Published:Updated:

சரவணனுக்கு சஷ்டி விரதம்... அண்ணாமலையாருக்கு அபிஷேகம்... இன்று முடிகிறது அக்னி நட்சத்திரம்!

அண்ணாமலையார்
அண்ணாமலையார்

சஷ்டி முருகப் பெருமானுக்கு உரிய திதி. ஆறுமுகனை திதிகளில் ஆறாவது திதி அன்று ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது மிகவும் பயன் தருவதாகும். ஒரு சஷ்டி திதியில்தான் முருகப் பெருமான் சூரனை வதம் செய்தார்.

இறைவனின் திருவருளைப் பெற நமக்கு வாய்த்திருக்கும் நாள்களே விரத நாள்கள். அனைத்து நாள்களிலும் நாம் இறைவனை வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட இயலாதவர்கள் குறைந்தபட்சம் பெரியவர்கள் வகுத்துக்கொடுத்திருக்கும் சில முக்கிய நாள்களில் கட்டாயம் வழிபட வேண்டும். மாதத்தில் இரு தினங்கள் விரதமிருந்து வழிபடுவதன் மூலம் நம் உடலும் மனமும் புத்துணர்ச்சி கொள்ளும் என்பதை அறிந்த நம் முன்னோர்கள் அவற்றுக்காக விரத நாள்களை உருவாக்கினர். சிவபெருமானை விரதமிருந்து வழிபட விரும்புகிறவர்களுக்கு பிரதோஷ தினமும் விஷ்ணுவை வழிபட விரும்புகிறவர்களுக்கு ஏகாதசி திதியும் முருகக் கடவுளை வழிபட விரும்புகிறவர்களுக்கு சஷ்டி திதியையும் உகந்த திதிகளாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

சஷ்டி முருகப் பெருமானுக்கு உரிய திதி. ஆறுமுகனை திதிகளில் ஆறாவது திதி அன்று ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது மிகவும் பயன் தருவதாகும். ஒரு சஷ்டி திதியில்தான் முருகப் பெருமான் சூரனை வதம் செய்தார். தேவர்கள் அசுரர்களிடம் அடிமைப்பட்டுச் சிறையில் வாடினர். அவர்களை விடுவிக்க முருகக் கடவுள் அசுரனுடன் போர்புரிந்து அவனை அழித்தார். சஷ்டி திதி அன்று முருகப் பெருமான் அவர்களின் துயர் அழியுமாறு அசுரனை அழித்தார். அதேபோன்று தீராத கஷ்டங்கள் இருப்பவர்கள் முருகக் கடவுளை விரதமிருந்து வழிபடத் துன்பங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

இன்றைய சஷ்டிவிரதம் மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது. மே 4 -ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்று முடிவடைகிறது. இன்று பெரும்பாலான சிவாலயங்களில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி அபிஷேகங்கள் நடைபெறும். குறிப்பாக, ஈசன் அக்னி ரூபமாகவே எழுந்தருளிய அக்னித் தலமான திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இன்று (28.5.2020) அக்னிநட்சத்திரம் தோஷ நிவர்த்தியை முன்னிட்டும், உலகநலன், வைரஸ்வியாதி நிவர்த்திக்காகவும் பிரார்த்தனை செய்து 108 கலசம் ஸ்தாபனம் செய்து பூஜை, ஹோமம், அபிஷேகம் ஆகியன செய்ய ஆலய சிவாசார்யர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். நேற்றே கலசங்கள் தயார் செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இன்று அண்ணாமலையாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்தனர்.

இன்று நாள் முழுவது சஷ்டி திதி உள்ளது. இரவு 9.14 மணிக்குப் பிறகே சப்தமி திதி பிறக்கிறது. இந்த நாளில் சஷ்டி விரதம் இருப்பது மிகவும் பலன்களைத் தரும். முடிந்தவர்கள் உபவாசம் இருக்கலாம். மற்றவர்கள் ஒரு பொழுது உணவு தவிர்த்தும் விரதம் இருக்கலாம். நாள் முழுவதும் கந்தசஷ்டி கவசம், வேல்மாறல் ஆகியவற்றைப் பாராயணம் செய்வது விசேஷம். இரவு 9.15-க்கு மேல் சப்தமி திதி தொடங்கியதும் முருகப் பெருமானை வணங்கி பால் நிவேதனம் செய்து அதை அருந்தி விரதத்தை முடிக்கலாம். நாளைக் காலை எழுந்துநீராடி, நீறுபூசி முருகனை வழிபட்டு நம் அன்றாடங்களைத் தொடரலாம்.

ஆலயம் சென்று வழிபட இயலாத இந்த அசாதாரண சூழ்நிலையில் இன்று நாம் வீட்டில் விரதமிருந்து முருகக் கடவுளையும் அண்ணாமலையாரையும் மனதால் துதித்து வழிபடுவதன் மூலம் சகல நலன்களையும் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு