Published:Updated:

வாசுகி நர்த்தனர் அபூர்வ சிவ வடிவம்!

அருள்மிகு மேகநாதேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
அருள்மிகு மேகநாதேஸ்வரர்

ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயம்

வாசுகி நர்த்தனர் அபூர்வ சிவ வடிவம்!

ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயம்

Published:Updated:
அருள்மிகு மேகநாதேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
அருள்மிகு மேகநாதேஸ்வரர்

சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கண்டிகை எனும் ஊரைத் தாண்டியதும் வரும் மேலக்கோட்டையூரில் உள்ளது ஶ்ரீமேகாம்பிகை சமேத ஶ்ரீமேகநாதேஸ்வரர் ஆலயம். தாம்பரத்தில் இருந்து 17 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இறைவன் மேகநாதேஸ்வரர் மிக அழகாக, கம்பீரமாக சதுர ஆவுடையாருடன் மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். மேற்கு நோக்கிய சிவலிங்க தரிசனம் என்பது, ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவ லிங்க தரிசனத்துக்கு ஒப்பானது என்பர்.

வாசுகி நர்த்தனர் 
அபூர்வ சிவ வடிவம்!

துர ஆவுடை லிங்கம் என்றாலே அது மிக மிகப் பழைமையான ஆலயம் என்றும், சதுர ஆவுடை லிங்கங்கள் ரிஷிகளால் ஸ்தாபிக்கப் பட்டவை என்றும் சொல்வார்கள். ஆக, இவ்வளவு சிறப்புமிகு லிங்கத் திருமேனியை தரிசிப்பது மிகப் பெரும் கொடுப்பினை!

அருள்மிகு மேகாம்பிகையும் பெயருக்கேற்ப கருணை மழைப் பொழியும் நாயகியாய், நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்கிறாள். இந்த அன்னையை வழிபட்டால் மாங்கல்ய வரமும், பலமும் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

துர்வாசர் ஒருமுறை வேள்வி செய்து கொண்டிருந்த வேளையில் வருணன், விளையாட்டாகக் கருதி அந்த வேள்வியைத் தடுக்கவும், தனது ஆற்றலைக் காண்பிக்கவும் கடும் மழையைக் கொட்டினான். இதனால் கோபம் கொண்ட துர்வாசர், குளிர்ந்த தேகம் கொண்ட வருணனுக்குக் கடுமையான வெப்பு நோய் வருமாறு சபித்தார். இதனால் உடலெங்கும் வெப்பம் பெருகிய வருணன், முனிவரைத் தொழுது சாப விமோசனம் வேண்டினான்.

துர்வாசர் மனம் இரங்கினார். வருணன் விமோசனம் பெற வழி காட்டினார். அதன்படி இங்கு வந்த வருணன், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டான். இங்கேயே தங்கியிருந்து, தன்னுடைய வாகனமான மகரம் எனும் முதலையைக் கொண்டு மகரத் தீர்த்தத்தை உருவாக் கினான். அந்தத் தீர்த்தத்தால் ஸ்வாமிக்கு அபிஷேக, ஆராத னைகள் செய்து சாப விமோசனம் பெற்றான் என்கிறது தலபுராணம்.

வாசுகி நர்த்தனர் 
அபூர்வ சிவ வடிவம்!

மேகங்களின் தலைவனான வருணன் வழிபட்ட ஈசன் என்ப தால், இங்குள்ள சுவாமி மேக நாதேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார். அவரோடு அருளும் அம்பிகை மேகாம்பிகை என்று திருப்பெயர் கொண்டாள்!

இன்றும் சீதளம், வெம்மை தொடர்பான பிணிகளால் பாதிக்கப்படும் அன்பர்கள், இங்கு வந்து வழிபட்டு பலன் பெற்றுச் செல்கிறார்கள். மேலும் கடுமையான தலைவலி, தலைப்பாரம் ஏற்பட்டு அவதிப்படுவோரும் இங்கு வந்து வழிபட்டால் நிவர்த்தி பெறலாம் என்கிறார்கள்.

ராவணனின் மகன் இந்திரஜித். மேகநாதன் என்றும் இவனுக்குப் பெயர் உண்டு. இந்த மேகநாதனும் இங்கு வந்து நீண்ட ஆயுளைத் தரும் - யம பயத்தைப் போக்கும் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்து சுவாமியை வழிபட்டானாம். இந்தக் கதையை யொட்டியும் சுவாமிக்கு மேக நாதேஸ்வரர் எனும் திருப்பெயர் அமைந்தது என்றும் கூறுகிறார்கள். ஆக இந்த ஈசனைத் தரிசித்து வழிபட்டால், மரண பயம் நீங்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தில், கல்வெட்டு ஒன்று பாதி படிக்க முடியாத நிலையில் தேய்ந்து காணப்படுகிறது. `படிக்க முடிந்த எழுத்துக் களை வைத்துப் பார்த்தால், இது ராஜராஜ சோழனின் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட கோயிலாக இருக்கலாம் என்று தெரிய வருகிறது' என்கிறார்கள் உள்ளூர் அன்பர்கள். ராஜராஜ கேசரி என்று கல்வெட்டில் காணப்படும் குறிப்பு, நிச்சயம் ராஜ ராஜனையே குறிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒருகாலத்தில், தொண்டை மண்டலம் புலியூர்க் கோட்டம் - சுரட்டூர் நாட்டின் ஒரு பகுதியாகத் திகழ்ந்ததாம் இவ்வூர். இன்றைய தாம்பரம் அப்போது குணசீலநல்லூர் என்றும், மேலக்கோட்டையூராகிய இந்தப் பகுதி மேக நாத நல்லூர் என்றும் வழங்கப்பட்டனவாம்.

இங்ஙனம் புராணத் தொன்மையும் வரலாற்றுப் பெருமைகளும் கொண்ட இந்த ஊரும், ஆலயமும் காலப்போக்கில் சிதைந்து போக, ஊர் மக்களும் சிவனடியார்களும் ஒன்றிணைந்து இந்த ஆலயத்தைப் புனரமைத்து, 2006-ம் ஆண்டில் குடமுழுக்கு செய்தனர். இங்கு சுப்பிரமணியர், கணபதி, ஐயப்பன், நவ கிரங்கள், காலபைரவர் ஆகியோரின் சந்நிதி களும் உள்ளன.

சிறப்பினும் சிறப்பாக இங்கு வாசுகி நர்த்தனர் எனும் அபூர்வ சிவவடிவம் ஒன்றும் திருக்காட்சி தருகிறது. காளிங்க நர்த்தனராக பகவான் கிருஷ்ணரைப் பல ஆலயங்களில் தரிசித்திருப்போம். ஆனால் `வாசுகி நர்த்தனர்' சிவவடிவம் வெறெங்கும் காண்பதற்கரியது. வாசுகி பாம்பின் மீது சிவனார் நடனம் புரியும் கோலத்தில் அமைந்த மூர்த்தம் இது.

வாசுகி நர்த்தனர்
வாசுகி நர்த்தனர்

தேவர்களும் அசுரர்களும் வாசுகையைக் கயிறாகக் கொண்டு மேரு மலையை மத்தாக்கிப் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்ற கதையை நாமறிவோம். `தன்னால்தான் தேவர்களுக்கு அமுதம் கிடைத்தது' என்று எண்ணி கர்வம் கொண்ட வாசுகி, படமெடுத்து ஆடியதாம். அந்த நாகம் கக்கிய விஷம் சகலரையும் அச்சப்படுத்தியது.

அனைவரும் ஈசனைச் சரணடைய, அவர் வாசுகியின் தலைமீது தன் திருப்பாதம் வைத்து நாட்டியம் ஆடினார். ஈசனின் வேகத்தால் நிலைகுலைந்த வாசுகி அவரிடம் அபயம் கேட்டது. ஈசனும் வாசுகியை மன்னித்துத் தன் கழுத்தில் ஆபரணமாக அணிந்து, நாகாபரணராகத் திருக்காட்சி அளித்தார். இக்கதையின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாகத் திகழ்கிறது வாசுகிநர்த்தனர் திருவடிவம். இவரை தரிசித்து வழிபட்டால் நாகதோஷம் விலகும்; போட்டி பொறாமைகளில் இருந்து விலகி நலம் பெறலாம் என்பது ஐதீகம்.

இங்கு பிரதோஷ நாள்களில் 108 சங்காபிஷேகம் நடை பெறும். 6 பிரதோஷங்களுக்கு இளநீர், மஞ்சள் பொடி வாங்கிக் கொடுத்து ஈசனை வழிபட்டால் திருமண வரம் கிட்டும்; தயிர் தந்து வழிபட்டால் மழலைப்பேறு வாய்க்கும்; கருப்பஞ்சாறு தந்து வழிபட்டால் பதவி உயர்வு கிட்டும் என்கிறார்கள். அதேபோல், பிணிகள் நீங்கிட பன்னீரும் சந்தனாதித் தைலமும், கடன் நிவர்த்தி பெற அரிசி மாவும் அபிஷேகப் பொடியும் வாங்கித் தந்து, அபிஷேகத்தை தரிசித்து வழிபட்டு பலன் பெறலாம் என்கிறார்கள்.

இந்த ஆலயத்தின் சிறப்புமிகு வழிபாடு, ஆயுளை நீடிக்கும் சக்தி வாய்ந்த மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம். மார்க்கண்டேய மகரிஷி முதன்முதலாக ஜபித்து வழங்கிய 16 மூல மந்திரங்களையும் பலமுறை உருவேற்றி ஹோமத்தில் சமர்ப்பிப்பது, இந்தத் தலத்தின் விசேஷ அம்சம். இந்த ஹோமத்தில் கலந்துகொண்டால், பூரண ஆயுளும், யம பயம் இல்லாத வாழ்வும், நல்ல ஆரோக் கியமும், நீடித்த புகழும், நிறைவான செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தற்போது இந்தத் திருக்கோயிலில் குறிப்பிட்ட திருப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திருப்பணிகளுக்கு நாமும் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவதோடு, ஒருமுறை குடும்பத்துடன் என்று மேகநாதேஸ்வரரையும் மேகாம்பிகையையும் வாசுகி நர்த்தனரையும் வழிபட்டு வரம் பெற்று வருவோம் (தொடர்புக்கு: சிவா குருக்கள் - 99622 67285).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism