Published:Updated:

முக்திபேறு அளிக்கும் சமணர்களின் 'ஆஷாட ஆஷ்டாந்ஹிக விதான்...' - வழிபடுவது எப்படி?

சமணம்
சமணம்

தேவர்களும் தேவேந்திரனும் பூஜைசெய்யும் ஆஷ்டாந்ஹிக காலத்தில், நாமும் பூஜை செய்தால் பல புண்ணிய பலன்கள் கிட்டும் என்று 'ஆஷ்டாந்ஹிக பஞ்சமேரு பூஜா விதானம்' தெரிவிக்கிறது.

'இயற்கை, நூல், அவதி, மனப்பர்யயம், கேவலம்' என இந்த உலகில் ஞானம் ஐந்து வகைப்படும் என்கின்றன சமண நூல்கள். ஐந்து வகையான ஞானங்களுள் 'முற்றும் முழுதும் அறியும் பரிபூரண நிலை'யே கேவல ஞானம் எனப்படுகிறது. கேவல ஞானம் அடைந்து அனைத்தையும் முழுமையாக அறிந்தவர்களை 'பகவான்' என்று அழைக்கிறோம்.

சமணம்
சமணம்

உலகில் மனிதர்கள் பிறவிச் சுழலில் சிக்கிக் கரையேறும் வழியறியாது தவித்துக்கொண்டிருந்தனர். அப்போது, மக்களை வழிநடத்தும் அறத்தை அறிந்து, அனைவருக்கும் உபதேசிக்க இந்தப் பூவுலகில் அவதரித்தார் 'விருஷப தேவர்.' இந்த உலகின் வழக்கப்படி திருமணம் செய்துகொண்டு இல்லற நெறியில் ஈடுபட்டுக் குறைவின்றி வாழ்ந்தார். தன் பிள்ளையான பரதச் சக்கரவர்த்திக்குப் பட்டம் கட்டிவிட்டு, இல்லறம் துறந்து துறவு மேற்கொண்டு தவம் செய்தார் விருஷப தேவர். அதன் பலனாக அவருக்குக் 'கேவல ஞானம்' எனப்படும் முழுமையான ஞானம் வாய்த்தது.

அவர் பரிபூரண ஞானத்தை அடைந்ததும் தேவர்கள் அவரை, 'பகவான் அருகா' என்று வாழ்த்தினர். அதுவரை முழுமையான ஞானத்தை அடைந்தவர்கள் இல்லை என்பதால் அவரை 'ஆதிபகவன்' என்று போற்றினர். அவர் உருவாக்கிய அறத்தின் வழியில் 'தீர்த்தங்கரர்கள்' தோன்றி மெய்ஞ்ஞான வழியினை மக்களுக்கு உபதேசித்தனர். இறுதியாகத் தோன்றிய 24 வது தீர்த்தங்கரர் மகாவீரர். அவர் மக்கள் வாழ்வதற்கான உயர்ந்த மார்க்கத்தை உபதேசித்தார். தீர்த்தங்கரர்கள் உபதேசித்த சமயமே பிற்காலத்தில் 'ஜைனம்' (சமணம்) என்று போற்றப்பட்டது.

சமணம்
சமணம்

பகவானைத் தொழுவதும் பூஜை செய்வதும் தேவர்கள் முதல் மனிதர்கள் வரை அனைவருக்கும் உரிய கடமையாகும். சமண சமயம், துறவை வலியுறுத்தும் சமயமாக இருந்தபோதிலும் இல்லறத்தில் வாழும் மக்களுக்கான வாழ்வியல் நெறியையும் வகுத்துள்ளது. இல்லறத்தில் இருந்தபடி விரதங்கள் மற்றும் பூஜைகள் செய்து மறு ஜன்மத்தில் நன்னிலையை அடையலாம் என்பது அவர்களின் கருத்து. அப்படி வகுக்கப்பட்டுள்ள விரதங்களில் முக்கியமானது 'ஆஷ்டாந்ஹிக விரதம்.'

இந்த விரதம், ஆண்டுக்கு மூன்றுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆடி, கார்த்திகை, பங்குனி ஆகிய மாதங்களில் வளர்பிறை அஷ்டமி திதியன்று தொடங்கி பௌர்ணமி வரை எட்டு நாள்களுக்கு இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதம் குறித்து சமண சமய நூல்கள் விரிவாகப் பேசுகின்றன.

சமணம்
சமணம்

'நாம் வாழும் இந்தப் பூமிக்கு 'ஜம்பூத்வீபம்' என்று பெயர். இந்த உலகில் இருந்து எட்டாவது உலகமாகத் திகழ்வது 'நந்தீஸ்வர த்வீபம்.' புண்ணிய உலகமாகக் கருதப்படும் இந்த நந்தீஸ்வர த்வீபத்தின் நான்கு திசைகளிலும், அஞ்ஜன, ததிமுக, ரசிகர என மூன்று மலைகள் அமைந்திருக்கின்றன. 'அஞ்சன மலை' என்பதற்கு 'பொன் நிறமுள்ள பர்வதம்' என்று பொருள். இதுவே அனைத்துக்கும் நடுவில் இருக்கும் மலை. இவை தவிர்த்த 16 தீர்த்தக் கிணறுகளும் 64 வனங்களும் அந்த உலகத்தில் உள்ளன.

