Published:Updated:

ஒட்டக்கூத்தரும் ரவணச்சித்தரும் வழிபட்ட வீரபத்திரர்!

தாராசுரம் வீரபத்திரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
தாராசுரம் வீரபத்திரர் ஆலயம்

திருக்கோயில் பொலிவு பெற பங்களிப்போம்

ஒட்டக்கூத்தரும் ரவணச்சித்தரும் வழிபட்ட வீரபத்திரர்!

திருக்கோயில் பொலிவு பெற பங்களிப்போம்

Published:Updated:
தாராசுரம் வீரபத்திரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
தாராசுரம் வீரபத்திரர் ஆலயம்

உலகப் புகழ் கொண்ட தாராசுரம் அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோயிலுக்குச் சென்றவர்கள் எல்லாம், அதன் பின்புறத்தில் சிதிலமாகிக் கிடக்கும் ஒரு பெரிய ஆலயத்தையும் கண்டிருக்கலாம். அதன் அருமை பெருமைகள் தெரியாததால், நீங்கள் அதைக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புத ஆலயம் அது!

ஒட்டக்கூத்தரும் ரவணச்சித்தரும் வழிபட்ட வீரபத்திரர்!

மீபத்தில் அன்பர் ஒருவர் அந்த ஆலயத் தின் மகத்துவத்தைச் சொன்னதும், ஆர்வம் தாளாமல் நேரில் தரிசிக்க விரைந்தோம். அது ஶ்ரீபத்ரகாளி அம்மன் உடனான ஶ்ரீவீரபத்திரர் கோயில். பிரமாண்ட செங்கல் சுதைக் கோபுரம் நம்மை வரவேற்றது. இங்குதான் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தப் பெருமான் பள்ளிப்படையும் அமைந்துள்ளது.

ஆலயம் வெகு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்கப்படுகிறது. இரண்டாம் ராஜராஜன் காலத்தில் பெரிதும் புகழ்பெற்று விளங்கிய இந்த ஆலயம், தற்போது ஆள் அரவமின்றி திகழ்கிறது. எத்தனையோ ஞானியரும் தவசி களும் கொண்டாடிய இந்த ஆலயத்தைத் தரிசிக்க வருவோர் மிகவும் குறைவுதான். எனினும், தினப்படி பூஜைகளும் வார, மாத, ஆண்டு விழாக்களும் குறைவின்றி மிக நேர்த்தியாக நடந்து வருகின்றன.

ஜீவானந்தம் என்ற அடியார் அந்தப் புண்ணிய கைங்கர்யத்தை மேற்கொண்டு வருகிறார். பல இடையூறுகள், ஆக்கிரமிப்புகள் எல்லாம் கடந்து இவர், பல நல்லவர்களுடன் இணைந்து கோயிலைப் பராமரித்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

ஒட்டக்கூத்தரும் ரவணச்சித்தரும் வழிபட்ட வீரபத்திரர்!
ஒட்டக்கூத்தரும் ரவணச்சித்தரும் வழிபட்ட வீரபத்திரர்!

``ஆணவத்தால் சிவத்தை அவமதித்து மாபெரும் யாகம் செய்தான் தட்சன். கோபம் கொண்ட சிவனார், தன் கூந்தலிலிருந்து வீரபத்திரரை உருவாக்கினார். அவரோடு பத்ரகாளியையும் அனுப்பி தட்ச யாகத்தையும், அதில் கலந்து கொண்டோரையும் அழித்தார் என்கிறது புராணம். அவ்வாறு தண்டனை பெற்றோருக்கு அனுக்கிரகம் செய்யும்விதம், உமாதேவியோடு இங்கு எழுந்தருளினார் ஈசன் என்கிறது தக்கயாகப் பரணி. இதை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.

ராஜராஜேஸ்வரம் என்று சோழர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய இந்தப் பகுதியில் தாராசுரம் ஆலயம் எழும்பியது அல்லவா? அப்போது, அதன் அருகிலிருந்த இந்தப் பகுதி யில் ஒட்டக்கூத்தருக்குச் சினம் தணிந்த சிரித்த கோலத்தில் வீரபத்திரரும் பத்ரகாளியும் அருள் காட்சி கொடுத்தார்களாம். அதனாலேயே இங்கு தங்கி, தன் இறுதி காலத்தை நிறைவு செய்தார் ஒட்டக்கூத்தப் பெருமான் என்கிறார்கள்.

அவருக்கும் முன்பாக ரேணுகாச்சார்யர் எனும் ரவணச் சித்தர் இங்கு வந்து ஈசனை வழிபட்டு வாழ்ந்தாராம். அகத்தியரின் ஞானச் சீடரான இவரின் காலம் 9-ம் நூற்றாண்டு எனப்படுகிறது. இவரே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலய தலவரலாற்றை எழுதியவர் என்பர். இவரும் இங்கே ஜீவசமாதி அடைந்திருக்கிறார். சிவகவியான பக்தை அக்கமாதேவியாரும் இங்கே முக்தி வேண்டி சிலகாலம் தவம் இருந்தார் என்று கூறப்படுகிறது.

இன்றும் கல்வி வரம் அளிக்கும் ஞானச் சித்தராக ஒட்டக் கூத்தரும், உடல் நலம் அளிக்கும் தவச் சித்தராக ரவணச் சித்தரும், முக்தி அளிக்கும் அருள் ரூபமாக அக்கமா தேவியாரும் விளங்கி வருகிறார்கள். இதற்கும் மேலாக, இந்த ஆலயம் பஞ்ச குரோசத் தலங்களில் ஒன்று என்பதும் சிறப்பு. திருவிடை மருதூர், திருநாகேஸ் வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் எனும் சுருப்பூர் ஆகியவை பித்ரு தோஷங்கள் நீக்கும் பஞ்சகுரோசத் தலங்கள். ஆக, இது காசிக்கு நிகரான தலமும்கூட.

இங்கு மட்டுமே சிரித்த முகத்தோடு வீரபத்திரர் எழுந்தருளி உள்ளார். மிகப் பழைமையான இவரின் திருமேனி அபூர்வக் கல்லால் ஆனது. கணபதி, முருகர், வித்தியாசமான வட்ட வடிவ மண்டபத்தில் அருளும் நந்தியெம்பெருமான் ஆகியோரையும் இங்கு தரிசிக்கலாம்.

இந்தக் கோயிலுக்கு எல்லோரும் வந்து வழிபட முடியாது. யாரை சுவாமி அனுமதிக்கிறாரோ, அவர் மட்டுமே இந்த ஆலயத்துக்குள் வரமுடியும். மிகப்பெரிய ஆன்மிக சுற்றுலா தலமாக இப்பகுதி விளங்கினாலும் இந்த ஆலயத் துக்கு பக்தர்கள் வருவது அபூர்வம்தான். எவரேனும் வந்தாலும் `யாரோ ஒரு சாமியார் வந்து அழைத்தார். உள்ளே வந்து பார்த்தால் ஒருவரையும் காணவில்லையே!' என்று கூறி வியப்பார்கள். எல்லாம் சித்தர் பெருமக்களின் லீலைகளே!

2013 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் அடியார்கள், அன்பர்கள் இணைந்து ஆலயத் திருப்பணிகளைச் செய்தார்கள். சிதைந்து கிடந்த கோயிலையும் ஒட்டக்கூத்தர், ரவணச் சித்தர் சமாதிகளை ஒழுங்கு படுத்தினார்கள். இன்னும் பல பணிகள் உள்ளன. ராஜகோபுரம், மதில் சுவர் எழும்ப வேண்டும். தரை வேலைகள் உள்ளிட்ட பணிகள் உள்ளன. அடியார் களும், அன்பர்களும், சிவபக்தர்களும் உதவினால் திருப்பணிகள் விரைவில் பூர்த்தியாகிவிடும். ஈசன் அருள் அதற்குத் துணைநிற்கும் என நம்புகிறேன்!' என்கிறார் ஜீவானந்தம் ஐயா.

ஆனந்தக் கோலத்தில் வீரபத்திரரும் அன்னை பத்ரகாளியும் அருளும் கோயில் இது. தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோயிலில் அருகேற்றம் செய்யப்பட்ட தக்கயாகப் பரணிக்கு மகிழ்ந்த வீரபத்திரர், சினம் தணிந்து அருளும் ஆலயம் இது. ஆக, இங்கு வந்து வழிபட்டால், மங்கல வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும். இங்கு வருவோரின் மனச்சலனங்கள் சங்கடங்கள் நீங்கி, மன அமைதியும் நிம்மதியும் வாய்க்கும் என்கிறார்கள்.

`கறைகண்டனுக்குக் கல்லால் கோயில் எடுப்பித்தவன் கயிலாயத்தில் நிலைத்திருப்பான்...' என்பது கல்வெட்டு கூறும் செய்தி. நீங்களும் உங்களால் இயன்ற பங்களிப்பை இந்த ஆலயத் திருப்பணிக்குச் செய்து, சிவ புண்ணியத் தைச் சேர்த்துக்கொள்ளுங்கள்!

வங்கிக்கணக்கு விவரம்:

கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஆன்மீக கல்வி அறக்கட்டளை
BANK: INDIAN BANK - PATTEESWARAM BRANCH
A/C No: 6158 482923
IFSC: IDIB000P186
தொடர்புக்கு: ஜீவானந்தம் - 86808 28922

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism