திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

பிணிகள் தீர்க்கும் தணிகை

திருத்தணிகை முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
திருத்தணிகை முருகன்

கந்த சஷ்டி தரிசனம் - சக்திதர்

திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ, தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ, தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்.

பிணிகள் தீர்க்கும் தணிகை

‘திருத்தணிகையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து, என் திருவடிகளை தியானித்து வழிபடுபவர்கள் வீடு பேறு பெறுவர்’ என்று முருகப் பெருமான் திருத்தணி மலையின் மகிமையை வள்ளிக் குறத்தியிடம் விவரித்ததாக கந்த புராணத்தில் குறிப்பிடுகிறார் கச்சியப்ப சிவாசார்யர்.

கோயிலின் கர்ப்பக் கிரகத்தில் தணிகை பிரானான முருகப் பெருமான் கடம்பமாலை அணிந்து, தன் வலக் கரத்தில் வேலாயுதம் தாங்கி, இடக் கரத்தை ஊரு அஸ்தமாக தொடையில் வைத்து நின்ற திருக்கோலத்தில் சாந்த சொரூபியாக காட்சி தருகிறார். சூரபதுமனை அழிக்க தன் அன்னையிடம் சக்திவேல் பெற்ற முருகப் பெருமான், பக்தர்களுக்கு ஞானம் அருளும் பொருட்டு தன் தந்தையிடம் இருந்து ஞானவேல் பெற்று அருள் புரிவதால், இவரை ஞானசக்திதரர் என்பர்.

முருகப் பெருமான் சினம் தணிந்து அருளும் தலம் ஆதலால், திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. கந்த சஷ்டி ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

நவ கன்னிகைகள் தினமும் இங்கு வந்து தணிகை முருகனை பூஜித்துச் செல்வதாக புராணங்கள் கூறுகின்றன. கோயிலின் தென்புறம் நவ கன்னிகை கோயில் உள்ளது. இங்கு தேவி உமாமகேஸ்வரி ‘புற்று’ வடிவில் குடி கொண்டுள்ளாள்.

இங்கு, பள்ளியறை பூஜையின்போது ஒரு நாள் வள்ளிதேவியுடனும், மறு நாள் தெய்வயானையுடனும் பள்ளியறைக்கு எழுந்தருள்கிறார் முருகப்பெருமான். எந்த முருகன் தலத்திலும் இல்லாத சிறப்பு இது.

பாற்கடலைக் கடைந்தபோது மந்திர மலையினால் தன் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாக வாசுகி நாகம் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு நலம் பெற்றதாக திருப்புகழ் கூறுகிறது. மலையின் மேற்குப் பக்கம் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, தணிகை வேலனை வழிபட்டால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.