Published:Updated:

`1,716 கிராம் எடை; 505 காசுகள்!' - திருவானைக்காவல் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையல்

திருவானைக்காவல் கோயிலில் தங்கப் புதையல்
திருவானைக்காவல் கோயிலில் தங்கப் புதையல்

திருச்சி திருவானைக்காவல் கோயிலில், தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவானைக்காவலில், ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐம்பூதங்களால் இறைவன் கோயில் கொண்ட தலங்கள், சிவ வழிபாட்டில் மிகவும் சிறப்பு. அதிலும், பஞ்சபூதங்களில் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் நீர் தலமாகப் போற்றப்படுகிறது. மேலும், சைவத் திருத்தலங்களில் மிக முக்கியமான தலமாகும். இங்குள்ள சிவபெருமான், பஞ்ச பூதவடிவானவர். இங்கு, கடந்த வருடம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்

கோயில் அம்மன் சந்நிதி பகுதியில் நீண்ட நாள்களாகப் பராமரிப்பு இல்லாமல் ஓர் இடம் இருந்தது. வாழைக் கொட்டம் எனும் அந்தப் பகுதியில் நந்தவனம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன. கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்தப் பணிகளில், நேற்று பணியாளர்கள் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது, அங்குள்ள ஒரு புதரைச் சீரமைத்தபோது, செம்பினால் ஆன உண்டியல் ஒன்று இருப்பது தெரியவந்தது. கோயில் பணியாளர்கள், அதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி மாரியப்பனுக்குத் தகவல் கொடுத்தனர்.

`தந்தத்தில் அணிகலன்; செங்கல் கட்டுமானம்!' - காவிரிக் கரையில் தொல்லியல் குவியல்கள்

அடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் அந்தச் சொம்பு உண்டியல் எடுக்கப்பட்டது. மேலும், உண்டியலில் தங்கப் புதையல் இருக்கலாம் எனச் சந்தேகம் அடைந்த கோயில் நிர்வாகத்தினர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு-வின் கவனத்திற்குக் கொண்டுசென்றனர்.

திருவானைக்காவல் கோயில் தங்க புதையல்
திருவானைக்காவல் கோயில் தங்க புதையல்

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள், அந்த சொம்பு உண்டியலைத் திறந்து பார்த்தபோது, அதனுள் 1,716 கிராம் எடையுள்ள 505 தங்கக் காசுகள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு, சுமார் 68 லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதில் இருந்த ஒவ்வொரு தங்க நாணயமும் 3 முதல் 3.4 கிராம் வரை எடை இருந்தது. அதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சொம்பு உண்டியலில் இருந்த தங்கப் புதையலை திருச்சி மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தொல்பொருள் ஆய்வுத்துறை ஆய்வு நடத்திட, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவானைக்காவல் கோயிலில் தங்கப் புதையல்
திருவானைக்காவல் கோயிலில் தங்கப் புதையல்

அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு அருகே நீண்டகாலமாக பயன்படுத்தாமல் கிடந்த பகுதியில் தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு