Published:Updated:

வாரணமும் தோரணமும்!

தோரணமலை
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை

சித்தர்கள் வழியில் இறையைத் தேடி!

வாரணமும் தோரணமும்!

சித்தர்கள் வழியில் இறையைத் தேடி!

Published:Updated:
தோரணமலை
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை

விந்தைகள் பல நிறைந்தது சித்தர்கள் வாழ்க்கை. விநோதங்கள் நிறைந்தது அவர்களின் செயல்பாடுகள். ஆனால், ஒவ்வொன்றுக்குள்ளும் ஓர் அர்த்தம் பொதிந்திருந்தது. எதையும் அவர்கள் தங்களுக்காகச் செய்ததில்லை; உலகுக்காகவே செய்தார்கள். சுயநலம் இல்லாத கர்மங் கள் எண்ணிய விளைவுகளை எண்ணியபடி பெற்றுத் தரும். அவ்வகையில் அற்புதங்கள் நிகழ்த்துவதெல்லாம் அவர்களுக்கு மிக எளிதில் கைகூடியது.

தோரணமலை
தோரணமலை

லுண மரத்தின் உதவியோடு கெவுன குளிகை செய்து, அதை வாயில் குதப்பிக் கொண்டு அவர்களால் ஆகாயத்தில் எழுந்து பறக்க முடிந்தது. எதிரில் வருவோருக்குத் தென்படாதவண்ணம்தன் உருவை மறைத்துக்கொள்ள முடிந்தது. மூப்பு இல்லாத பெருவாழ்வைத் தரும் ஆதிரசம் எனும் அற்புத மருந்தைக் கண்டறிய முடிந்தது.

அவ்வளவு ஏன்... சித்தர் ஒருவர் சாபம் பெற்றார். அதன் விளைவாக பட்சியாக மாறினார். சாபம் மட்டுமா? குருநாதரிடமிருந்து பெரும் வரமாக ஆசிகளும் கிடைத்தன. அதன்படி, இந்தச் சித்த புருஷர் விரும்பும் வரையில் மரணம் அவரை நெருங்காது. இவர் உறைந்திருக்கும் இடத்தைச் சுற்றிலும் குறிப்பிட்ட பரப்பளவுக்கு மாயை, மோகம் முதலானவை நெருங்காது. காலம், குணம், செயல், இயல்பு, குறை ஆகியவற்றால் உண்டாகும் துயரங்கள் அணுகாதாம். அவ்வகையில் யுகங்களைக் கடந்து வாழும் அற்புதரானார் அந்தச் சித்தர். ஆம்! காகபுஜண்டர்தான் அவர்.

காகபுஜண்டருக்கு அவரின் குருநாதர் லோமசர் விளக்கிய கருத்துகளில் ஒன்று பிரம்மத்தை இப்படி விவரிக்கிறது...

`பிரம்மத்துக்குப் பிறவியோ, குணமோ, விருப்பு-வெறுப்போ, பெயரோ கிடையாது. பிரம்மத்துக்குச் சமமாக எதுவும் இல்லை. அது புலன்களுக்கு அப்பாற்பட்டது; தூய்மையானது; அழிவில்லாதது; எல்லையில்லாதது; ஆனந்த மயமானது. உருவம் இல்லாதது. அனுபவத்தில் மட்டுமே அறியக் கூடியது!’

இங்ஙனம் தூய்மையான - அழிவில்லாத - எல்லையில்லாத - ஆனந்தமயமான பிரம்மத்தை உணரும் அனுபவத்தைத் தரவல்ல மலைத் தலங்களில் ஒன்று தோரணமலை! மலைகளை இயல்பின் - அமைப்பின் அடிப்படையில் மூவகையாகப் பிரித்துச் சொல்வார்கள். பெண் மலை, ஆண் மலை, அர்த்தநாரி என்று. தோரணமலை பெண் மலையாகத் திகழ்கிறது.

தென்னகம் வந்த அகத்தியப் பெருமான் குற்றாலம், இலஞ்சி ஆகிய தலங்களுக்குச் சென்றுவிட்டு பொதிகை செல்லும் வழியில் இந்த மலைக்கும் வந்து சேர்ந்தார். வெள்ளி ஆரங்களாய் இதன் மேனியெங்கும் ஊர்ந்து செல்லும் சிற்றோடைகள், சுனைகள், அரிய மூலிகைகளைக் கண்டவர் இந்த மலையின் பொருட்டு பேரானந்தம் கொண்டதில் வியப்பில்லைதான்.

அவரின் அந்த ஆனந்தத்தைப் பன்மடங்காக்கியது, மலையின் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானின் தரிசனம். எங்கிருந்து நோக்கினாலும் ஒரு வாரணத்தைப் போன்று காட்சி தந்த அந்த மலை, அகத்தியருக்கு மட்டுமல்ல தரிசிக்கும் அடியார்கள் யாவருக்குள்ளும் ஓர் எண்ணத்தை விதைக்கும். ஆம், யானையே மலை வடிவில் வாகனமாக அமர்ந்து முருகப்பெருமானைத் தாங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றும்.

வாரணமும் தோரணமும்!

``சூரனுடன் போரிட வந்தபோது, இந்திரனே மயிலாக மாறிட, இந்திர மயிலேறி வந்தார் முருகன். பின்னர் சூரனே சேவற்கொடியாகவும் மயிலாகவும் மாறி கந்தனுக்கு வாகனமானான். போருக்குப் பின் தெய்வானையை மணம் முடித்துக் கொடுத்த இந்திரன், வெள்ளை யானையையும் சீராகக் கொடுத்தானாம். ஆக, எங்கள் முருகனுக்கு யானை வாகனமும் உண்டு. அந்த வகையில் தோரணமலையே வாரணமாகப் படுத்திருக்க, அதன் மீது தோரணமலையான் கோயில் கொண்டிருக்கிறான்’’ என்று பக்திப் பரவசத்தோடு தங்கள் கருத்தைப் பகிர்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

தோரணமலையில் தங்கிய அகத்தியர் அகமகிழ வழிபாடுகள் செய்துவந்தார். ஒளவைப் பிராட்டியின் பரிந்துரைப்படி தேரையர் அவருக்குச் சீடரானார். குருகுகன் ஆசி வழங்க, குருவும் சீடரும் இங்கே பெரும் மருத்துவ சாலையை நிர்மாணித்தார்கள் என்று தகவல் சொல்கிறது தலபுராணம்.

குகைக்கோயிலில் தினமும் உச்சிக்கால வேளை பூஜை நடை பெறுகிறது. ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம் முதலான விழா வைபவங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் இங்கே மிக விசேஷம்! சுத்துப்பட்டு ஊர் மக்களும் வெளியூர் பக்தர்களும் அன்றைய தினத்தில் திரண்டு வந்து தரிசனம் செய்கிறார்கள்.

தோரணமலை முருகனை வணங்கினால் தடைப்பட்ட மற்றும் தள்ளிப்போகும் திருமணங்கள் நடக்கும்; புத்திரபாக்கியம், வேலை, மன நிம்மதி ஆகியன கிடைக்கும் என்பது பக்தர்கள் பலரும் தங்கள் வாழ்வில் அனுபவித்துள்ள பிரத்யட்சமான உண்மை.

வாரணமும் தோரணமும்!

தோரணமலையின் மகிமைகளை அறிந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து செல் கிறார்கள். சித்தர் பூமி என்றறிந்து தோரணமலையை தரிசிக்க வரும் அன்பர்கள், இங்கே தாங்கள் அனுபவித்து உணர்ந்த விஷயங் களைச் சிலிர்ப்புடன் பகிர்கிறார்கள்.

``பெரும்பாலும் மலைக்குமேல் வசிக்கும் உயிரினங்கள் மனிதர் களிடம் இருந்து விலகியிருக்கவே விரும்பும். ஆனால் தோரண மலையில் வசிக்கும் பாக்கியம் பெற்ற பட்சிகளும் பிராணிகளும் நம்மிடம் அணுக்கம் காட்டுவது பெரும் வியப்பைத் தருகிறது.

