Published:Updated:

குலம் தழைக்க... குடும்பம் செழிக்க.. வரம் தரும் தேவியர்!

முப்பெருந்தேவியர்
பிரீமியம் ஸ்டோரி
முப்பெருந்தேவியர்

- பி.சந்திரமௌலி

குலம் தழைக்க... குடும்பம் செழிக்க.. வரம் தரும் தேவியர்!

- பி.சந்திரமௌலி

Published:Updated:
முப்பெருந்தேவியர்
பிரீமியம் ஸ்டோரி
முப்பெருந்தேவியர்

அகிலத்தின் அனைத்துமாக அம்பிகையே விளங்குகிறாள் என்பதை உணர்த்தும் விழாவே, நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த துர்காதேவியே மகிஷாசுரமர்த்தினியாகவும் சண்டிகாவாகவும்... இன்னும் பற்பல திருநாமங்களில்- திருவடிவங்களில்... நம்மைக் காக்க அவதாரம் எடுத்து வந்தாள் என்கின்றன புராணங்கள்.

குலம் தழைக்க... குடும்பம் செழிக்க.. வரம் தரும் தேவியர்!

ரமுனி என்றொரு முனிவர் இருந்தார். மிதமிஞ்சிய அவரது கர்வத்தின் காரணமாக, கடும் சாபம் பெற்றார். அதன் விளைவு, முனிவர் மகிஷனாக மாறினார். தேவலோகத்தை இன்னல்கள் சூழ ஆரம்பித்தது. இந்திரன் முதலான தேவர்களைப் பலவாறு துன்புறுத்திய மகிஷன், அவர்களை விரட்டியடித்துவிட்டு தேவலோகத்தைக் கைப்பற்றினான்.

பரிதவித்துப்போன இந்திரன், பிரம்மதேவரை சந்தித்தான். அவருடன் சென்று சிவனாரிடமும் மகாவிஷ்ணுவிடமும் சரணடைந்தான். மும்மூர்த்தியரின் சக்திகளும் ஒன்றுகூடி உருவானவளே துர்கை. மும்மூர்த்தியர் முதலாக சகல தேவர்களின் ஆற்றலையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டு, மகிஷனை வதம் செய்தாள் துர்காம்பிகை. இங்ஙனம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய துர்கையின் மகாத்மியத்தைப் போற்றுவதே நவராத்திரி.

ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் கொண்டாடப் பட்டதாகப் பழைய நூல்கள் தெரிவிக்கின்றன. வசந்த நவராத்திரி பங்குனி மாதத்தில், ராம நவமியை ஒட்டி கொண்டாடப்படுகிறது. ஆஷாட நவராத்திரிஆடி மாதத்தில் வருகிறது. மக நவராத்திரி மாசி மாதம் கொண்டாடப்படுகிறது.

மஹா நவராத்திரியாகிய சாரதா நவராத்திரி, புரட்டாசி - ஐப்பசி மாதங்களில் வருகிறது. முறைப்படி, இது ஆஸ்வின (ஐப்பசி) நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. சரத் காலத்தில் (அதாவது, மழை முடிந்து குளிர் தொடங்குவதற்கு முன்னர் உள்ள காலம். இதில், வானம் நிர்மலமாக, மேக மூட்டம் இல்லாமல் காணப்படும்) வருகிற கொண்டாட்டம் என்பதாலேயே சாரதா நவராத்திரி, சரண் நவராத்திரி என்றெல்லாம் இது அழைக்கப்படுகிறது.

சரத் நவராத்திரி காலமும், வசந்த நவராத்திரி காலமும், ‘காலம்’ எனும் தேவதையின் கோரைப் பற்களாகும் (மழைக் காலம் முடிந்து, கோடை தொடங்கும்போது கிருமிகள் அதிகமாகி, நோய் நொடிகள் பரவும் காலம் அல்லவா!). இத்தகைய காலங்களில், அம்பிகையைத் தொழுது, அவளுடைய அருளால் துன்பங்களை வெல்லலாம் என்று ஜனமேஜயன் எனும் மன்னனுக்கு வியாசர் உபதேசித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். ஆன்மாவுக்கு ஆற்றலைச் சேர்க்கும் காலமே நவராத்திரி.

ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில், ஆதிபராசக்தியை மூன்று வடிவினளாக்கி, ஒவ்வொருவருக்கும் மூன்று நாட்களை வகுப்பது வழக்கம். முதல் மூன்று நாட்கள், துர்கை எனும் மலைமகளுக்கானவை. ‘துர்க்கா துர்கதி நாசினி மாதா’ என்பர். துர்கதி என்கிற தவறான பாதையை மாற்றி, சரி செய்விப்பவள் துர்காதேவி.

அடுத்த மூன்று நாட்கள், மகாலட்சுமி யின் அருள் தினங்கள். துர்கதி நீங்கிய நம்மை, சத்கதி (நல்ல பாதை) நோக்கி அழைத்துச் செல்பவள் அன்னை லட்சுமி. நல்ல வழியு டன், செல்வத்தையும் சுகத்தையும் அவள் தருகிறாள். அடுத்தமூன்று நாட்கள், கலைமகளுக்கான வழிபாட்டு தினங்கள்.

நிறைகளை வளர்த்துக் கொண்டு, அறிவுச் சக்தியின் துணைகொண்டு உயர வேண்டாமா? அதற்காக, கல்விக் கடவு ளைப் பணிந்து போற்றுகிறோம்.

இங்ஙனம் ஒன்பது நாளும் முப்பெருந்தேவியரை வழிபட்டு, 10-ம் நாளான விஜயதசமித் திருநாளில் அனைத்திலும் ஆதிசக்தியே உறைந்திருக்கிறாள் என்று எண்ணி அவளைப் போற்றி வணங்க வேண்டும்.

மட்டுமன்றி, நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து பூஜித்து வழிபட வேண்டும் என்கின்றன ஞான நூல்கள். முதல் நாள்- குமாரி; இரண்டாம் நாள்- திரிமூர்த்தி; மூன்றாம் நாள் - கல்யாணீ; நான்காம் நாள் - ரோகிணி; ஐந்தாம் நாள்- காளிகா; ஆறாம் நாள் - சண்டிகா; ஏழாம் நாள் - ஸாம்பவி; எட்டாம் நாள்- துர்கா; ஒன்பதாம் நாள் - ஸுபத்ராவாக அம்பிகையை வழிபட வேண்டும்.

கொலு வைபவமும், பக்திப் பாடல்களுமாகக் கொண்டாடவேண்டிய திருவிழா நவராத்திரி வைபவம்.

கொலு, பாடல் என்று விரிவான முறையில் கொண்டாட முடியவில்லை என்றாலும் அனுதினமும் காலையும் மாலையும் திருவிளக்கேற்றிவைத்து, அம்பாள் திருவுருவப் படத்துக்கு மலர் மாலைகள் சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், புளியோதரை முதலான சித்ரான்னங்கள் நைவேத்தியம் செய்து, அபிராமி அம்மைப் பதிகம் போன்ற எளிய துதிப்பாடல்களைப் பாடி வழிபட்டு வரம் பெறலாம்.

ஒன்பது நாளும் வழிபட இயலாத நிலையில் இருப்போர், மகா நவமி தினத்தன்று ஒருநாள் மட்டுமாவது உள்ளம் உருக அன்னையை வழிபட்டு அல்லல்கள் நீங்கப் பெறலாம். மட்டுமன்றி நவராத்திரி தினங்களில் ஆலயங்களுக்குச் சென்று அம்பாளை தரிசித்து வணங்குவதாலும் பன்மடங்கு புண்ணியம் வாய்க்கும்.

அவ்வகையில், நம் குலம் தழைக்க குடும்பம் செழிக்க வரம் வாரி வழங்கும் அன்னையர் அருள்பாலிக்கும் புண்ணிய மிகு தலங்களும் தகவல்களும் அடுத்தடுத்த பக்கங்களில் உங்களுக்காக...

குலம் தழைக்க... குடும்பம் செழிக்க.. வரம் தரும் தேவியர்!

பூஜிக்க உகந்த நேரம்!

இந்த வருடம், வரும் அக்டோபர் 7-ம் தேதி வியாழக்கிழமை (புரட்டாசி - 21) அன்று நவராத்திரி ஆரம்பம். அக்டோபர் 14-ம் தேதி வியாழனன்று (புரட்டாசி - 28) சரஸ்வதி பூஜை. அன்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் ஏடு அடுக்கி, சரஸ்வதிதேவியை பூஜித்து வழிபடுவது உத்தமம்.

ஏடு பிரிக்கும் நேரம்: மறுநாள் அக்டோபர் - 15 வெள்ளியன்று விஜய தசமி. அன்று காலை 6 மணிக்குமேல் பூஜித்து, ஏடு பிரிக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஶ்ரீமங்கலாம்பிகை
ஶ்ரீமங்கலாம்பிகை

மங்கல வாழ்வு தரும் அம்பிகையே!

தலம்: திருமங்கலக்குடி

ஸ்வாமி: அருள்மிகு பிராணநாதேஸ்வரர்

அம்பாள்: அருள்மிகு மங்களாம்பிகை

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ளது திருமங்கலக்குடி. இத்தலத்திற்கு உரிய விசேஷ மூர்த்தமாகிய அம்பிகையின் திருநாமம் ஶ்ரீமங்களாம்பிகை; தலத்தின் பெயர் திருமங்கலக்குடி; தீர்த்தம் - மங்கல தீர்த்தம்; விமானம் - மங்கல விமானம்; தல விநாயகரும் ஶ்ரீமங்கல விநாயகராக அருள்கிறார். இப்படி ஐந்துவித மங்கலங்கள் பொருந்தித் திகழ்வதால், இந்தத் தலத்துக்கு பஞ்சமங்கல க்ஷேத்திரம் என்ற பெரும் சிறப்பு உண்டு.

இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு சர்வ மங்கலங்களும், மாங்கல்ய வரமும், பலமும் அருளும் கருணை நாயகியாய் அம்பாள் அருள்கிறாள். அதற்கு சாட்சியாக, தன்னுடைய திருக்கரங்களில் எப்போதும் மங்கலச் சரடுகளை ஏந்தியவளாய் அருள்பாலிக்கிறாள், ஶ்ரீமங்களாம்பிகை. இந்த அன்னை `மாங்கல்யம் காத்திடும் மங்களாம்பிகை’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறாள். இங்குள்ள சிவாலயத்தை கற்றளியாய் கட்ட முனைந்த அமைச்சர் ஒருவர் சிரச்சேத தண்டனைக்கு ஆளானார். அவரின் மனைவி மங்கலாம்பிகையிடம் முறையிட்டுப் பிரார்த்தித்தாள். அவளின் கணவனை உயிர்ப்பித்து அருளினாள் அம்பிகை என்கிறது புராணம்.

ஜாதக தோஷங்களால் பிரச்னைகள் சூழும் வேளையிலும், உயிராபத்து ஏற்படும் காலத்திலும், கணவர் நோய்வாய்ப்பட்டு அவதியுறும் காலத்திலும்... இந்தத் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டி, இந்த அம்பிகையை வழிபடுகிறார்கள் பெண்கள். தொடர்ந்து 5 வெள்ளிக் கிழமைகள் அன்னையின் சந்நிதியில் தீபமேற்றி அர்ச்சித்து, வழிபடுகின்றனர். அவளின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடுகளை பிரசாதமாகப் பெற்று அணிந்துகொள்கின்றனர். அம்பிகையின் அருளால் பிரச்னைகள் தீர்ந்ததும் அம்பிகைக்கு புடவை சாற்றி வழிபடுகின்றனர். அதேபோல், புதிதாக திருமண மாங்கல்யம் வாங்குபவர்கள், அதை அம்பிகையின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து வணங்குவதும் வழக்கம்.

