Published:Updated:

புஜங்க சயனம்... யோக முத்திரை... ஆதிகேசவரின் அபூர்வ திருமேனி!

ஶ்ரீஆதிகேசவப் பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீஆதிகேசவப் பெருமாள்

திருவட்டாறு பெருமாள் கோயில் அற்புதங்கள்

புஜங்க சயனம்... யோக முத்திரை... ஆதிகேசவரின் அபூர்வ திருமேனி!

திருவட்டாறு பெருமாள் கோயில் அற்புதங்கள்

Published:Updated:
ஶ்ரீஆதிகேசவப் பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீஆதிகேசவப் பெருமாள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள வைணவ க்ஷேத்திரங்களில் பிரசித்திபெற்றது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில். ஆதிசேஷன்மீது ஆனந்தசயனத்தில் ஆதிகேசவ பெருமாள் அருளும் அற்புதத் தலம் இது. 108 வைணவத் தலங்களில் 76-வது தலம் இது. திவ்ய தேசங்களில் சயனக்கோலத்தில் அருளும் மூலவர்களில் இவ்வூர் ஆதிகேசவ பெருமாளே அளவில் பெரியவராம்!

புஜங்க சயனம்... யோக முத்திரை...
ஆதிகேசவரின் அபூர்வ திருமேனி!

லையாள நாட்டு 13 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆலயம், திருவரங்கம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில்களுக்கு முந்தையது எனப் போற்றுகிறார்கள்.

இந்தத் திருத்தலத்தை வட்டமாகச் சுற்றி பரளியாறும், கோதையாறும் செல்வதால் திருவட்டாறு என்று இந்தத் தலத்திற்கு பெயர் வந்ததாம். இந்த இரண்டு ஆறுகளும் திருவட்டாறைச் சுற்றி வந்து மூவாற்று முகத்தில் சங்கமம் ஆகின்றன. ஆற்றுத் தண்ணீர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலை அடித்துச் சென்றுவிடக்கூடாது என்று பூமாதேவி இந்தக் கோயில் அமைந்துள்ள நிலத்தை மட்டும் 18 அடி உயரத்திற்கு உயர்த்தினாளாம்!

திருவிதாங்கூர் சமஸ்தான அரசக் குடும்பத்தினரின் குல தெய்வக் கோயிலாக விளங்கிய தலம் இது. `எம்பெருமானின் தாசனாக நாங்கள் ஆட்சி செய்கிறோம்’ என்று முடிசூட்டிக்கொண்டும், ‘திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆதிகேசவ பெருமாளுக்குச் சொந்தம், நான் மன்னன் என்ற வேலையைச் செய்யும் அடியவன்’ என்ற உணர்வுடனும் திருவிதாங்கூர் சமஸ் தானத்து அரசர்கள் போற்றிப் பரவிய க்ஷேத்திரம் இது. இன்றும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், திருவட்டாறு கோயிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாகப் பத்மாநாபபுரம் திகழ்ந்த தருணத்தில் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளை மையமாக வைத்தே ஆட்சி இயங்கியதாம். பிற்காலத்தில் ஆட்சித் தலைநகரம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட, அருகிலேயே பத்மநாபசுவாமி கோயில் கட்டப்பட்டது என்கிறார்கள்.

புஜங்க சயனம்... யோக முத்திரை...
ஆதிகேசவரின் அபூர்வ திருமேனி!

ஆதியில் ஆதிதாமபுரம் என்று இந்தத் திருத்தலம் அழைக்கப்பட்டது. சுயம்புவாக தோன்றிய பெருமாளை பரசுராமர் பிரதிஷ்டை செய்துவிட்டு தனது அவதாரத்தை நிறைவு செய்ததாக ஐதீகம்.

சாகாவரம் பெற்ற கேசனை அடக்கியதால் ஆதிகேசவன் என பெயர்கொண்டாராம் பெருமாள். 108 திவ்ய தேசக் கோயில்களில் பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் மேற்கு நோக்கிக் காட்சி தரும் ஒரே திருத்தலம் இதுதான்.

ஆதிகேசவரின் ஆனந்தசயனத் திருக்கோல மூர்த்தம் சுமார் 22 அடி நீளம். திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின் திருமேனி 18அடி நீளம். மூலவரின் திருமேனி, 16,008 சாளக்கிராமங்களைக் கொண்டு `கடு சர்க்கரை யோகம்’ (41 மூலிகைகளின் கலவை) மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆதிசேஷ சர்ப்பத்தின் மீது புஜங்க சயனத்தில், யோக முத்திரையில் பள்ளிகொண்டிருக்கிறார் ஆதிகேசவப் பெருமாள். 22 அடி நீளத்தில் ஆதிகேசவ பெருமாள் படுத்த நிலையில் மேற்கு நோக்கிக் காட்சிதருகிறார்.

ஆதிகேசவ பெருமாளின் நாபிக் கமலத்தில் பிரம்மா எழுந்தருளும் காட்சி இல்லை. இடது கையை ஆதிசேஷ சர்ப்பத்தின் மீது தொங்கப்போட்டுள்ளார். வலது கையில் யோக முத்திரை காட்டியபடி காட்சியளிக்கிறார்.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்த பெருமாள் என்பதால் கருவறையில் சூரிய, சந்திரர்கள் இருக்கிறார்கள்.

ஒரு சாளக்கிராம் ஒரு கோயிலுக்கு நிகர் என்பர். ஒரு கோயிலுக்கு ஒரு பிடி அரிசியில் நைவேத்தியம் சமர்ப்பிக்கவேண்டும் என்பது பூஜா கணக்கு. அவ்வகையில் ஆதிகேசவ பெருமாளுக்குத் தினமும் 16,008 பிடி அரிசியில் நைவேத்தியம் தயாரிக்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்டதாம். அது, `கட்டிச்சோறு’ கோயில் ஊழியர்களுக்குச் சம்பளமாக வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

நைவேத்தியத்துக்கான அரிசி எடுக்கக் கோயிலின் பின்புறத்தில் நெற்பிறை ஒன்றும் (குடோன்) இருந்ததாம். இப்போது பழைமையான அந்தப் பூஜை முறை வழக்கத்தில் இல்லை.

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட பழைமையான கோயில். 1106-ம் ஆண்டு இந்தக் கோயிலில் கொடிமரம் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

சைதன்ய மஹாபிரபு `பிரம்ம சம்ஹிதை’ என்ற நூலின் ஐந்தாம் அத்யாயத்தை இந்தக் கோயிலில் இருந்து பெற்றுச் சென்றார் என்றும் ஒரு தகவல் உண்டு.

புஜங்க சயனம்... யோக முத்திரை...
ஆதிகேசவரின் அபூர்வ திருமேனி!

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கேசனை அடக்கி உக்கிர சம்ஹார மூர்த்தியாக பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். உக்கிர மூர்த்திகள் ஒரே இடத்தில் சேரமாட்டார்கள் என்பதால் இந்தக் கோயில் சுற்றுச் சுவருக்கு வெளியே நரசிம்மர் கோயில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

திருவட்டாறு கோயிலின் மேற்கு வாசல், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் கிழக்கு வாசல், குருவாயூர் கிருஷ்ணர் கோயிலின் கிழக்கு வாசல் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைந் துள்ளன.

கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி, இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இயற்கை ஓவியம் வரைதல் போன்ற திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

மூலவருக்குச் சார்த்தப்பட்டிருந்த தங்க அங்கி திருடுபோன விவரம் 1992-ல் கண்டறியப்பட்டது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனையும் கிடைத்தது. விரைவில் 10 கோடி ரூபாய் செலவில் ஆதிகேசவருக்குத் தங்க அங்கி சார்த்தப்பட உள்ளது என்கிறார்கள்.