Published:Updated:

ஆயிரம் வில்வத்தால் அர்ச்சித்த பலன்

திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில்
பிரீமியம் ஸ்டோரி
திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில்

ஆயிரம் வில்வத்தால் அர்ச்சித்த பலன்- திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில் நமச்சிவாயம்

ஆயிரம் வில்வத்தால் அர்ச்சித்த பலன்

ஆயிரம் வில்வத்தால் அர்ச்சித்த பலன்- திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில் நமச்சிவாயம்

Published:Updated:
திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில்
பிரீமியம் ஸ்டோரி
திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில்
திருக்கோவையார் என்று ஒரு நூல்; மாணிக்கவாசகர் அருளிச் செய்தது. இது, சைவத் திருமுறைகளில் 8-வதாக உள்ளது. இதனுள் ஒரு காட்சி... தலைவியைப் பிரிந்த தலைவன், வேறொரு பெண்ணை நாடி போயிருக்கிறான். வருத்தத்துடன் இருந்த தலைவியிடம் வந்த தோழிகள், அவளைச் சமாதானப் படுத்துகிறார்கள்.

தலைவனின் பெருமையைக் குறைத்துப் பேசி, சற்றே அவனை ஏசி, அவர்கள் சாடு கிறார்கள். அவர்கள் சாடும் அந்தத் தலைவன் யார் தெரியுமா? பின்வரும் பாடலை பாருங்கள்... உங்களுக்கே தெரிய வரும்.

அன்புடை நெஞ்சத்து

இவள் பேதுற அம்பலத்தடியார்

என்பிடை வந்து அமிழ்து

ஊறநின்று ஆடி இருஞ்சுழியல்

தன்பெடை நையத் தகவழிந்து

அன்னம் சலஞ்சலத்தின்

வன்பெடை மேல் துயிலும்

வயலூரன் வரம்பிலனே

`காண்போர் உள்ளம் உருகும்படியாகத் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடுபவன்தான். ஆனாலும் எப்படிப்பட்டவன் தெரியுமா? அவனது ஊரான திருச்சுழியலில், ஓர் அன்னம் செய்வது போல்தான் இவனது செய்கையும் உள்ளது. அதாவது, நீரில் வாழ்கிற அன்னம், தன் பெடை அன்னத்தை (பெண் அன்னம்) வருந்தச் செய்துவிட்டு, `சலம்சலம்’ எனும் சங்கின் பெடை மீது கிடக்கிறது. வயல் நிறைந்த சுழியல் வயலூரனும் அந்த தகவிலாத அன்னத்தைப் போன்று தகவில்லாதவன். ஆம்! தன் தலைவியை வருந்தச் செய்து, வேறிடம் போயிருக்கும் அவனும் தகவில்லாதவன்தான்’

இதுதான் இந்தப் பாடலின் கருத்து. பாடலில் உள்ளபடி, பிரசித்தி பெற்ற திருச்சுழி ஈசன் அருள்மிகு திருமேனிநாதர்தான் அந்தத் தலைவன்.

ஆயிரம் வில்வத்தால் அர்ச்சித்த பலன்

நாயகி பாவத்தின் அக இலக்கணத்தை ஆதாரமாகக் கொண்டது திருக்கோவையார் பாடல். அவ்வண்ணமே சுழியல்பிரான் ஈசனிடத்து உரிமையோடும் கோபத்துடனும் ஊடல் கொள்கிறார் மாணிக்கவாசகர். அன்பரின் அன்புக்குக் கட்டுப்பட்ட திருமேனிநாதரும் இதன் பொருட்டு மகிழ்ச்சியே அடைவார்!

விருதுநகருக்குக் கிழக்கே 40 கி.மீ. தூரத்திலும் மதுரைக்குத் தெற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருச்சுழி. பாண்டி பதினான்கு என்று பெயர் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுள் 10-வது பெருந்தலம் இது. திருவண்ணாமலை மகான் ரமண மகரிஷியின் அவதாரத் தலமும் இதுதான். இங்கேதான் அருள்மிகு துணைமாலை அம்மை உடனாய அருள்மிகு திருமேனிநாதர் கோயில் கொண்டிருக்கிறார்.

திருச்சுழி திருமேனிநாதர்
திருச்சுழி திருமேனிநாதர்

பல யுகங்களுக்கு முன்னால் - சந்திரசேனன் எனும் பாண்டிய மன்னன் ஆட்சிக் காலத்தில், பிரளயமெனப் பொங்கி வந்ததாம் கடல். மன்னன், சிவனாரை வணங்கித் தொழுதான். அவனின் வேண்டுதலை ஏற்றுப் பிரளயத்தை அப்படியே சுழிக்கச் செய்து, நிலத்துக்குள் புகச் செய்தாராம் சிவனார். அங்ஙனம் நீர் சுழித்ததால், இத்தலம் சுழியல் என்று பெயர்பெற்றது என்கிறது தலபுராணம்.கௌதமருக்கும் அகலிகைக்கும் சிவபெருமானும் பார்வதியும் திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்தத் தலம் இது. இரணியாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தைக் கவர்ந்து சென்று ஒளித்து வைத்தான். அன்னையை மீட்க வராக அவதாரம் எடுத்தார் திருமால் என்பது நாமறிந்த திருக்கதை. இரணியாட்சன் தன்னைத் தீண்டிய பாவம் தீர, இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி, திருமேனிநாதரை வழிபட்டுத் துயரம் தீர்ந்தாளாம் பூமிப்பிராட்டி. பூமிதேவி வழிபட்டதால், இறைவனாருக்கு பூமிநாதர், பூமேசர் மற்றும் புவனேசர் ஆகிய திருநாமங்களும் உண்டு. திருமேனிநாதர் என்பது தேவாரத் திருநாமம்.

ஆயிரம் வில்வத்தால் அர்ச்சித்த பலன்அம்பிகை துணைமாலை நாயகி. தோற்றத்தில் மதுரை மீனாட்சி அம்மனைப் போன்றே திகழ்கிறாள். திரிபங்கி திருக்கோலத்துடன் அருள்கிறாள். இத்தலம், ஒரு காலத்தில் ருத்ர பூமியாக விளங்கியதாம். பூமியை சாந்தப் படுத்த, அம்பாள் சுயம்பு நாயகியாக சுபங்கரியாக (நன்மை செய்பவள்) தோற்றம் தந்தாள் என்கிறது புராணம். அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில், மேலே ஸ்ரீசக்கரம் வடிக்கப்பட்டுள்ளது. தீமைகளைக் களைந்து நன்மைகளை நிறைய அருள்பாலிப்பவள் ஆதலால், இந்த அம்பிகைக்குச் சகாயவல்லி என்றும் ஒரு திருநாமம் உண்டு. அடியார்களுக்குச் சகாயம் செய்பவளாம்.

திருச்சுழியல் தலத்துக்கு நிறைய பெருமைகள் உண்டு. பாண்டிய நாட்டை, அழகானதொரு பெண்ணாக உருவகம் செய்து கொண்டால், அந்தப் பெண்ணின் அவளின் நாபிதான் திருச்சுழியல் எனும் இந்தத் தலம் என்று சித்திரித்துப் போற்றுகிறார், திருவிளையாடல் புராண ஆசிரியர் பரஞ்சோதியார்.

இங்கு வந்து திருமேனி நாதரைக் காலையில் தொழுதால், பரிமேத வேள்வி... அதாவது அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம். உச்சிப்போதில் வணங்கினால், ராஜ சூய யாகத்தின் பலன் கிடைக்கும்; மாலையில் வழிபட்டால், ஜீவன்முக்தி கிடைக்கும் என்கிறது தல வரலாறு.

மற்ற சிவாலயங்களில் ஆயிரம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சித்தால் கிடைக்கும் பலன், இந்தத் தலத்தில் சிவராத்திரி அன்று ஒரேயொரு வில்வத்தைக் கொண்டு அர்ச்சித்தாலே கிடைத்து விடுமாம். இந்தத் தலத்தில் அன்பர்களுக்கு ஒரு பிடி அன்னமிட்டால், ஆயிரம் அஸ்வமேத யாகங்களின் பலன் கண்டிப்பாக உண்டு. இந்தத் தலத்தை அடைந்தாலே போதும், அறிந்தோ அறியாமலோ பண்ணிய பாவமெல்லாம் பஞ்சாகப் பறக்கும் என்கின்றன ஞானநூல்கள்.