Published:Updated:

சுயம்புவாய்த் தோன்றி பக்தர்களுக்கு அருள் செய்யும் 1000 ஆண்டுப் பழைமையான முண்டகக் கண்ணியம்மன் கோயில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முண்டகக்கண்ணியம்மன் கோயில்
முண்டகக்கண்ணியம்மன் கோயில் ( சி.வெற்றிவேல் )

ரேணுகாதேவியின் அவதாரங்களுள் ஒன்றாகவும், சப்த கன்னிகைகளுள் ஒருவராகவும் கருதப்படும் முண்டகக்கண்ணி அம்மன், இந்தத் தலத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை மாநகரின் மையமாகத் திகழ்வது 'மயிலாப்பூர்'. மயிலை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது கபாலீஸ்வரர் கோயில்தான். அதனால்தான், ‘மயிலையே கயிலை... கயிலையே மயிலை’ என்கிறார்கள் பக்தர்கள். இந்த மயிலையின் காவல் தெய்வங்களாகத் திகழ்பவர்கள், கோலவிழி அம்மன் மற்றும் முண்டகக்கண்ணி அம்மன்.

முண்டகக்கண்ணியம்மன்
முண்டகக்கண்ணியம்மன்
சி.வெற்றிவேல்

ரேணுகாதேவியின் அவதாரங்களுள் ஒன்றாகவும், சப்த கன்னிகைகளுள் ஒருவராகவும் கருதப்படும் முண்டகக்கண்ணி அம்மன், இந்தத் தலத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தில், அன்னையின் கருவறை ஓர் எளிய தென்னங்கீற்றுக்கொட்டகைதான். இங்கு, கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அம்மனை , 'விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள்' என்ற பொருளில் 'முண்டகக் கண்ணியம்மன்' என்கின்றனர்.

முண்டகக்கண்ணி அம்மனை வழிபடும் பெண்கள், அவரைத் தாயாகவே ஏற்று வேண்டிக்கொள்கிறார்கள். கோயிலில் எப்போதும் பெண்கள் கூட்டத்தை அதிகமாகக் காணமுடியும். அம்மனும் பெற்ற தாயைவிட வாஞ்சையுடன் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகிறாள். கோயிலில், அம்மன் சந்நிதிக்கு எதிரே மிகப்பெரிய அரசமரம் ஒன்று உள்ளது.

அதன்கீழ், நாக கன்னிகளின் விக்கிரகங்கள் காணப்படுகின்றன. இந்த நாக கன்னிகளுக்கு பால் ஊற்றி, அரசமரத்தை மூன்று முறை சுற்றிவந்து வணங்குகிறார்கள் பக்தர்கள். இதேபோன்று, அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் விழுதுகள் இல்லாத அபூர்வ கல்லால மரமும் புற்றுடன்கூடிய மூன்றடி கல்நாகமும் இருக்கின்றன. இந்தக் கல்லால மரம்தான் தலமரமாக வணங்கப்படுகிறது. அந்தப் புற்றில் நாகம் ஒன்று வாழ்வதாகவும் தினமும் இரவு நேரத்தில், அந்த நாகம் கோயிலுக்குள் வந்து அம்மனை வழிபடுவதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்மனின் திருப்பெயரான 'முண்டகக் கண்ணியம்மன்' என்பதில் 'முண்டகம்' என்றால் 'தாமரை' என்று பொருள். 'தாமரை மலர் போன்ற கண்களை உடையவள்' என்பதாலும், 'தாமரை மொட்டு' போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள் என்பதாலும் அம்மனுக்கு 'முண்டகக் கண்ணி' என்று பெயர் ஏற்பட்டதாகத் தலபுராணம் கூறுகிறது.

முண்டகக்கண்ணியம்மன் கோயில்
முண்டகக்கண்ணியம்மன் கோயில்
சி.வெற்றிவேல்

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது கோயில் இருக்கும் பகுதி, குளமாக இருந்ததாம். அப்போது, அந்தக் குளக்கரையில் பழைமையான ஆலமரம் ஒன்றும் இருந்தது. அந்த ஆலமரத்தடியில்தான் அன்னை சுயம்புவாக வெளிப்பட்டாள் என்கின்றனர். இங்கு, மூலவராக வீற்றிருக்கும் அம்மனுக்கு உருவம் இல்லை. தாமரை மொட்டு போன்று காட்சியளிக்கும் சுயம்பின் உச்சிப் பகுதியில், சந்தனத்தைக் குழைத்து உருவம் செய்து வழிபடுகிறார்கள். சந்தன உருவத்தில் குங்குமம் வைத்து, தலைக்குப் பின்புறத்தில் நாக கிரீடம் சூட்டிப் பார்க்கும்போது அம்மன் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதைப் போன்றே இருக்கும். மூலவர் சந்நிதிக்கு இடப்புறத்தில் உற்சவர் சந்நிதி இருக்கிறது.

ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட, அவற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்கின்றனர். அம்மை மற்றும் கண் தொடர்பான நோய்கள் தீர, இந்த அம்மனை வழிபடலாம் என்பது மேலும் சிறப்பு. தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி வரம், மகப்பேறு, வீடு வாகன வசதிகள் என அனைத்தையும் அருள்பவள் இந்த அம்மன்.

பொங்கல் வழிபாடு
பொங்கல் வழிபாடு
சி.வெற்றிவேல்

நாகதோஷம் இருப்பவர்கள், முண்டகக் கண்ணி அம்மனை வழிபட்டு, நாககன்னி சிலையை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாள்களுக்கு நீரிலேயே நாககன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கும் மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள். அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோயில், திருவிழாக்கோலம் பூண்டுவிடும். ஆடி மாதம் முண்டகக் கண்ணியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பு.

ஆடி வெள்ளிக்கிழமையன்று முண்டகக்கண்ணியம்மனுக்கு பொங்கல் வைத்துக்கொண்டிருந்த பெண் பக்தர் ஒருவரிடம் பேசினோம்.

“என் பேரு ரோஸ். திருவான்மியூர்லருந்து வர்றேன். நாப்பது வருசமா மயிலாப்பூர்லதான் இருந்தேன். இப்ப திருவான்மியூர் போய் இருபது வருசம் ஆகுது. மயிலாப்பூர்ல தங்கிருந்த காலத்துல இருந்து இப்பவரைக்கும் தவறாம ஆடிமாசம் பொங்கல் வெச்சி இந்த அம்மாவ கும்புட்டுக்கிட்டு இருக்கேன். எனக்கு எல்லாமே இந்த அம்மாதான்.

பொங்கல்
பொங்கல்
சி.வெற்றிவேல்

எந்தக் காரியம் செஞ்சாலும் இந்த அம்மாவ நெனச்சிக்கிட்டுதான் செய்வோம். அம்மனுக்கு பொங்கல் வெச்சி, நாகேந்திரனுக்கு முட்டை, பால் ஊத்தி வேண்டிக்குவோம். இந்த அம்மா ரொம்பவும் சக்தி வாய்ந்தவங்க” என்றார் பக்திப் பரவசத்துடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு