Published:Updated:

நோய் போக்கும் பாலதண்டாயுதபாணி... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

முருகன்
முருகன்

இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் தங்கள் வளைகாப்பின்போது கோயில் அர்த்த மண்டபத்தில் உள்ள வேலுக்கும் வளையல் சாத்தி வழிபடுகிறார்கள். இதனால், சுகப் பிரசவம் கிட்டும் என்பது நம்பிக்கை.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

குமரமலை
குமரமலை

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, குமரமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்.

புதுக்கோட்டையில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது புல்வயல் கிராமம். இந்தக் கிராமத்துக்கு அருகே காணப்படும் குன்றின் மீது அமைந்திருக்கிறது, குமரமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில் ஆகும்.

புதுக்கோட்டையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குமரமலை மீது அருள்புரியும் பாலதண்டாயுதபாணி...

Posted by Sakthi Vikatan on Thursday, April 30, 2020

பார்ப்பதற்கு மிகச்சிறிய மலையாக இருந்தாலும் கீர்த்தியில் பெரிய மலையாகத் திகழ்கிறது குமரமலை, பால தண்டாயுதபாணி திருக்கோயில். இப்பகுதி மக்கள் பாலதண்டாயுதபாணியை சக்தி வாய்ந்த தெய்வம் என்று போற்றுகிறார்கள். பழநி மலை முருகனுக்கு நிகரானவராக அருள்புரிகிறார் குமரமலை பாலதண்டாயுதபானி.

ஆனால், பழநி மலை முருகப் பெருமானைப் போன்று இடுப்பில் கை வைக்காமல், கைகளைத் தொங்கவிட்டபடி அருள்பாலிக்கிறார். மழித்த தலையுடன் இல்லாமல், உச்சிக் குடுமியுடன் அந்தணரைப் போல் காட்சி தருவதும் சிறப்பு எனச் சிலாகிக்கின்றனர், இந்தப் பகுதி மக்கள்.

பழநி மலைக்குச் செல்ல முடியாத பக்தர்கள் குமரமலை முருகனை தரிசித்துச் செல்கிறார்கள்.

ஸ்ரீபாலதண்டாயுதபாணியை மனதாரப் பிரார்த்தித்து, இங்கேயுள்ள மலையில், பாதத்தை வரைந்து நேர்த்திக் கடன் செலுத்தினால், வாத நோய் நீங்கும் என்பது ஐதிகம். பல கிராமங்களிலிருந்தும் பாதயாத்திரையாக வந்து பாலதண்டாயுதபாணியின் அருளைப் பெறுகிறார்கள்

திங்கள்கிழமை, அமாவாசை, விசாகம் நட்சத்திரம், கார்த்திகை நட்சத்திரம் ஆகிய நாள்களில் விரதமிருந்து முருகப் பெருமானை வணங்கினால் நினைத்த காரியங்கள் யாவும் நடைபெறும். சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும், சகல சௌபாக்கியங்கள் யாவும் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள்.

worshipathome
worshipathome

இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் தங்கள் வளைகாப்பின்போது கோயில் அர்த்த மண்டபத்தில் உள்ள வேலுக்கும் வளையல் சாத்தி வழிபடுகிறார்கள். இதனால், சுகப் பிரசவம் கிட்டும் என்பது நம்பிக்கை. கருணைக் கடவுளான கந்தவேலை வணங்கினால் போதும். அவன் அருளால் அனைத்து நன்மைகளும் கிடைக்கப்பெறும்.

அடுத்த கட்டுரைக்கு