இவை மட்டும் அந்த உலகத்தின் புகழுக்குக் காரணம் இல்லை. இந்த உலகில் மனிதர்கள் பிரதிஷ்டை செய்திருக்கும் 'ஜினாலங்கள்' போன்றே அங்கு இயற்கையாகவே 52 ஜினாலயங்கள் அமைந்துள்ளன. தேவர்கள் அனைவரும் ஆடி, கார்த்திகை, பங்குனி ஆகிய மூன்றுமாதங்களில் வரும் ஆஷ்டாந்ஹிக விரத காலத்தில் அங்கு கூடுவர். தேவேந்திரனும் சௌதர்ம இந்திரனும் அங்கு முன்னின்று பூஜைகளை நடத்துவர்' என்கின்றன சமண நூல்கள்.

சமணம்
சமணம்

'தேவமாதர்கள், எட்டு நாள்கள் நடைபெறும் இந்த பூஜைகளுக்காக, தூய நீர், செஞ்சந்தனம், வாலரிசி, நல்லமலர், சரு, தீபம், தூபம், கனிகள் ஆகிய எட்டுவிதமான மங்கலப் பொருள்களைச் சுமந்து வருவர். தேவேந்திரனே அனைத்து மூர்த்தங்களுக்கும் தினமும் அபிஷேகம் செய்வான். சௌதர்ம இந்திரன் மற்ற தேவர்களை பூஜையில் வழி நடத்துவான். தேவ மகளிர், ஆதிபகவனைத் நர்த்தனம் ஆடுவர். எட்டு நாள்கள் பூஜை முடிந்தபின், நந்தீஸ்வர த்வீபத்தில் இருக்கும் அனைத்து ஜினாலயங்களையும் வலம் வந்து வணங்குவர்.

ஆஷ்டாந்ஹிக பூஜை முறையானது, நந்தீஸ்வர த்வீபத்தின் ஒவ்வொரு திசையிலும் இருக்கும் மலையையும் அதில் இருக்கும் ஜினாலயங்களில் உள்ள ஜினப்படிமைகள் ஒவ்வொன்றையும் பூஜை செய்வதாக அமைந்திருக்கும். ஒவ்வொரு திசையிலும் ஜினபகவானின் படிமையைப் போற்றுவதன் மூலம் ஒவ்வொரு விசேஷ பலன் கிடைக்கும்' என்று சமண நூல்கள் சொல்கின்றன. இந்த விரதத்தின் மகிமையைச் சொல்லும் பூஜா விதானம், 'என்னென்ன பொருள்களைக் கொண்டு ஜின பகவானைப் போற்ற வேண்டும்' என்று விரிவாகச் சொல்கிறது.

தீர்த்தங்கரர்
தீர்த்தங்கரர்

தேவர்களும் தேவேந்திரனும் பூஜைசெய்யும் ஆஷ்டாந்ஹிக காலத்தில், நாமும் பூஜை செய்தால் பல புண்ணிய பலன்கள் கிட்டும் என்று ஆஷ்டாந்ஹிக பஞ்சமேரு பூஜா விதானம் தெரிவிக்கிறது. தினமும் நறுமலர்களைக் கொண்டும், தூய மணம் வீசும் புனித நீர்கொண்டும், தூய்மையான பால், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்புகள் கொண்டும் பூஜை செய்ய நற்பேறுகள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. மேலும் மறு ஜன்மத்தில் நன்னிலையினை அடையவும் வழிபிறக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த எட்டு நாள்களும் விரதம் இருந்தும் பூஜை செய்யலாம். இயலாதவர்கள் முதல்நாளும் கடைசிநாளும் உபவாசம் இருந்து பூஜை செய்யலாம். வீட்டில் பிரதிமைகளைப் பிரதிஷ்டை செய்ய வழியில்லை என்பதால், பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜினப் பிம்பங்கள் இருக்கும் ஆலயங்களில் பூஜை செய்வதே சிறப்பாகக் கருதப்படுகிறது.

ஜினாலயம்
ஜினாலயம்

ஆண்டுதோறும் அனைத்து ஜினாலயங்களும் இந்த பூஜை மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆஷாட ஆஷ்டாந்ஹிக நாளை (9.7.2019) தொடங்கி பௌர்ணமி தினம் வரை எட்டு நாள்கள் நடைபெறும். இந்தப் புண்ணிய நாளில் அருகக்கடவுளின் திருப்பாதத்தைச் சிந்தித்து நாம் நல்ல பலன்களைப் பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு