புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

முக்கண்களின் அம்சம் மூவர் அருளும் திருவைகலூர்!

வைகல்நாதர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
வைகல்நாதர் ஆலயம்

ஒரே தலத்தில் மூன்று கோயில்கள்!

`முக்கண்களைக் கொண்டவரே, சகல வளமும் நலன்களும் பெருகும்படி அருள்பவரே’ என்று சிவபெருமானைப் போற்றுகிறது மிருத்யுஞ்ஜய மந்திரம். அனைத்துமாகி நிற்கும் ஈசன் முக்கண்ணன். சூரிய, சந்திரர் மற்றும் அக்னியாகச் சுடர்விடும் - உலகுக்கு ஒளி வழங்கும் சிவனாரின் முக்கண்களுக்கு அடையாளமாகவும் மும்மூர்த்தியரின் சாந்நித்தியம் நிறைந்ததாகவும் திகழும் மூன்று கோயில் களைக் கொண்ட ஊர் திருவைகல். நாகை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்தப் புண்ணிய க்ஷேத்திரம்.

ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர்
ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர்

திருமால் வழிபாடு செய்த விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயம் வலக்கண்ணாகப் போற்றபடுகிறது. இவ்வாலயம் அமைந்துள்ள பகுதி வலநகர் என்று வழங்கப்படுகிறது. பிரம்மன் பூஜித்து அருள்பெற்ற பெரியநாயகி சமேத பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் இடக்கண்ணாகப் போற்றப்படுகிறது.

கொம்பியல்நாயகியுடன் வைகல்நாதர் அருள்பாலிக்கும் ஆலயமே பிரதான ஆலயமாகத் திகழ்கிறது; ஈசனின் நெற்றிக் கண்ணாக பாவிக்கப்படுகிறது. இது கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்று. ‘வைகல் மாடக்கோயில்’ என்ற பெயரே வழக்கத்தில் உள்ளது. இதுவே, அப்பர் மற்றும் திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும்.

புராணக் காலத்தில் செண்பக மரங்கள் நிறைந்த வனமாக இருந்த பகுதி என்பதால், `செண்பகாரண்யம்’ என அழைக்கப்பட்டது இந்தத் தலம். இதையொட்டி இங்கு அருளும் இறைவனாரும் செண்பகாரண்யேஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார்.

காணாமல்போன தனது குட்டியைத் தேடி அலைந்த பெண் யானை ஒன்று, குட்டி கிடைக்காததால் ஆற்றாமையுடனும் கோபத் துடனும் வழியில் தென்பட்ட ஈசல் புற்றினைச் சிதைத்து நாசம் செய்யத் தொடங்கியது. ஈசல் கூட்டமும் யானையைத் தாக்கியது. இரு தரப்பும் வீழ்ந்துபட்டன. ஆனாலும் இறைசக்தி நிறைந்த இந்த இடத்தின் மகிமையால் ஈசல் தரப்பும் யானையும் மீண்டெழுந்து, தங்களின் தவறுணர்ந்து இத்தலத்து ஈசனை வழிபட்டு அருள் பெற்றனவாம்.

ஒரு முறை திருமாலை மணம் புரியவேண்டி பூமாதேவி கடும் தவத்தில் ஆழ்ந்தாள். அதனால் மகிழ்ந்த மகாவிஷ்ணு பூமாதேவியை தமது இணைசக்தியாக ஏற்று அருள்செய்தார். இதனால் கோபம் கொண்ட மகாலட்சுமி வைகுண்டத்தைவிட்டு நீங்கினாள். பூலோகத்தில் இந்த வனத்துக்கு வந்து தவத்தில் ஆழ்ந்தாள்.

அலைமகளைத் தேடி வந்த திருமால், பூமாதேவி, பிரம்மா ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து வந்த தேவாதிதேவர்களும் இந்தத் தலத்தில் சிவபெருமானைச் சிரத்தையுடன் வழிபட்டு அருள் பெற்றதாகப் புராணம் சொல்கிறது. மட்டுமன்றி தேவி, பூதேவி ஆகிய இருவரையும் தமக்குரிய இணை சக்திகளாக பெருமாள் பெற்றது இந்தத் தலத்தில்தான் என்பது தலவரலாறு.

ஶ்ரீவிஸ்வநாதர்
ஶ்ரீவிஸ்வநாதர்

கோச்செங்க சோழனின் முற்பிறவியைப் பற்றி அறிவோம். முந்தைய ஜனமத்தில் யானையுடன் ஏற்பட்ட பிணக்கின் காரண மாக, தான் கட்டிய கோயில்களை யானைகள் ஏற முடியாதபடிமாடக்கோயில்களாகவே கட்டினான் என்பதையும் அறிவோம். அவற்றில் அருள்மிகு வைகல்நாதர் ஆலயமும் ஒன்று.

`வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே’ என்றும், `வைகல் வாழ்வர்கள் வலம்வரு மலையன மாடக்கோயிலே’ என்றும் சிறப் பிக்கப்படுகிறது இந்த ஆலயம்.