தேன்சிட்டு மனிதர்கள் இருக்கும் இடத்திலிருந்து சுமார் பத்தடி தூரம் விலகிச் சென்றுவிடும் இயல்புடையது. ஆனால் தோரண மலையில் தங்கியிருந்தபோது, சாளரத்தில் வந்தமர்ந்து அழைப்பது போன்று பாவனை செய்ததும் பழகியதும் வியப்பிலும் வியப்பு. அதேபோல், நாங்கள் மேலே தாமரைக்குளம் வரையிலும் சென்று வந்தோம். வழியில் - பாதைகளில் வனவிலங்குகளால் அச்சுறுத்தல், பாதிப்புகள் போன்ற நிலை இல்லவே இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, அங்கே தங்கியிருந்த ஒவ்வொரு கணமும் இறையின் நெருக்கத்தில் இருந்ததாக உணர்ந்தோம். சித்தர்களின் சாந்நித்தியத்தால் நிறைந்திருக்கும் அதிர்வுகளை அனுபவித்தோம். தோரண மலை தெய்வ அருளோச்சும் தலம் மட்டுமல்ல, நம் தமிழ் மண்ணின் ஆதி மாண்புகளுக்கும் மகத்துவத் துக்கும் சான்றாகத் திகழும் தெய்வத்திருமலை அது. அங்கு பொதிந்திருக்கும் ரகசியங்களும் அற்புதங்களும் ஏராளம்’’ என்று சிலிர்ப்புடன் சொல்கிறார், உலகச் சித்தக் கலைகள் ஆய்வு மையத்தின் நிறுவனர் மு.அரி.

மலைவாகடம் எனும் நூலில் ஒரு தகவல் இப்படிச் சொல்கிறது: `கேளுங்கள் முனிவர்களே! இராக்காயம்மன் கோயிலுக்குப் பக்கம் கூப்பிடுந் தூரத்தில் தோரணமலையும் அதற்கும் மேற்கே மூங்கிலூற்றும் இருக்கிறது. அதன் வடசரகில் தேரையர் ஆசிரமம் இருக்கிறது.

அந்த ஆசிரமத்துக்கு மேற்புறமுள்ள சதம்புத் தரையில் கல்தாமரை முளைத்திருக்கிறது. அந்த மூலிகையின் இலை, பார்ப்பதற்கு ஓர் இலை போன்று தோன்றும். விரலால் அழுத்தினால் நாலு இலைகளாக விரியும். அதன் வேர் சடை போன்று இருக்கும்.

அந்த வேரினில் இரும்பு ஊசியைச் சொருகினால், தாமிர ஊசியாகும். அந்த ஊசியைப் பிடுங்கி வேறோர் இடத்தில் சொருகினால் வெள்ளி ஊசியாகும். அதைப் பிடுங்கி வேறோர் இடத்தில் சொருகினால் தங்க ஊசியாய் பத்து மாத்திருக்கும்.அந்த மூலிகையைப் பிடுங்கி வந்து கீழே போட்டு மிதித்துக்கொண்டு ஆகாயத்தைப் பார்த்தால் பகலிலும் நட்சத்திரம் தெரியும்!’

ஆம்! இதுபோல் எண்ணிலடங்கா அற்புதங்களும் மூலிகை ரகசியங்களும் அடங்கியதுதான் தோரணமலை!

- தரிசிப்போம்...

இப்படித்தான் சாப்பிட வேண்டும்!

ணவு சமைப்பது ஒரு கலையென்றால், உண்பதும் ஒரு கலைதான். எப்படிச் சாப்பிட வேண்டும் என்று கயத்தூர் பெருவாயின் முள்ளியார் அருளிய ஆசாரக்கோவை எனும் நூல் விளக்கம் தருகிறது.

நீராடி கால் கழுவி, வாய் பூசி மண்டலம் செய்து உண்ண வேண்டும்.

கிழக்கு திசை நோக்கி நன்கு அமர்ந்துகொண்டு, ஆடி-அசையாமல் கவனத்தைச் சிதறவிடாமல், பேசாமல், தொழுது கொண்டு உண்ணவேண்டும்.

படுத்துக்கொண்டோ, நின்றுகொண்டோ, வெட்டவெளியிலோ, கட்டில்மேல் உட்கார்ந்துகொண்டோ உண்ணக் கூடாது.

முதலில் இனிப்பானவற்றையும் நிறைவில் கசப்பானவற்றையும் உண்ண வேண்டும். இடையில் மற்றவற்றைச் சாப்பிடலாம்.

- திவ்யா திருமலை, சேலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism