Published:Updated:

ரங்க ராஜ்ஜியம்!

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம் ( ஓவியர் ரமணன் )

இந்திரா செளந்தர்ராஜன்

ரங்க ராஜ்ஜியம்!

இந்திரா செளந்தர்ராஜன்

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம் ( ஓவியர் ரமணன் )

பூமகள் கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்
தாமகிழும் செல்வச் சடகோபர் - தேமலர்த்தாட்
கேய்ந்தினிய பாதுகமா மெந்தை ராமாநுசனை
வாய்ந்தெனது நெஞ்சமே வாழ்!
- ஶ்ரீமணவாள மாமுனிகள்

ரங்க ராஜ்ஜியம்!

மிலேச்சர்களின் படையெடுப்பின் போது, பவித்ரோத்சவ மண்டபத்திற்கு சரஸ்வதி விக்கிரகம் இடம்பெயர்ந்த கால கட்டத்தில் திருவரங்க ஆலயத்தினுள்ளும் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்களின் பின்னாலும் கூரநாராயண ஜீயரே புலப்படுகிறார்.

ஆலிநாடன் திருச்சுற்றின் தென் பகுதியில் - ஆரியப்பட்டாள் வாசலுக்கு கிழக்கில், ஶ்ரீபண்டாரத்திற்கு எதிரில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. கோயி லொழுகு குறிப்புகளின்படி இது சுந்தர பாண்டியன் துலா புருஷ மண்டபமாகும். ஆனால், கூரநாராயண ஜீயர் காலத்தில் சுந்தரபாண்டியன் ஆட்சியிலேயே இல்லை. கூரநாராயண ஜீயரின் காலம் கிபி 1200. சுந்தர பாண்டியனின் காலம் 1250 - 1276 ஆகும். எனவே, கோயிலோழுகு குறிப்பு பிழையென்றாகிறது.

ஆனால் இந்தப் பிழை எவரும் திட்டமிட்டு செய்ததில்லை. ஆலயத்தினுள் ஏற்பட்ட படையெடுப்பாலும் ஏடுகள் பல எரிக்கப்பட்டதாலும் உரிய குறிப்புகள் அழிந்துபோன நிலையில், கிடைத்தவற்றைக் கொண்டும் அறிய வந்தவற்றைக் கொண்டுமே கோயிலொழுகுவுக்கான குறிப்புகள் எழுதப்பட்டதால், சில இடங்களில் பிழைகள் அறியாமல் நேரிட்டு விட்டன எனலாம்.

மேற்சொன்ன துலா புருஷ மண்டபத்தின் ஒரு தூணில், திருக் குழலூதும் பிள்ளை உருவை ஶ்ரீகூரநாராயண ஜீயர் பிரதிஷ்டை செய்தார். இந்த மண்டபத்துக்குத் தான் நம்பெருமாள் ஶ்ரீபண்டாரத்திற்கு எழுந்தருளுவார். ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திர நாளன்று இது நிகழும். அப்போது, அரையர்கள் பெரியாழ்வார் திருவாய் மொழியை பாடி சேவிப்பர். எம்பெருமானாகிய நம்பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளும்போது கிருஷ்ண சாந்நித்யம் கொண்டவராகக் கருதப்படுகிறார்.

அதேபோல் ஆலிநாதன் திருவீதியில் சந்திர புஷ்கரணியின் கரையில் கோவிந்தனையும், வேதவியாசரையும், ஞானப் பிரானையும் ஶ்ரீ கூரநாராயண ஜீயரே பிரதிஷ்டை செய்தார்.

மேலும், அகளங்கன் திருவீதி வடக்குத் திருவாசலுக்கு நேரே எடுத்தகை அழகிய நாயனாருக்கு நாச்சியாரையும், உடையவர் சந்நிதிக்கு வடக்கே ஶ்ரீசக்கரத்தாழ் வார் சந்நிதிக்கு நேர் எதிரில் பார்த்த சாரதியையும் பிரதிஷ்டை செய்தார்.

உள்ளாண்டான் சந்நிதியில் எழுந்தருளியுள்ள சக்கரவர்த்தி திருமகனுக்கு நேர் எதிரில் விட்ட லேஸ்வரனையும் பிரதிஷ்டை செய்ததும் இவரே. மிகப்பெரிதான திருவரங்க ஆலயம், எம்பெருமானின் சகல ஆராதிக்கும் திருவடிவங்களாலும் ஆட்கொள்ளப்பட வேண்டும் என்பது ஜீயரின் எண்ணம்.

ஆலயத்துக்குள் வந்துவிட்ட ஒருவர்... இந்த மண்ணில் பல்வேறு தலங்களில் காணப்படும் மூர்த்தங்களைத் தரிசிக்கச் செல்ல இயலாத நிலையில், அந்த மூர்த்தியரை பெரியகோயிலான திருவரங்கம் கோயிலுக்குள்ளேயே கண்டுவிட வேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருந்தது. அதனால் திருவரங்கத்தில் பற்பல சீர்திருத்தங் களையும், பிரதிஷ்டைகளையும் கூரநாராயண ஜீயர் மேற்கொண்டார். அதனால் இவர் நலந்திகழ் நாராயண ஜீயர் என்றும், ஶ்ரீரங்க நாராயண ஜீயர் என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

அத்துடன் இவருக்கான கடமைகளும் அதிகரித்தன. அவை கைங்கரியங்கள் என்றாயின. அவற்றை இவரின் பரம்பரையினர் அப்படியே தொடர்ந்தனர். குறிப்பாக நம்பெருமாளுக்குச் சாற்றப்படும் அஞ்சனக் காப்பு, நாச்சியாருக்குச் சாற்றப்படும் அஞ்சனக் காப்பு ஆகியவற்றைக் கண்காணித்து அவற்றின் தரத்தைப் பரிசோதித்து தம்முடைய முத்திரையை இடவேண்டும். இவ்வாறு முத்திரை இடப்படாத ஒன்று பெருமாளுக்கோ, நாச்சியாருக்கோ சாற்றப்படாது!

அஞ்சனக் காப்பு மட்டுமல்ல, பெருமாளின் திருமேனிக்குரிய சகலமும் உயர்ந்த தரத்துடனும் குணத்துடனும் இருக்கவேண்டியது அவசியம். அது பன்னீரோ, புஷ்பமோ, சந்தனமோ எதுவாயினும் அதில் தரக்குறைவு இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் தோஷம் உண்டாகும். பெருந் தெய்விகத்துக்கே தோஷம் உண்டானால் விளைவு விபரீதமாகும்; பெரும் மழை, கடும் வறட்சி, நோய் உபாதை, பீடை என்று உருவாகி ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பாதிப்பு உண்டாகும்.

இதை மனத்தில்கொண்டே மேற்சொன்ன கடமையைத் தன் பரம்பரையினர் செய்யும்படி பணித்தார் ஶ்ரீகூரநாராயண ஜீயர். பின்னர் இவர் பெயராலேயே ஶ்ரீ ரங்கநாராயண ஜீயர் பட்டம் என்று உருவாக்கப்பட்டது. இந்தப் பட்டத்திற்கு வருபவர்கள், திருவாழி மோதிரம் தரித்து த்ரிதண்டத்தையும் பெற்று கைங்கர்யத்தைத் தொடர்ந்தனர்.

மொகலாய படையெடுப்பிற்குப் பின்னர், உத்தமர் கோவில் ஶ்ரீரங்கராஜன் என்பவர் இப்பட்டத்திற்கு வந்தார். இவர் மிகத் திட்டமிட்டுத் தன் கைங்கரியங் களைத் தொடர்ந்தார். நித்தமும் பெருமாளுக்கான திருவாராதனைக் க்ரமங்களை ஏற்படுத்தி, தினமும் திருக்கொட்டாரத்தில் இருந்து அமுதுப்படி, நெய்யமுது, திருவிளக்குக்கான எண்ணெய், பாலமுது, பாலமுது தரும் பசு, மற்றும் பசுவுக்கான தவிடு போன்றவை தவறாது கிடைக்க ஏற்பாடு செய்தார். இவருக்கு ஏகாங்கிகள் எனப்பட்டோர் உதவியாக இருந்தனர்.

ரங்க ராஜ்ஜியம்!

இங்ஙனம் திருவரங்க வரலாற்றில் நாம் அறிந்தாக வேண்டிய பாத்திரங்கள் அநேகம் உண்டு. அவர்களில் முக்கியமான இருவர் பெரியாயி என்றும் சிறியாயி என்றும் சிறப்பு பெயர் கொண்ட பெரிய வரதாசார்யர் சிறிய வரதாசார்யர் ஆவர்.

இவர்கள் ஶ்ரீராமாநுஜருக்கு நிழலாய் இருந்த ஶ்ரீமுதலியாண்டானின் பேரப்பிள்ளைகள்; கந்தாடை யாண்டானின் பிள்ளைகள் ஆவர். திருக்கோயிலில் இவர்கள் செய்த கைங்கர்யங்களைப் போன்று வேறு எவரும் செய்ய இயலாது எனும் அளவுக்கு இவர்களின் பணிகள் அமைந்தன.

ஒரு நாள் சிறிய வரதாசார்யர், நம்பெமாளுக்கு நிவேதிப்பதற்காக பாலினை நன்கு காய்ச்சி பொன் வட்டிலில் வைத்து எடுத்து வந்தார். அதை, தன் சகோதரனான பெரிய வரதாசார்யரிடம் தந்து நிவேதிக்கச் சொன்னார். பாலை உற்றுநோக்கிய பெரிய வரதாச்சாராயர், அதில் ஒரு துரும்பு மிதப்பதைக் கண்டார். பால் காய்ச்சும்போது, அடுப்பு விறகிலிருந்து அந்தத் துரும்பு தெறித்து விழுந்திருக்கக் கூடும். இதைக்கண்டதும் பெரிய வரதாச்சார்யாருக்கு மயக்கமே வந்துவிட்டது. ஆம்! இதை நம்பெருமாளுக்கு நிவேதித்தால், இத்துரும்பானது அவரின் தொண்டையில் சிக்கி புண்ணாகிவிடுமே... இது எவ்வளவு பெரிய தவறு... என்று எண்ணும்போதே மயக்கம் வந்துவிட்டது. அண்ணன் மயங்கிய பிறகு, தம்பிக்கும் விஷயம் தெரிய வந்து சிறிய வரதாசார்யரும் மயங்கி விழுந்தார்.

திருச்சந்நிதியின் திருப்படி மேல் இப்படி இருவரும் விழுந்து கிடந்த நிலையில், தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள் அக்காட்சி கண்டு பதைபதைத்துப் போயினர். அவ்வேளையில் அனைவரும் அறியும் வண்ணம், அரங்கன் அங்கிருக்கும் ஒரு ஶ்ரீவைஷ்ணவர் மூலம் அருள்வாக்காய் குரல்கொடுக்க தொடங்கினார்.

ரங்க ராஜ்ஜியம்!

`எனக்கான நிவேதனப் பாலில் கிடந்த ஒரு சிறு துரும்பு இருவரையும் மயங்கி விழச் செய்து விட்டது. அது என் தொண்டையைப் புண்ணாக்கி விடுமே' என்ற எண்ணமும் அதனால் உண்டான பதற்றமும் இருவரையும் இப்படி ஆக்கி விட்டது. இப்படியான உள்ளம் பெரும் தாய்மைக்கே உரிய ஒன்று. அப்படியான தாயுள்ளம் இவர்களிடம் இருக்கக் காண்கிறேன். அதனால் இந்த நொடி முதல் பெரியவரதாசார்யனை பெரியாயி என்றும் சிறியவனை சிறியாயி என்றும் நான் விளிக்கிறேன். இப்பெயராலேயே இனி இவர்களை எல்லோரும் அழைப்பீர்களாக. இப்பெயரே இவர்களின் தாயுள்ளத்தையும் தனிப்பெரும் சிறப்பையும் அனைவருக்கும் உணர்த்தட்டும்' என்று ஒலித்து முடித்தான்.

வைணவத் திருக்கூட்டம் அதைக் கேட்டு நெகிழ்ந்துபோய், இருவரின் மயக்கத்தைத் தெளிவித்து அரங்கனின் அருள்வாக்குக் குறித்து விவரித்தனர். அதைக்கேட்டு இருவரும் சிலிர்த்தனர்.

இவ்விருவருக்கும் மேலும் இரு சகோதரர் கள் இருந்தனர். அவர்கள் ஈயான் ராமாநுஜாசார்யர் மற்றும் அம்மாள் எனப்படுகிற தேவராஜ குரு ஆகியோர் ஆவர். இவர்கள் நான்கு பேரும் திருவரங்க ஆலயத் திருப்பணியைத் தங்களின் பெரும்பணியாக ஏற்று வாழ்ந்தவர்களாவார்கள். இவர்களின் திருப்பணிக் காலத்தில் திருவரங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் சோழனின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன.

ஒரு நாள் சோழ மன்னன் ஆலயத்திற்கு வந்தான். அவன் வருகையை உத்தேசித்து கட்டியக்காரர்கள் பெரும் குரலெழுப்பி கட்டியம் கூறி வரவேற்றதோடு, அவன் வரும் வழியெங்கும் மலர் தூவி அவனை மகிழ்வித் தனர். இதனைக் கண்ட பெரியாயி எனும் பெரிய வரதாசார்யர் ``இவ்வாறு ஆலயத்துக்குள் கட்டியம் கூறுவதோ, மலர் தூவுவதோ கூடாது. இங்கே அரசர்களுக்கு எல்லாம் ஒரே அரசன் அந்த அரங்கனே. அந்தப் பரமாத்மாவின் முன் அழிந்துபடும் மானிடர்கள் நாம் அனைவரும் ஜீவாத்மாக்கள். ஜீவாத்மாக்களுக்குப் பணிவும் பக்தியும் மிக முக்கியம். இங்கே கட்டியமும், மலர் தூவலும் அரங்கன் ஒருவனுக்கே. அழிந்து படும் மானிடருக்கு அது கூடவே கூடாது'' என்று உறுதிப்படக்கூறி சோழனுக்கான வரவேற்பைத் தடுத்தார்.

இச்செயல் சோழனையும் அவன் சகாக்களையும் பெரிதும் பாதித்தது. அவர்கள், பெரியாயி ஆகிய பெரிய வரதாசார்யர் அரங்கன் ஆலயத்திற்கு வந்து திருப்பணி செய்ய இயலாதபடி அவரைத் துன்புறுத்த முடிவு செய்தனர். அவர் வரும் வழியில் முள்களைப் போட்டனர். அவர் மீது கற்களை வீசி பயமுறுத்தினர். ஆயினும் `இது அரங்கனின் சோதனையே' என்று கருதிய பெரியாயி துளியும் அஞ்சாது முன்னிலும் திடமாய் திருப் பணியைச் செய்யலானார்.

ரங்க ராஜ்ஜியம்!

பெரியாயி படும் துயரம் கண்டு சிறியாயும் துயருற்றார். ``அண்ணா! சிறிது காலம் தாங்கள் நமக்கு மிக உற்ற திருமழிசை திருத்தலத்துக்குச் சென்று, அங்கு தங்கியிருந்து அங்குள்ள நம்பெருமானுக்குச் சேவை புரியுங்கள். இங்கே நான் இருந்து பார்த்துக் கொள்கிறேன்'' என்றார்.

``அற்ப மானிடருக்கு அஞ்சி அரங்கனைப் பிரிவதா... அதற்கு நான் உயிரை விட்டு விடுவேன்'' என்றார் பெரியாயி.

ஆனால், அன்று இரவு பெரியாயி கனவில் தோன்றிய அரங்கன் ``திருமழிசையிலும் நான்தானே இருக்கிறேன். அங்கு என் பொருட்டு வந்து சேவையைத் தொடரு. சோழனின் அபசாரத்திற்கான தண்டனை அவனுக்கு விரைவில் கிடைக்கும்'' என்று அருள் பாலித்தார். அதன்படி பெரியாயியாகிய பெரிய வரதாசார்யர் கண்ணீருடன் திருமழிசைக்குப் பயணமானார்.

இங்ஙனம் தன்னுடைய மூத்த புதல்வன் திருமழிசைக்குச் செல்லவும் அவருக்குத் துணையாக இக்கும்பொருட்டும் அவரின் அரவணைப்பில் இருக்கவும் விரும்பி, அவரின் தந்தையான கந்தாடை தோழப்பரும் பெரியாயியைப் பின்தொடர்ந்தார்.

இருவரின் பிரிவால் திருவரங்க ஆலயமே துயரில் ஆழ்ந்தது. ஆயினும் சிறியாயியின் திருத்தொண்டால் நித்திய ஆராதனைகளுக்கு ஒரு குறையும் இல்லை. இருவரும் வெளியேறி விட்டதை அறிந்த சோழனும் சற்று ஆறுதல் அடைந்தான். அதேநேரம் `தெய்வம் நின்று கொல்லும்' என்பதை அவன் மிக விரைவாக உணரத் தொடங்கினான்.

கட்டியக் குரலை கேட்க விரும்பிய அவன் செவிகள் செவிடாகிப் போயின. வாதநோய் தாக்கி கால்களும் கைகளும் செயலிழந்தன!

- தொடரும். `அற்ப மானிடனுக்கு அஞ்சி அரங்கனைப் பிரிவதா... அதற்கு நான் உயிரை விட்டு விடுவேன்' என்றார் பெரியாயி!

கலி தோஷத்தை வெல்லும் திருநாமம்!

துவாபர யுகத்தின் முடிவில், நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ``தந்தையே! எல்லா இடங்களிலும் சுற்றி வருகின்ற நான், தோஷங்கள் மிகுந்த கலியுகத்தை எவ்வாறு தாண்டிச் செல்வேன்?'' என்று கேட்டார். அதற்குப் பிரம்மதேவர், ``நாரதா! எல்லா வேதங்களின் ரஹஸ்யமான தாத்பர்யத்தைச் சொல்கிறேன், கேள். அதனால், நீ கலியின் துன்பத்தை அடைய மாட்டாய். பகவானும் ஆதிபுருஷனுமான நாராயணனின் நாமத்தைச் சொன்ன மாத்திரத்தில், கலி இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்!'' என்றார்.

``அப்படிப்பட்ட நாமம் எது?'' என நாரதர் கேட்க... அதற்கு பிரம்மா,

``ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்று சொன்னால் போதும்; கலியின் தோஷம் நாசமாகி விடும். சகல வேதங்களும் இதைத் தவிர வேறு வழி இல்லை என்றே கூறுகின்றன'' என்று பதில் சொன்னார்.

கலி சந்தரனோபநிஷத்’ சொல்லும் கதை இது.

- எம். கார்த்திகேயன், மதுரை