Published:Updated:

வாரணமும் தோரணமும்!

தோரணமலை முருகப்பெருமான்
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை முருகப்பெருமான்

தோரணமலை அற்புதங்கள்

வாரணமும் தோரணமும்!

தோரணமலை அற்புதங்கள்

Published:Updated:
தோரணமலை முருகப்பெருமான்
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை முருகப்பெருமான்

அழகன் முருகனின் துணை இருந்தால் சகலமும் நன்மையாகவே நடக்கும். அவன் அடியவர்களுக்கு எப்போதும் துன்பம் இல்லை. `அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்’ என்பதற்கேற்ப, மனதில் சஞ்சலங்கள் தோன்றும்போதெல்லாம் `நானிருக்கிறேன்’ என்று முன் வந்து நின்று அருள்பாலிப்பான் கந்தன்.

வாரணமும் தோரணமும்!

அவன் கருணைக்குச் சாட்சியாக பல சம்பவங்கள் நடந்தது உண்டு தோரணமலையில். அவற்றில் ஒன்றை சிலிர்ப்போடு பகிர்ந்து கொண்டார், ஆலயத்தை நிர்வகித்து வரும் செண்பகராமன்.

``அன்பர் ஒருவருக்குத் திடுமென நெஞ்சுவலி. மருத்துவப் பரிசோத னையில் `இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு; ஆஞ்சியோ ப்ளாஸ்ட் செய்தாகவேண்டும்’ எனக் கூறிவிட்டார்கள் மருத்துவர்கள்.

சிகிச்சைக்கான பொருள் செலவு குறித்த மலைப்பும், சிகிச்சைக்குப் பிறகு பழையபடி பணிகளை மேற்கொள்ள முடியுமா என்ற அச்சமும் அந்த அன்பருக்குப் பெரும் சஞ்சலத்தைக் கொடுத்தன. மனம் மலர்ச்சியாக இருந்தால் பிணியேதும் இல்லை என்பார்கள் பெரியோர்கள். கவலைகள் மனதை அழுத்தினால், அதுவே நோய் தீவிரம் அடைவதற்கு வழிவகுத்துவிடும். அன்பர் தவித்தார்; மருகினார். நிறைவில் தோரணமலையானின் மகத்துவத்தை அறிந்து அந்த இறைவனையே சரணடைந்தார்.

பிரார்த்தித்த கணத்திலேயே ஏதோ சிலிர்ப்பு உள்ளுக்குள். அவரை யும் அறியாமல் புது நம்பிக்கையும் தெம்பும் கூடி வருவதுபோல் உணர்ந்தார். அடுத்தடுத்த நிகழ்வுகளும் அவருக்குத் தைரியமூட்டின. நண்பர்கள் சிலர் மூலம் சித்த வைத்தியர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து 6 மாதங்கள் அவரிடம் சிகிச்சை பெற்றார். அதேநேரம், தோரணமலை முருகனிடம் பிரார்த்தனையும் தொடர்ந்தது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் பரி்சோதனை செய்தார். ரத்தக் குழாயில் அடைப்பு இல்லை என்று தெரியவந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அந்த அன்பர். `எல்லாம் அந்தத் தோரணமலையானின் பெருங்கருணை’ என்று எண்ணி நெக்குருகினார்.

நோயைத் தீர்த்து தன் மனதையும் வாழ்வையும் மலரச் செய்த, தோரணமலை முருகனை மலர்களாலேயே பூஜித்துக்கொண்டாட முடிவுசெய்தார். தமிழ் மாதம் கடைசி வெள்ளிக் கிழமையில் தோரணமலை முருகனுக்கு வண்ணமலர்களால் அலங்காரம் நிகழும். அதற்கான ஏற்பாடு இந்த அன்பருடையதுதான். அவர் பெயர் பிரபு. இன்றைக்கும் தொடர்கிறது அவரின் மலர் கைங்கர்யம்.’’

இதைச் சொல்லிமுடிக்கும்போது செண்பகராமனுக்கு, அவரையும் அறியாமல் குரல் தழுதழுத்தது.

வாரணமும் தோரணமும்!

பின்னே... வைத்தியருக்கெல்லாம் மேம்பட்ட வைத்தியர் அல்லவா முருகப்பெருமான். ஆகவேதான் `பவரோக வைத்திநாதப் பெருமான் முருகன்’ என்று பெரியோர்கள் பலரும் போற்றிப் புகழ்கிறார்கள். உடற்பிணிக்கு மட்டுமல்ல மனப்பிணிக்கும் மருந்தானவர் தோரண மலை முருகப்பெருமான்!

ஆகவேதான், அவரின் ராஜ்ஜியமான தோரணமலை தீரத்தில் மருத்துவப்பணி சிறந்தோங்கித் திகழ்ந்தது போலும். அகத்தியரும் அவரின் சீடர் தேரையரும் இங்கு மருத்துவச்சாலை அமைத்துப் பணி செய்தார்கள் என்றால், அதற்கு அந்த முருகப்பெருமானின் திருவருளே காரணம் எனலாம்.

தோரணமலையானின் சாந்நித்தியம் மலையெங்கும் மூலிகைகளாய் நிறைந்திருந்தது; அவனுடைய அருள்பிரவாகம் மலையெங்கும் திகழும் சுனைகளில் பொங்கி வழிந்தது. ஆகவே, தோரணமலையைத் தேடி வந்தோர் எல்லாம் நலம் பெற்றார்கள். இன்றும் நன்மை அடைந்து வருகிறார்கள். ஆம், முருகனின் திருவருளோடு அகத்தியர், தேரையர் ஆகிய சித்தர் பெருமக்களின் குருவருளும் சேர்ந்து, தோரணமலையைத் தேடி வரும் பக்தர்களை வாழ்வாங்கு வாழ வைக்கின்றன.

``சித்தர் பெருமான் தேரையர், அக்காலத்தில் தம்மைத் தேடி வந்த அன்பர்களின் தேகத்துக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் உரம் சேர்த்து அருள்பாலித்திருப்பார். மூச்சுப் பயிற்சி முதற்கொண்டு சித்தக் கலை சார்ந்த பயிற்சிகள் பலவும் தோரணமலை தீரத்திலும் பொதிகையிலும் நிகழ்ந்திருக்கலாம்’’ என்கிறார் அன்பர் அரி.

அவர் கூறுவது மெய்யாக இருக்கலாம். சித்தர்கள் வாக்காக ஒன்றைச் சொல்வார்கள். `சரத்தைப் பார்த்துப் பரத்தைப் பார்’ என்பதுதான் அவர்களுக்கான பாலபாடம்.

நாம் விடும் மூச்சுக் காற்றுக்குச் சரம் என்றும் பெயர் உண்டு. மூச்சுக்காற்றின் அளவும் தன்மையும் சீராக இருப்பது அவசியம். இதுகுறித்து வேறொரு சித்தர் புருஷர் அற்புதமான பாடத்தைத் தருகிறார். அவர் பெயர் திருமாளிகைத் தேவர். தேரையருக்கு அகத்தியர் குருவாகக் கிடைத்ததுபோன்று திரு மாளிகைத் தேவருக்குக் குருவருள் பொழிந்தவர் போகர்.

வாரணமும் தோரணமும்!

இந்தத் திருமாளிகைத் தேவர் ஒருநாள் காவிரியில் நீராடிவிட்டு, பூக்களைப் பறித்துக் குடலையில் நிரப்பிக்கொண்டு, இறை அபிஷேகத்துக்கான தீர்த்தத்தையும் குடத்தில் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

வழியில் ஒரு பிண ஊர்வலம். அதைக் கண்டு திருமாளிகைத் தேவருக்குச் சிறிது மனச் சுணக்கம் ஏற்பட்டது. அருகிலேயே சந்நிதி கொண்டிருந்த விநாயகரைக் கண்டவர் `விநாயகா! என் மனம் கொண்ட விக்னத்தைக் களை!’ என்று கூவினாராம். மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. இறந்தவனைச் சுமந்து சென்றார்கள் அல்லவா? அவன் உயிர்ப்பெற்று எழுந்தானாம்!

இந்த நிகழ்வின் எதிரொலியாக, மறுநாள் முதல் புது வழக்கத்தைக் கடைப்பிடித்தார் திருமாளிகைத் தேவர். நீராடி முடித்ததும் பூக்குடலையையும் தீர்த்தக் குடத்தையும் விண்ணில் வீசுவார். அதன் பிறகு அவர் நடக்கத் தொடங்கினால், அவை இரண்டும் காற்றில் மிதந்தபடியே அவரைப் பின்தொடருமாம். பின்னர் உரிய இடம் வந்ததும் அவர் கைகளை நீட்ட, இரண்டும் அவரின் கைகளுக்கு வந்து சேருமாம். போகரின் சீடரான இந்தச் சித்தர் பிரானே சுவாசம் குறித்துப் பாடம் தருகிறார் நமக்கு.

நம் மூக்கில் உள்ள இரண்டு துவாரங்களில் வலது துளை சிவம்; இடது துளை சக்தி. சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் சிவத் துளையின் வழியே சுவாசம் வெளிப்பட வேண்டும். திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் சக்தித் துளையின் வழியே சுவாசம் வெளிப்பட வேண்டும்.

வியாழக்கிழமை மட்டும்... அன்று வளர்பிறையாக இருந்தால் சக்தித் துளை வழியாகவும், தேய்பிறையாக இருந்தால் சிவத் துளை வழியாகவும் சுவாசம் வெளிப்பட வேண்டும்.

இந்த வழக்கத்துக்கு மாறாக சரம் - மூச்சுக்காற்று மாறிவருகிறது என்றால், மறுபக்கமாக ஒருக்களித்துப் படுத்து, உரிய நாளுக்கு உண்டானபடி சரத்தை முறையாக இயக்கலாம். இங்ஙனம் மூச்சு இயக்கத்தைச் சீராக வைத்துக்கொள்வது அவசியம் என்பதால்தான் `சரத்தைப் பார்த்து பரத்தைப் பார்’ என்று சொல்லிவைத்தார்கள் சித்தர்கள்.

இப்படியான விளக்கங்கள் தோரணமலையிலும் தரப்பட்டிருக்கும். தேகத்தைத் தெய்விகமாக்கும் பயிற்சிகளும் நிகழ்ந்திருக்கும். இவற்றுக்கெல்லாம் காரணமாக தேரையர் அருள்பாலித்திருப்பார்.

``இன்றைக்கும் இங்கு கிடைக்கும் மூலிகைகளைக் காணும்போது, சுனை நீரினைப் பருகும்போது, குளிர்க் காற்றினை சுவாசிக்கும்போது அவரின் சாந்நித்தியத்தை உணர முடிகிறது’’ என்கிறார்கள் சித்தக் கலை சார்ந்த அன்பர்கள்!

ஆம்! குருவருளையும் குருகுகனின் திருவருளையும் உணர்த்தும் அனுபவங்கள் ஏராளம் உண்டு தோரணமலையில். அப்படியான தனது அனுபவத்தை அன்பர் ஒருவர் பகிர்ந்தபோது, வியப்பின் உச்சிக்கே சென்றோம்!

- தரிசிப்போம்...