Published:Updated:

பொய்ப்பிள்ளையை மெய்ப்பிள்ளையாக்கும் வைகாசி 7 -ம் திருநாள் வைபவம் ஏன்? - காளையார்கோயில் அற்புதங்கள்!

காளையார்கோயில்
காளையார்கோயில்

ஒரு கோபுரத்துக்காக, ஆலயத்துக்காக யாரேனும் தங்கள் உயிரைத் துறக்க முன்வருவார்களா என்று முதலில் ஐயம் கொண்டனர் ஆங்கிலேயர்கள். ஆனால, அந்தக் கோபுரத்தைக் கண்டதும் அவர்கள் அது உண்மையாக இருக்கும் என்று நம்பினர்.

வீரமும் ஆன்மிகமும் செழித்து வளர்ந்த நிலம். `கானப்பேரெயில்’ என்று சுந்தரர் மற்றும் சம்பந்தரால் போற்றிப் பாடப்பட்ட தலம். திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவராலும் பதினோராம் திருமறையில் கபிலதேவராலும், திருப்புகழில் அருணகிரிநாதராலும், அருட்பாவில் வள்ளலாராலும் போற்றப்பட்ட தலம். அற்புதங்களும் அதிசயங்களும் புராணகால நிகழ்வுகளும் அரங்கேறிய தலம். இவையனைத்துக்கும் மகுடம் சூட்டும்வகையில் மருது சகோதரர்களால் திருப்பணி செய்யப்பட்டு அவர்கள் இன்னுயிரையும் தந்து காத்த தலம். அதுதான் காளையார்கோயில் என்னும் அற்புதத் தலம்.

மருது சகோதரர்கள்
மருது சகோதரர்கள்

மருது சகோதரர்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிவகங்கைச் சீமையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். அவர்களிடமிருந்து தப்பிய மருது சகோதரர்களைக் கண்டுபிடிக்க ஆங்கிலேயர்களால் முடியவில்லை. ஆனாலும், அவர்கள் மறைந்திருப்பது எப்படியும் தங்களின் ஆட்சிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எண்ணிய ஆங்கிலேயர்கள், மருது சகோதரர்களை எப்படிப் பிடிப்பது என்று உள்ளூரில் அவர்களுக்குச் சேவகம் செய்த சிலரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் ஓர் உபாயம் சொன்னார்கள்.

மருது சகோதரர்கள், காளையார்கோயிலையும் அதன் கோபுரத்தையும் மிகவும் பக்தியோடும் ஆசையோடும் எழுப்பினார்கள். அதற்கு ஓர் ஆபத்தென்றால் அவர்கள் பொறுக்க மாட்டார்கள் என்றார்கள். அதைக்கேட்ட ஆங்கிலேயர்கள் வியந்தனர். ஒரு கோபுரத்துக்காக ஆலயத்துக்காக யாரேனும் தங்கள் உயிரைத் துறக்க முன்வருவார்களா என்று முதலில் ஐயம் கொண்டனர். ஆனால், அந்தக் கோபுரத்தைக் கண்டதும் அவர்கள் அது உண்மையாக இருக்கும் என்று நம்பினர்.

காளையார்கோயில்
காளையார்கோயில்

சுமார் 155 அடி உள்ள கோபுரம். 9 நிலை. அதன் உச்சியிலிருந்து பார்த்தால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரமும் குன்றக்குடி முருகன் ஆலயமும் தெரியும். எழில் மிகுந்த அந்தக் கோபுரத்தைக் காக்க மருது சகோதரர்கள் வருவார்கள் என்றே அவர்களுக்கும் தோன்றியது. `மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால், காளையார்கோயிலையும் அதன் கோபுரத்தையும் தகர்த்துவிடுவோம்’ என்று அறிவிக்கச் செய்தனர்.

இந்த மண்ணையும் மரபையும் நேசிக்கும் மருது சகோதரர்கள் தாங்கள் உயிரென மதிக்கும் கோயிலைக் காக்கச் சரணடைந்தனர். அவர்களைத் தூக்கிலிட ஆங்கில அரசு உத்தரவிட்டது. கடைசி ஆசையாகத் தங்களின் தலையை எப்போதும் கோபுரத்தை தரிசனம் செய்வதுபோலப் புதைக்க வேண்டிக்கொண்டனர் அந்த வீரர்கள். ஆங்கில அரசு அவர்களின் பக்தியைக் கண்டு வியந்து அவ்வாறே நிறைவேற்றியது.

சிலிர்ப்பூட்டும் இத்தகைய சரித்திரத்தைக் கொண்ட இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சில திருவிழாக்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறும். குறிப்பாக, அம்மனுக்கு ஆடித் திருவிழா, காளீஸ்வரருக்கு தைப்பூசத் திருவிழா, வைகாசி பிரம்மோற்சவம் ஆகியன முக்கியமானவை. வைகாசி பிரம்மோற்சவத்தின் 7-ம் திருவிழாவின்போது பொய்ப்பிள்ளையை மெய்ப்பிள்ளையாக்கிய வைபவம் நடைபெறும்.

காளையார்கோயில்
காளையார்கோயில்

இந்த நிகழ்வில் மக்கட்பேறு இல்லாத தம்பதிகள் கலந்துகொண்டு பிள்ளை வரம் வேண்டுவர். அப்படி வேண்டித் தங்களின் வேண்டுகோள் நிறைவேறப் பெற்றவர்கள் அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு வந்து பொம்மை ஒன்றை வாங்கிக் குளத்தில் விடுவர். பிள்ளைவரம் வேண்டுபவர்கள் அந்தப் பொம்மைகளை எடுத்துச் சென்று வைத்திருந்து அடுத்த ஆண்டு வேண்டுகோள் நிறைவேறி மழலைச் செல்வம் கிடைத்ததும் மீண்டும் அந்தப் பொம்மையைக் கொண்டுவந்து குளத்தில் விடுவர். இந்த அற்புத வைபவம் எப்படி ஏற்பட்டது?

கற்கள் பொன்னானது... பொம்மை பிள்ளையானது...

வீரசேனன் என்னும் பாண்டிய மன்னன் வாரிசு இல்லாமல் தவித்தான். அவனுக்குக் கனவில் காட்சிகொடுத்த இறைவன் ஒரு பொம்மையை பிள்ளையாகப் பாவித்துவரவும், உரிய காலத்தில் பிள்ளைவரம் தருவதாகவும் கூறினார். இதைக்கேட்ட மன்னன் ஓர் அழகிய பொம்மை ஒன்றைத் தன் மகனாகக் கருதி வளர்த்தார்.

இதே காலத்தில் அரவிந்தன் என்பவர் தொண்டித் துறைமுகப் பகுதியில் வாழ்ந்துவந்தார். பல தொழில்கள் செய்தும் லாபம் ஏற்படாது நஷ்டமே சந்தித்தவன் வேறுவழியின்றி காயவைத்த மீன்களை வாங்கி மதுரை நகர் சென்று விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்தத் தீர்மானித்தார். துறைமுகத்தில் மீனவர்களிடம் மீனை வாங்கிக் காயவைத்து அவற்றை எடுத்துக்கொண்டு மதுரையை நோக்கிப் பயணித்தான். கானப்பேரெயில் எனப்பட்ட காளையார்கோயிலை அடைந்து அங்கிருந்த அம்மன் திருக்குளக்கரையில் ஓய்வெடுக்க அமர்ந்தார்.

திருக்குளம்
திருக்குளம்

அப்போது அவன் முன்பாக அம்மன் ஒரு சிறுமிபோலத் தோன்றினாள். அந்தச் சிறுமி அரவிந்தனிடம், ``ஏன் காய்ந்த மீன்களை விற்கிறாய்... அவற்றை இந்தக் குளத்தில் போட்டுவிட்டு, இந்தக் குளக்கரைக் கற்களை அள்ளிக்கொண்டுபோ” என்றாள். அரவிந்தனுக்கு அவள் கிண்டல் செய்கிறாள் என்று தோன்றியது. ஆனால், அப்போது அவன் கொண்டுவந்த மூட்டையில் அசைவு தெரிந்தது. மூட்டையை அவிழ்த்துப் பார்த்தபோது காயவித்திருந்த மீன்கள் எல்லாம் உயிரோடு துள்ளின. இதைக் கண்ட அரவிந்தன் அதிர்ச்சி அடைந்து அந்தச் சிறுமி நின்ற இடத்தைப் பார்த்தான். ஆனால், அங்கு சிறுமியில்லை. அவள் மாயமாக மறைந்திருந்தாள். அரவிந்தனுக்கு உடல் சிலிர்த்தது. உடனே அந்தச் சிறுமி சொன்னதுபோலவே மீன்களைக் குளத்தில் போட்டுவிட்டுக் குளக்கரைக் கற்களைப் பொறுக்கி மூட்டையாகக் கட்டிக்கொண்டு மதுரை நோக்கி நடந்தான்.

மதுரை எல்லையை அடைந்ததும் அவன் மூட்டையை அவிழ்க்கக் கற்கள் அனைத்தும் பொன்னும் மணியுமாக மின்னின. அந்தக் கால வரி விதிமுறைகளின்படி ஆறில் ஒருபங்கை அவன் அரசனுக்கு வரியாகக் கட்டினான். இத்தனை பெரிய செல்வம் எப்படி ஒருவருக்குக் கிடைத்தது என்று மன்னன் விசாரிக்க, நடந்தவற்றை அரவிந்தன் மறைக்காமல் சொன்னான். இதைக்கேட்ட மன்னன் கற்களே பொன்னாகும் என்றால் என் பொய்ப்பிள்ளை மெய்ப்பிள்ளையாகாதா என்று ஆவல் கொண்டு அந்தக் குளக்கரைக்கு வந்தான். குளத்தில் பொம்மையை இறக்கி வைத்து காளீஸ்வரரையும் சொர்ணவல்லி அம்பாளையும் வேண்டிக்கொண்டான். அடுத்த நிமிடம், பொம்மை பிள்ளையானது. குளத்திலிருந்து சிவநாமம் சொல்லியபடி அந்தக் குழந்தை வெளியேறியது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் ஈசனைத் துதித்தனர். அந்தச் சிறுவனே வீரசேனப் பொற்பாண்டியன் என்கின்றன நூல்கள்.

லிங்கம்
லிங்கம்

இந்த நிகழ்வைப் போற்றும் வண்ணமே ஒவ்வொரு வைகாசி பிரம்மோற்சவத்தின் 7-ம் திருநாளில் இந்த வைபவம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழலால் நடைபெற வேண்டிய உற்சவங்கள் கோயில்களில் நிகழ்வது தடைப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் மீண்டும் அந்த நிகழ்வு நடைபெறும். அதுவரை மருது சகோதரர்கள் வணங்கிய காளீஸ்வரரை மனத்தில் நினைத்துப் போற்றுவோம். அவர் நம் வாழ்வில் நிச்சயம் அற்புதங்கள் நிகழ்த்துவார்.

அடுத்த கட்டுரைக்கு