திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

கரை சேர்த்தாள் கங்கை!

கங்கா தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கங்கா தரிசனம்!

ஆன்மிகச் சிறு கதை - தங்கம் கிருஷ்ணமூர்த்தி

புனித நகரமான காசியில் அன்று மன்னர் மகள் மதிவாணியின் சுயம்வரம். பல நாட்டு மன்னர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர்.அந்த மன்னர்களைப் பார்த்து, ‘`அனைவருக்கும் வணக்கம். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்தக் கூண்டில் அடைபட்டுள்ள சிங்கத்தை அடக்கி வெற்றி பெறுபவருக்கு என் புதல்வி மாலை சூட்டுவாள்!’’ என்று அறிவித்தார் காசி மன்னர்.

கரை சேர்த்தாள் கங்கை!
Diy13

‘கூண்டுக்குள் உள்ள சிங்கத்தை அடக்குவதா?’ என்று பல அரச குமாரர்கள் சற்று பின்வாங்கினர். ஆனால், திரிலோசனன் என்பவன் இறைவனை வணங்கியபடி கூண்டின் கதவைத் திறந்து உள்ளே புகுந்தான். தன் மீது பாய்ந்த சிங்கத்துடன் கடுமையாகப் போராடி, அதை அடக்கினான். வேத கோஷங்கள் முழங்க, மதிவாணி அவனுக்கு மாலை சூட்டினாள்.

அன்று மாலை மதிவாணியுடன் சென்று கங்கையில் நீராடி, இறைவனை தியானித்தான் திரிலோசனன். அப்போது அவன் மீது பொறாமை கொண்ட ஒரு மன்னன். பின்புறமாக வந்து வாளால் திரிலோசனனை வெட்டிக் கொன்றான்.

காசி நகரமே துன்பத்தில் ஆழ்ந்தது. திருமணமான அன்றே கணவனை இழந்த மதிவாணி அழுது புலம்பினாள். நள்ளிரவு வேளையில் கங்கைக் கரையை அடைந்த அவள், ‘‘தாயே... கங்கையம்மா, கணவர் சென்ற இடத்துக்கே நானும் செல்ல விரும்புகிறேன். என்னை ஏற்றுக் கொள்!’’ என்று கதறியவாறு கங்கையில் பாய்ந்தாள்.

கங்காதேவி அவளை கௌதமரின் ஆசிரமத் துக்கு அருகே ஒதுக்கினாள். கௌதமரும் மதிவாணியைக் காப்பாற்றி, அவள் கதையைக் கேட்டு தேற்றினார். ‘‘பெண்ணே... வருந்தாதே! மனதை ஒருமுகப் படுத்தி தவம் செய்து ஆத்மசாந்தி அடைவாயாக. உன் கழுத்தை அலங்கரிக்கும் திருமாங்கல்யத்துடன் நீ மறுபிறவி எடுப்பாய். திரிலோசனன் அப்போது சூரிய குலத்தில் பிறப்பான். உனது மாங்கல்யம் அப்போது அவன் கண்களுக்கு மட்டுமே தெரியும். அதன் பின்னர் நீங்கள் இணை பிரியாமல் வாழ்வீர்கள்!’’ என்று கௌதம முனிவர் திருவாய் மலர்ந்தருளினார்.

அதன் பின் மதிவாணி அவரது ஆசிரமத்திலேயே தங்கித் தவமியற்றி ஆவி பிரிந்தாள். அவளே மறுபிறப்பில் சந்திரமதி எனும் பெயரில் பிறந்தாள். திரிலோசனன் அரிச்சந்திரனாகப் பிறந்து சுயம்வரத்தில், சந்திரமதியின் திருமாங்கல்யத்தைக் கண்டு கூறினான். இவ்வாறுதான் சந்திரமதி அரிச்சந்திரனை மணம் புரிந்தாள். (9.9.2007 இதழிலிருந்து...)