திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

புண்ணியம் அருளும் திருத்தலம்!

திருப்பட்டூர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருப்பட்டூர் ( DIXITH )

திருக்கோயில் திருவுலா - திருப்பட்டூர் தரிசனம்!

திருப்பட்டூர் காசிவிஸ்வநாதர் திருக்கோயில் குறித்த இந்தத் தொடர் வெளியாகத் தொடங்கியதும் பல அனுபவக் கட்டுரை களும் ஆலயம் பற்றிய விசாரிப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. இதுதான் திருப்பட்டூர் காசிவிஸ்வநாதரின் மகிமைக்கு சாட்சி! இன்றும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் அன்பர்கள் பலரும் தங்களின் புகலிடமாக சென்று சேர்வது இந்த தலத்துக்குத்தான் என்கிறார்கள்.

புண்ணியம் அருளும் திருத்தலம்!

ஞ்சலம் மிகுந்த மனதுக்கு அமைதி வேண்டியும், குழந்தை வரம் கேட்டும், தோஷங்கள் விலக அம்மையப்பரின் அருள் வேண்டியும், ஏமாற்றங்கள் விலகி வாழ்வில் ஏற்றங்கள் பெறவும், வியாக்ரபாதரின் குருவருள் வேண்டியும் இந்தத் தலத்தைத் தேடி வரும் அன்பர்கள் ஏராளம். ``தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பிறகும்கூட, இங்கு அருளும் ஈசனும் அம்பாளுமே கதியென வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை என தாய் வீடு தேடி வரும் குழந்தைகள் போல் வந்து செல்லும் அன்பர்களும் நிறையபேர்'' என்கிறார்கள் கோயில் தரப்பில்

மனிதனானவன், பிறவி எனும் இந்தப் பெருங்கடலைச் சுயமாக தனியே கடக்க முடியாது. அதற்கு இறையின் துணை தேவை. அந்தத் துணையைப் பெற்றுத் தரும் மையங்களே - பிறவி சாகரத்தில் கரை சேர உதவும் படகுகளே ஆலயங்கள் எனலாம். ஆகவேதான் ஞானியரும் யோகியரும் பல அற்புதமான ஆலயங்களை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றில் திருப்பட்டூர் அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயமும் ஒன்று எனலாம்.

திருப்பட்டூரில் இந்த காசிவிஸ்வநாதர் ஆலயம், பலரும் அறிந்த ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் மட்டுமன்றி, ஶ்ரீவரத ராஜ பெருமாள் ஆலயம், ஶ்ரீஅரங்கேற்றும் ஐயனார் ஆலயம் போன்ற கோயில்களும் உண்டு. `இங்கு வரவேண்டும்' எனும் விதி இருந்தால் மட்டுமே ஒருவரால் இந்தப் புண்ணிய மண்ணைத் தரிசிக்க வர இயலுமாம். `அப்படி வருவோரின் தலையெழுத்தை நல்லபடியாக திருத்தி அமைக்க வேண்டும்' என்பது பிரம்மனுக்கு ஈசன் கொடுத்துள்ள ஆணை!

புண்ணியம் அருளும் திருத்தலம்!
DIXITH

அவ்வகையில் திருப்பட்டூர் தலத்தைத் தரிசிக்கும் பெரும்பாக்கியம் நமக்கும் விதியாக் கப் பட்டிருக்கிறது போலும். ஆகவேதான் அந்தத் தலத்தைப் பற்றி எழுதவும் படிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது! அந்த வாய்ப்பை நிச்சயம் நாம் பயன்படுத்திக்கொள்வோம். ஒருமுறையேனும் திருப்பட்டூர் தலத்துக்குச் சென்று பெரும்பேறு பெற்று வருவோம்.

மதுரை வாசகி சரஸ்வதி, கடிதம் மூலம் அனுப்பிய அவரது அனுபவம், திருப்பட்டூர் மகிமைக்கான சாட்சி என்றே கூறலாம்:

`என் சொந்த ஊர் திருச்சி. திருமணம் செய்துகொண்டு போன ஊர் மதுரை.கணவர், இரண்டு மகன்கள் என சகல சௌபாக்கியங்களோடு சென்றது வாழ்க்கை.

2016-ல்தான் எனக்குக் கஷ்டம் என்றாலே என்னவென்று தெரிய வந்தது. மூத்த மகனுக் குத் திருமண வாழ்வில் பிரச்னை; விவாகரத் துக்கு அலையும் நிலை. கணவருக்கு உடல்நல பிரச்னை, அதனால் தொழிலில் சிக்கல் - பணப் பிரச்னை வேறு. இளைய மகன் வேலையில்லாமல் மனரீதியாக அவதிப்பட்டு கொண்டிருந்தான்.

அதுவரையிலும் வெளி உலகமே தெரியா மல் இருந்தவள், 50 வயதில் மருத்துவமனை, கோர்ட், அரசு அலுவலகங்கள், கணவரின் கம்பெனி என அலைந்து அலைந்து பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளேனேன். இறையின் மிதே மெள்ள வெறுப்பும் சலிப்பும் ஏற்பட் டிருந்த காலம் அது.

தெய்வாதீனமாக ஒருநாள் என் தோழியை திருச்சியில் சந்தித்தேன். அவள்தான் திருப்பட்டூரைப் பற்றிச் சொன்னாள்.

``குடும்பத்தினரின் ஜாதகங்களை எடுத்துச் செல். பிரம்மபுரீஸ்வரை தரிசனம் செய்; பிரம்மன் சந்நிதியில் ஜாதகங்களை வைத்து வணங்கு. பதஞ்சலி அதிஷ்டனத்தில் தியானம் செய். நிறைவாக அருகிலுள்ள காசிவிஸ்வ நாதர் கோயிலுக்கும் சென்று வழிபடு. அங்கே புலிக்கால் முனிவரின் அதிஷ்டானம் உண்டு. அவர் சந்நிதிமுன் அமர்ந்து மனதாரப் பிரார்த்தித்துக் கொள். சகல பிரச்னைகளுக்கும் விடிவு கிடைக்கும்!' என்றாள். யாரோ முடுக்கி விட்டது போல, மறுநாளே கிளம்பினேன்.

கூட்டம் அதிகம் இல்லாத ஒரு திங்கள்கிழமை அது. தோழி சொன்ன முறைப்படியே தரிசனம் செய்து வழிபட்டேன். காசிவிஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றேன். அம்மையையும் அப்பனையும் தரிசித்த கணத்திலேயே மனம் தெளிவானது. எனக்குள் ஏதோ புது உற்சாகம்; நம்பிக்கை ஒளிர்ந்தது. அதேநேரம், கண்களில் தாரை தாரையாக நீர். என் குறைகளையெல்லாம் சமர்ப்பித்தேன்.

புண்ணியம் அருளும் திருத்தலம்!
DIXITH

`ஆறு மாசமா ஒழுங்கா சாப்பிட முடியலை; நிம்மதியா தூங்க முடியலை... நீங்கதான் வழிகாட்டணும்' என்று வேண்டிக் கொண் டேன். வியாக்ரபாதர் சந்நிதியில் அமர்ந்தேன்; `வெகு சீக்கிரம் அனைத்தும் சரியாகும்' என்று மனதுக்குள் ஒரு குரல்; பெரும் பாரம் இறங்கிய போன்ற உணர்வு. திருப்தியோடு மதுரை திரும்பினேன்.

ஒரு வாரம் கழிந்தது. தோழி திருப்பட்டூர் பிரசாதம் அனுப்பியிருந்தாள். நெகிழ்ந்து போனேன். அன்றே பெரிய மகன் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது. அவனுக்கும் மனைவிக் கும் இடையேயான பிரச்னைக்குச் சுமூக தீர்வு ஏற்பட்டது. அடுத்த ஓரிரு நாள்களில் பெரிய நிறுவனம் ஒன்றிலிருந்து சின்னவனுக்கு வேலைக்கு அழைப்பு வந்தது.

இதுவே என் கணவருக்குப் புதுத் தெம்பைக் கொடுத்திருக்க வேண்டும். ஓரளவு அவர் உடம்பு தேறிவிட, அதுவரையிலும் அவருக்கான சிகிச்சை குறித்து தயக்கத்துடன் பேசிக் கொண் டிருந்த மருத்துவர்கள், அடுத்து எடுத்த பரிசோதனையின் முடிவைக் கண்டு நம்பிக்கை கொண்டார்கள்; உடனடியாக சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்துக் கொண்டார்கள்.

நான் கம்பெனி குழப்பங்களைச் சீர்செய்ய ஆரம்பித்தேன். எல்லாவற்றுக்கும் காரணம் திருப்பட்டூர் அம்மையும் அப்பனுமே. இறையரு ளோடு குருவருளும் இணைந்து எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கரை சேர்த்தன என்றே சொல்வேன்!'

இவரைப் போன்று திருப்பட்டூர் தெய்வங் களின் மகிமையால் வாழ்க்கையை வரமாக்கிக் கொண்ட அன்பர்கள் இன்னும் ஏராளம் உண்டு.

-உலா தொடரும்...