திருக்கதைகள்
Published:Updated:

`நிரம்பி வழிந்த கஞ்சிக் கலயம்!'

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

கருப்ப ஞானியார் சந்நிதியில் பலிக்கும் வேண்டுதல்கள்!

கல்யாணத் தடை, வேலையின்மை, வறுமை, உடற்பிணி, மனச் சங்கடம், `பிள்ளை இல்லையே' எனும் மனக்கவலை என எவ்விதப் பிரச்னையாக இருந்தாலும் சரி... `ஒருமுறை கருப்பஞானியார் சந்நிதிக்குப் போய்ட்டு வாங்க, எல்லாம் சரியாகும்’ என்றே வழிகாட்டுகிறார்கள், ராஜ பாளையத்திலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான பெரியவர்கள்!

`நிரம்பி வழிந்த கஞ்சிக் கலயம்!'

அதன்படி, நம்பிக்கையோடு தன் சந்நிதியைத் தேடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களைக் குறையின்றி நிறைவேற்றி அருள்கிறார் கருப்ப ஞானியார். யார் இந்த மகான், எங்கிருக்கிறது இவரின் சந்நிதி?

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அமைந்துள்ளது கருப்ப ஞானியார், பொன்னப்ப ஞானியார் சமாதிக் கோயில். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரம்.

சுமார் 400 ஆண்டுகளுக்குமுன் ராஜ பாளையத்தில் அவதரித்தவர் கருப்பன். சிறு வயது முதலே இறைப்பற்றுடன் சிவமே சித்தமென வாழ்ந்தவர். இதே காலகட்டத்தில், கோதையம்மாள் என்ற பெண்மணியும் இவ்வூரில் வசித்தார். அவருக்கு 3 ஆண்; ஒரு பெண் என நான்கு குழந்தைகள். வெளியூருக் குச் சென்ற கணவர் திரும்பி வராத நிலையில், தனியொருத்தியாக பிள்ளைகளை வளர்த்து வந்தார். ஒரு பொழுது கம்மங்கஞ்சி மட்டுமே அவர்களின் உணவு.

ஒருநாள் காட்டுக்கு விறகு சேகரிக்கச் சென்றார் கோதையம்மாள். சுள்ளி விறகுகளைச் சேகரித்துக் கட்டாகக் கட்டினார். அதைத் தூக்கிவிட எவரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்தார். அப்போது அவ்வழியே வந்தார் சித்தன் கருப்ப ஞானியார். அவரிடம் உதவி கேட்டார் அந்தப் பெண். அவரோ, ``நானே விறகுக்கட்டைச் சுமந்து வருகிறேன். பதிலுக்கு நீ என் வயிற்றுப்பசிக்கு உணவளிக்கவேண்டும்’’ என்றார்.

``வீட்டில் இளையவனுக்கு மட்டுமே கஞ்சி இருக்கிறது. அவன் குடிக்காமல் வைத்திருந்தால் அதை உமக்குத் தருகிறேன்’’ என்றார் கோதை யம்மாள். பின்னர், `எதுவாக இருப்பினும் வீட்டுக்குச் சென்று பார்த்துக்கொள்ளலாம்’ என்ற தீர்மானத்துடன் இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். கோதையம்மாள் நினைத்தது போலவே, அவளின் இளைய மகன் கஞ்சியைக் குடித்துவிட்டு காலியான பானையை உறியில் தொங்கவிட்டிருந்தான். கோதையம்மாள் மனம் வருந்தினாள்; என்ன செய்வது என்று திகைத்தாள்.

`நிரம்பி வழிந்த கஞ்சிக் கலயம்!'

கருப்ப ஞானியார் சிரித்தபடி ``தாயே! கலயத்தில் ஒட்டியிருக்கும் கஞ்சியில் சிறிது நீர் விட்டுக் கரைத்து எடுத்து வா. அதுவே போதும்’’ என்றார். கோதையம்மாளோ `பசியென்று வந்தவருக்குக் கலயத்தைக் கழுவிய நீரையா கொடுப்பது’ என்று தயங்கினாள்.

எனினும் கருப்ப ஞானியார் சொன்னது போல் நீரை ஊற்றி, கலயத்தில் ஒட்டியிருக்கும் கஞ்சியைக் கரைக்க முற்பட்டாள். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. கலயத்தில் கம்மங்கஞ்சி பொங்கி வழிந்தது. கோதையம்மாள் திகைத்தார். வந்திருப்பது சாமானியர் அல்ல என்பதை உணர்ந்து அவளின் காலில் விழுந்து வணங்கினாள்.

வாஞ்சையோடு அவளை வாழ்த்திய கருப்ப ஞானியார், அவள் வீட்டில் எப்போதும் உணவுக் குப் பஞ்சம் ஏற்படாதபடி ஓர் அற்புதத்தை நிகழ்த்த சித்தம் கொண்டார்.

அருகிலுள்ள கம்புக்காட்டுக்குச் சென்று, கைப்பிடி கம்பு தானியத்தை எடுத்துவந்து, கோதையம்மாள் வீட்டுத் தானியக் குதிருக்குள் போட்டு மூடினார். `தேவைப்படும்போது குதிரின் கீழ்ப்புறத்தில் இருக்கும் திறப்பின் வழியே தானியத்தை எடுத்துக்கொள் தாயே! எக்காரணம் கொண்டும் சந்தேகப்பட்டு குதிரின் மூடியைத் திறந்து பார்த்தால்... பிறகு தானியம் இல்லாமல் போய்விடும்’ என்று கூறிச் சென்றார். அப்படியே பின்பற்றினார் கோதையம்மாள். அன்றுமுதல் அவரின் குடும்பம் உணவுக்குப் பஞ்சமின்றி வாழ்ந்தது.

`நிரம்பி வழிந்த கஞ்சிக் கலயம்!'

துரையில் வசித்த செல்வந்தர் ஒருவர், தீராத வயிற்றுவலியால் துன்பப்பட்டு வந்தார். எவ்வித மருத்துவமும் பலனளிக்கவில்லை. அவர் மதுரை மீனாட்சியம்மனிடம் மனமுருகி வேண்டினார். அவரின் கனவில் தோன்றிய அன்னை மீனாட்சி, `ராஜபாளையம் சஞ்ஜீவி மலையடி வாரத்தில் இருக்கும் கருப்பன் என்ற ஞானியால் மட்டுமே வயிற்று வலிக்குத் தீர்வு தர இயலும்’ என்று அருள்பாலித்தார்.

அதன்படியே ராஜபாளையத்துக்கு வந்து சேர்ந்த செல்வந்தர், சகலரிடமும் விசாரித்து அறிந்து சஞ்ஜீவி மலையடிவாரத்தில் இருந்த வனப்புறத்தை அடைந்தார். ஓரிடத்தில் சடைமுடியும் தாடியுமாகத் திரிந்த ஞானியா ரைக் கண்டார். அவரைப் பின்தொடர்ந்தார்.

செல்வந்தருக்குச் சற்று போக்கு காட்ட விரும்பிய ஞானியார், வேகவேகமாக நடக்க ஆரம்பித்தார். அப்போதும் மனம் தளராமல் அவரைப் பின்தொடர்ந்தார் செல்வந்தர். ஓரிடத்தில் திரும்பிப்பார்த்த ஞானியார், ``உமது வயிற்றுநோவுக்குத் தீர்வு காண, அன்னை மீனாட்சி உம்மை என்னிடம் அனுப்பிவைத்தாளா?’’ என்று கேட்டார்.

`கனவில் வந்து அம்பிகை உரைத்தது இவருக்கு எப்படித் தெரிந்தது’ என்று செல்வந்தர் வியந்தார். இறையருள் பெற்றவர் இந்த ஞானியார் என்று உணர்ந்து சிலிர்த்தார். அவரைத் தன்னுடன் அழைத்து சென்ற ஞானியார், சற்று துரத்தில் இருந்த சுனையை அடைந்தார். சுனையின் நீரை கைகளால் மோந்துக் கொடுத்துப் பருகச் சொன்னார்.

அதைப் பருகியதுமே வயிற்றுவலி காணாமல் போனது. செல்வந்தர் மகிழ்ந்தார். ஆனாலும் `இது நிரந்தரத் தீர்வாக இருக்குமா?’ எனும் சந்தேகம் அவருக்குள் இருந்தது. ஆகவே, ஒரு மாத காலம் ராஜபாளையத்திலேயே தங்கியிருந்தார். வலி பூரணமாகத் தீர்ந்துவிட்டது என்பது உறுதியானதும் ஊருக்குப் புறப்பட்டார். வழியில் கோதையம்மாளையும் அவரின் மகன் களையும் சந்தித்தார்.

தனது நோயை நீக்கிப் புது வாழ்வு அளித்த ஞானியாரின் மகிமையை எடுத்துரைத்தார். ஞானியார் ஸித்தி பெற்றபிறகு, அவருக்குக் கோயில் எழுப்ப விரும்புவதாகவும் சொல்லிச் சென்றார்.

`நிரம்பி வழிந்த கஞ்சிக் கலயம்!'

நாள்கள் நகர்ந்தன. ஒரு நாள், `புரட்டாசி மாதம், தேய்பிறை திரியோதசி நாளில் தான் ஐக்கியமாகப் போவதாக கோதையம்மாளி டமும் அவரின் மகன்களிடமும் தெரிவித்தார் ஞானியார். தாம் குறிப்பிட்டுச் சொன்ன நாளில், ஒரு புன்னை மரத்துக்கு அருகில் ஸித்தி அடைந்தார்.

செல்வந்தருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. அவர் மூலம் ஞானியாருக்குக் கோயில் கட்டு வதற்கான ஏற்பாடுகள் நிகழ்ந்தன. புன்னை மரத்தருகில் குழி தோண்டும்போது, மரத்தின் வேரில் கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனால் பதறிப்போன மக்கள், கைகளாலேயே அந்த இடத்தைத் தோண்டினார்கள்.

அப்போதுதான், ஏற்கெனவே ஞானி ஒருவர் அந்த இடத்தில் ஸித்தி அடைந்திருப்பது தெரிய வந்தது. இந்த விஷயத்தை எல்லோருக்கும் காட்டிக்கொடுக்கவே, கருப்ப ஞானியாரும் அதே இடத்தில் ஐக்கியமாகியுள்ளார் என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள்.

ஏற்கெனவே புன்னை மரத்தடியில் ஸித்தி அடைந்திருந்த - ஊர், பெயர் அறிய இயலாத மூத்த ஞானியை புன்னைப்பூ ஞானியார் என்றே பக்தர்கள் அழைத்தார்களாம். காலப்போக்கில் இந்தப் பெயர், பொன்னப்ப ஞானியார் என்று மருவியதாகச் சொல்கிறார்கள். இந்த ஞானியர் இருவருக்கும் தனித்தனி மூல ஸ்தானம் அமைத்து, கோயில் கட்டப்பட்டது.

ஆனந்த விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், சாயிபாபா, அம்மன், லிங்கோத்பவர், பிரம்மா, நவகிரகங்கள், அனுமன், ஐயப்பன், நாயன்மார்கள் என 44 பரிவார தேவதைகளை இங்கே தரிசிக்கலாம்.

கோயில் கட்டப்பட்ட காலம் முதல் இன்று வரையிலும், கோதையம்மாளின் வழி வந்த ஆண் மக்கள் சந்ததியினரே இந்தக் கோயிலில் நித்திய பூஜைகளைச் செய்து வருகின்றனர்.

`நிரம்பி வழிந்த கஞ்சிக் கலயம்!'

இங்குள்ள பூஜைமுறைகள் குறித்து, கோயிலின் கௌரவத்தலைவர் வைத்தீஸ்வரன் பகிர்ந்துகொண்டார்.

``தினமும் காலை 11:30 மணிக்கு உச்சிக்கால பூஜையும் இரவு 7:15 மணிக்கு சாயரட்சை பூஜையும் நிகழும். புரட்டாசி தேய்பிறை திரயோதசி தினத்தில் கருப்ப ஞானியாருக்குக் குருபூஜை நிகழும். அன்று அன்னதானமும் வழங்கப்படும். மேலும் சிவபெருமானுக்கு உகந்த விசேஷ நாள்களில் கருப்ப ஞானியாருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மார்கழித் திருவாதிரை, மகா சிவராத்திரி, வைகாசியில் நிகழும் முக்கனி அபிஷேக பூஜைகள் இங்கே பிரசித்திபெற்றவை.

பிரதோஷ பூஜையும் சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாதம் முதல் தை மாதம் 5-ம் தேதி வரையிலும் சுவாமி ஐயப்பனுக்கும் விசேஷ பூஜைகள் நிகழும். பச்சரி சாதமும், நெய் பருப்பும் தினசரி நைவேத்தியங்கள். குருபூஜை அன்று சிறப்புப் பிரசாதமாக கம்மங் கஞ்சி வழங்கப்படும்” என்றார்.

300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்கால கட்டுமானங்கள் பெருகியிருக்கின்றன. எனினும் பாண்டியர் காலத்துப் பெயர் சொல்லும் வகையில், மூலஸ்தானம் அமைந்திருக்கும் உள் பிராகாரம் மட்டும் கருங்கல் வேலைப்பாடுடன் பழைமை மாறாமல் திகழ்கிறது. அற்புதமான இந்தக் கோயிலுக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்; ஞானியரின் திருவருளால் சகல நன்மைகளும் உண்டாகும்!

`நிரம்பி வழிந்த கஞ்சிக் கலயம்!'

`கல்யாணம் கூடி வந்தது!’

வேண்டுதலை நிறைவேற்ற வந்திருந்த ஞானராஜ் கருப்ப ஞானியாரின் மகிமையைப் பகிர்ந்துகொண்டார்.

“என் மகனுக்குத் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கருப்பஞானியாருக்கு ரோஜாப் பூ மாலை சாற்றி வழிபட்டால், திருமணத் தடை நீங்கும் என்று உறவினர்கள் சிலர் கூறினார்கள். அதன்படி நானும் குடும்பத்தோடு இங்கே வந்து சிறப்புப் பூஜை செய்து வழிபட்டேன். ரோஜாப் பூ மாலை வாங்கிச் சமர்ப்பித்தேன். சில மாதங்களிலேயே மகனுக்குத் திருமணம் கூடிவந்தது. அதுமட்டுமல்ல, கருப்ப ஞானியார் சமாதிக்கோயிலைக் குலதெய்வத் தலமாகக் கொண்ட பெண்கள், எந்த வீட்டுக்குத் திருமணம் ஆகிச் சென்றாலும் அவர்களின் புகுந்த வீட்டில் பொன், பொருள் சேர்க்கை மங்காமல் இருக்கும் என்பது நம்பிக்கை‌. அதற்கும் நாங்களே சாட்சி” என்கிறார் பரவசத்துடன்!

யாருக்கு முதல் மரியாதை!

கோயிலில் இரண்டு ஞானிகளுக்கும் தனித்தனி மூலஸ்தானம் அல்லவா? பொன்னப்ப ஞானியார், கருப்ப ஞானியார் இருவரில் யாருக்குத் தேவார - திருவாசகப் பாடலுடன் முதலில் பூஜைகள் செய்ய வேண்டும்; முதல் மரியாதை தர வேண்டும் என்பது குறித்து பேச்சு வந்ததாம்.

அப்போது, கோயில் பூசாரிகளின் முன்னோர்கள் சிலர், அவர்களின் குருவாகிய குருசாமி சித்தரிடம் சென்று தீர்வு கேட்டனராம். அவரின் வழிகாட்டுதல்படி முதலில் ஐக்கியமான பொன்னப்ப ஞானியாருக்கு கோயிலில் முதல் மரியாதை, முதல் பூஜை நிகழ்கிறது.

இரண்டாவது பூஜை தேவார - திருவாசகப் பாடலுடன் கருப்ப ஞானியாருக்கு நிகழ்கிறது. மட்டுமன்றி, ஆலய வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங் ட்களுக்குப் பூஜை செய்த பிறகு, மீண்டும் ஒருமுறை கருப்பஞானியாருக்குப் பூஜை வைத்து இரண்டு கால பூஜைகள் நிறைவு செய்யப்படுகின்றன.