நவராத்திரி காலத்தில் தினமும் சந்தனக்காப்பு அலங் காரத்தில் அருளும் மங்களாம்பிகையை தரிசிப்பது விசேஷம். இங்கு வந்து வழிபட்ட பின்னர், அருகிலுள்ள சூரியனார் கோயிலில் அருளும் நவகிரகங்களை வழிபட, கிரக தோஷங்கள் நீங்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப் படும் உச்சிக்கால பிரசாதமான தயிரன்னத்தை அருமருந் தாகப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

எப்படிச் செல்வது?: கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறையிலிருந்து 3 கி்.மீ. தொலைவில் திருமங்கலக்குடி அமைந்துள்ளது. கார், ஆட்டோ வசதியுண்டு.

ஶ்ரீசாமுண்டிதேவி
ஶ்ரீசாமுண்டிதேவி

சாமுண்டீஸ்வரி தரிசனம்!

திருத்தலம்: திருபூவனூர்

இறைவன்: ஶ்ரீசதுரங்கவல்லபநாதர்

இறைவியர்: ஶ்ரீகற்பகாம்பிகை, ஶ்ரீராஜராஜேஸ்வரி, ஶ்ரீசாமுண்டீஸ்வரி

தேவார பாடல் பெற்ற திருத்தலம் பூவனூர் என்ற திருபூவனூர். திருஞானசம்பந்தராலும் பாடப்பெற்றுள்ள தலம் இது. தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில், இது 103-வது திருத்தலம். நறுமணம் வீசும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் வனங்கள் நிறைந்த இடமாக இருந்தபடியால், முற்காலத்தில் ‘புஷ்பவனம்’ என்ற பெயரும் வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தலத்தில் உறையும் மூலவரின் திருநாமம் அருள்மிகு சதுரங்க வல்லபநாதர்; உற்சவர் புஷ்பவனேஸ்வரர். கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி ஆகிய அம்பிகையரும் அருள்பாலிக்க, அருள்மிகு சாமுண்டீஸ்வரியும் இங்கே சந்நிதி கொண்டிருப்பது இக்கோயிலின் விசேஷம். சிவபெருமான் முதியவராக வந்து சதுரங்கம் விளையாடி, மன்னன் ஒருவரின் மகளை மணந்து அருள்புரிந்தாராம். இதையொட்டியே அவருக்கு சதுரங்கவல்லபநாதர் என்று திருப்பெயர். மன்னனின் மகளாக அவதரித்த அம்பிகைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயர். அவளின் வளர்ப்புத் தாயாக வந்தவள் சாமுண்டீஸ்வரி என்கின்றன ஞானநூல்கள். அருள்மிகு கற்பகவல்லி அம்பாளும் அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்பாளும் தெற்கு நோக்கி அருள்கிறார்கள். அதே பிராகாரத்தில், தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி அமைந்திருக்கிறது.

எல்லா கோயில்களிலும் சப்தமாதாக்களுள் ஒருவராக இருக்கும் சாமுண்டி, இங்கே தனிச் சந்நிதியில் வீற்றிருப்பது சிறப்பு. மைசூருக்கு அடுத்தபடியாக, சாமுண்டீஸ்வரிக்கென தனிச் சந்நிதி அமைந்திருப்பது பூவனூரில் மட்டுமே. விஷ ஜந்துக்களின் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் வேர் கட்டிக்கொள்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் இருக்கும் ஒரு வைத்தியர், எலிக்கடி மற்றும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு, மந்திரிக்கப்பட்ட ஒரு மூலிகை வேரைக் கையில் கட்டிவிடுகிறார்.

அதற்கு முன்பாக பக்தர்கள் க்ஷீர புஷ்கரணியில் நீராட வேண்டும். பிறகு சாமுண்டீஸ்வரி சந்நிதிக்கு வந்து, வைத்தியர் கொடுக்கும் வேரைக் கையில் கட்டிக்கொண்டு, சாமுண்டிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு வைத்தியர் கொடுக்கும் மந்திரித்த மிளகை வாங்கிச் சாப்பிடவேண்டும். அதன் மூலம் அவர்களுடைய உடலில் இருக்கும் விஷம் முழுவதுமாக இறங்கி, பாதிப்பிலிருந்து மீள்கிறார்கள்.

எப்படிச் செல்வது?: மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில், மன்னார்குடியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் நீடாமங்கலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

ஶ்ரீஞானாம்பிகை
ஶ்ரீஞானாம்பிகை

உயர்ந்த ஞானம் அருள்வாள் ஞானாம்பிகை!

திருத்தலம்: திருக்குறுக்கை வீரட்டானம்

இறைவன்: ஶ்ரீவீரட்டேஸ்வரர்

இறைவி: ஶ்ரீஞானாம்பிகை

சிவபெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்று. பேச்சுவழக்கில் `கொருக்கை’ என வழங்கப்படுகிறது. காமதகனம் நிகழ்ந்த தலம் இது. ஸ்தல விருட்சம் கடுக்காய் மரம் என்பது சிறப்பம்சம். இந்தத் தலத்தில் சதுர வடிவ ஆவுடையாரின் மீது விநாயகர் எழுந்தருளி உள்ளது, வேறெங்கும் காண்பதற்கரிய அபூர்வ அம்சமாகும். இவரை குறுங்கைப் பிள்ளையார் எனப் போற்றுவர்.

சிவ தியானத்தைக் கலைக்க எம்பெருமான் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான் மன்மதன். சிவனார் கண் விழிக்க, அவரின் கோபாக்னியில் மன்மதன் எரிந்து சாம்பலானான். கணவனின் நிலையைக் கண்டு கலங்கிய ரதிதேவி, சிவபெருமானைச் சரணடைந்து மன்றாடினாள். அதனால் மனம் கனிந்த பரம்பொருள் மன்மதனை உயிர்ப்பித்தாள். ரதியின் கண்களுக்கு மட்டுமே அவன் புலப்படும் விதம் அருள்புரிந்தார்.

மன்மதன் பஸ்மமான இடம் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் உள்ளது. வயல் வெளிகளுக்கு இடையே அமைந்துள்ள அந்த இடத்துக்கு விபூதிக்குட்டை என்று பெயர். இந்தப் பகுதியில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் மண் விபூதி போன்றே திகழ்வது, கலியுக விந்தையே. காமமாகிய விருப்பத்தைப் பொசுக்கி, விருப்பு வெறுப்பற்ற நிலையில் உயிர்களை ஆட்கொள்ளும் உயரிய தத்துவத்தை விளக்கும் இந்தத் தலத்தில், அம்பிகை ஞானாம்பிகையாக அருள்பாலிக்கிறாள். உயிர்கள் உலக மாயைகளிலிருந்து விடுபட்டு நல்ல ஞானம் பெற்றிட அருளும் அன்னை இவள் என்கின்றன புராணங்கள். வீரட்டான மூர்த்தி சந்நிதி இத்தலத்தின் சிறப்பம்சம். இங்குள்ள காமனங்கநாசனி சபை மிகவும் விசேஷமானது.

இங்கே ஸ்வாமி யோகீஸ்வரராக அருள்வது விசேஷம். மன்மதன் எய்த பாணங்களில் ஒன்றான பத்மபாணம் சுவாமியின் பீடத்தின் அடியில் இடம்பெற்றுள்ளது. உடனருளும் அம்மை ‘பூரணி’ என வழங்கப்படுகிறாள். எதிரிலேயே ரதி, மன்மதன் இருவரையும் தரிசிக்கலாம். இவர்களை தரிசிப்போருக்கு இல்லற வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது ஐதிகம்.

நல்ல விருப்பங்கள் நிறைவேறவும், மங்கல வரங்கள் ஸித்திக்கவும் இந்தத் தலத்துக்கு வந்து அம்மையையும் அப்பனையும் வழிபட்டு வரம் பெறலாம். அம்பாளுக்கு அபிஷேக அர்ச்சனை, சந்தனக் காப்பு செய்வதாலும், கோயிலில் நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் கல்யாண வரமும் மாங்கல்ய பலமும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எப்படிச் செல்வது?: மயிலாடுதுறை - மணல்மேடு - கொண்டல் மார்க்கத்தில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்குறுக்கை வீரட்டானம். மயிலாடுதுறை ரயில்நிலையத் திலிருந்து கார், ஆட்டோ வசதிகள் உண்டு.

ஶ்ரீதுர்கை
ஶ்ரீதுர்கை

ஒன்பது வெள்ளிகள் விளக்கேற்றினால்...

தலம்: விளநகர்

இறைவன்: ஶ்ரீஉசிரவனேஸ்வரர்

இறைவி: ஶ்ரீவேயுறுதோளியம்மை

மானுடர்களின் சகல வாழ்வியல் பிரச்னைகளுக்கும் தீர்வும் வழிகாட்டுதலும் தரும் அற்புதத் தலம் மயிலாடுதுறை அருகிலுள்ள திருவிளநகர். உசிரம் என்றால் விழல். விழற் புற்கள் நிறைந்த பகுதியாகத் திகழ்ந்ததால் உசிரவனம் - விழல் நகர் என்று பெயர்பெற்றது இந்தத் தலம். பிற்காலத்தில் விளநகர் என்று மருவியதாம்.

இத்தலத்தின் இறைவன் மீது அதீத பக்தி கொண்டவர் அருள்வித்தன் எனும் அந்தணர். இவர் ஒருமுறை பூக்குடலையுடன் காவிரியின் வெள்ளத் தில் சிக்கிக் கொண்டார். அவருக்குக் கரையேறும் துறையைக் காட்டி அருளினாராம் இறைவன். ஆகவே, இத்தல ஈசனுக்கு துறை காட்டும் வள்ளல் எனும் திருப்பெயர் ஏற்பட்டது. வேடனாக வந்து திருஞான சம்பந்தருக்கும் இவ்வூர் ஆலயத்தைக் காட்டியருளினாராம் ஈசன். ஆகவே, திருஞானசம்பந்தரும் துறைகாட்டும் வள்ளல் எனப் போற்றுகிறார் உசிரவனேஸ்வரரை.

இங்கு அருள்பாலிக்கும் அருள்மிகு வேயுறுதோளியம்மை, தன்னைத் தேடி வந்து வணங்கி வழிபடும் அன்பர்களின் பிரச்னைகளைச் சடுதியில் தீர்த்து, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறாள். சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கும் இந்த அம்பாளை ஒன்பது வெள்ளிக்கிழமைகள் வணங்கி விளக்கேற்றி வழிபடுவது சிறப்பாகும். அதன் பலனாகக் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிட்டும். பெளர்ணமி தினங்களில் இந்தத் தலத்துக்குச் சென்று அம்மையையும் அப்பனையும் தரிசித்து வழிபட்டால், சகல சங்கடங்களும் நீங்கி மங்கல வரங்கள் ஸித்திக்கும். இங்கு அருளும் துர்கையும் மிகுந்த வரப்பிரசாதி; தோஷங்கள் நீங்க அருள்பாலிப்பவள்.

