Published:Updated:

ஈசன் பைரவராக அருள்பாலிக்கும் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரம்..! - இல்லம் தேடிவரும் இறை தரிசனம்

worshipathome
worshipathome

இத்தல ஈசனை வழிபட்டால் பிணி நீங்கி வளங்கள் நம்மை வந்து சேரும். தீவினைகள் அண்டாது.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

ஈசன் பைரவராக அருள்பாலிக்கும் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரம், ஆறுமுகர் தரிசனம்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்!

Posted by Sakthi Vikatan on Thursday, April 9, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயம்.

நடுநாட்டுத் தலம்... சேதி நாட்டுத் தலைநகர்... மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி நடத்திய ஊர்... சிவனின் அட்ட வீரட்டங்களுள் 2-வது வீரட்டம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தலம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில்.

விழுப்புரத்திலிருந்து மேற்கில் சுமார் 55 கி.மீ தொலைவில் இருக்கிறது திருக்கோவிலூர். சப்த கன்னிகளும், 64 வித பைரவர்களும் தோன்றிய தலம் இது. பைரவ உபாசகர்களுக்கு முதன்மையான கோயில் இது.

திருக்கோவிலூர்
திருக்கோவிலூர்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரின் பாடல் பெற்ற தலம். சூரியன் அருளைப் பெறவும், சூரிய தோஷம் இருந்தால் பரிகாரம் செய்துகொள்ளவும் இதுவே முதன்மைத் தலமாகும். கொன்றையும், வில்வமும் தல மரங்களாக உள்ளன. மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி செய்த அருட்பதி இது.

இத்தல ஈசனும், அம்பாளும் மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள அஷ்டபுஜ விஷ்ணு துர்கையை ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் மற்றும் சுப காரியத் தடங்கல்கள் அகலும். வறுமை அகன்று வசந்தங்கள் ஓடிவரும்.

இத்தல ஈசனை வழிபட்டால் பிணி நீங்கி வளங்கள் நம்மை வந்து சேரும். தீவினைகள் அண்டாது. `துர்கா சப்த ஸ்லோகி’ என்ற ஸ்தோத்திரத்தை ராகு கால வேளைகளில் படித்து வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால் தீவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும்.

விநாயகர் சதுர்த்தி அன்று, இங்குள்ள பெரிய யானை கணபதி சந்நிதியில், அவ்வையார் பாடிய `விநாயகர் அகவல்’ பாடி வழிபட்டால் வேண்டியவை அனைத்தும் நடைபெறும். இத்தலத்தில் அருள்புரியும் முருகப் பெருமானை வழிபட்டால் திருமண வரம் கூடி வரும். தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதிகம். 

அடுத்த கட்டுரைக்கு