Published:Updated:

1,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மல்லிகார்ச்சுனர் திருக்கோயில்... ஊர்மக்களே புனரமைத்த அதிசயம்!

கண்ணதாசன் அ

'பக்தன் வருந்த பரமன் பொறுப்பானா?' அன்று இரவே அவரின் கனவில் தோன்றி மல்லிகார்ச்சுனராகக் காட்சிகொடுத்த ஈசன், `யாம் குபேர திசையில் உள்ள நீர் தடாகம் அருகே உனக்குக் காட்சியளிப்போம். எம்மை நீ வழிபட்டு வேண்டிய பலனை அடைவாயாக’ எனக் கூறி மறைந்தார்.

Malligarchunar temple
Malligarchunar temple

சிவபெருமான், பிறப்பும் இறப்பும் இன்றி பரம்பொருளானதால் 'பரமசிவம்' என அழைக்கப்படுபவர். பக்தர்களின் வாழ்வில் திருவிளையாடல்கள் புரிந்து அருள்பாலிப்பவர். இதற்குப் பல்வேறு புராணங்கள் நமக்குச் சான்றாக அமைகின்றன. அவ்வாறு திருவிளையாடல் புரிந்து பக்தனுக்குக் காட்சிகொடுத்த தலம்தான் செண்டூர்.

Malligarchunar
Malligarchunar

திண்டிவனம் அருகே உள்ளது செண்டூர் என்னும் கிராமம். இங்கு சுமார் 1,300 வருடத்துக்கு முன்பு சிவபக்தர் ஒருவர் வாழ்ந்துவந்தார். வறுமையான வாழ்விலும் அவர் சிவன் மேல் கொண்ட பக்தியைக் கைவிடவில்லை. சிவத்தலங்களுள் முக்கியமானது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஶ்ரீ சைலம். இங்கு சிவபெருமான் மல்லிகார்ச்சுனராகக் காட்சிகொடுக்கிறார். அந்தச் சிவபக்தருக்குத் தன் வாழ்நாளில் எப்படியாவது மல்லிகார்ச்சுனரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், காலம் செல்லச் செல்ல 'தன்னால் ஶ்ரீசைலம் வரை சென்று தரிசிக்க முடியாமல் போய்விடுமோ' என்று வருந்த ஆரம்பித்தார். அந்த வருத்தமே அவரின் உடலை நலிவுறச் செய்தது.

'பக்தன் வருந்த பரமன் பொறுப்பானா?' அன்று இரவே அவரின் கனவில் தோன்றி மல்லிகார்ச்சுனராகக் காட்சிகொடுத்த ஈசன், ‘யாம் குபேர திசையில் உள்ள நீர் தடாகம் அருகே உனக்குக் காட்சியளிப்போம். எம்மை நீ வழிபட்டு வேண்டிய பலனை அடைவாயாக’ எனக் கூறி மறைந்தார்.

சுவாமியைத் தற்காலிகமாக அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் வைத்து வழிபட்டோம். அப்போது வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றவர்கள் உடனடியாகப் பலன் அடைந்தனர். இதனால் சுவாமியின் சக்தி அனைவருக்கும் விளங்கியது. உடனடியாகத் திருப்பணிகளை விரைவு படுத்தினோம்.

இதைக் கண்டு மெய் சிலிர்த்த பக்தர் திடுக்கிட்டு விழித்தார். ஈசன் சொன்ன திசைநோக்கி நடந்தார். அப்போது அங்கிருந்த தடாகம் அருகே சுயம்புவாகப் பாணலிங்கம் ஒன்று எழுந்தருளியிருப்பதைக் கண்டு நெகிழ்ந்தார். ஆனந்தக் கூத்தாடினார். மறுநாள் அவர் அங்கு ஈசனைத் தொழுதுகொண்டிருப்பதைக் கண்ட மக்கள் செய்தி அறிந்து ஈசனுக்கு அங்கே ஒரு கோயிலை எழுப்பினர். சுவாமிக்கு 'மல்லிகார்ச்சுனர்' என்றே திருநாமம் வைத்துப் பூஜித்தனர். 1,300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த ஆலயம் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்தது.

கடந்த சில ஆண்டுகளாக செண்டூர் மக்கள் மனதில் சிதிலமடைந்திருந்த சிவன் கோயில் குறித்த வருத்தம் மிகுதியானது. ஈசனின் ஆலயத்தை மீண்டும் பொலிவுறச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டனர். இதுகுறித்து இந்தத் திருப்பணியில் ஈடுபட்ட செண்டூரைச் சேர்ந்த முத்துவிடம் பேசினோம்.

Sendur muththu
Sendur muththu

"இது மிகவும் பழைமையான சிவாலயம். இங்கு கோயில்கொண்டிருந்த ஈசனின் நாமம் மல்லிகார்ச்சுனர். அம்பிகையின் திருப்பெயர் பிரம்மராம்பிகை. இங்கு 3.5 அடி உயர நந்தி மிகவும் எழிலார்ந்த கோலத்தில் காணப்படுகிறது. இத்தகைய பெருமை மிகுந்த ஆலயம் சிதிலமடைந்துகிடப்பது கண்டு மனதை வருந்தியது. ஊர்மக்கள் அனைவரும் கூடி இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கத் தொடங்கினோம்.

சுவாமியைத் தற்காலிகமாக அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் வைத்து வழிபட்டோம். அப்போது வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றவர்கள் உடனடியாகப் பலன் அடைந்தனர். இதனால் சுவாமியின் சக்தி அனைவருக்கும் விளங்கியது. உடனடியாகத் திருப்பணிகளை விரைவு படுத்தினோம். சுவாமியின் கருணையால் வேண்டுதல் நிறைவேற பெற்றவர்கள் தாராளமாக நிதியுதவி அருள கோயில் திருப்பணிகள் விரைவாக நடந்தன. மிகவும் சிறப்பாக அனைத்தும் முடிந்து கடந்த மாதம் கும்பாபிஷேகமும் நடைபெற்றுவிட்டது" என்று மகிழ்வோடு கூறினார்.

Vikatan

இந்தக் கோயில் குறித்த கல்வெட்டுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. சுவாமியின் அமைப்பைக் கண்டு வரலாற்று அறிஞர்கள் 'இது 1,300 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம்' என்று தெரிவித்தனர். ஆலயத்தைப் புனரமைக்கும்போது மற்றுமொரு பழைமை வாய்ந்த பாண லிங்கம் கிடைத்ததாகவும், அதற்குரிய ஆவுடையார் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர். 'கல்வெட்டுகள் அல்லது கோயில் சார்ந்த ஆதாரங்கள் ஆலயத்தின் சுற்றுப் பகுதிகளில் புதைந்திருக்கலாம். எதிர்காலத்தில் இங்கு ஆய்வு மேற்கொண்டால் ஏதேனும் தகவல்கள் கிடைக்கலாம்' என்கின்றனர் ஊர்மக்கள்.

இங்கு மூலவராக மல்லிகார்ச்சுனரும் அம்பிகை பிரம்மராம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். பிற கோஷ்ட தெய்வங்களாக விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

இவர்களோடு, துர்கை, சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. இங்கு நவகிரக சந்நிதியும் அமைந்துள்ளது. மேலும் அகோர வீரபத்திரர், கால பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்புரிகின்றனர். இத்தகைய சிறப்புகளையுடைய இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஜூலை 8-ம் தேதி முடிந்து தற்போது 48 நாள் மண்டல அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

malligarchunar temple
malligarchunar temple

எப்படிச் செல்வது?

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டைக் கடந்து மூன்று கி.மீ பயணித்தால் சாலையின் வலது புறத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். பேருந்து மற்றும் ஷேர்ஆட்டோ வசதிகள் உள்ளன.

இன்று பிரதோஷம். நூற்றாண்டுகளுக்குப் பிறகு பொலிவு பெற்றிருக்கும் மல்லிகார்ச்சுனரை வழிபட்டு பேறு பெறுவோம்.