பிரதோஷ காலங்களிலும் சோமவாரங்களிலும் இங்கு வந்து இறைவனுக்கு வில்வமாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால், வாழ்க்கையில் பலதரப்பட்ட துயரங்களில் சிக்கித் தவிப்பவர்களின் பிரச்னைகள் நீங்கி, அவர்களின் வாழ்க்கைக்கு நல்ல வழி காட்டுவார். மேலும் இந்தக் கோயிலில் தனிச் சந்நிதியில் சனீஸ்வர பகவான் தன்னுடைய வாகனத்துடன் காட்சி தருகிறார். சனிக்கிழமை மற்றும் சனி ஹோரைகளில் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட சனிக்கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எப்படிச் செல்வது?: மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்குச் செல்லும் வழியில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது விளநகர். மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. பக்தர்கள் கோயில் வாசலிலேயே இறங்கிக்கொள்ளலாம்.

ஶ்ரீகற்பகவல்லி
ஶ்ரீகற்பகவல்லி

பிள்ளை வரம் தருவாள்!

தலம் - முல்லைவாசல்

சுவாமி - ஶ்ரீமுல்லைவன நாதர்

அம்பாள் - ஶ்ரீகற்பகவல்லி

திருவாரூரிலிருந்து சுமார் 27 கி.மீ. தூரத்திலுள்ளது நீடாமங்கலம். இந்த ஊரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் முல்லைவாசல். இங்கே அமைந்துள்ள கற்பகவல்லி சமேதராக முல்லைவனநாதர் அருளும் திருக்கோயில் மிகவும் புராதனமான ஆலயம் ஆகும்.

அடியார்களைக் காத்து அறக்கருணையை வெளிப்படுத்தும் இறை, சில தருணங்களில் தீயோர்களை அடக்க மறக்கருணையையும் வெளிப்படுத்தும். அப்படி ஒருமுறை தர்மத்தை நிலைநாட்ட விரும்பிய மகாவிஷ்ணு அசுரன் ஹிரண்யனை சம்ஹாரம் செய்தார். அதன் பொருட்டு பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானார். இந்த தோஷம் நீங்கிட இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டாராம்.

பக்தர்கள் இங்கு வந்து இறைவனை தரிசித்து வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கும்; வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறார்கள். இங்கே கேட்டதைக் கொடுக்கும் கற்பகவல்லியாய் தரிசனம் தருகிறாள் அம்பிகை. `பெயருக்கேற்ப, வேண்டும் வரம் அருளும் கற்பக விருட்சம் இந்த அன்னை’ என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள், அன்னையின் அருள்கடாட்சத்தை அனுபவித்து உணர்ந்த மெய்யன்பர்கள்.

குறிப்பாக இந்த அம்பாளுக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷம். இதனால் காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும்; நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் என்பது நம்பிக்கை. பெளர்ணமி தினங்களில் இந்த அம்பாளை தரிசித்து வழிபட்டுச் சென்றால், மங்கலயோகங்கள் ஸித்திக்கும் என்கிறார்கள். குறிப்பாக இந்த அம்பிகைக்கு குங்குமம், வளையல் சாத்தி வழிபட்டால் பிள்ளை வரம் அளிப்பாள் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.

கல்யாண வரம் வேண்டும் பெண்கள் இங்கு வந்து இந்த அன்னைக்குப் புடவை சாத்தி வழிபட்டுச் செல்கிறார்கள். இதனால் தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை.அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்துக்கு வந்து கற்பகவல்லியை வணங்கி வழிபட்டால், மாங்கல்ய பலம் பெறலாம். ஆடிப்பூரம் திருநாளன்று இங்கு விசேஷமான ஆராதனைகள் நடை பெறும் என்கிறார்கள்.

எப்படிச் செல்வது?: திருவாரூரிலிருந்து சுமார் 27 கி.மீ. தூரத்திலுள்ளது நீடாமங்கலம். இந்த ஊரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் முல்லைவாசல்.