Published:Updated:

மங்கலம் அருளும் காளிகாம்பாள்... இல்லம் தேடி வரும் இறை தரிசனம்! #WorshipAtHome

worshipathome
worshipathome

திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்பவ மலரும் கொண்டு திருக்காட்சி தருகிறாள் காளிகாம்பாள். இடது கையில் வரத முத்திரையுடன் அருள்புரிந்தபடியே வலது கால் தாமரையில் வைத்தபடி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள்.

கொரோனா தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச் செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம் அனுதினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக் கூடச் செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில் புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவு செய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில். ஆதி பராசக்தியானவள் காளிகாம்பாள் எனும் திருநாமத்துடன் அருள்புரியும் தலம்,. ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் ஆலயம்.

உலகில் உள்ள நாயகியர்கள் அனைவருக்கும் தலைவியாகத் திகழ்பவள், காஞ்சி காமாட்சி என்கிறது புராணம். அந்தக் காமாட்சி அன்னையே காளிகாம்பாளின் 12 அம்சங்களில் ஒன்றாகத் திகழ்கிறாள் என்கிறார்கள் ஆசார்ய பெருமக்கள்.

சென்னை காளிகாம்பாள்
சென்னை காளிகாம்பாள்

மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள் அன்னை காளிகாம்பாள். அவளின் திருப்பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இந்தத் தலத்தில் வேண்டுவன அனைத்தும் குறைவின்றி வெற்றி பெறும்.

திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்பவ மலரும் கொண்டு திருக்காட்சி தருகிறாள் காளிகாம்பாள். இடது கையில் வரத முத்திரையுடன் அருள்புரிந்தபடியே வலது கால் தாமரையில் வைத்தபடி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள்.

ஆதிபராசக்தி தன்னைப் பல சக்திகளாகத் தோற்றுவித்து மக்களுக்கு அருள்புரிந்துகொண்டிருக்கிறாள். அந்த அபூர்வ சக்திகளுள் ஒருவளே அன்னை காளிகாம்பாள். காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருக்கிறாள், அன்னை காளிகாம்பாள்

அந்தக் காலத்தில் மீனவ மக்கள் செந்தூரம் சாற்றி வழிபட்டனர். இதனால் நெய்தல் நில காமாட்சி என்று காளிகாம்பாளுக்கு பெயர் அமைந்தது. புராணத்தில் பரதபுரி,சொர்ணபுரி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது இந்தத் தலம். இந்திரன், குபேரன் ஆகியோர் மட்டுமல்லாமல் நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜன்ம புண்ணியங்களை அடைந்தனர்.

திருமணமாகியும் குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் அன்னை காளிகாம்பாளுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளைப் பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.

ஆதி பராசக்தி
ஆதி பராசக்தி

இந்தத் தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.  

‘யாதுமாகி நின்றாய் காளி ’ என்று மகாகவி பாரதியார் போற்றிய அன்னை ஸ்ரீ காளிகாம்பாளின் பாதங்களில் சரணடைவோம். அன்னையின் அருளால் நம் வாழ்க்கை செழிப்படையும்.

அடுத்த கட்டுரைக்கு