மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 17

ஶ்ரீரங்கம்
இந்திரா செளந்தர்ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீரங்கம் இந்திரா செளந்தர்ராஜன்

இந்திரா சௌந்தர் ராஜன்

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலமெல்லாம் மனமே
ஈண்டு பல்யோனிகள்‌ தோலுழல்வோம் இன்று ஓரெண்ணின்றியே
காண்ட குளோதண்ணல் தென்னத்தியூரர் கழலினைக் கீழ்ப்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே

- இராமானுச நூற்றந்தாதி (31)

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 17

திருவரங்கம் கோயில் கைங்கரியங்களை வகைப்படுத்திய ஶ்ரீராமாநுஜர், ஆழ்வார் களுக்குத் தனித்தனிச் சந்நிதிகள் ஏற்படுத்தி, அவர்களுடைய திருநட்சத்திர உற்சவங்களை கொண்டாடும் முறைகளையும் வகுத்தளித்தார்.

மட்டுமன்றி, பெரிய பெருமாளுக்கு ஶ்ரீபஞ்சராத்ர ஆகம சாஸ்திர அடிப்படையில் நித்திய உத்சவங்களையும், பட்ச, மாத, சம்வத்சரோத்சவ மஹோத்சவங்களையும் வகைப்படுத்தி அளித்தார்.

திருக்கோயிலுக்கு வேண்டிய பால், தயிர், நெய் ஆகியவை காலம் தவறாமல் கிடைப்பதற்காக, சித்திரை வீதியில் ஈசான்ய பாகத்தில் கோசாலை ஒன்றை உண்டாக்கினார்.இங்கே 20 பசுக்கள் வரை இருந்திட, மீதம் இருந்த நூற்றுக்கணக்கான பசுக்களை எல்லாம்... கொள்ளிடத்தின் வடகரையில் சோழங்க நல்லூர் எனும் கிராமத்திற்கு அருகில் ஒரு பெரும் கோசாலை அமைத்து அங்கு அவற்றைப் பராமரிக்க ஏற்பாடுகள் செய்தார்.

இந்தக் கோசாலையினூடே ஆநிறை காத்தருளிய பெருமாளைப் பிரதிஷ்டை செய்து, அந்த கோசாலையை ஒரு பிருந்தாவனம் ஆக்கினார் என்றே சொல்லலாம். இதைப் பாதுகாக்கும் பொறுப்பை தன் சீடர்களில் ஒருவனான அகளங்க நாட்டாள்வானுக்கு அளித்தார்.

பெரிய நம்பியால் ஶ்ரீராமாநுஜர் த்வய மஹாமந்திரம் பெருமையை அறிந்தார். பின் நாதமுனிகள் அருளிய நியாய தத்வம் என்கிற மகா சாஸ்திரம் அறிந்தார். ஆளவந்தாரால் மகா புருஷ நிர்ணயம் என்கிற சாஸ்திரத்தோடு கீதார்த்த சங்க்ரகம், சித்தி த்ரயம், வியாசரின் பிரம்ம சூத்திரங்கள் மற்றும் ஶ்ரீபாஞ்சராத்ர ஆகமங்களையும் அறிந்தார்.

திருக்கோட்டியூர் நம்பியால் திருமந்திர பெருமையுடன், சரம ஸ்லோகத்தின் பொருள் அறிந்தார். இதற்காகவே 18 முறை இவர் திருக்கோட்டியூருக்குச் செல்ல நேர்ந்தது. அவ்வேளையில் `யார் வந்திருப்பது?' என நம்பி கேட்டிட, `நான் இராமானுசன் வந்திருக்கிறேன்' எனக் கூறுவார் ராமாநுஜர். நம்பியும் அப்புறம் பார்க்கலாம் என்று கூறிவிடுவார். 18-வது முறை `நான் இராமானுசன் வந்திருக்கிறேன்' என்பதற்குப் பதிலாக `அடியேன் ராமாநுசன் வந்திருக்கிறேன்' என்று உரைக்கவுமே ஶ்ரீராமாநுஜருக்கு உபதேசங்கள் நிகழ்ந்தன என்பது வரலாறு (முதல் பாகத்தில் இச்சம்பவம் விரிவாக கூறப்பட்டுள்ளது).

இவ்வேளையில் ஶ்ரீராமாநுஜரின் பெரும் தியாக உணர்வு, பொறுமை ஆகியவற்றை உணர்ந்த திருக்கோட்டியூர் நம்பி ஶ்ரீராமாநுஜருக்கு `எம்பெருமானார்' என்கிற பட்டத்தை அளித்ததோடு, ``வைஷ்ணவ சித்தாந்தத்தை இனி ஶ்ரீராமாநுஜர் சித்தாந்தம் அல்லது எம்பெருமானார் தர்சனம் என்றும் கூறிடலாம்'' என்றார்

பின்னர் திருவரங்கப் பெருமாளரையர் மூலம் அருளிச்செயல் முதலானவற்றை அறிந்ததோடு, தன் சீடர்களான முதலியாண்டான் தொட்டு எல்லோருக்கும் உபதேசித்து அருளினார் ஶ்ரீராமாநுஜர். அதேபோல் திருமாலையாண்டானிடம் திருவாய்மொழி வியாக்கியானம் அறிந்தார். இப்படி ஶ்ரீராமாநுஜர் தன்னை எல்லா விதத்திலும் வகையிலும் ஸ்திரப்படுத்தி, ஒரு வைணவ சமுத்ரமாகவே விளங்கினார்.

இதைக்கண்ட யமுனாச்சார்யரின் புத்திரரான திருவரங்கப் பெருமாளரையர், அனைவருக்கும் பெரிதும் உவப்பான - அனைவரும் அறிய வேண்டிய ஒரு பெரும் கருத்தை ஶ்ரீராமானுஜருக்குக் கூறியதன் மூலம் உலகுக்கு அளித்தார்.

குருவே மேலான பிரம்மம்
குருவே மேலான தனம்
குருவே மேலான காமம்
குருவே மேலான பிராப்யம் (அடையத்தக்க பொருள்)
குருவே மேலான கல்வி
குருவே மேலான ப்ராபகம் (அடையத் தக்க உபாயம் )
குருவே பரம்பொருளின் உயர்ந்தவர்
குருவே நடமாடும் பரம புருஷன்

- என்று அஷ்ட வரிகளால் ஒரு பெரும் உபதேசம் செய்தார். குருவை ஒருவர் `இவர் நம்மைப் போன்ற மனிதர்தானே' என சாதாரணமாகக் கருதிவிடக்கூடாது. அவரே ஆராதிக்கப்படும் அனைத்துத் தேவதைகளுமாவார். எனவே ஆசார்ய குருவே உபாயம்! அவரே உபேயம்!

ஶ்ரீதிருவரங்கப் பெருமாளரையர் ஶ்ரீராமாநுஜர் மூலமாக அளித்த இந்த அஷ்ட வரிகள் ஶ்ரீவைஷ்ணவர்கள் அனைவரையும் அடைந்து, அவர்கள் குருபக்தி கொள்ளவும் அவர்களின் குருபக்தி துலங்கவும் வழிகாட்டின. தற்போதும் வழிகாட்டிக்கொண்டிருக்கின்றன.

ஶ்ரீராமாநுஜர் வாழ்வில் இதன்பின் எவ்வளவோ சம்பவங்கள்! அதில் திருமலை யில் அவருக்கு நேரிட்ட ஒரு சம்பவம், நமக்கெல்லாம் ஒரு பாடம்.

மங்களாசாசனம் பொருட்டு திருவரங்கத் திலிருந்து திருப்பதி சென்ற ஶ்ரீராமாநுஜரை, அங்கு இருக்கும் பெரிய திருமலைநம்பி, வேங்கடமுடையானின் பிரசாதங்களை அளித்து வரவேற்றார். அதைக் கண்ட ஶ்ரீராமானுஜர் ``வயதிலும் அனைத்துவிதங்களிலும் என்னிலும் மேலானவரான மாமனான தாங்கள்தான் இவற்றை எடுத்துவந்து அளிக்கவேண்டுமா? சிறியவர் எவரிடமேனும் கொடுத்து அனுப்பி யிருக்கலாமே'' என்று கேட்டார்.

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 17

அதற்குப் பெரிய திருமலை நம்பி அளித்த பதில் ஶ்ரீராமானுஜரை மீண்டும் ஒருமுறை சலவை செய்தது எனலாம். ``இந்த திருப்பதி திருமலை முழுக்கவும் என்னிலும் சிறியவன் எவரேனும் உள்ளனரா என்று தேடினேன். அப்படி ஒருவர்கூட கண்ணில் படவில்லை. இங்கே அடியேனே மிக மிகச் சிறியவன். அதனாலேயே நான் கொண்டு வந்தேன்'' என்றார் பெரிய திருமலை நம்பி.

