Published:Updated:

மன வலிமை அருளும் கீழப்பாவூர் நரசிம்மர்... இல்லம் தேடி வரும் இறை தரிசனம்! #worshipathome

worshipathome
worshipathome

நரசிம்மரின் அவதாரக் காலம் வெறும் இரண்டு நாழிகை மட்டுமே. இதனால், காசியப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் ஆகியோர் நரசிம்மரின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினர். அவர்கள் மகா விஷ்ணுவை பிரார்த்தித்தனர். அவர்களுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக எழுந்தருளிய தலம், கீழப்பாவூர்.

கொரோனா தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச் செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம் அனுதினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக் கூடச் செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

வல்லமை அருளும் கீழப்பாவூர் நரசிம்மர்... இல்லம் தேடி வரும் இறை தரிசனம்! -- மகா விஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு...

Posted by Sakthi Vikatan on Friday, March 27, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில் புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவு செய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம்.

மகா விஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது, நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க எடுக்கப்பட்டவை. ஆனால், நரசிம்ம அவதாரம் மட்டுமே பக்தனுக்காக எடுக்கப்பட்டது.

நரசிம்மரின் அவதாரக் காலம் வெறும் இரண்டு நாழிகை மட்டுமே. இதனால், காசியப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் ஆகியோர் நரசிம்மரின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினர். அவர்கள் மகா விஷ்ணுவைப் பிரார்த்தித்தனர். அவர்களுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக எழுந்தருளிய தலம், கீழப்பாவூர்.

நரசிம்மர்
நரசிம்மர்

இரணியனை தன் மடியில் கிடத்தி, வதம் செய்யும் திருக்கோலத்தில் நரசிம்மர் காட்சி கொடுக்கும் கீழப்பாவூரை, `தட்சிண அகோபிலம்' என்று போற்றுவர்.

திருநெல்வேலி - தென்காசி சாலையில், சுமார் 37 கி.மீ தொலைவில் உள்ள ஊர் பாவூர்சத்திரம். இங்கிருந்து சுரண்டை எனும் ஊருக்குச் செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கீழப்பாவூர். மன்னர்கள் காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. 1,100 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டது இவ்வாலயம். தலபுராண ரீதியாக, நான்கு யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தைச் சார்ந்தது என்கிறார்கள்.

இத்தல பெருமாளுக்கு `முனைஎதிர் மோகர் விண்ணகர்’ என்னும் பெயர் உண்டு. `முனைஎதிர் மோகர்’ என்பதற்கு `போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர்’ என்பது பொருளாகும்.

பதினாறு கரங்களுடன் கூடிய கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிறந்த வரப்பிரசாதி. வேண்டிய வரங்களை அருள்பவர். செவ்வாய்க்கிழமைகளில் சுவாமியை தரிசித்து, நீராஞ்சன தீபம் ஏற்றிவைத்து வழிபடுவது விசேஷம். அதாவது, தாம்பூலத் தட்டில் பச்சரிசி பரப்பி வைத்து, அதன் மீது உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகளில் நெய் நிரப்பி, தீபம் ஏற்றி வைத்து, 16 முறை வலம் வந்து வழிபட்டால் கடன் பிரச்னைகள் நீங்கும்.

நரசிம்மர்
நரசிம்மர்

சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபட்டால், இழுபறியான வழக்குகள், திருமணத் தடை, நோய், பில்லி சூனியம் போன்ற தீவினைகள் ஆகிய அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. ஆலயத்தின் அருகிலேயே உள்ள நரசிம்ம தீர்த்தமும் மகத்துவம் வாய்ந்தது!

சுவாதி, செவ்வாய்க்கிழமைகள் மட்டுமன்றி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள், நரசிம்ம ஜயந்தி, பிரதோஷ தினம் ஆகிய நாள்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இத்தலத்தில் நரசிம்மரின் மார்பில் வீற்றிருக்கும் லட்சுமிதேவியை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது ஐதிகம். நரசிம்மருக்கு இளநீர், பால், பானகம் ஆகியவை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். நெய்தீபம் ஏற்றி வழிபட பிரார்த்தனைகள் உடனே நிறைவேறும்.

திருமணத்தடைகள் நீங்கும், கடன் தொல்லைகளுக்குத் தீர்வு கிட்டும். நீண்ட நாள் பிணி சரியாகும்.

`ஸ்ரீ நரசிம்ஹாய நம:' என்று சொல்லி ஒரு மலரை சமர்ப்பித்தாலே, வேண்டும் பலன் நமக்குக் கிட்டும். வேண்டிய மன வலிமையை அருளுவார் நரசிம்மர்.

அடுத்த கட்டுரைக்கு