Published:Updated:

பசி,உடல் பிணியைப் போக்கும் திருக்கச்சூர் மருந்தீஸ்வரர்!- இல்லம் தேடிவரும் இறை தரிசனம் #worshipathome

மருந்தீஸ்வரர்
மருந்தீஸ்வரர்

மலையில் மருந்தீஸ்வரர், அடியில் இரந்தீஸ்வரர், விருந்தீஸ்வரர் என்று மூன்று தலங்களில் திருக்கச்சூரில் அருள்புரிகிறார் சிவபெருமான்.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதேநேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

மருந்தீஸ்வரர்
மருந்தீஸ்வரர்

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்.

சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கச்சூர். மகா விஷ்ணு ஆமை வடிவில் வந்து சிவபெருமானை வணங்கி வழிபட்டு பேறுபெற்ற தலம் இது. திருக்கச்சூர் தலத்தின் இணைக் கோயிலான மருந்தீஸ்வரர் திருக்கோயில் அருகேயிருக்கும் மலையடிவாரத்தில் காணப்படுகிறது.

சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கச்சூர்....

Posted by Sakthi Vikatan on Friday, May 1, 2020

தன் தீராத வியாதியைப் போக்குவதற்கு இந்திரன் தவமிருந்து பலை, அதிபலை ஆகிய மூலிகைகளை சிவபெருமானிடமிருந்து பெற்ற தலம் இது. அதனால், இந்தக் கோயிலில் அருள்புரியும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும் இறைவி இருள்நீக்கி அம்மை என்றும் அழைக்கப்படுகிறார்.

அகத்தியரும் அழுகண்ணி சித்தரும் தவம் செய்த மரத்தடிகள் இம்மலையில் காணப்படுகிறது. அதன் அடியில் பௌர்ணமி நாளில் உட்கார்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்தால் நமது வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பது ஐதிகம்.

worshipathome
worshipathome

சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அந்தணர் உருவில் வந்து அவரது பசிப் பிணியைப் போக்கி அருளிய தலம் இது. இரந்து ஈசன் சுந்தரருக்கு அமுதிட்ட தலம் இது என்பதால் `இரந்திட்ட ஈசன்’ என்று சிவபெருமான் அழைக்கப்படுகிறார். சுந்தரர் `மாலை மதியே; மலைமேல் மருந்தே’ என்று மருந்தீஸ்வரர் தல இறைவனைப் பாடியிருக்கிறார். இந்தத் தலத்தில் கொடுமரத்தடியில் உள்ள குழியில் மண்ணெடுத்து உண்டால் தீராத நோய்களும் திர்ந்துபோகும் என்கிறார்கள் பக்தர்கள்.

சிவபெருமானின் மூன்று கண்களின் அம்சமாகவும்; முக்காலத்தையும் உணர்த்தும் வகையிலும் இங்கு அருள்புரிகிறார். மலையில் மருந்தீஸ்வரர், அடியில் இரந்தீஸ்வரர், விருந்தீஸ்வரர் என்று மூன்று தலங்களில் திருக்கச்சூரில் அருள்புரிகிறார் சிவபெருமான். காஞ்சிபுராணத்தில் ஆதி காஞ்சி என்று சிறப்பிக்கப்படும் தலம் திருக்கச்சூர்.

சிவன்
சிவன்

மருந்தீஸ்வரரை மனதால் நினைத்தாலே போதும், நம் உடல் பிணிகளோடு உள்ளப் பிணிகள் யாவும் மறைந்துவிடும். இருள் நீக்கி அம்மை நம் வாழ்வில் உள்ள இருளைப் போக்கி ஒளி பெருக்கி நல்லருள் புரிவாள்.

அடுத்த கட்டுரைக்கு