Published:Updated:

பெரிதினும் பெரிது!

இந்த ஆலயத்தை ‘ராஜராஜீச்சரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார் ராஜராஜன்.

பிரீமியம் ஸ்டோரி

த்திக்கும் புகழ் பரப்பும் காலத்தால் அழியாத தமிழர்தம் சரித்திர பிரமிப்புகளில் ஒன்று, தஞ்சைப் பெரியகோயில். அறம், ஆன்மிகம், கலை, வீரம், தியாகம், கொடை என அனைத்துக்கும் ஆதாரமாக விண்முட்டித் திகழ்கிறது இந்தக் கலைப்படைப்பு.

`தட்சிணமேரு’ என்ற பிரகடனத்தோடு மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனால் நிர்மாணிக்கப்பட்ட பெரியகோயிலுக்கு, தை மாதம் 22-ம் நாள் (பிப்ரவரி 5, புதன்கிழமை அன்று) காலை 9 முதல் 10:30 மணிக்குள் `திருக்குட முழுக்கு நன்னீராட்டுப் பெருஞ்சாந்திப் பெருவிழா’ நடைபெறவுள்ளது. அற்புதமான இந்தத் தருணத்தில், பெரியகோயில் எனும் பிரமாண்டத்தின் மகிமைகளை அறிந்து மகிழ்வது மிக அவசியம் அல்லவா! வாருங்கள் தெரிந்துகொள்வோம்...

சுந்தர சோழனுக்கும் திருக்கோவலூர் மலையமான் குலத்தில் உதித்த வானவன் மாதேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் ராஜராஜன். இயற்பெயர் அருண்மொழி தேவன். இவை தவிர இன்னும் ஏராளமான பெயர்களைக்கொண்டிருந்தாலும் ராஜராஜனுக்கு இஷ்டமான திருப்பெயர் சிவபாத சேகரன். சுந்தர சோழனுக்குப் பிறகு மதுராந்தக உத்தம சோழன் அரியணை ஏறினார். அதன்பிறகு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகே ராஜராஜன் ஆட்சிப்பொறுப்பேற்றார்.

தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில்

வாராஹிதேவியின் அருளால் பல வெற்றிகளைக் கண்டு சோழப் பேரரசைப் பெரிதும் வலுவாக்கிய ராஜராஜ சோழனுக்கு வெகுநாளாக ஓர் ஆசை இருந்தது. பெரிதிலும் பெரிதானவரான சிவனாருக்கு மிக பிரமாண்டமாய் ஓர் ஆலயம் எழுப்ப வேண்டும்; முழுவதும் கற்றளியாய் அமைந்தும் அந்தத் திருக்கோயில் தென்னகத்தில் தட்சிண மேருவாய் அமைய வேண்டும்; வடக்கே திகழும் கயிலை - மேரு பர்வதத்தை நேரில் சென்று தரிசிக்க இயலாதவர்கள், அவற்றின் பிரமாண்டத்தைத்தான் அமைக்கும் ஆலயத்தில் கண்டுணர்ந்து மகிழ வேண்டும் என்பதுதான் அது.

காஞ்சியம்பதியில் ராஜசிம்ம பல்லவனால் எழுப்பப்பட்ட கயிலாசநாதர் கோயிலில் மனத்தைப் பறிகொடுத்தார் ராஜராஜன்; ‘கச்சிப்பேட்டு பெரிய தளி’ எனப் போற்றி மகிழ்ந்தார். இந்த ஆலயத்தின் தாக்கத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சைப் பெரியகோயில்!

ந்த ஆலயத்தை ‘ராஜராஜீச்சரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார் ராஜராஜன். அடுத்து வந்த ராஜேந்திர சோழன், ‘ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடையார்’ எனக் குறிப்பிடுகிறான்.

வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் என்பவன் இந்தக் கோயிலைக் கட்டிய கலைஞன். இவனுக்குப் பக்கபலமாக, மதுராந்தகனான நித்திவிநோதப் பெருந்தச்சன், இலத்தி சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகிய இருவரும் இருந்தனராம்.

கோயிலின் திருப்பணிக்குப் புதுக் கோட்டை, நார்த்தாமலையிலிருந்து கல் எடுத்துவந்ததை உறுதிப்படுத்தும் கல்வெட்டுகள் ஏதுமில்லை.

தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில்

அதேபோல், தஞ்சாவூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில் பெரிய மலை இருந் திருக்கலாம்; அந்த மலையையே அழித்து கோயில் எழுப்பப் பயன்படுத்தி யிருக்கலாம் என்பது சில ஆய்வாளர்களது கருத்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நர்மதை நதிக்கரைப் பகுதியிலிருந்து கல்கொண்டு வந்ததாகச் சொல்பவர்களும் உண்டு.

கோயில் கட்டும்முன், அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டி, சுமார் ஒரு வருடம் வரை விட்டு வைத்தனர். இதனால் குழியில் உள்ள மண் சூரிய ஒளி பட்டு, பாறைக்கு நிகராக மாறிவிடுமாம். பிறகு அஸ்திவாரம் அமைத்தால், ஆண்டாண்டு காலத்துக்கும் நிமிர்ந்து நிற்குமாம் கட்டடம்.

க்கோயில் 120 x 240 சதுரமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மண்ணின் தன்மை, ஒரு சதுரமீட்டர் பரப்பளவில் 162 டன் எடையைத் தாங்கும் திறன்கொண்டது. பெரியகோயில் கட்டுமானம், ஒரு சதுரமீட்டருக்கு 48 டன் எடை என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

பாறைகள் நிறைந்த நிலப்பரப்பில் கோயில் கட்டினால் நீண்டகாலம் நிலைத்திருக்கும் என்பதால் 27 கிலோமீட்டர் வரை பாறை நிலப்பரப்பாகவேகொண்ட இந்தப் பகுதியை கோயில் கட்டுவதற்குத் தேர்ந்தெடுத்து சுமார் 5 அடி ஆழம் அடித்தளம் அமைத்து கோயில் கட்டப்பட்டதாம்.

தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில்

கோட்டைச் சுவர் வாயிலை அடுத்து உள்ள ஐந்தடுக்குக் கோபுர வாயிலுக்கு கேரளாந்தகன் நுழைவாயில் என்று பெயர். அடுத்து மூன்று அடுக்கு களுடன் ராஜராஜன் திருவாயிலும் அமைந்துள்ளது.

இவை தவிர, தென்புறம் இரண்டும் வடப்புறம் இரண்டுமாக நான்கு வாசல்கள் உள்ளன.

சுவாமி கருவறையின் விமானத் தைப் பெரிதாகவும் கோயில் கோபுரத்தைச் சிறிதாகவும் அமைத்தார் ராஜராஜன். பெரிய கோயில் கோபுரத்தைவிட பெருவுடையாரின் விமானம் பிரமாண்டமானது.

சுமார் 216 அடி உயரத்துடன் திகழும் பெரியகோயில் விமானம், ஆசியாவிலேயே மிகப் பெரிய விமானம்!

ழிபாடு மகுடாகம அடிப்படை யில் அமைந் துள்ளது. சிவலிங்க வழிபாட்டை நவ தத்துவம் என்கிறது மகுடாகமம். ‘உருவமெனத் திகழும் லிங்கமானது மறைந்து, பரவெளியான இந்தப் பிரபஞ்சமே லிங்கமெனத் திகழும்’ என்று சிலிர்க்கிறது இந்த ஆகமம். இந்தத் தத்துவத்தை உணர்த்தும் விதமாகப் பெருவுடையாரும் விமானமும் அமைந்துள்ளதாக ஆன்மிகப் பெரியோர்கள் சிலாகிக்கிறார்கள்.

ந்தக் கோயில் சிறப்புற விளங்க, 196 பணியாளர்களை நியமித்தார் மன்னர்.

நிலம் மற்றும் தொழில் நிமித்தமாக அதிகாரி களையும், கருவூலதாரர்களாக இரண்டு அந்தணர்களையும், ஏழு கணக்கர்களையும், எட்டு துணை கணக்கர்களையும் நியமித்தவர், 178 பிரம்மச்சாரிகளை மாணியக்காரர்களாக அமர்த்தியிருக்கிறார்.

மேலும், 400 ஆடல் மகளிரையும் உடுக்கை, வீணை, மத்தளம் முதலான வாத்தியங்களை வாசிக்க 258 இசைக் கலைஞர்களையும் நியமித்தார்.

லயத்தைத் தூய்மைப்படுத்துவது, இறைவனுக் குப் பூமாலைத் தொடுப்பது என ஒவ்வொன்றுக்கும் ஆட்களை நியமித்து, அவர்களுக்கு வீடு, நெல், சம்பளம் என சகல வசதிகளையும் தந்து குடியமர்த்தியிருக்கிறார் ராஜராஜன்.

மேலும், திருப்பதிகம் பாடுவதற்கு 50 ஓதுவார்கள், குடைதாங்கிகள், தண்ணீர் தெளிப்பவர்கள், விளக்கேற்றுவோர், மடப்பள்ளியில் உணவு சமைப்பவர்கள், உணவு சமைப்பதற்கான பானையைச் செய்பவர்கள் என ஆலயத்தை பிரமாண்டமாக நிர்வகித்துள்ளார்.

வியாபாரம் செய்து வணிகர்கள் வளர வேண்டும் எனும் நோக்கத்தில், பெரியகோயிலுக்கு குறிப்பிட்ட தொகையை அளித்து, அதை வட்டிக்கு விட்டிருக்கிறார். வட்டியாகக் கோயிலில் உள்ள விநாயகருக்கு தினமும் 150 வாழைப்பழங்கள் தர வேண்டுமாம். இதுகுறித்த விவரங்களை ஆலயக் கல்வெட்டுகள் விவரிக்கின்றன.

ராஜராஜன் வைத்த பிரமாண்ட நந்தி, காலப் போக்கில் சிதைந்துவிட (வாராஹி சந்நிதிக்கு அருகில் உள்ளது இது), பின்னர் வந்த நாயக்கர்கள் நந்தி அமைத்து மண்டபம் எழுப்பினர்.

மாமல்லபுரம் தொடங்கி கேரளம் வரை தான் கையகப்படுத்திய ஊர்களில் இருந்தெல்லாம் பெரிய கோயிலுக்கு நிதி தந்திருக்கிறார்கள்.

கோயிலில் வழிபாடுகள் குறைவின்றி நடக்க, தொண்டை தேசம் தொடங்கி ஈழம் வரையுள்ள பல கிராமங்களை, தேவதானம் எனக் குறிப்பிட்டு எழுதிக் கொடுத்திருக்கிறார். ஒவ்வோர் ஊரும் 1,44,500 கலம் நெல்மணிகளும் 2,800 கழஞ்சு தங்கமும் பெருவுடையார் கோயிலுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறான்.

பெருவுடையார் அருள்மிகு பிரகதீஸ்வரர், அருள்மிகு பிரஹன்நாயகி மற்றும் உள்ள தெய்வங்களுக்கு, 39.925 (179 கிலோ) கழஞ்சு பொன் ஆபரணங்கள், 155-க்கும் மேற்பட்ட வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தையும் கொடையாக அளித்தாராம். குந்தவை நாச்சியார், 8,993 (40.46 கிலோ) கழஞ்சு பூஜை பாத்திரங்களையும் 2,343 கழஞ்சு நகை ஆபரணங்களையும் ஆலயத்துக்கு வழங்கினாராம்.

இப்படி, அற்புதமானவர்களால் அற்புதமாக நிர்மாணிக்கப்பட்டுப் போற்றப்பட்ட அற்புதத்தை - தஞ்சைப் பெரியகோயிலை மிக அற்புதமாகப் பேணிப்போற்றுவது நம் தலையாயக் கடமை. அந்த அற்புதம்... சூரிய-சந்திரர் உள்ளவரை தரணியில் தமிழர்தம் பெருமையை உலகெங்கும் பறைசாற்றித் திகழட்டும்!

பொற்கிரி!

சிவனார் சந்நிதி கொண்டிருக்கும் விமானம், தட்சிண மேரு எனப்படும். பீடம் தொடங்கி கலசம் வரை முழுவதும் கருங்கல் கொண்டு கட்டப்பட்டது. ‘ஒரே கல்லால் வடிவமைக்கப் பட்ட விமானம்; இதன் நிழல் தரையில் விழாது’ என்பர். இது தவறு. பல கற்கள்கொண்டு கூம்பு வடிவில் அமைக்கப்பட்ட விமானம் இது; இதன் நிழல் தரையில் விழுகிறது!

சுமார் 216 அடி உயரம் கொண்ட இந்த விமானம், ராஜராஜனின் பெரும் சாதனை; அதிலும் பொன்வேய்ந்து அழகு பார்த்திருக்கிறார். இதைத் தெரிவிக்கும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேரு பர்வதம் எப்படி பொன்மலையாக தகதகக்குமோ... அதேபோல் தட்சிணமேருவாம் தஞ்சைக் கோயிலும் பொன்மலையாகவே விளங்கியுள்ளது. ஒட்டக்கூத்தர் இதுகுறித்துப் பாடியுள்ளார்; கருவூர்ப் புராணமும் ‘பொற்கிரி’ என்றே போற்றுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு