Published:Updated:

வேலை கிடைக்க வாழைப்பழ மாலை!

ஶ்ரீகல்யாண விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீகல்யாண விநாயகர்

ஈஸ்வர அம்சத்துடன் பிள்ளையார் தரிசனம் வாரணவாசி அற்புதம்!

வேலை கிடைக்க வாழைப்பழ மாலை!

ஈஸ்வர அம்சத்துடன் பிள்ளையார் தரிசனம் வாரணவாசி அற்புதம்!

Published:Updated:
ஶ்ரீகல்யாண விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீகல்யாண விநாயகர்

அரியலூருக்கு அருகில் வாரணவாசியில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு கல்யாணசுந்தர விநாயகர். 12 வாரங்கள் இவரை தரிசித்து, 12-வது வாரம் வாழைப்பழ மாலை அணிவித்து வழிபட்டால் நல்ல வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும் என்பது பக்தர்கள் அனுபவபூர்வமாகச் சொல்லும் உண்மை!

வேலை கிடைக்க 
வாழைப்பழ மாலை!

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக்கால்.
- விவேக சிந்தாமணி

விநாயகனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் எண்ணிலடங்காதவை. இந்தப் பிறவியில் நாம் படும் துயரங்கள் எல்லாம் நீக்கி நமக்கு நன்மையை அருள்பவர் அந்த கணநாதனே. அதனால்தான் கணபதியைக் கைதொழுதக் கால் அல்லல்போம் வல்வினைபோம் என்று பாடுகிறது விவேக சிந்தாமணி.

அப்படிப்பட்ட கருணாமூர்த்தியான கணபதிக்கு நம் தேசமெங்கும் ஆலயங்கள் உண்டு. அவற்றில் சில அவரே தம் பக்தர்களுக்குத் தன் இருப்பைத் தெரிவித்து எழுந்தருளியிருக்கும் தலங்கள். அப்படி விநாயகப்பெருமான் அருள்பாலிக்கும் ஒரு தலம்தான் வாரணவாசி. இங்கு அருள்மிகு கல்யாணசுந்தர விநாயகர் கோயில் கொண்ட திருக்கதை சுவாரஸ்யமானது!

வேலை கிடைக்க 
வாழைப்பழ மாலை!

ஞ்சாவூர் சோழ மன்னனின் அரசவையில் கல்யாண சுந்தரம் என்பவர் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார். அவர், ஆனை முகத்தோனின் தீவிர பக்தர். தினமும் விநாயகரைத் தன் மனத்தால் வழிபட்டுப் பின்பே தன் பணிகளில் ஈடுபடுவார்.

ஒருநாள் அவரது கனவில் தரிசனம் அருளிய விநாயகப்பெருமான்,
“என் தந்தையுடன் இணைந்த அம்சத்தில், வாரணவாசி கிராமத்தில் உசிலை மரத்தடியில் மண்ணுக்குள் நான் எழுந்தருளியிருக்கிறேன். என் திருவுருவச் சிலையைக் கண்டெடுத்து, அங்கு ஒரு கோயிலை எழுப்பிப் பிரதிஷ்டை செய்து வணங்கி வா. உனக்கு சகல செளபாக்கியமும் கிடைக்கும்” எனச் சொல்லி மறைந்தாராம்.

உடனே மெய்சிலிர்க்கக் கண் விழித்த கல்யாண சுந்தரம், விநாயகப்பெருமான் உரைத்த கட்டளையை நினைவுகூர்ந்து, வாரணவாசி கிராமம் நோக்கிப் பயணித்தார். அவர் காட்டிய திசையில் ஓர் உசிலை மரம் இருந்தது. அந்த மரத்தின் அடிப்பகுதி யைத் தோண்டிப் பார்த்தார் கல்யாண சுந்தரம். சில அடிகள் தோண்டியதுமே விநாயகக் கடவுளின் திருமேனி தரிசனம் கிடைத்தது. உடனே அதை வெளிக்கொணர்ந்து ஊராரை அழைத்து வந்து வழிபாடுகள் செய்து மகிழ்ந்தார். கனவில் இறைவன் சொன்னது போலவே அந்த மரத்தின் அடியிலேயே விநாயகருக்கு ஓர் அழகிய திருக்கோயில் எழுப்பினார்.

குமாஸ்தா கல்யாண சுந்தரம் எழுப்பிய கோயில் என்பதால், இந்தத் தல இறைவனுக்கும் ’கல்யாண சுந்தர விநாயகர்’ என்றே திருநாமம் விளங்கிற்று. கல்யாணசுந்தரத்தின் கனவில், இறைவன் தன் தந்தையுடன் இணைந்த அம்சத்தில் இருப்பதாகக் கூறியதை நினைவு கூர்ந்த கல்யாண சுந்தரம் ஊர் பக்தர்களுடன் இணைந்து ஒரு சிவலிங்க பீடத்தை எழுப்பி, அதன் மேல் விநாயகரை பிரதிஷ்டை செய்தார். 2 குதிரைகள் இழுத்துச் செல்லும் தேரின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள சந்நிதியில் லிங்க பீடத்தில் கம்பீரமாக அமர்ந்து கருணை மழை பொழிகிறார் ஆனைமுகத்தோன்.

இந்த ஆலயத்தில் சிவபெருமான் விசாலாட்சி சமேத விஸ்வ நாதராக எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மேலும் சண்டிகேஸ்வரர், கால பைரவர், பாலமுருகன், குருதட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இந்த ஆலயத்தின் தல விருட்சங்களாக அமைந்துள்ளன அரசு மற்றும் வேம்பு மரங்கள். இந்த மரங்களின் அடியில் ராகு, கேதுவுடன் அமர்ந்து பக்தர்களுக்கு நல்லருள் புரிகிறார் கற்பகவிநாயகர்.

வேலை கிடைக்க 
வாழைப்பழ மாலை!

இந்தத் தலவிருட்சங்களில் மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சள் சேர்த்து அமாவாசை அன்று கட்டி வழிபட திருமணத் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. அதே போன்று மஞ்சள் துணியில் கோயில் வளாகத்தில் இருந்து ஒரு சிறிய கல்லை எடுத்து அதனுடன் வெற்றிலை பாக்கு வைத்து இம்மரத்தில் தொட்டில் போலக் கட்டினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள் .

உள்ளூர் பக்தர்கள் தாங்கள் வாங்கும் புதிய வாகனங்களை இந்த ஆலயத்துக்குக் கொண்டுவந்து சாவியை விநாயகப்பெருமானின் பாதத்தில் வைத்துப் பூஜை செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் விநாயகரின் அருள் எப்போதும் தம்மோடு இருந்து பாதுகாக்கும் என்று நம்புகிறார்கள்.

இங்கு சங்கடஹரசதுர்த்தி நாளில், கல்யாண சுந்தர விநாயகருக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்த நாளில் அவருக்குப் பால் அபிஷேகம் செய்து, வெண் நிற வேஷ்டி, துண்டு சமர்ப்பித்து, ரோஜா மாலை சாத்தி, லட்டுப் பிரசாதம் நிவேதனம் செய்து, நெய்தீபம் ஏற்றி அறுகம்புல்லினால் அர்ச்சணை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் தடையில்லாமல் நிறைவேறி, வெற்றி கிடைக்கும் என்கிறார்கள் பலன் பெற்ற பக்தர்கள்.

இங்கு விநாயகர் சதுர்த்தி விமர்சையாகக் கொண்டாடப்படும். நான்கு கால பூஜைகளோடு மாலையில், விநாயகருக்குச் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு விசேஷ தீபாராதனையும் நடைபெறும். சதுர்த்தி நாளில் இங்கு வந்து கல்யாண சுந்தர கணபதியை வழிபட்டால் நம் கவலைகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.

வேலை கிடைக்க 
வாழைப்பழ மாலை!

வேலை கிடைக்க சிறப்புப் பிரார்த்தனை!

வேலை தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பவர் இந்த விநாயகர் என்கிறார்கள் பக்தர்கள். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், வேலை கிடைப்பதில் தாமதம், அதிகமான வேலைப்பளு, தொழில்போட்டி ஆகியவற்றால் வருந்தும் பக்தர்கள் 12 வாரங்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்ள வேண்டும்.

அதாவது வெள்ளிக்கிழமை ஒன்றில் இந்த ஆலயத்துக்கு வந்து விநாயகரை தரிசனம் செய்து இந்த வழிபாட்டைத் தொடங்க வேண்டும் என்கிறார்கள். இரண்டாவது வாரம் முதல் பதினோறாவது வாரம்வரை ஆலயத்துக்கு வந்து விநாயகரை தரிசனம் செய்து செவ்வாழை அல்லது கற்பூரவள்ளி வாழைப்பழத்தில் 9 பழங்களை மாலையாகக் கட்டி விநாயகருக்கு சாத்தி வழிபட வேண்டும். பன்னிரண்டாவது வாரத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் சமர்பித்து வழிபட்டால் நிச்சயம் நல்ல வேலை கிடைப்பதோடு வேலையில் இருப்பவர்களுக்கு இருந்தவந்த பிரச்னைகளும் தீரும் என்கிறார்கள்.