இந்தப் பதிலால் ஶ்ரீராமாநுஜர் உள்ளம் கிளர்ந்து பூரித்தார். இதனால் தானும் எத்தனை சிறியவன் என்று உணர்ந்தவர், பவித்திரமான திருமலையில் அழியும் சரீரம் கொண்ட தான் இருத்தல் ஆகாது. இது நித்திய சூரிகள் வசிக்கும் இடம் என்று கருதினார். ஆகவே, உடனேயே திருமலையைவிட்டுப் புறப்பட உத்தேசித்தார். இதன் பின்னால் வேறுபல நுட்ப காரணங்களூம் இருந்தன.

எப்போது பெரிய திருமலை நம்பி திருமலை யில் தன்னை விட சிறியார் யாரும் இல்லை என்று சொன்னாரோ அப்போதே ஶ்ரீராமானுஜருக்கு, திருமலை தேவ நடமாட்ட பூமி என்பது புலனாகிவிட்டது. அப்படிப்பட்ட இடத்தில், தன்னை போல் யோனிவழி பிறந்தவர்கள் தங்கியிருந்து, இயற்கை உபாதைகளை அந்த மலைத் தலத்தில் கழித்துக்கொண்டு அதை அசுத்தப்படுத்துவது பெரும் பாவம் என்கிற எண்ணமும் ஶ்ரீராமானுஜருக்குத் தோன்றி விட்டது. அதனாலேயே வேகமாக மலையை விட்டு இறங்கி, அந்தப் பாவத்தைத் தவிர்க்க எண்ணினார்.

இதையறிந்த பெரிய திருமலை நம்பி சற்று அதிர்ந்துபோனார்.

``தாங்கள் அவ்வாறு எண்ணத் தேவையில்லை. பாகவதோத்தமர்களின் திருவடிகள் இந்த மண்ணில் படுவது எவ்வகையிலும் தோஷம் ஆகாது. தாங்கள் குறைந்தது மூன்று தினங்களா வது இங்கே தங்கிச் செல்லவேண்டும்'' என்று பிரார்த்தித்துக் கொண்டார்.

ஶ்ரீராமானுஜரும் அதன்படியே திருமலையில் தங்கி திருமலையப்பனின் திருச்சந்நிதியில் பெரியாழ்வாரின் 12 பாசுரங்கள் கொண்ட திருப்பல்லாண்டை பலமுறை அனுசந்தித்தார்.

இவ்வேளை திருவேங்கடமுடையானும் மிக உவந்து ``உமக்கும் உமது சம்பந்தம் பெற்றவர்களுக்கும் உபய விபூதி செல்வத்தை தந்தோம் நாம். அதில் ஐயமில்லை என்பதை மூன்று முறை கூறுகிறோம்'' என்று தன் பவழ வாய் திறந்து அருளிச் செய்தார்.

இச்சம்பவம், திருமலை தலத்தை எவ்வளவு தூய்மையானதாக ஒரு வைணவன் பேண வேண்டும் என்பதற்குச் சான்றாகியது எனலாம். பின்னர் கீழைத் திருப்பதி தலத்தை அடைந்த ஶ்ரீராமாநுஜர், திருமலை நம்பியின் திருமாளிகையில் அமுது செய்து, அவரிடமே ராமாயணம் முழுவதையும் கேட்டுத் தெரிந்தார். ஒரு வருட காலம் வரையிலும் அங்கேயே தங்கியிருந்தார்.

பின்னர் அவர் திருவரங்கத்துக்குத் திரும்பிய நிலையில், திருவரங்க திருக்கோயில் கைங்கர்ய பணிகளை தன் சார்பில் மேற்பார்வையிட, முதலியாண்டானை நியமித்தருளினார்.

எல்லா வகையிலும் தனக்கு மிக அணுக்கத் தொண்டராய்த் திகழ்ந்த கூரத்தாழ்வானை ஶ்ரீவைணவ சம்பிரதாயங்களைப் பரப்புவதற் கான பணிகளில் அமர்த்தினார். இவ்வேளையில், அவர் சார்ந்த அன்பர்கள் தரப்பில் பல கருத்துக்கள் எழும்பின.

``ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தமான விசிஷ்டாத் வைத சித்தாந்தத்தை தாங்கள் உங்கள் வாயால் எடுத்துரைப்பதும் அதை நாங்கள் கேட்பதுமே பெரும் பாக்கியமாகும். அவ்வேளை எவரேனும் எதிர் வாதம் செய்தால் அவர்களுக்கு உரிய பதிலினைக் கூறிட தங்களாலேயே இயலும்'' என்று அன்பர்கள் கூறிய கருத்தினை ஶ்ரீராமாநுஜர் ஏற்றுக்கொண்டார்.

ஆயினும் அதன் பொருட்டு திருவரங்கத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டி வருமே என்கிற கேள்வியும் அவருக்குள் எழுந்தது.

