Published:Updated:

சந்திராஷ்டமத்தால் துன்பப்படுபவர்களுக்கு அருமருந்தாகும் சங்கடஹர சதுர்த்தி இன்று!

சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி

நவகிரகங்களில் சந்திரன் மனோகாரகன். மனதில் உண்டாகும் எண்ணங்களின் அதிபதி. சந்திரன் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும்போது ஒருவருக்கு மனதில் எண்ணத் தடுமாற்றங்கள் உண்டாகும். தவறான வார்த்தைகளைப் பேசி அதனால் துன்பப்படுவார்கள்.

விநாயகர், முழுமுதற்கடவுள். அதே நேரம் மிகவும் எளிமையானவர். விநாயகர் வழிபாட்டைப்போல எளிமையான வழிபாடு இல்லை. பிடித்துவைத்தால் பிள்ளையார் என்பார்கள் பெரியோர்கள். அவரை மஞ்சள் பிடித்து அதில் ஆவாஹனம் செய்வதும் வழிபடுவதும் எளிது. பிள்ளையாருக்கு அறுகம்புல்லும் எருக்கம்பூக்களுமே விசேஷம். காரணம் இது எளிய மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் பொருள்கள். ஆகச் சிறந்த வழிபாடு தோப்புக்கரணம். இப்படி எளிமையின் அடையாளமாக விளங்கும் விநாயகரை வழிபட உகந்த நாள்களில் சதுர்த்தியும் ஒன்று. சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் அனைத்து சங்கடங்களும் நீங்கும் என்பதால் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

விநாயகர்
விநாயகர்

நவகிரகங்களில் சந்திரன் மனோகாரகன். மனதில் உண்டாகும் எண்ணங்களின் அதிபதி. சந்திரன் ஒரு ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும்போது ஒருவருக்கு மனதில் எண்ணத் தடுமாற்றங்கள் உண்டாகும். தவறான வார்த்தைகளைப் பேசி அதனால் துன்பப்படுவார்கள். அனைவருக்கும் இது பொதுவான எச்சரிக்கை என்றாலும் ஒரு சில ஜாதகக்காரர்களுக்கு இந்த நாள்கள் மிகவும் துன்பம் தருவதாகச் சிலர் எண்ணுவதுண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு அருமருந்து சங்கட ஹர சதுர்த்தி.

சங்கடஹர சதுர்த்தி அன்று மாலையில் தவறாமல் விநாயகரை வழிபட்டுவந்தால் சந்திரனின் அருள் கிடைக்கும். சந்திரன் தன் அகந்தையால் தகாத வார்த்தை பேசியே விநாயகரின் சாபத்துக்கு ஆளானார். பின்பு தன் தவற்றை உணர்ந்து விநாயகரை வழிபட்டு தன் சாபத்தை மாற்றியமைத்துக்கொண்டார். எனவே சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுபவர்களுக்குச் சந்திரனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அதனால் தேவையற்ற சிந்தனைகள் சந்திராஷ்டம தினங்களில் ஏற்படாது சந்திரன் அருள் செய்வார்.

சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி

இந்த நாள் மாலையில் தவறாமல் சந்திர உதய நேரத்தில் விநாயகரை நினைத்து வழிபடுங்கள். வீட்டிலிருந்தால் விநாயகர் படம் அல்லது விக்ரகத்துக்கு மலர்கள் சாத்தி விநாயகர் அகவல் படியுங்கள் அல்லது கேளுங்கள். விநாயகருக்கு எளிமையாக ஒரு பழம் அல்லது பொரி வைத்து வழிபடுங்கள். அறுகம்புல் கிடைத்தால் கொஞ்சம் சாத்துங்கள். இவ்வாறு செய்து தீபாராதனை காட்டி வழிபட்டுப் பின் சந்திரனை வழிபடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வாழ்வில் உள்ள சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்கிறார்கள் ஆன்றோர்கள். மனத்தின் அதிபதி சந்திரன். மனவலிமை அதிகரித்தால் செய்யும் செயல்கள் வெற்றி அடையும் என்பதுதானே அறிவியல். அந்த மனவலிமையைப் பெற இன்று விநாயகரையும் சந்திரனையும் வழிபட்டுப் பயன்பெறுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு