Published:Updated:

இசை ஞானத்தை அள்ளித்தரும் கீழமாத்தூர் மணிகண்டேஸ்வரர் ஆலயம்!

அருண் சின்னதுரை
வி.சதிஷ்குமார்

திருஞானசம்பந்தர் சமணரோடு வாதிட்டு வென்று சைவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டதலங்கள் மதுரையில்தான் உள்ளன. சமணர்களுக்கும் ஞானசம்பந்தருக்கும் அனல்வாதம் புனல்வாதம் நடைபெற்றது.

மணிகண்டேஸ்வரர் ஆலயம்
மணிகண்டேஸ்வரர் ஆலயம்

மதுரை மாநகரிலும் அதைச் சுற்றியிருக்கும் திருத்தலங்களும் சிவனாரின் திருவிளையாடல்களால் உருவானவை. திருஞானசம்பந்தர் சமணரோடு வாதிட்டு வென்று சைவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தலங்கள் மதுரையில்தான் உள்ளன. சமணர்களுக்கும் ஞானசம்பந்தருக்கும் அனல்வாதம் புனல்வாதம் நடைபெற்றன. வைகை ஆற்றில் ஞானசம்பந்தரின் ஏடு விடப்பட்டது. அந்த ஏடு ஆற்றின் போக்கில் பயணப்படாமல் எதிர்த்திசையில் பயணப்பட ஆரம்பித்தது.

மணிகண்டேஸ்வரர் ஆலயம்
மணிகண்டேஸ்வரர் ஆலயம்

அப்போது கீழமாத்தூர் கிராமத்தின் அருகே ஏடு ஆற்றில் சென்றபோது, பலத்த ஓசையுடன் பல்லாயிரக்கணக்கான மணிகள் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இதைக் கேட்டு வியந்த மன்னனும் திருஞான சம்பந்தரும் அந்தத் தலத்திற்குச் சென்றனர். அப்போது குடில் அமைக்க வேலை ஆட்கள் மண்ணைத் தோண்டும் போது முதல் தோண்டலில் மண் ஆகாயத்திற்கும் பூமிக்கும் பறந்துள்ளது.

இரண்டாம் முறையும் தோண்டிய போது, தண்ணீர் வெள்ளமாக ஊற்றெடுத்துள்ளது. மூன்றாம் முறை தோண்டும்போது, அது சுயம்புவாக உள்ளே இருந்த லிங்கத்தின் மீது விழுந்தது. உடனே ரத்தம் பெருகியது. இந்த அதிசயத்தைக் கண்டு மண்ணைக் கவனமாய் தோண்டியபோது உள்ளே இறைவன் லிங்கவடிவில் இருப்பதைக் கண்டனர்.

உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி

அந்தத் திருக்காட்சியைக் கண்ட ஞானசம்பந்தர், மெய் மறந்து பாடல் ஒன்றைப் பாடித் துதித்துள்ளார். சிலையை அங்கிருந்து தூக்க முடியாமல் இருக்கவே, இறைவனின் சித்தம் அங்கே கோயில்கொள்வதுதான் என்பதை உணர்ந்த மன்னன், அங்கே ஈசனுக்கு ஒரு கற்கோயிலைக் கட்டினான். அன்று முதல் இன்றுவரை அனைவருக்கும் ஈசன் அங்கிருந்து அருள்பாலிக்கிறார்.

இங்கு ஈசனின் திருநாமம் மணிகண்டேஸ்வரர் என்பது. இறைவியோ இங்கே உமா மகேஸ்வரியாக இருந்து அருள்பாலிக்கிறார். இங்கு, ஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரமாணிக்கபெருமாள், நவகிரகம், பைரவர், கருடர், ஆஞ்சநேயர், பிரம்மா விஷ்ணு லிங்கோத்பவர், தட்சிணா மூர்த்தி, காசி விசாலாட்சி உள்ளிட்ட பல்வேறு சந்நிதிகள் அமைந்துள்ளன.

லிங்கோத்பவர்
லிங்கோத்பவர்

இந்த ஆலயம் இசைக்கலைக்கு மிக முக்கியமான தலமாக இருந்துவருகிறது. இந்தக் கோயிலில் மணி சப்தத்தைக் கேட்டபிறகு குருவிடம் இசையைக் கற்க ஆரம்பித்தால், தூய்மையான இசை ஞானத்தைப் பெறலாம் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கை. பல ஆண்டுகளுக்கு முன், இந்தத் தலத்தில் மிகபிரமாண்டமாக வீணை இசைப்போட்டிகள் நடைபெற்றதாகவும் கூறுகிறார்கள்.

இசைக்கலைஞர்கள், தங்களின் அரங்கேற்றம் மற்றும் கச்சேரிகளுக்கு முன்பாக மணிகண்டேஸ்வரரை தரிசித்து வேண்டிக்கொண்டால், அவர்களுக்குக் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் வெற்றி கிடைக்கிறது என்கின்றனர் பக்தர்கள்.

மணிகண்டேஸ்வரர்
மணிகண்டேஸ்வரர்

மணிகண்டன், அருள் மணி, மணிகண்ட பிரபு, திருவாசகமணி, முத்துமணி, பாலசுப்பிரமணியன் என்று தம் பெயரில் மணி என்ற பெயர் கொண்ட நபர்கள் இந்தத் தலத்திற்கு வந்து கோயிலின் மணியை அடித்து, பூஜை செய்தால் மிகுந்த நன்மைகள் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள். மேலும், இங்குத் திரியும் மணிப்புறாக்கள் உள்ளிட்ட பறவைகளுக்கு தானியம் வழங்குவது மிகவும் விசேஷம்.

திருஞானசம்பந்தர், இந்தத் தலத்தில் பாடிய பதிகங்கள், கல்வி ஞானத்தை அருள்பவை. அவற்றை இங்கு ஈசனின் சந்நிதி முன்பு நின்று சொல்ல கல்வியில் மேன்மையுண்டாகும் என்கின்றனர். இங்கு, பிரதோஷ பூஜை, மார்கழி பூஜை, சிவராத்திரி பூஜை, நவராத்திரி பூஜை, கார்த்திகை பூஜை உள்ளிட்ட பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தக் கோயில் குறித்து அர்ச்சகர் சுந்தரிடம் பேசினோம்.

கோயில் மணி
கோயில் மணி

"சிவபெருமான் 'மணிகண்டேஸ்வரர்' என்ற பெயரில் சுயம்பு லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி யோகவடிவில் அமர்ந்திருக்கிறார். இங்குள்ள லிங்கோத்பவரின் அமைப்பு, மிகவும் மாறுபட்ட வகையில் அமைந்துள்ளது. லிங்கோத்பவர் அருகிலேயே விஷ்ணுவும், பிரம்மாவும் தோன்றுகின்றனர். சிவபுராணக் காட்சிகளும் காணப்படுகின்றன.

Vikatan

மதுரை சித்திரைத் திருவிழா 6 -ம் திருநாளில், மணிகண்டேஸ்வரர் கோயிலின் பெருமையைப் பற்றிய சிறப்புகள் கதையாகச் சொல்லும் நிகழ்வு நடத்தப்படுகிறது. மணிகண்டேஸ்வரரை வழிபட்ட  சூரியன், சந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு இங்குச் சந்நிதிகள் காணப்படுகின்றன. இந்தத் தலம் மகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட மிகவும் உகந்தது. மகம் நட்சத்திரக்காரர்கள் வந்து வழிபட வாழ்வில் ஏற்றம் கிட்டும் என்பது ஐதிகம். இந்த ஆலயம், இந்து அறநிலையத்துறை கீழ் செயல்பட்டாலும் 50 வருடங்களுக்கு மேலாகக் கும்பாபிஷேகம் காணாமல் உள்ளது. இதனை அரசு மற்றும் ஆன்மிக ஆர்வலர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன் " என்று தெரிவித்தார்.

மணிகண்டேஸ்வரர் ஆலயம்
மணிகண்டேஸ்வரர் ஆலயம்

எப்படிச் செல்வது?

மதுரையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் மேலக்கால் சாலையில், வைகை நதிக்கு அருகில் சாலையோரம் பிரமாண்ட மணியுடன் அமைந்துள்ளது கீழமாத்தூர் மணிகண்டேஸ்வரர் ஆலயம்.