Published:Updated:

வரமாய் வாய்த்திருக்கும் மத்யாஷ்டமி, அவிதவா நவமி... இன்றும் நாளையும் மறக்காமல் முன்னோரை வழிபடுங்க!

Mathyaastami
Mathyaastami

இன்று மத்யாஷ்டமி, நாளை அவிதவா நவமி... இன்றும் நாளையும் முன்னோரை வழிபடுவது மிகவும் சிறப்புமிக்கதாகும்.

ஆவணி பௌர்ணமிக்குப் பின் வரும் 15 நாள்களே மஹாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.  பித்ருக்கள், பித்ரு லோகத்திலிருந்து வந்து பூமியில் தங்கியிருக்கும் நாள்கள் இவை. ஆதலால், மஹாளயபட்சத்தின் 15 நாள்களுமே முன்னோர் வழிபாடு செய்ய ஏற்றவை. தாய் தந்தைக்கு மட்டுமல்லாது இறந்துபோன பிற உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த நாள்களில் தர்ப்பணம் முதலிய காரியங்களைச் செய்து வழிபடலாம் என்பது இதன் சிறப்பு.

Mathyaastami
Mathyaastami

இதில், சில குறிப்பிட்ட தினங்கள் விசேஷமானவை. அன்று செய்யும் புண்ணிய காரியங்கள் பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட இரு தினங்கள் மத்யாஷ்டமி மற்றும் அவிதவா நவமி ஆகியன.

மத்யாஷ்டமி

மஹாளயபட்சத்தில் மத்தியில் வரும் அஷ்டமி என்பதால், அது மத்யாஷ்டமி என்று போற்றப்படுகிறது. இந்த தினம், தோஷங்கள் அற்ற தினமாகக் கருதப்படுகிறது. ஏதேனும் காரணங்களால் மற்ற நாள்களில் முன்னோர்களுக்கான தர்ப்பணம் முதலான சடங்குகளைச் செய்யமுடியாதவர்கள், இந்த நாளில் செய்யலாம். இதற்கு முன்பு சிரார்த்தம் மற்றும் தர்ப்பணங்கள் செய்யத் தவறியவர்கள், மத்யாஷ்டமி அன்று அந்தக் காரியங்களைச் செய்ய, தோஷங்கள் நீங்கி புண்ணிய பலன்கள் கிட்டும் என்பது இந்த நாளின் விசேஷம்.

Temple
Temple

மத்யாஷ்டமி அன்று திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வந்தால், அந்த நாள் ஆருத்ராஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. ஆருத்ராஷ்டமி, சிவ வழிபாட்டுக்கு உகந்த தினம். இந்த நாளில் முன்னோரை வழிபட்டு, சிவ வழிபாடும் சிவாலய தரிசனமும் செய்வது நற்பலன்களை அருளும்.

அவிதவா நவமி

மத்யாஷ்டமிக்கு அடுத்துவரும் நவமி, அவிதவா நவமி என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இந்த நாளில், நம் குடும்பத்தில் சுமங்கலியாக மரணித்த பெண்களை நினைத்து வழிபட வேண்டும். சுமங்கலியாக இறந்த பெண்கள், அம்பிகையின் வடிவமாய் மாறி நம் குடும்பத்தைக் காப்பர். அப்படிப்பட்ட பெண்களை நினைவுகூர்ந்து, இந்த நாளில் அவர்களுக்குரிய கர்மா காரியங்களைச் செய்வது சுமங்கலிகளின் பரிபூர்ண ஆசியைப் பெற்றுத்தரும்.

Mathyaastami
Mathyaastami

மேலும், இந்த நாள்களில் வறியவர்களுக்கு வஸ்தரதானம் செய்வது, மிகுந்த ஆசீர்வாதத்தையும், பித்ருக்களுக்கு நற்கதியையும் அளிக்கும் என்பதால், இயன்ற அளவு தானம்செய்து பித்ருக்களின் ஆசிகளைப் பெறலாம். இன்று (22.9.19) மத்யாஷ்டமி, நாளை (23.9.19) அவிதவா நவமி. தவறாமல் முன்னோர்களை வழிபட்டு வளமான வாழ்வை அடைவோம்.

அடுத்த கட்டுரைக்கு