Published:Updated:

`சூரிய பகவானின் அருள்பெருக்கும் சித்திரை அமாவாசை!' - கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை இவைதான்

அமாவாசை...
அமாவாசை...

மேஷ ராசி செவ்வாய்க்கிரகத்துக்குரியது. சூரிய பகவான் மேஷ ராசியிலேயே உச்சமடைகிறார். உடல் ஆரோக்கியம், அந்தஸ்து, கம்பீரம் ஆகியவை வேண்டுபவர்கள் செய்ய வேண்டியது சூரிய வழிபாடு.

பொதுவாக, அமாவாசை திதி முன்னோர்கள் வழிபாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுவது. இந்தநாளில் செய்யும் தர்ப்பணம் முதலிய வழிபாடுகள் முன்னோர்களின் நல்லாசியைப் பெற்றுத்தரும் என்பது ஐதிகம். நாளை சித்திரை மாத அமாவாசை. இந்த நாள் மிகவும் விசேஷமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிலும் சூரியபகவானின் அருளைப் பெற்றுத்தரும் தினமாக இந்த அமாவாசை விளங்குகிறது என்கிறார்கள் அடியவர்கள்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்பார்கள். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை. ஜோதிடத்தில் நவக்கிரகங்களில் சூரியன் முக்கியமான கிரகமாகப் போற்றப்படுகிறார். சூரியன் ஆத்மகாரகன் மற்றும் பித்ருகாரகன். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் ஆட்சிபலம் பெற்றிருந்தால் அந்த நபர் நல்ல ஆரோக்கியமான வாழ்வைப் பெற்றிருப்பார் என்பது ஜோதிட நம்பிக்கை. அப்படி உடல் ஆரோக்கியம், அந்தஸ்து, கம்பீரம் ஆகியவற்றைத் தரும் வள்ளலான சூரியபகவான் இந்த மாதம் முழுவதும் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசி செவ்வாய்க்கிரகத்துக்குரியது. அதில் சூரியன் வரும்போது உச்சமடைகிறார்.

சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாளே அமாவாசை. நாளை சந்திரனும் மேஷ ராசியில் குறிப்பாக, அசுவினி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். சூரியனும் சந்திரனும் சந்திக்கும் இந்த நாளில் குறிப்பாக, சூரியன் மேஷ ராசியில் உச்சமடைந்திருக்கும்போது செய்யப்படும் பித்ருவழிபாடுகள் பூர்வ புண்ணியத்தை அதிகப்படுத்தும் என்கிறார்கள். மேலும், நாளை புதன்கிழமை. விஷ்ணுபகவானுக்கு உரிய நாள். சூரியனை நாராயண ஸ்வரூபமாகக் கருதிப் போற்றுவதும் உண்டு.

இந்த நாளில் வழக்கமாகத் தர்ப்பணங்கள் செய்பவர்கள் வீட்டிலேயே தவறாமல் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் வழக்கமில்லாதவர்கள் வீட்டில் சாதம் வடித்து அதில் எள் சேர்த்துக் காக்கைக்கு உணவிட வேண்டும். தங்களின் மூதாதையர்களின் படங்களுக்கு பூ சாத்தி கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். சூரியனுக்கு உகந்த ஆதித்ய ஹ்ருதயத்தைப் பாராயணம் செய்தல் அல்லது அதைக் கேட்பது மிகவும் பயன்தரும்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் செய்வது நல்லது. அது இயலாதவர்கள்

`ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே

சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே’ என்னும் வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி வழிபடலாம். இதைச் சொல்வதன் மூலம் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் பாராயணம் செய்த புண்ய பலன் கிடைக்கும்

இன்றைக்கு நம் தேவை ஆரோக்கியம். அதை அருளும் சூரிய பகவானை நாளை கட்டாயம் வழிபட்டு நம் முன்னோர்களின் ஆசிகளையும் இறைவனின் அருளையும் தவறாமல் பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு