Published:Updated:

ஐஸ்வர்யங்கள் அருளும் அரூப மகாலட்சுமி... காஞ்சிபுர திவ்ய தேசம்!

கள்வப்பெருமாள்
கள்வப்பெருமாள்

காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒவ்வொரு திவ்யதேசமும் தனித்த சிறப்பினை உடையது. அவற்றுள் ஒரு திவ்ய தேசம், காமாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் கூடுதல் சிறப்போடு திகழ்கிறது. அதுவே, 'கள்வப் பெருமாள் கோயில்'.

காஞ்சிபுரத்தை விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி என்று பகுத்துச் சொல்வதுண்டு. காரணம், அந்த அளவுக்கு இரு சமயக் கோயில்களும் நிறைந்து காணப்படும் புண்ணியபூமியாகக் காஞ்சிபுரம் விளங்குகிறது. தற்போது, காஞ்சிபுரத்தில் இருக்கும் அனைத்து திவ்ய தேசங்களுமே, அத்திவரதர் தரிசனத்தை முன்னிட்டு திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. அத்திவரதரை சேவிக்க வரும் பக்தர்கள், ஏனைய 14 திவ்ய தேசங்களுக்கும் சென்று திருமாலை சேவித்து மகிழ்கிறார்கள்.

கள்வபெருமாள்
கள்வபெருமாள்

காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒவ்வொரு திவ்யதேசமும் தனித்த சிறப்பை உடையது. அவற்றுள் ஒரு திவ்ய தேசம், காமாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் கூடுதல் சிறப்போடு திகழ்கிறது. அதுவே, 'கள்வப் பெருமாள் கோயில்.'

காஞ்சிபுரத்தின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்வது காமாட்சியம்மன் கோயில். மகா சக்தி பீடங்களுள் முக்கியமானதாகத் திகழும் காமாட்சியம்மன் கோயிலில்தான் அமைந்துள்ளது, இந்த ‘கள்வப் பெருமாள் கோயில்.’ திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் தலத்தில் மூலவராக ஆதிவராகர், 'கள்வப்பெருமாளா'க அருள்புரிகிறார். தாயார் பெயர், 'அஞ்சிலை வல்லி' நாச்சியார்.

மகா லட்சுமி
மகா லட்சுமி

ஒருமுறை, பாற்கடலில் பெருமாளும் மகாலட்சுமித் தாயாரும் அளவளாவிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் உரையாடல் தேவர்கள், அசுரர்கள், சொர்க்கம், நரகம், மாயை என்று நீண்டுகொண்டிருந்தது. அப்போது, மாயையினால் சிக்குண்ட மானிடர்க்கு அருள, அன்னை மகாலட்சுமியை பூலோகத்தில் அவதரிக்கச்செய்து அருள்பாலிக்கத் திருவுளம்கொண்டார் திருமால். அதை உணர்ந்த அன்னையும் 'அகந்தை' என்னும் மாயையால் பீடிக்கப்பட்டவள் போல பேசத் தொடங்கினாள்.

தன் அழகைத் தானே புகழ்ந்து பேசியதோடு நில்லாமல், திருமாலின் கரிய திருமேனியின் நிறத்தையும் எள்ளல் செய்யும் தொனியில் பேசினாள். இதைக் கேட்ட பெருமாள், "உன் அழகிய திருமேனி அரூபமாகட்டும்" என்று சாபமிட்டார். மூவுலகிற்கும், 'அழகு நிலையில்லாதது' என்பதை உணர்த்த, அரூபமானாள் அன்னை. 'மாலவனைச் சரணடைந்தால் மாறாத துயர் இல்லை' என்பதையும் நிகழ்த்திக்காட்ட விரும்பிய தாயார், சாப விமோசனம் தர வேண்டி திருமாலைத் துதித்தாள்.

கள்வப்பெருமாள் சந்நிதி
கள்வப்பெருமாள் சந்நிதி

அப்போது திருமால் மனம் குளிர்ந்து, "எங்கு ஒரு புண்ணிய காரியம் செய்தால் அது கோடி மடங்கு பெருகுமோ அங்கு சென்று தவம் செய்" என்று வழிகாட்டினார். பூவுலகில் அத்தகைய தலமாகத் திகழ்வது காஞ்சி மாநகரம். கலியுக பக்தர்களுக்கு அருள்செய்ய காஞ்சிபுரம் வந்து அன்னை காமாட்சியம்மன் தவம் செய்த திருத்தலத்திலேயே தவமியற்றினாள்.

தவத்தின் பயனாகத் தாயாரின் அரூபம் நீங்கியது. முன்பைவிடவும் பலமடங்கு ஒளி பொருந்தியவளாகவும் பேரழகியாகவும் தாயார் தரிசனம் கொடுத்தார். தகுந்த தருணத்தில் தாயாரைக் கரம்பிடிக்க எண்ணிய பெருமாள், இந்தத் தலத்திற்கு வந்து தாயாரின் தவக்கோலத்தினைக் கண்டார். திருமகளின் தவக்கோலம் அவரை மனம் குளிரச் செய்தது. அங்கிருந்த தூண் ஒன்றின் பின் மறைந்து நின்று, 'தாயார் தன் இருப்பை உணர்கிறாரா' என்று மறைந்து நின்று பார்த்தார். கள்வனைப் போன்று மறைந்து நின்று பார்த்ததால், இங்குள்ள பெருமாளுக்கு 'கள்வப் பெருமாள்' என்ற திருநாமம் ஏற்பட்டது. சூரியன் வருகையைத் தாமரை இயல்பிலேயே அறிந்து மலர்வதுபோல, தாயார் பெருமாளைக் கண்டதும் கண் விழித்து திருமாலைத் துதித்தாள்.

அத்தி வரதர்
அத்தி வரதர்

காமாட்சி அம்மன் கோயிலுக்கு வெளியே இருக்கும் காயத்ரி மண்டபத்தின் சுவரில், தென்கிழக்குத் திசை நோக்கி கள்வப் பெருமாள் தரிசனம் தருகிறார். இவருக்கு இடப்புறமாக காமாட்சி அம்மன் கருவறைச் சுவரில், மகாலட்சுமி தாயார் சுவாமியை வணங்கிய நிலையில் காட்சி கொடுக்கிறாள்.

Vikatan

அன்னை மகாலட்சுமி, கருவறையின் மற்றொரு சுவரில், அரூப கோலத்திலும் அமர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த அரூபத்தின் மீது குங்குமம் இட்டு வணங்கிச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த அரூப லட்சுமியை வழிபட்ட பிறகே பக்தர்கள், கள்வர் பெருமானையும் தாயாரையும் வழிபடுகிறார்கள். இவர்களை வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், தொழில் விருத்தியடையும் என்பது நம்பிக்கை. கள்வப் பெருமாளுக்கு உகந்த நைவேத்தியம் தயிர்சாதம். எனவே, கள்வப்பெருமாளை வழிபடும் பக்தர்கள், அவருக்கு தயிர் சாதத்தையே நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டு, நல்லருள் பெறுகிறார்கள்.

பெருமாள்
பெருமாள்

இங்கு, காமாட்சியம்மனுக்குப் படைக்கப்படும் அனைத்து நைவேத்தியங்களும் கள்வப் பெருமாளுக்கும் படைக்கப்படுகிறது. கள்வப் பெருமாள், குழந்தை வரம் அருளும் பெருமாளாகவும் இங்கு விளங்குகிறார். அண்ணன் தங்கைகள், காஞ்சிக்கு வந்து காமாட்சியையும் கள்வப் பெருமாளையும் வேண்டிக்கொண்டால், அவர்களுக்குள் ஒற்றுமை நிலைக்கும் என்பது நம்பிக்கை. அதனால், இங்கு குடும்பம் குடும்பமாக வந்து பக்தர்கள் வேண்டிச் செல்வதைக் காண முடியும். அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் செல்லும் பக்தர்கள், தவறாமல் கள்வப் பெருமாளையும் சேவித்து, திருவருளையும் இறையருளையும் முழுமையாகப் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு