Published:Updated:

`யோகம் அருளும் ஈச்சனாரி விநாயகர்..!' -இல்லம் தேடிவரும் இறை தரிசனம் #worshipathome

worshipathome
worshipathome

அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இங்கு வந்து வணங்கினால், வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழலாம் என்பது ஐதிகம்...

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச் செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதேநேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்ல முடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில்.

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில். ஒரு காலத்தில் ஈச்சங்காடாக இருந்த இடத்தில் அருள்பாலித்த விநாயகர் தற்போது ஈச்சனாரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

நினைத்ததை ஈடேற்றித் தருபவராக அருள்புரிகிறார் ஈச்சனாரி விநாயகர். வாகன பூஜைக்குப் பெயர் பெற்ற தலம் இது. புதிதாக வாகனம் வாங்கியவர்கள், சாவியை விநாயகரின் திருவடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கின்றனர்.

ஈச்சனாரி விநாயகர்
ஈச்சனாரி விநாயகர்

அதேபோல், அந்தச் சாலை வழியே செல்பவர்களுக்கு வழித்துணையாகவும் வருகிறார் விநாயகர் என்கிறார்கள் பக்தர்கள்!

இந்தத் தலத்தில் 27 நட்சத்திரங்களுக்குமான `நட்சத்திர பூஜை’ வெகு பிரசித்தம். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இங்கு வந்து வணங்கினால், வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழலாம் என்பது ஐதிகம்.

இங்கு தல விருட்சமாக அரசும் வேம்பும் உள்ளது. விநாயகரை வலம் வந்து இந்தத் தல மரங்களைச் சுற்றினால் திருமண வரம் கிட்டும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. 

மேலும் வாகனம் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். அவர்கள் வேண்டுதல் நிறைவேறியதும் சாவியை விநாயகர் பாதத்தில் வைத்து வேண்டிச் செல்கிறார்கள்.

நினைத்த காரியம் கைகூடும்... கூடுவாஞ்சேரி ரயிலடி மாமர சுயம்பு விநாயகர் திருக்கோயில்! #Video

ஈச்சனாரியில் எழுந்தருளியுள்ள விநாயகரிடம் மனம் உருகி, பிரார்த்தனை செய்தால் குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்வில் நல்ல பணி கிடைத்து உயர்வு பெறலாம். 

இங்கு நடைபெறும் தங்கத்தேர் பவனி வெகு சிறப்பு மிக்கது. தினமும் இங்கு காலை விநாயகர் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு