Published:Updated:

வேண்டிய வரமருளும் எட்டுக்குடி முருகன்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம் #Worshipathome

எட்டுக்குடி முருகன்
எட்டுக்குடி முருகன்

சூர சம்ஹாரம் செய்வதற்கு முருகப்பெருமான் இங்கிருந்து புறப்பட்டதாகக் கூறுகிறது தல புராணம். முருக வழிபாட்டுக்கு உகந்த சஷ்டி திதியான இன்று எட்டுக்குடி முருகனை தரிசனம் செய்வோம்.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

காண்பதற்கரிய, வேண்டும் வரங்களை அருளும் எட்டுக்குடி முருகப் பெருமான் தரிசனம்... - ராகவன், நாகை

Posted by Sakthi Vikatan on Monday, May 11, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, எட்டுக்குடி முருகன் கோயில்.

நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்திருக்கிறது எட்டுக்குடி முருகன் திருக்கோயில். ஆதிப் படை வீடு என்று அழைக்கப்படும் அற்புதத் தலம் இது. பதினெண் சித்தர்களுள் ஒருவரான வான்மீகி சித்தர் ஜீவசமாதி அடைந்த 'பள்ளிப்படை ஸ்தலம்' என்ற மற்றுமொரு சிறப்பும் உண்டு. இங்கு தல விருட்சமாக வன்னி மரமும், தீர்த்தமாக சரவணப் பொய்கையும் திகழ்கிறது.

worshipathome
worshipathome

கந்த புராணத்தில் கூறியுள்ளபடி இங்கு அருள்பாலிக்கும் திருமுருகன் சூரபதுமனை அழிப்பதற்கு முன்பாகத் தேவேந்திரனாகிய மயில் மீது ஏறி அமர்ந்துள்ள மூர்த்தமாகக் காணப்படுகிறார். அம்பறாத் தூணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் உள்ள வீரசௌந்தர்யம் உடையவராக வீற்றிருக்கும் வேலாயுதக் கடவுள்தான் இங்கு மூலவர்.

இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிராகாரத்தில் முருகனுடன் சூரபத்ம வதத்திற்குத் துணையாகச் சென்ற 9 வீரர்களுக்கும் சிலைகள் உள்ளன. சூர சம்ஹாரம் செய்வதற்கு முருகப்பெருமான் இங்கிருந்து புறப்பட்டதாகக் கூறுகிறது தல புராணம்.

எட்டுக்குடி முருகன் கோயில்
எட்டுக்குடி முருகன் கோயில்

இந்தத் தலத்தில் வேண்டுவார்கள் வேண்டும் வரத்தை அளிப்பவராக அருள்புரிகிறார் முருகப் பெருமான். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும் அருள்புரிகிறார் முருகன். குழந்தை வரம் நிறைவேறும்போது மணி கட்டி நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு. காவடி எடுத்தால் நம் துயரங்கள் அனைத்தையும் போக்கி அருள்கிறார் எட்டுக்குடி முருகன்.

அடுத்த கட்டுரைக்கு