முற்காலத்தில் அளவில் பெரிய தாக பரந்துவிரிந்து திகழ்ந்த இந்த ஆலயம், காலப்போக்கில் அளவில் சுருங்கி, தற்போது சிறியளவில் மையக் கோயில் மட்டுமே எஞ்சியுள்ளது. ராஜ கோபுரமும் சிதைந்து போயிருக்கலாம் என்கிறார்கள். கிழக்குப் புறத்தில் நுழைவாயில் உள்ளது. மையக் கோயில் உயர்ந்த கட்டுமானமாக உள்ளது. எதிரில் நந்தி மண்டபம்.

மாடக்கோயில் அமைப்பில் திகழும் மையக்கோயிலின் தென்புறம் வழியிஏ படிகளில் ஏறியதும் இடப்புறத்தில் கணபதியை தரிசிக்கலாம். கருவறையில் சுயம்புத் திருமேனியராக அருள்பாலிக் கிறார், வைகல்நாதர். ‘வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அருளும் தெய்வம் இவர்’ என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். `கேட்டதெல்லாம் தந்திடுவார் வைகல்நாதர்’ எனும் சொல்வழக்கு இப்பகுதியில் பிரசித்தம்!

ஶ்ரீபெரியநாயகி
ஶ்ரீபெரியநாயகி

சுவாமி சந்நிதிக்கு வலப்புறத்தில் தனிச் சந்நிதியில் அம்பிகை அருள்பாலிக்கிறாள். திருச்சுற்றில் வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், தேவி-பூதேவி சமேத பெருமாள் ஆகியோரையும் தரிசிக்கலாம். மேலும் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி, காலபைரவர், சனிபகவான் ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள்.

வெளிச்சுற்று விநாயகர் கோயிலில் முதலாம் ராஜராஜனின் 26-ம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. `இதன் மூலம் வைகல் எனும் இவ்வூர் வானவன்மாதேவி சதுர்வேதி மங்கலம் என அடையாளப் படுத்தப்படுகிறது’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பிரதான சாலையிலிருந்து சற்று உள்ளடங்கிக் காணப் படும் இவ்வூரில் உள்ள ஆலயங்களில் தற்போது ஒருகால பூஜையே நடைபெற்று வருகிறது. அன்பர்களின் முயற்சியால் கோயிலைச் சுற்றிலும் அரியவகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

``வரலாற்றுச் சிறப்பும், புராணச் சிறப்பும் மிக்க திருவைகல் ஆலயங்கள் பொலிவிழந்து காணப்படுவது வேதனை. முறைப்படி இந்த ஆலயங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்பது இவ்வூர் பக்தர்களின் எதிர்பார்ப்பாகவும்வேண்டுதலாகவும் உள்ளது. விரைவில் நல்லது நடக்கட்டும்; திருவைகல் ஆலயங்கள் மீண்டும் பொலிவு பெறட்டும். அதற்கு ஈசனின் திருவருள் கைகூடிட நாமும் பிரார்த்திப்போம்.

எப்படிச் செல்வது?: கும்பகோணம் - காரைக்கால் நெடுஞ் சாலையில் எஸ்.புதூர் எனும் ஊர் வரும். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் வைகல் கிராமம் அமைந்துள்ளது. கார் மற்றும் ஆட்டோ வசதியுண்டு.

முக்கண்களின் அம்சம் 
மூவர் அருளும் திருவைகலூர்!

கற்பூர ஆழியின் தாத்பர்யம்!

ஐயப்ப பக்தர்கள் ஐயனை அக்னி வடிவத்தில்-ஜோதி ஸ்வரூபனாகவே காண்கின்றனர். எனவே அக்னியைக் கொண்டு ஐயனை வழிபடுவது ஒரு நடைமுறையாகக் கருதப் படுகிறது. இதன் ஒரு பாகமே கற்பூர ஆழி. ஐயனின் அருள் முகமும் அக்னியே. ஆதலால், அக்னியை வழிபடுவது மற்றும் அக்னியைச் சுற்றி வருவது ஆகியவை ஐயனை வழிபடுவதற்குச் சமம்.

கற்பூர ஆழி, மரக்கட்டைகளையும் கற்பூரத்தையும் கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆழி பூஜை தொடங்குவதற்கு முன் சிறப்பு பூஜைகளும் பலிகளும் நடத்தப்படும்.

முற்காலத்தில் ஆழி பூஜை பழம்பெரும் குருசாமி பார்வதிபுரம் வெங்கடேஸ்வர ஐயர் மூலம் உடும்பாறை கோட்டை, கரிமலை போன்ற புனித இடங்களில் நடத்தப்பட்டது. பிற்காலத்தில் இந்த பூஜை பூதப்பாண்டி இராமநாத வாத்தியார் மூலமாக தொடரப்பட்டது. தற்போது நடைபெறும் ஆழிபூஜையும் இவற்றின் தொடர்ச்சியே.


- கே.சிவா, சென்னை-44