பிரீமியம் ஸ்டோரி

ஆறுமுக சிவம் என்று கந்தனைப் போற்றுவர் ஞானப் பெரியவர்கள். குமரன் உபாசனையானது சிவ தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டது. மகா சதாசிவமாகிய பரம்பொருளின் அழகிய எளிய வடிவமே முருகன் என்கின்றன புராணங்கள். சாஸ்திர நூல்கள் பலவும் `ஜோதி ரூபமான நிர்க்குண பரப்பிரும்மமே சுப்ரமணியம்’ எனப் போற்றுகின்றன.

கந்தன் கருணை பொழியும் தணியல் திருத்தலம்!

றுமுகக் கடவுளைச் சரண் அடைந்தால் ஜீவன் முக்தி பெறும்; சதாசிவமாகிய ஈசனிடமிருந்து முதலில் தோன்றிய சக்தியே முருகப் பெருமான்தான் என விவரிக்கிறது ருத்ர மந்திரம்.

கந்தனின் மகிமை இப்படி யெனில், அவனைத் தலைவனாகக் கொண்ட கெளமாரமோ பிரம்ம வித்தை, ஆத்ம வித்தை, புருஷார்த்த சாதனம் எனும் முப்பெரும் செல்வங்களை அறிய உதவுவது என்பார்கள்.

அசுரனையும் அழிக்காது ஆட் கொண்டவர் கந்தன். உலகெங்கும் கந்தசஷ்டிப் பெருவிழா நடந்து முடிந்திருக்கிறது. 6 நாள்கள் கொண் டாடப்படும் இந்த விழாவில் 4-ம் நாள் முருகப்பெருமான் விஸ்வரூபம் காட்டிய திருநாள் என்பார்கள்.

ஆணவத்தால் அறிவிழந்து தம்மை எதிர்த்த சூரபத்மனுக்கும் அருள் புரிய மனம் கொண்ட முருகப்பெருமான், அவனுக்கு விஸ்வரூபம் காட்டினார். திருந்தி நல்வழிக்குத் திரும்ப அறிவுறுத் தினார். அவன் கேட்கவில்லை. ‘தாம் பின் வாங்குவது என்பது முடியாத செயல், அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள பரப்பிரம்மம் என்னையும் தன்னுள் ஏற்கட்டும்’ என்று தீர்மானித்தான் போலும். எதிர்த்துப் போரிட்டான்; மாமரமாகி நின்றான்.

அஞ்ஞான உருவாகிய அவனை வேலால் பிளந்து மயிலாகவும் சேவற் கொடியாகவும் ஏற்று அருள்பாலித்தார் முருகக்கடவுள். அசுரன் என்றாலும் சூரபதுமன் சிவபக்தன் ஆயிற்றே. அவனை வீழ்த்திய பாவம் தொலைய, திருச்செந்தூரிலேயே சிவபூஜை செய்து கோயில் கொண்டார் முருகன். திருப் பரங்குன்றத்தில் தெய்வானையை மணம் புரிந்தார். பின்னர் திருத்தணிகை நோக்கிப் புறப்பட்டார்.

கோல மயிலோடும் கோலாகலக் குமரி தெய்வயானையோடும் சென்று கொண்டிருந்த முருகப்பெருமான், வழியில் தணியல் என்ற அழகிய கிராமத்தில் தங்கினார். நில வளமும் நீர் வளமும் மிகுந்து இயற்கை வனப்புடன் திகழ்ந்த அந்த ஊரிலும் சிவபூஜை செய்தார் கந்தப்பெருமான்.

கந்தன் கருணை பொழியும் தணியல் திருத்தலம்!

அவரின் பூஜையால் மகிழ்ந்த அம்மையும் அப்பனும் முருகப்பெருமானுக்குக் காட்சி தந்து ஆசியும் கூறினர். அத்துடன் அங்கு ஈசன் கயிலாசநாதர் என்றும் அம்பிகை அகிலாண்டேஸ்வரி என்றும் திருப்பெயர் கொண்டு எழுந்தருளினர். `முருகப்பெருமான் சீற்றமும் சினமும் தணிந்து சிவபூஜை செய்த இந்தத் தலம் தணியல் என்று பெயர் பெற்றது' என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

சிவசக்தி, முருகப்பெருமான் மூவரையும் தரிசிக்க தேவாதிதேவர்களும் அந்த ஊரில் ஒன்றுகூட, தணியல் கிராமம் தேவலோகமாகக் காட்சி அளித்ததாம். முருகப்பெருமான் மனம் கனிந்து தேவர்களுக்கும் தன்னோடு துணை புரிந்த நவவீரர்கள், தேவ கணங்களுக்குப் பல பரிசுகளும் வெகுமதிகளும் அளித்து அருள் செய்தாராம்.

இவ்வாறு கந்தனின் கருணை மழை பொழிந்த தணியல் எனும் அந்தத் தலம், விழுப்புரம் மாவட்டம் - மயிலம் வட்டத் தில் அமைந்துள்ளது. கருவறையில் சிவ லிங்கத் திருமேனிக்குப் பின்புறமாக வள்ளி தெய்வானை சமேத முருகன் காட்சி தருகிறார். அற்புதமான பழங்காலத் திருமேனி இது; அபூர்வ வகைக் கல்லால் செய்யப்பட்ட திருமேனி என்கிறார்கள்.

கந்தன் கருணை பொழியும் தணியல் திருத்தலம்!


`தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக துக்கமாற் கடமு மலமாயை’ எனத் தொடங்கும் திருப் புகழ் பாடலில் `பூத் தணியல் வெற்ப’ எனப் போற்றிப்பாடுகிறார் அருணகிரியார்.

இந்தப் பாடல் திருத்தணிகை தலத்துக் கானது. `தோல் நீங்காத குடிசையும், மும்மலங்கள் அடங்கியதும், அழுக்கானதும், காற்றடைத்த பையும், வெற்றுக் கூச்சல் கொண்டதுமான உடம்பைப் போற்றிக் கொண்டிருக்கும் எனக்கு, மெளன நிலை ஒருநாள் ஏற்படுமோ’ என்ற கருத்துடன் அமைந்த இந்தப் பாடல், `இந்த உலகில் பார்வை ஒன்று இருந்தால் அது உன் திரு நடனத்தைப் பார்க்கும் பார்வையே ஆகும்’ எனப் போற்றுகிறது கந்தனின் மகிமையை.

இந்தப் பாடலை மத்திய தணிகையான இந்தத் தணியல் தலத்துக்கும் பொருத்தி, இங்குள்ள அழகனையும் பாடத் தோன்றுகிறது. ஆம், தணியல் முருகப்பெருமானின் அழகு வார்த்தைகளால் வடிக்க முடியாதப் பேரழகு!

கந்தன் கருணை பொழியும் தணியல் திருத்தலம்!இங்கு வந்து வணங்கினால் தீராத வினைகள் எல்லாம் தீரும், சேராத செல்வங்கள் யாவும் தேடி வந்து சேரும் என்கிறார்கள் ஊர் மக்கள். கருவறைக்கு முன்பாக மயிலும் நந்தியும் ஒருசேர அமைந்துள்ளன. தனிச் சந்நிதியில் அகிலாண்டேஸ்வரி அன்னை எழுந்தருளி இருக்கிறாள்.

இந்த அம்பிகையை வணங்கி விளக்கேற்றி வழிபட்டால், தாலிப் பாக்கியம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. மங்கல வாழ்வு அருளும் இந்த அம்பிகையின் திருமேனியும் அபூர்வ வகைக் கல்லால் செய்யப்பட்டதே என்கிறார்கள். சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், பிரம்மா, விஷ்ணு என சிவாலயங்களில் அமைந்திருக்கும் அனைத்து மூர்த்தங்களும் இந்தக் கோயிலிலும் சிறியளவில் அழகிய வடிவில் தரிசனம் தருகின்றன.

கருவறையின் வெளி மண்டபத்தில் அழகிய நடராஜர், விநாயகர், வள்ளி - தேவசேனா சமேத முருகப் பெருமான், சமயக்குரவர்கள், அம்மன் உள்ளிட்ட பஞ்சலோகச் சிலைகள் உள்ளன.

மத்திய தணிகை, பழந்தணிகை, சிங்காரபுரம், கந்த பட்டணம், திருத்தணியல், சேவல்புரி என்றெல்லாம் திருநாமங்கள் கொண்ட இந்தத் திருத்தலம் வெப்பம் சம்பந்தமான நோய்கள் தணிக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் முருகனின் அருளால் மகப்பேறு, மணப்பேறு, நல்வாழ்வு, நற்பெருமை, நீங்காத புகழ், ஆரோக்கியம், ஆயுள், செல்வம் யாவும் கிட்டும் என்கிறார்கள் ஊர் மக்கள்.

கந்தன் கருணை பொழியும் தணியல் திருத்தலம்!

இவ்வளவு பெருமைகளும் பலன்களும் கொண்ட இந்தத் திருத்தலம் இன்று மெள்ள சிதைந்து வருகிறது. ஆலய அர்ச்சகர்களும் ஊர் பொதுமக்களும் இணைந்து ஆலயத்தை ஓரளவு சீர்படுத்தி வந்தாலும் ஆங்காங்கே விரிசல்கள் விழுந்து ஆபத்தான நிலையில் ஆலயம் இருந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளாக திருப்பணி தொடங்க முயன்றும் போதுமான நிதி வசதி இல்லாமல் தடைப்பட்டுப் போனது.

தற்போது, உள்ளூர் அன்பர்கள் திருப்பணியைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். காலகால மாய் இங்கு வீற்றிருந்து அருள் புரிந்து வரும் ஈசனும், அம்பிகையும், அவர்களின் திருக்குமாரரான கந்தனும் அருளும் ஆலயம் பொலிவு பெற வேண்டாமா?

அன்புள்ளம் கொண்ட பக்தகோடிகள் இந்த ஆலயத்தின் திருப்பணிக்குத் தோள்கொடுக்கலாம். கந்தனுக்கு ஒன்று சமர்ப்பித்தால் ஓராயிரமாய்த் திரும்பி வரும் என்பார்கள். நாமும் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம்; தணியல் முருகனின் பேரருளை வரமாகப் பெற்று மகிழ்வோம்.

‘ஒறுப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடா தன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே!’

வங்கிக் கணக்கு விவரம்

Account Name: நடராஜன் - சரவணன்
A/C No: 1231155000237551
The Karur Vysya Bank Limited
Branch: Tindivanam
IFSC : KUBL0001231
ஆலயத் தொடர்புக்கு: நடராஜன் - 80721 73351

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு