சிவனார், மெள்ளக் குனிந்து தமது நெஞ்சையே நோக்கினார். முன்னரே, தாருகாவனத்தை எரித்திருந்தார் அல்லவா! அந்த நெருப்பு... காலாக்னியாக அவரின் நெஞ்சில் குடிகொண்டிருந்தது. இப்போது அண்ணல் நோக்கவும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அதிலிருந்து ஒரு வடிவாகி ஓங்கி நின்ற ஸ்வரூபமே, பைரவநாதர்.

பைரவரை, அந்தகாசுரனுடன் சண்டையிடப் பணித்தார் சிவனார். போர் நடந்தது. அந்தகாசுரன் இருந்த இடம் தெரியாமல் அழிந்தான். கொடுமைகளில் இருந்து காப்பாற்றப்பட்ட தேவர்கள், தமது நன்றிக் கடனைத் தெரிவிக்க, ஆளுக்கு ஒரு ஆயுதத்தையோ திறனையோ, பைரவருக்குக் கொடுத்தனர். ‘சர்வ ஆற்றல்களையும் தமக்குள் ஒடுக்கிக் கொண்டு, பிரபஞ்சம் முழுவதையும் தமக்குள் ஆக்கிக் கொண்டவர் பைரவர்’ என்று சிவச் சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. வடமொழியில் பைரவர் என்றும், தமிழில் வைரவர் என்றும் வழங்கப்படுகிற பைரவர், சிவனாரின் உக்கிர மூர்த்தமாவார்.

அவர் சிறப்புடன் வழிபடப்படும் தலங்களில் ஒன்றுதான் பிரான் மலை. பூமி, அந்தரம், சொர்க்கம் எனும் மூன்று நிலைகளில் திகழும் இவ்வூர் சிவாலயத்தில்... பூமி பாகத்தில் சிவ-பார்வதி எழுந்தருளியிருக்க, சொர்க்கத்தில் மங்கைபாகர் எழுந்தருளி திருமணக் காட்சி தர, அந்தரத்தில் பைரவர் அருள்கிறார்!

சிவபுராணத்தின்படி, இது, மேரு மலையின் ஒரு பகுதி. ஆதி சேஷனுக்கும் வாயுக்கும் போட்டிவந்து, ஆதிசேஷன் மேருவை அழுத்திக்கொள்ள... வாயு, பலம் கொண்ட மட்டும் வீசித் தள்ளிய கதை நினைவிருக்கிறதா? அவ்வாறு வாயுதேவன் வீசிய போது, மேருவிலிருந்து பிய்ந்து வந்த துண்டங்களே காளத்தி மலையாகவும், திருச்செங்கோட்டு மலையாகவும் உள்ளன என்று ஆங்காங்கேபார்த் திருக்கிறோம். அத்தகைய துண்டங்களில் ஒன்றுதான், பிரான் மலையாக இருக்கிறதாம்!

வெகு தூரத்திலிருந்தும் உயரத்தில் இருந்தும் இதைப் பார்த்தால், இந்த மலையே சிவலிங்க வடிவத்தில் இருப்பது தெரியும். அதனால்தான், பிரான்மலை.

மலையின் அடிவாரத்தில் கொடுங்குன்று நாதரை தரிசிக்கலாம். சிறிய லிங்க மூர்த்தம். வட்ட வடிவ ஆவுடையார். இவர்தாம் கொடுங் குன்றீசர், கொடுங்குன்றநாதர், கடோரகிரீஸ்வரர், பிரச்சந்திரகிரீஸ்வரர், குன்றாண்ட நாயனார், கொடுங்குன்றம் உடைய நாயனார். மகோதர மகரிஷியும் நாகராஜனும் வழிபட்ட ஈசன் இவர்.

திருத்தலங்களின் பெயர்களே காரணக்கதை சொல்லும். ஆனால் இவ்வூரின் பெயரோ கொடுங்குன்றம் என்று திகழ்கிறதே. ஏன் அப்படி? ஏறுவதற்குக் கடின மான மலை என்பதால் கடோரகிரி அல்லது கொடுங்குன்றம் என்று பெயர். இறைவனின் தரிசனம் பெறவேண்டும் என்றால் பிரயத்தனம் தேவை அல்லவா. அந்தப் பிரயத்தனத்தை கடுமையைத் தரும் மலை என்றும் சொல்லலாம்!

ஆனால் நிறைவில் பெறுவதற்கரிய பேரின்ப தரிசனத்தை அருளும் மலை என்பதிலும் ஐயம் இல்லை. திருஞானசம்பந்தப் பெருமானுக்கும் அத்தகைய தரிசனம் கிடைத்ததுபோலும். சூரிய கோடிப் பிரகாசத்துடன் திருமுகம் ஒளிர, அதோ அடியார் கூட்டத் துடன் வலம் வருகிறார் பாருங்கள். ஆமாம்... யார் அது, பிள்ளையைப் பணிந்து, மிகப் பணிவுடன் ஏதோ செய்தி சொல்லிக் கொண்டிருக்கிறாரே... என்னவாக இருக்கும்?!

- மகுடம் சூடுவோம்...