திருக்கதைகள்
Published:Updated:

`இதுவும் ஒருவித பக்தியே!'

மீனாள் மணிகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
மீனாள் மணிகண்டன்

கோலங்களில் இறை தரிசனம்!

மார்கழி மாத அதிகாலையில் சாணமிட்ட வாசலில், வண்ணக் கோல மிட்டு, நடுவே சாண உருண்டையில் பரங்கிப்பூவை வைத்து அழகூட்டுவது நம் கலாசாரம். இன்னும்கூட தென் தமிழகத்தின் பல கிராமங்களில் இந்த அழகைக் காணலாம். இதேபோல், இந்தியாவின் வணிகத் தலைநகரான நவ நாகரீக மும்பையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் அனுதினமும் கோலம் போட்டு அசத்துகிறார் மீனாள் மணிகண்டன்.

`இதுவும் ஒருவித பக்தியே!'

மார்கழி, தைப் பொங்கல் என்றில்லை; வருடம் 365 நாட்களும் அலுக்காமல், சலிக்காமல் விதம் விதமாகக் கோலம் போடுகிறார். ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டமும் கண்ணன்மீது அளவிலாத பக்தி யும் கொண்ட இவருடைய கோலங்கள் எல்லாம் இதிகாசங்கள், புராணங்கள், பகவத்கீதை போன்றவற்றின் கருத்துக்களை மையப் படுத்தும் கோலங்கள் ஆகும்.

ஒரு நாள்கூட கோலம் போடாமல் இருப்பதே இல்லை எனும் அளவுக்குக் கோலத்துடன் இரண்டறக் கலந்துவிட்டார் மீனாள். வீட்டில் தினமும் ஒரு கோலம் போட்டு அதற்குப் பொருத்தமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதை எழுதிப் பதிவிடும் இவருடைய ஃபேஸ்புக் பக்கத்துக்கு ஏகப்பட்ட விசிறிகள்.

`இதுவும் ஒருவித பக்தியே!'

? அடிப்படையில் ஓவியம் கூட வரையத் தெரியாத மீனாளுக்குக் கோலத் தின் மீது தீரா காதல் வந்தது எப்படி?

“அஞ்சாறு வருஷத்துக்கு முன்பு வரையிலும் எனக்கும் கோலத்துக் கும் ரொம்ப தூரம் என்கிற நிலைதான் இருந்தது. பிறந்து வளர்ந்தது எல்லாம் தேவகோட்டை, காரைக்குடி என்றாலும் கோலத்தில் எல்லாம் அவ்வளவாக ஆர்வம் இருந்தது இல்லை. திருமணமாகி மும்பை வந்த பிறகும்கூட அந்த எண்ணம் இல்லை. இப்போ சில வருஷங்களுக்கு முன்னாலதான், மும்பையில் சில தோழிகள் போடறதைப் பார்த்துப் பார்த்து எனக்கும் அது மாதிரி கோலம் போடணும் என்கிற ஆர்வம் வந்தது.  

முதலில் சின்னச் சின்னதா வீட்டிலேயே தினமும் போட்டுப் பழகினேன். மும்பையில் நாங்க இருந்த ஃப்ளாட்டின் வாசலில்தான் முதலில் சின்னதா போட ஆரம்பிச்சேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் பெரிய கோலங்கள் போட்டுப் பார்த்துப் பழகினேன். நகரத்தார் சங்கம் மும்பையில் நடத்திய கோலப் போட்டியில் 2-வது பரிசு வாங்கினேன். அப்போதான் எனக்கு ‘நாமும் நல்லா கோலம் போடறோம்’னு ஒரு தன்னம்பிக்கை வந்தது. ஆர்வமும் அதிகமாயிடுச்சு.

பூக்கோலம், ரங்கோலி, நெளிக்கோலம்னு எல்லாத்தையுமே வண்ணப் பொடியில் போடத் தொடங்கினேன். தினமும் போடும் கோலத்தை ஃபேஸ்புக்கில் அப்லோட் பண்ண ஆரம்பிச்சேன். நான் ஆங்கில இலக்கியம் படிச்சிருக்கிறதால், சின்ன வயசிலிருந்தே ஆங்கிலத்தில் கவிதை எழுதுவேன். ரொம்ப ரசிச்சுக் கோலம் போடும்போது, மனதில் என்ன உணர்வு வருதோ, அதைக் கவிதையாக எழுதி, அதையும் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்தேன். விமர்சனங்களும் பாராட்டுக்களும் வந்து குவிந்தன.

நான் போடும் பல கோலங்கள், ‘அபங்’ என்ற மராட்டி பஜன் பாடல் அல்லது பாசுரத்தை நினைவுபடுத்துவதாகப் பலர் சொன்ன போது, ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதிலிருந்து, நானே தினமும் ஒரு பாசுரத்தைத் தேர்ந்தெடுத்து அதுக்குத் தகுந்தாற்போல கோலம் போட ஆரம்பிச்சேன்..” என்று கோலப் பயணத்தை விவரித்தார் மீனாள்.

குடும்பத்தினரின் பிறந்தநாள், விருந்தினர் வருகை, பண்டிகைகள் போன்ற விசேஷ தினங்களிலும் அந்தந்த நாளுக்குப் பொருத்த மாகக் கோலம் போட்டுவதுடன் அதற்கேற்ற கவிதையும் எழுதுகிறார் மீனாள். தன்னுடைய ஆங்கிலக் கவிதைகளைத் தொகுத்து புத்தகமும் வெளியிட்டுள்ளார். சாக்பீஸில் போடாமல் நேரடியாக கோலப் பொடியில் கோலம் போடுவது இவரின் சிறப்பு. அதேபோல் முதல் நாள் பிராக்டிஸ் செய்யும் வழக்கமும் கிடையாது என்கிறார்.

செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் நடத்திய கோலப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றிருக் கிறார் இவர். ‘Soul speak’ என்னும் இவரு டைய ஃபேஸ்புக் பக்கத்தில் மீனாளின் கோலங்கள் மற்றும் ஆங்கில, தமிழ், கவிதைகள் ஆகியவற்றை ரசிக்கலாம்.

? ‘‘பெரும்பாலும் கிருஷ்ணரே உங்கள் கோலங் களின் மையக் கருத்தாக இருப்பதன் காரணம்?’’

‘‘கணவரின் வேலை நிமித்தம் சில ஆண்டு கள் ஜப்பானில் இருந்தோம். அங்கே கோயில் கிடையாது. என் பிள்ளைகள் படிச்ச இந்தியன் ஸ்கூல் மியூசிக் டீச்சர் மூலம் ஜப்பானில் இருந்த ‘இஸ்கான்’ அறிமுகமாச்சு. அங்கே பகவத் கீதை சொல்லிக்கொடுத்தாங்க. ஒரு வெளிநாட்டுக்காரர் நம் கீதையைப் பற்றி அவ்வளவு விளக்கமாகச் சொன்னதைப் பார்த்து அசந்துபோய்ட்டேன். கிருஷ்ணண் மீது அதீத ஈடுபாடு உண்டாகி, ‘இஸ்கான்’ போய் தொடர்ந்து ஜபிக்க ஆரம்பிச்சேன். அதன் பிறகு அங்கேயே தீட்சை பெற்றேன். அதனாலதான் பாசுரம், அபங் எல்லாம் அறிமுகமாச்சு.

மும்பை வந்தபிறகும், இஸ்கானில் நடக் கும் சத்சங்கம் போறேன். பகவத் கீதை வகுப்புகள் எடுக்கிறேன். என்னால முடிஞ்ச வாலன்டியர் சர்வீஸ் பண்றேன். இஸ்கான் அமைப்பின் ‘பகவத் தரிசனம்’ மாத இதழுக்காக, இஸ்கான் ஸ்தாபக ஆசார்யர் ல பிரபு பாதரின் ஆங்கில உரைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணிதான் இப்போ செய்துட்டிருக்கேன். பிரபு பாதரின் வீடியோக்களுக்கு தமிழில் சப் டைட்டில் பண்றேன். விக்கிபீடியா மாதிரி வாணிபீடியா என்ற இணையதளத்துக்கும் தினமும் 2, 3 மணி நேரம் வொர்க் பண்றேன். இவை எல்லாத்துக்கும் என் கணவரின் ஆதரவு நிறைய உண்டு..’’ என்கிறார் மீனாள்.

இவர் கணவர் மணிகண்டன் மும்பையில் பிரபல நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன். தீட்சை பெற்ற பிறகு, மாலினி கருணாதேவியாகப் பெயர் மாற்றம் பெற்ற இவர், அதே பெயரில் யூ ட்யூப் சேனலும் வைத்திருக்கிறார். லாக் டவுன் தருணத்தில் ஆன்லைனில் பகவத் கீதை, பாகவதம், விஷ்ணு சகஸ்ரநாமம் வகுப்புகளை இலவசமாக நடத்தியதை இப்போதும் தொடர்கிறார்.

? ‘‘உங்கள் கோலங்களில் உங்களுக்குப் பிடித்தது?’’

``என் கோலங்கள் எல்லாமே எனக்கு ஸ்பெஷல்தான். 12 ஆழ்வார்களை வைத்து கோலம் போட்டதையும் 30 திருப்பாவை பாடல்களும் ஒரே கோலத்தில் வர்ற மாதிரி போட்டதையும் மறக்க முடியாது. ரொம்ப சவாலாக இருந்த விஷயம் அது. இப்படியான கோலங்கள் போடுவது, பாராட்டு - பரிசு களுக்காக அல்ல; கிருஷ்ண உணர்வைப் பலருக்கும் சொல்வதற்காகத்தான். இதுவும் ஒருவிதமான பக்திதான். அதேபோல பகவத் கீதை 18 அத்தியாயங்களையும்கோலத் தில் கொண்டு வரணும்னு ஆசை. அதற்கும் இறையருள் கைகூடணும்’’ என்கிறார் மீனாள்.

தத்துவார்த்தமான பெரிய விஷயங்களை, எல்லோருக்கும் எளிதில் புரியும் விதம், கோலங்களாகக் காட்சிப்படுத்தும் மீனாளின் பணியும் கிருஷ்ண பிரேமையும் பிரமிக்க வைக்கின்றன. உங்களின் ஆசை நிச்சயம் நிறைவேறும் மீனா!