இதற்கான விடையை அரங்கன் ஒருவனாலேயே கூற முடியும் என்ற முடிவுக்கு வந்தார் ஶ்ரீராமாநுஜர்.அதன் நிமித்தம் அரங்கனின் திருச் சந்நிதிக்குச் சென்று நின்று எம்பெருமானிடம் விண்ணப்பித்தார். அதைச் செவிமடுத்த திருவரங்கன் ஶ்ரீராமாநுஜர் யாத்திரை மேற்கொள்ள அனுமதி அளித்தார்.

அவருடன் கூரத்தாழ்வான் செல்ல வும், முதலியாண் டான் திருக்கோயில் பணிகளை மேற்பார்வை இடவும் சம்மதித்தார். `அத்துடன் திவ்யதேசங்கள் அனைத் துக்கும் சென்று விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிறுவி, அதுவே மானுடம் உய்யும் வழி என்பதைப் பிரமாணங்கள் கொண்டு எடுத்துக்காட்டி, எட்டுத் திக்கும் வெற்றிக்கொண்டு திரும்பிட எமது பூரண அருள் உரித்தாகுக' என்றும் அருள்பாலித்தார் திருவரங்கன்.

இதைத் தொடர்ந்து கூரத்தாழ்வாருடன் ஶ்ரீராமாநுஜர் தன் திவ்யதேச யாத்திரையைத் தொடங்கினார்.

ஶ்ரீமுதலியாண்டான் ஆரியபட்டா சந்நிதிக்கு எதிரில் கருட மண்டபத்தின் வட பகுதியில் அமர்ந்துகொண்டு கோயில் பணிகளையும் கைங்கர்யங்களையும் கண்காணிக்கத் தொடங்கினார்.

இன்று அந்த இடத்தில் கோயில் மணியக்காரர் அமர்ந்து முதலியாண்டான் வழியைப் பின்தொடர்கிறார். அன்று முதலியாண்டான் அங்கு அமர்ந்து செயல்பட்டதன் சான்றாக முதலியாண்டான் ஶ்ரீராமாநுஜர் உருவங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

முதலியாண்டானின் நேர்த்தியான கண்காணிப்பில் ஆலயம் இருந்திட, ஶ்ரீராமாநுஜரின் திவ்யதேச யாத்திரையின் முதல் தலமாக மதுரை அழகர் மலை அமைந்தது. திருமாலிருஞ்சோலை என்றும் அழைக்கப்படும் இங்கேதான் தன் ஆத்ம சீடனான கூரத்தாழ்வானுடன் ஶ்ரீராமாநுஜர் முதலாக எழுந்தருளினார்.

இங்கு ஶ்ரீஆண்டாள் தன் விபவாவதாரத்தின்போது செய்து மகிழ்ந்த நூறு தடா வெண்ணெய், நூறு தடா அக்கார அடிசில் நைவேத்த்யத்தை அவள் வழியில் நின்று தானும் சமர்ப்பித்தருளினார். பின்னர் மதுரை நகருக்குள் அமைந்துள்ள கூடலழகர் ஆலயம் நோக்கிச் சென்றார்.

இங்கேதான் பெரியாழ்வார், கோபுரமிசை கருடன்மீது எழுந்தருளிய எம்பெருமானின் திவ்ய தரிசனம் கண்டு பல்லாண்டு பாடியருளினார். அப்பல்லாண்டு பாசுரத்தைப் பாடியதோடு இந்த ஆலயத்திற்கும் மங்களாசாசனம் புரிந்தருளினார். இதன் பிறகு மதுரைக்கு வெகு அணுக்கமான ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்றார் ஶ்ரீராமாநுஜர்.

-தொடரும்...

உணவை வீணாக்கலாமா?

1978 - ஆம் ஆண்டு . ஶ்ரீசத்யசாயி பகவான் பம்பாய்- அந்தேரியில் முகாமிட்டு, பக்தர்களை ஆசீர்வதித்தார். பின்னர் உணவு வழங்கப்பட்டது. குப்பைத் தொட்டியில் எச்சில் இலைகள் கொட்டப்பட்டன. அதில் இருந்த எச்சில் உணவுகளை ஒரு சிலர் சாப்பிட்டனர். இதை பக்தர்கள் சாயியிடம் தெரிவித்தனர். அதற்கு அவர், ‘‘அவர்களைத் தடுக்காதீர்கள். முற்பிறவியில் உணவை வீணாக்கியவர்கள் அவர்கள்!’’ என்றார்.

- வி. சந்திரசேகரன், கும்பகோணம்